Thursday, 1 September 2016

அன்னம்...எத்தனை நாளைக்குத்தான்....!

''அன்னம் ...இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வவுத்தை  காயப்போடுவே! பட்டினி கெடந்தா செத்தவன்  திரும்பவும்  வந்துருவானா...மனச  தேத்திக்க தாயி! அப்பனும் ஆத்தாளும் கெடந்து நொம்பல படுதுகள்ல! சாப்பிடு தாயி!"
.என்றபடியே  கும்பாவை  கொண்டுவந்தாள் வீட்டுக்கு  பெரிய மனுசி .அங்கம்மாள். வடிவேலுவை பெத்த மகராசி.அவள் பேசுகிறபோது தண்டட்டி அங்கிட்டும் இங்கிட்டுமாக  ஆடும்.காது கழுத்துவரை தொங்குகிறது.! ஒவ்வொரு  தண்டட்டியும் ரெண்டு பவுன் .அந்த காலத்தில் ஒரு பவுன் தங்கம் நூறு ரூபாய்தான்.இருந்தாலும்  அரிசிக்கு பஞ்சம். கல்யாணப் பத்திரிகைகளில் விருந்தினர்களுக்கு வேண்டுகோள் வைத்திருப்பார்கள். 'மறக்காமல் தங்கள் ரேஷன் கார்டை  கொண்டு வரவும்!"

அந்த காலத்து கஷ்டம் இந்த காலத்து மனுஷங்களுக்கு அவ்வளவாக தெரியாது.!பிள்ளைகளுக்கு தங்களது கொடிவழியையே சொல்லிக் கொடுக்காத பெரிய மனுசனுங்க  நாட்டு நிலவரத்தையா சொல்லியிருக்க போறானுங்க. போவட்டும் விடுங்க.நம்ம கதைக்கு வருவோம்.

 அங்கம்மாள்  சொன்னதை  அன்ன மயிலு கேட்டபாடில்லை. விட்டத்தை பார்த்தபடியே கண்ணீர் விடுகிறாள்.முத ராத்திரிக்கி   வச்ச முல்லைப்பூ இன்னும் வாடலய  பய மக்கா!.. சாந்தி  கழிஞ்சிருக்கான்னு  படுக்கையை  நோட்டம் கூட  பார்க்க முடியாதபடி  கலைஞ்ச கூந்தலோடு அந்த எடத்திலேயே  உட்கார்ந்து  இருக்காளே பாவி மக.! சந்தோசமா இருந்தியான்னு கூட கேலி பண்ணவும் முடியாம சிறுக்கி  இப்படி சீரழிஞ்சு கெடக்கிறாலேன்னு   வர்றவ போறவளல்லாம் மூக்கை சிந்தி சுவத்தில தடவி கண்ணீர் விட்டுட்டு போறாளுங்க.!

"ஆத்தா...அன்னமயிலு.....இந்த கோலத்திலேயே  இருந்தா  குடும்பத்துக்கு  ஆகாதுடி! எந்திரிச்சி பல்ல வெளக்கு! குளி!  மாத்து  துணிய கட்டிக்க!. காட்டுக்கு போயிருக்கிறவுங்க வந்திருவாங்க. .  ரெண்டாம் நாளு சடங்கு  நடக்கணும். மனச ஆத்திக்கிறத தவிர வேறு வழியில்ல.! எந்திரி!" என்றபடி அன்னத்தை  தூக்க வந்தாள், சின்னாத்தாக்காரி!

எங்கிட்டு  இருந்து அப்படி பலம் வந்துச்சோ ...சின்னாத்தாளின்  நெஞ்சில் தனது  இரண்டு கையையும் வச்சு  முழு வீச்சுடன்"போங்கடி தட்டுவாணிகளா!" என்று ஆங்காரத்துடன்த ள்ளிவிட்டாள் அன்னம்!கல்யாணம் நடந்த அன்னிக்கே தாலி அறுக்கிறோமே  என்கிற ஆங்காரம்.!. சற்று தள்ளிப்போய்  மல்லாக்க விழுகிறாள் சின்னாத்தா. மடேர் என்ற சத்தம்.! தொடர்ந்து  'எந்த சிறுக்கி எக்கேடு கெட்டா எனக்கென்ன?" என்ற சின்னாத்தாளின்  புலம்பல். !அந்த கலவரத்திலும் பெரியமனுஷி  அங்கம்மாவின் கண்களுக்கு  அது தப்பவில்லை. அன்னம் போட்டிருந்த ரவுக்கை  அவசர கோலத்தில் கிடந்தது. உள்பாடியின்  முன்பக்க முடிச்சு அவிழ்ந்திருந்ததை  பார்த்து விட்டாள்.! அந்த காலத்தில் ப்ராவுக்கு அவ்வளவு கிராக்கி இருக்கவில்லை.!. அன்னம் கையை உயர்த்தியபோது முந்தானை  நழுவி.வெள்ளை நிறத்தில் வெயில் தொடாத  பருவ அடையாளத்தை காட்டிவிட்டது.

'கன்னி  கழிஞ்சிருச்சு !" என்று மனசுக்குள் பொருமுகிறாள் ! என்ன பண்றது  விதின்னு சொல்லி கடனை  கழிக்கிற காரியமா  அது?

"என்னாங்கடி...இப்படி  ஆளுக்காளு  மசமசன்னு இருந்தா   காரியம்  நடந்திருமா..எந்திருச்சி  அவ, அவ  வேலைய பாருங்கடி! "என்று ஒருத்தி  சத்தம் போட்ட பிறகுதான்  சிலர் பெரு மூச்சுவிட்டபடி  எழுந்தார்கள்.

எழவு  வீட்டின் அடையாளம்  அழுத்தமாகவே   வடிவேலுவின் வீட்டில்  பதிந்திருந்தது.!

இன்னும் எவ்வளவோ  இருக்கிறது. அடுத்த வாரம்  படிக்கலாம்.


Saturday, 27 August 2016

காதல்.....காமம்...கல்யாணம்.( பகுதி .3.)

தல்லாகுளம் போலீஸ் ஸ்டேசன்  இன்று  இருப்பதைப் போல  அன்று  இருந்ததில்லை. கள்ளழகர் மண்டகப்படியில் தான் காவல் நிலையம் இயங்கி வந்தது. ஆற்றில்  அழகர்  இறங்கும்போது மண்டகப்படியாகவும்  மற்ற காலங்களில்  போலீஸ் ஸ்டேஷனாகவும் இருந்தது.

அன்று ஸ்டேஷனில்  ஏகப்பட்ட  பரபரப்பு. இன்ஸ்பெக்டர் ராம்குமாரின்  முன்பாக கைதிகளை  வரிசையாக நிறுத்தி இருந்தார் ஏட்டைய்யா.

துண்டை கக்கத்தில் இடுக்கியபடி சட்டை இல்லாமல் நிறுத்தப்பட்டவர்களின்    குற்றப்பட்டியலை  பெயர் விவரங்களுடன்  சொன்னார்.

'அய்யா...இவன் பேரு நரிமேடு  கொன்னவாயன்..! ராத்திரி பன்னெண்டு மணி  வாக்கில  அய்யர் பங்களா பக்கம்  முக்காடு போட்டுக்கிட்டு  சந்தேகப்படும்படி  இருட்டுக்குள்ள  ஒளிஞ்சிட்டிருந்தான். சந்தேகப்படுபடியாக நடந்ததை  நைட்  ரவுண்ட்ஸ் போன பெட்ரோல் பார்ட்டி கையும் களவுமா பிடிச்சிட்டாங்க. முக்காடு  கேஸ் போட்டிருக்கு."( அந்த காலத்தில்  முக்காடு கேஸ் பிரபலம். இதை ஒழித்தவர் காமராஜர்.)

'பெரிய பத்தினி மாதிரி மொகத்தை மறைச்சிட்டு நிக்கிறாளே ...அவ  என்ன பிராத்தலா? ரொம்பவும்தான் நடிக்கிறா?

"இல்லிங்க ஐயா...அம்மன் சந்நிதி ரூபி ஸ்டோர்ல ரெண்டு சேலையை  முந்தானைக்குள் ஒளிச்சு வச்சு  லாவிட்டு வந்தவ."

''இவள்லாம் திருந்த மாட்டாளுங்க.பிராத்தல் கேஸ்ல  போடு!.ஜெயிலுக்குள்ள போயி களி தின்னுட்டு வரட்டும் .கொழுப்பு  கொறையும்."

"மூஞ்சியை திருப்பிக்கிட்டு  நிக்கிற நாயே.. நேரா நில்லுடா "என்று  லங்கோடுடன்  நின்றவனை  பார்த்து இன்ஸ்  கத்தியதும் பரட்டை தலை  ரொம்பவும் பயந்து விட்டான்

  'உத்தரவுங்க எஜமான்" .

என்னவோ தெரியவில்லை. அவனை செல்லில் வைத்து புடைத்து எடுத்திருக்கிறார்கள்.உடம்பெல்லாம் கன்றிப் போயிருந்தது.

"என்னய்யா...பூஜையை  பெருசா  போட்டிருக்கிங்க.பய செத்து கித்து போயிருந்தா  நாம்ப நாய் பட்ட பாடாஅலையனுமேய்யா! " என்று சத்தம் போட்டவர்  அந்த அக்யூஸ்ட்டை பார்த்து   "  எலேய்...என்னடா பண்ணித்தொலஞ்சே.இவ்வளவு  அடி தின்னிருக்கே" என்றபடியே  எழுந்து  அவனிடம் சென்றார்.

அவனுக்கோ பயம்தான்  அதிகமாகியது.

மிகவும் குனிந்தபடியே "சினிமா  தியேட்டர்ல  டிக்கெட்டு வித்தேன்  எஜமான்! வேற தப்பு தண்டா  எதுவும் பண்ணலிங்கய்யா!"என்று  அழுதான்.

"யோவ்  ஏட்டு! இவனை விட்ருங்கய்யா! பெருசா என்ன பண்ணிட்டான்னு  இம்பிட்டு அடி அடிச்சிருக்கிங்க?. ஊர்ல எம்பிட்டோ  பெரிய மனுசனுங்க  கண்ணுக்கு முன்னாடியே கொள்ளை  அடிக்கிறானுங்க. அவனுகளை  புடிக்க முடியிதா.? வவுத்துக்கில்லாம டிக்கெட் வித்து  பொளைக்கிறவன் எம்பிட்டு  சம்பாரிச்சிருவான்.? எழுதி வாங்கிட்டு விட்ருங்கய்யா!"

''எஸ் ..சார்." என்றபடி ஒரு சல்யூட்!

''தெப்பக்குளம்  சூசைட்  கேஸ்  விசாரணைக்காக  போறேன்அங்க   எஸ்.ஐ.யை வரச்சொல்லு!"

கிளம்பி சென்றார்.

வி சாரணை  ஆரம்பம்.
தங்கராசுவின்  பிரண்டு வெள்ளிங்கிரி,அய்யா வடிவேலு இருவரும் அன்றைய  ஆடுகள்.

முதல் நாளை விட இன்று இன்ஸ் ராம்குமாரின் விசாரணை  கடுமையாகவே இருந்தது.

"விசாரணைக்கு ஒத்துழைச்சா  ஸ்டேஷனுக்கு வரவேண்டியதாக இருக்காது.  தெரிஞ்ச  சங்கதியை  மறைக்காம சொல்லிடுங்க. உங்க பையன் தங்கராசுக்கு  கல்யாணத்தில  முழு சம்மதம் இருந்துச்சா? ராக்கடி கதையெல்லாம்  நம்ப  முடியாது.நானும் விசாரிச்சேன். உண்மைய சொல்லுங்க?"

"அய்யா எஜமான் ! அவனோட முழு சம்மதத்துடன்தான்  அன்னமயில கல்யாணம் பண்ணி வச்சோம்!"

"அப்ப ஏன்யா சூசைட் பண்ணிக்கிட்டான்?"

"அதான் அய்யா தெரியல.!"

"அப்ப பொண்ணு  அன்னமயிலுக்கு பிடிக்கலியா?"

"அந்த பொண்ணுக்கும் இஷ்டம்தானுங்க.!அவங்களையும்  விசாரிங்க. பொண்ணுக்கு  இஷ்டம்தான். இல்லேன்னா  கட்டி வைப்பாங்களா? எந்த அப்பனாவது  இஷ்டமில்லாதவனுக்கு  கட்டி வைப்பாங்களா? சொல்லுங்கய்யா?"

"அப்ப பர்ஸ்ட் நைட் முடியிறதுக்குள்ள ஏன்யா  செத்தான்? வீணா  அந்த பொண்ணை  மெடிகல் செக் அப் பண்ண வச்சிடாதிங்க.? ரூம்ல இருந்து  சண்டை போடுற சத்தமும் இல்லங்கிறீங்க.நிச்சயம் பொண்ணுக்கோ  உங்க மகனுக்கோ யாரோ ஒருவருக்கு இஷ்டம் இல்ல.அதனால்தான் பேருக்கு  கல்யாணம் பண்ணி வாழ்க்கையை கெடுத்திட்டிங்க. கடைசியா கேக்கிறேன்."என்றவர் இடியை ஏறக்கினார்.

"பையனுக்கு கஞ்சா பழக்கம் இருந்துச்சா. இல்ல லாட்ஜில் ரூம் போட்டு வியாபாரம் பண்றவங்களிடம் லேகியம் வாங்கி சாப்பிடுவானா?"

வடிவேலு வாய்விட்டு கதறிவிட்டார்." சாமீ....எம்புள்ளைக்கு  எந்த கெட்ட  பழக்கமும் இல்ல.தப்பா சொல்லி இந்த அப்பன் மனசில நஞ்ச வெதச்சிடாதிங்க!"

"அப்ப  உண்மைய சொல்லிடுங்க. விசாரனைன்னா  உண்மைய கொண்டார இப்படியெல்லாம் கேட்கத்தான்  செய்வோம்" என்றார் பக்கத்திலிருந்த  சப்- இன்ஸ்பெக்டர்.

"சரி...நீங்க வெளியில் இருங்க. இவனை விசாரிக்க வேண்டியிருக்கு" என்று  வெள்ளிங்கிரியை பார்த்தார்.

அவனும் சட்டைக்காலரை  பின்னுக்கு இழுத்துவிட்டுக்கொண்டு கேள்விகளை  எதிர்நோக்கினான்.
( இன்னும்  இருக்கு.)





















Sunday, 14 August 2016

காதல்....காமம்.( இரண்டு.)

தல்லாகுளம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்  அலுவலகம்.

செத்துப்போன தங்கராசுவின்  குடும்பத்தினரும் புதுப்பெண் அன்னமயிலு  குடும்பத்தனரும் வெவ்வேறு வேப்ப மரங்களின்  நிழலில்  துக்கத்துடன்  அமர்ந்திருந்தனர்.விம்மி விடக்கூடாது என்பதற்காக சில பெண்கள்  முந்தானையின் சிறுபகுதியை பொட்டலம் போல் சுருட்டி வாயில் வைத்துக்  கொண்டிருந்தார்கள்.

இன்ஸ்பெக்டர்  ராம்குமார் ஜீப்பில் வந்து இறங்கியதும் ஸ்டேஷன்  பரபரப்பாகியது.

நாற்காலியில்  ராம்குமார்  உட்கார்ந்ததும் எஸ்.ஐ.சிதம்பரம்  ஸல்யூட் வைத்துவிட்டு  எதிராக இருந்த  நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.

ஏட்டய்யா பைலை வைத்துவிட்டு  'போஸ்ட்மார்ட்டம்  ரிப்போர்ட் வந்திருக்கு. சூசைடுய்யா" என்றார்.

'ரீசன் என்னன்னு என்கொயரி பண்ணியாச்சா  சிதம்பரம்?"

'பண்ணிட்டேன் சார். டூ சைடிலும் காரணம் தெரியலேன்னுதான்  சொல்றாங்க. மாப்பிள்ளையும் பொண்ணும் மீனாச்சியம்மன்  கோவிலில்  ஒருத்தரை ஒருத்தர்  பார்த்து சம்மதம் சொன்னபிறகுதான்  கல்யாணம் நடந்திருக்கு...."என்றார் எஸ்.ஐ.!

'அப்புறம் எதுக்கு பையன் தற்கொலை பண்ணிக்கணும்? பர்ஸ்ட்  நைட்ல  பிரச்னை இருந்திருக்குமோ? பொண்ணு சைடிலே கேட்டிங்களா? பல  ஆங்கிள்ல நாம்ப  போகணும் சிதம்பரம்?"

'போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல ஒரு முக்கியமான  இன்பர்மேஷன்  கெடச்சிருக்கு சார். ..........!"

'தட்  மீன்ஸ்  க்ளு?"

"எஸ் சார்....." என்றவர்  மெதுவான குரலில்  'பர்ஸ்ட் நைட்  நடந்ததுக்கான  சிம்ப்டமே  இல்லை சார்!"

'அப்படின்னா பெண்ணுக்கு  இஷ்டமில்லையா  இல்ல பையனுக்கு  ஆண்மை இல்லையா  இந்த ரெண்டுல  ஒன்னுதானேய்யா ரீசனா இருக்க முடியும்.?

"ஆமா சார்.!'

'பர்ஸ்ட்ல பொண்ணு சைடில விசாரிக்கவேணாம். பையன் வீட்ல விசாரிக்கலாம். இப்ப  மார்ச்சுவரியில  இருந்து  பாடியை  எடுத்திட்டு போகட்டும்."

"ஓகே சார்!"

தல்லாகுளத்தில் இருந்து  எர்ஸ்கின் மருத்துவமனை ( ராஜாஜி  மருத்துவமனை.) பக்கம்தான் என்பதால் அடுத்த அரை மணி நேரத்தில்  எல்லாவேலைகளையும்  விரைவாக  சிதம்பரம்  முடித்துக் கொடுத்தார்.

இரண்டாவது நாள் 

தத்தனேரி சுடுகாட்டிலிருந்து  வீட்டுக்கு வந்து  சேருவதற்கு  மத்தியானம் ஆகிவிட்டது. இன்ஸ்பெக்டர்  ராம்குமார்  மப்டியில்  இழவு   வீட்டில்  காத்திருந்தார். பிள்ளையை  இழந்து  துயரத்தில் இருப்பவர்களை  ஸ்டேஷனில்  வைத்து விசாரிப்பதில்  அவருக்கு விருப்பமில்லை.
துணையாக  எஸ்.ஐ.சிதம்பரம் மற்றும்  ஏட்டய்யா.

தனி அறையில் இருந்த அவர்களை தங்கராசுவின்  அய்யா வடிவேலு வந்து  பார்த்தார்.

"குடிக்கிறதுக்கு  காப்பி, கலரு கொண்டாரச் சொல்லட்டுமா ஐயா?" மகனை இழந்த  துக்கம் நெஞ்சை  அடைத்துக் கொண்டிருந்தாலும்  அதிகாரிகளை  வரவேற்ற பாங்கு  அவரது குடும்பத்தின்  உயர்வை காட்டியது.
 
''அதெல்லாம்  வேணாம்  வடிவேலு. விசாரிச்சோம் .ஒரே பையன்னு  சொன்னாங்க. கொஞ்ச வயசில அதுவும் பர்ஸ்ட் நைட்  முடிஞ்ச தடயமே  இல்லாம  பையன் தற்கொலை பண்ணிக்கிட்டது கொடுமையான  வேதனைதான்.எந்த குடும்பமும் தாங்கிக்க முடியாது.என்ன பண்றது.? எல்லாம் அந்த கடவுள்தான்னு  அவன் மேல  பாரத்தை போட்டு மனசை ஆத்திக்க வேண்டியதுதான்!" என்று ராம்குமார் சொன்னதும்  வடிவேலு உடைந்து போனார்.

''ஏன் ...எதுக்காக  பிள்ளை  இப்படி ஒரு முடிவுக்கு வந்தான்னே தெரியலய்யா! பொண்டாட்டிக்கு  ஆசை ஆசையா ராக்கடி வாங்கிட்டு வந்து எங்ககிட்ட  காமிச்சான். அவ கொண்டை போட்டு  ராக்கடியை  வச்சுக்கனும்னு ஆசைப்பட்டுத்தான்  வாங்கிட்டு வந்ததாக  சொன்னான்.நாங்கெல்லாம் சந்தோசப்பட்டு  கேலி பண்ணினோம். அப்படியெல்லாம்  ஆசைப்பட்ட பிள்ள..." இதற்கு மேல் பேச முடியாமல் கதறியழ ஆரம்பித்து விட்டார்.

சத்தம் கேட்டு உறவினர்கள்  கதவை தட்ட ஆரம்பித்து விட்டனர் .போலீஸ்  டார்ச்சர் பண்ணுகிறதோன்னு  பயம்.

ஏட்டய்யா  அவசரமாக கதவை திறந்தார்.

அறைக்குள்  வேகமுடன் பாய்ந்தவன்  வேறு யாருமல்ல  தங்கராசுவின்  பிரண்ட்  . வண்டியூர் தெப்பக்குளம்  வந்து கதறிய  அதே  ஆள்தான்!

"என்ன சார்.. டார்ச்சர் பண்றீங்களா? எழவு வீட்டுல பாடை கட்டுன பச்ச ஓலை வாசம் கூட இன்னமும் இருக்கு. சார்." என கொதித்தான்.

அவனை  அமைதிப்படுத்தி வெளியே தள்ளிய  வடிவேலு " மனுசத்தன்மையோடு  நடக்கிறாங்கடா.. சங்கதி தெரியாம வந்து  வார்த்தையை  கொட்டாதே  .எங்கிட்டாவது போய் தொலை "என்று  கோபத்தை காட்டினார்.

''யாருங்க அந்த பையன். ரொம்பவும்  சொந்தமோ?" இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"ஐயா பொறுத்துக்கணும். என் மவனோட நண்பன்.பேரு வெள்ளிங்கிரி. ரெண்டு பெரும் ஒன்னு மண்ணாத்தான் திரிவானுங்க! தங்கராசு  செத்துப்போனதை தாங்கிக்க முடியல" .

' சரி சரி  இருக்கத்தானே  செய்யும். இப்ப பொண்ணு  எங்க இருக்கு? "

"இங்கதான்  இருக்கு. அவங்க வீட்டுக்கு  போகமாட்டேன்னு சொல்லிட்டு பச்சத்தண்ணி பல்லுல படாம படுத்த படுக்கையா இருக்கு. பெத்தவங்களை பாக்க முடியாதுன்னு  சொல்லிடிச்சு.என் சம்சாரம்தான் துணையா  இருக்கா!" மறுபடியும்  விசும்பத்தொடங்கினார்.

இதற்கு மேலும்  விசாரிப்பது  முறையாகாது ...சற்று  இடைவெளி விடலாம் என்று ராம்குமார் முடிவெடுத்தார்.

---அடுத்த  ஞாயிறு....

.







Wednesday, 10 August 2016

வருத்தம்.......கல்யாணம்...காமம்.( பகுதி 1.)

சில நிர்பந்தங்கள்.அதுவும் உறவுகள் வழியாக!

குற்றப்பரம்பரை தொடர்  உனக்கு தேவையா...அதுவும்  உண்மையை  எழுதவேண்டுமா..வேண்டாம்.நிறுத்திவிடு......

இப்படி சில..!   மிரட்டல்கள் பல.!  இதனால் சில கேரக்டர்களை  மாற்றி சொல்லிய  பிழைகளும்  ஏற்பட்டது. !.வேண்டாமே  இந்த குழப்பம்.உண்மையை எழுதி சாதிக்கப் போவது என்ன?

அதனால் அந்த தொடரை  நிறுத்திவிட்டேன்.

மன்னிக்க...!.

புதியது ஒன்று  பூக்காமால்  போகுமா?

முன்னொரு  காலம். ஆவணி  மாதம்.

வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் ஆணின் பிணம்.! வேடிக்கை  பார்க்க சிலைமானிலிருந்தும்  சைக்கிள் கட்டி வருகிறது கூட்டம்.! அந்த காலத்தில் கண்மாய் ,குளம்தான்  தற்கொலை செய்து கொள்வதற்கு  வசதியாக  இருந்தது போலும். குடும்பச்சண்டைகள்தான் பெரும்பாலும் இம்மாதிரி தண்ணீரை தேடி வந்தன .புருசனுடன் சண்டை போட்டு அவசரத்தில்  முடிவெடுக்கும் பெண்கள்  உத்திரத்தில்  தொங்கி  விடுவார்கள்.அல்லது அரளி விதையை அரைத்துக் குடித்து விடுவார்கள்.

ஏட்டையாவும் ஒரு போலீசுக்காரரும்தான் முதலில்  ஸ்பாட்டுக்கு வந்தவர்கள்.

'ஏட்டய்யா! பட்டு வேட்டி பட்டு சட்டையோடு மெதக்கிறான்! அவனுக்கு  என்ன நோக்காடோ?  என்ன வேசாடோ....கொஞ்ச  வயசு மாதிரி  தெரியிது. தரையில போட்டாதான் யாரு என்னங்கிறதுன்னு தெரியும்." என்ற போலீஸ்காரர் சில  இளவட்டப் பயலுகளை  மிரட்டி  பிணத்தை கரைக்கு  கொண்டுவந்தார்.

சட்டைப்பை , இடுப்பு மடிப்பில் கடுதாசி எதுவும் இருக்கிறதா  என்கிற வழக்கமான  சோதனைகளை முடித்த போலீஸ்காரர்  'தடயம் எதுவும் இல்லை ஏட்டையா..பாடில காயமும் கிடையாது.இது கண்டிப்பா தற்கொலைதான்" என்கிற முடிவுக்கு வந்தார்.

'பாக்கிறதுக்கு பெரிய எடத்து பிள்ளையாட்டம் தெரியிது.'என்று பிணத்தை ஒரு பார்வை பார்த்த ஏட்டையா கூட்டத்தையும்அப்படியே ஒரு  நோட்டம் விட்டார்,

''யோவ்...யாருங்கிற  அடையாளம் தெரியிதாப்பா..தெரிஞ்சவங்க தைரியமா  சொல்லுங்கப்பா ...சாட்சி அது ,இதுன்னு டேசனுக்கு  கூப்பிடமாட்டம்." என்று ஊக்கம் கொடுக்கிறார் ஏட்டையா!

'சார்...எங்க பக்கத்து  ஆளு மாதிரி தெரியல.டவுனுக்குள்ளதான்  விசாரிக்கனும்!" என்கிறான் கூட்டத்திலிருந்த ஒருவன்.

'நல்லா பாத்து சொல்லுங்கப்பா...பெரியாஸ்பத்திரிக்கு போயிட்டா  அறுத்து  தச்சுப்பிடுவானுங்க."என்கிற எச்சரிக்கையுடன்   ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போகிற வேலைகளில்  எறங்கிவிட்டார் ஏட்டைய்யா.

அப்போது....

வாயிலும் வயிற்றிலும்  அடித்துக் கொண்டு வாடகைக்காரில் வந்து இறங்குகிறது   ஒரு கூட்டம்.

கூட்டத்தை பிளந்துகொண்டு வந்த ஒரு எளந்தாரி "மாப்ளே  இப்படி  மோசம்  பண்ணிட்டியடா..."என்று  கதறி அழ ,கூட வந்திருந்த  உறவுகளும் அங்கேயே வட்டமாக அமர்ந்து  ஒப்பாரியை தொடங்கிவிட்டது.

'நேத்திக்கிதான் கல்யாணம் நடந்துச்சு. மொதலிரவுக்கு பெறவு விடிஞ்சி பாத்தா  மாப்ளைய   காணாம். பொண்ணோ மயங்கிக் கிடக்கு. பொண்ணை  பிரைவேட்  ஆஸ்பத்திரியில  சேத்திருக்கு.மாப்ள இங்க  பொணமா கெடக்கிறான்.என்ன நடந்ததுன்னு  தெரியாம பொண்ணு வீட்ல  ரெண்டு  வீட்டு சனமும் கதறிக்கிட்டு கெடக்கு."

அந்த இளந்தாரிதான்.முதல் தகவலை ஏட்டைய்யாவுக்கு சொல்கிறான்.

'நீ பிள்ளை வீடா,பொண்ணு  வீடா?"

ஏட்டையா விசாரணையை தொடங்கினார்.

'நான்  தங்கராசுவின்  பிரண்டு.! பேரு அழகரு.ரெண்டு பேருக்கும் ஒரே  ஊருதான் .ஊமச்சிகுளம்."

'சரி .. மத்ததை  டேசனுக்கு வந்து ஐயாகிட்ட  சொல்லிடு" என்ற ஏட்டைய்யா  அப்போதுதான்  அங்கு வரும்  எஸ்.ஐ.க்கு  வெறப்பா ஒரு  ஸல்யூட் அடித்தார்.
-----
 வருகிற  ஞாயிறு  இதன் இரண்டாம்  பகுதி.


Sunday, 17 July 2016

குற்றப்பரம்பரை.( பகுதி.7.)

பொட்டக்காடு.மொட்ட வெயில். அனல் காத்து  முகத்தில்  அறைந்து  அப்புகிறது.காக்கா,குருவி  எதையும்  காணாம்.ஆடிப்பட்டம் தேடி வெதைன்னு பெரிசுக சொல்லிட்டு போயிடிச்சிக.ஆனா கம்மா,காடு   எல்லாம் வரண்டு போயி பாளம் பாளமா வெடிச்சிக் கெடக்கு.! இதில எங்க  தேடி வெதைக்கிறது!

இடுப்புல அழுக்கு வேட்டி.கழுத்துல மந்திரிச்சி கட்டுன வெள்ளித் தாயத்து கருப்பு கயித்தில தொங்குது. காடாவில் வி கழுத்து சட்டை, காட்டுப்புழுதி ஏறிக் கெடக்கு.எண்ணெய பாத்து  மாசக்கணக்கில் இருக்கும்போல தல. துண்டை  மடிச்சி தலைக்கு வச்சு படுத்துக் கெடக்கிறான் சடையன்,எப்ப வேணும்னாலும் போலீஸ் புடிக்கலாம். தேவைப்படுகிற கொலை குற்றவாளி.
மறைஞ்சி திரியிரவன் எவன் வயிறார  சாப்பிடுவான்? இருந்தாலும் மாயக்காள் இவனுக்கு கம்மஞ் சோத்தை பெருசா  உருட்டி முந்தானையில்  மறச்சு வச்சு  வழியில பாக்கிறபோது கொடுப்பா!

இவனுக்கும் அவளுக்கும் கள்ளத்தொடர்பா? அத்து விடப்பட்டவதானே? ஆம்பள  துணை இல்லாம  வாழமுடியுமா? அந்த சொகம் கெடைக்கலேன்னுதானே  புருசன் கூட சண்டை போட்டா? ச்சே...நாக்குல பல்லு போட்டு சொல்லமுடியுமா? மந்தையம்மன் துடிப்பான சாமி.குலையறுத்திற மாட்டாளா?மாயக்காள் நெருப்பு மாதிரி.தனக்கு வாய்த்த  வாழ்க்கை இம்பிட்டுத்தான்னு  ஈரத்துணியை இடுப்புல கட்டிக்கிட்டு வாழ்ந்திட்டிருக்கா. அப்படிப்பட்டவ  சடையனுக்காக  ஏன் கஷ்டப்படனும்?ரகசியமா  பகல்லேயும் ராவுலேயும் ஊருக்கு தெரியாம சந்திக்கணும்? ஊர் நெலவரத்தை அவனுக்கு சொல்லணும்?

விஷயம் இருக்கு! அத அப்பறமா பார்க்கலாம். இப்ப சடையனை  கவனிக்கலாம்.இப்பதான் மூக்கன் அங்க வர்றான்.

'வர்ற வழியெல்லாம் நாய்ங்க தொல்லை.அதான் போக்குக்காட்டிட்டு வர்றதுக்கு இம்பிட்டு நேரமாயிடிச்சி!" என்று  போலீசு நெருக்கடியை சொன்னான்.

'என்னிக்கும் இல்லாம இன்னிக்கி மட்டும் ஏன் நாய்ங்க மோப்பம் பிடிக்கிறது?'

'தலையாரி வீட்லேயே ஒரு தெறமைக்காரன் வேலையை  காட்டிருக்கான் .அஞ்சு பவுன் சங்கிலியாம்.அதான் நாய்ங்க தொல்லை!"

'ஒன்னைய  ஒன்னும் மெரட்டலியே?'

'இந்த மொண்ணைக் கேசுக்கெல்லாம் என்னைய தேட மாட்டானுக. 'என்னடா  உன் வேலைதானான்னு  சும்மா மெரட்டுரதுடன் விட்ருவானுக. அந்த கரட்டு மேட்டு கொலை கேசுக்காகத்தான்  என்னை  நோட்டம் விடுறானுக. தூண்டில்ல  மாட்டுற  புழுன்னு  என்னை  நெனச்சிட்டு  இருக்கானுக,. அதான்  உன்னை பாக்கிறதுக்கு ரொம்பவும் எச்சரிக்கையா  இருக்க வேண்டியிருக்கு சடையா!"

'மூக்கா...ஒன்ன  ஒன்னு  கேப்பேன் .நிசத்தை சொல்லணும்.என்ன தப்பா நெனக்கக்கூடாது.'

குச்சியால் தரையை  கீறிக்கொண்டே  கேட்கிறான்  சடையன்

மூக்கனுக்கு புரியவில்லை.எத மனசில வச்சுக்கிட்டு இப்படி ஒரு கேள்விய  கேக்கிறான்? காட்டிக் கொடுத்திருவோம்னு  நெனக்கிறானா?

'வெளங்கல சடையா... மனசில எதோ  உறுத்துதுன்னா பட்டுன்னு போட்டு   ஒடச்சிடு! ஓடி ஒளிஞ்சிட்டு திரியிறவனுக்கு  இந்த உறுத்தல் பாரமா போயிடும்.இதையும் சேந்து சொமக்க முடியாது..உன் சத்தெல்லாம் இந்த  உறுத்தல்லேயே  கரைஞ்சி  நோஞ்சானாக்கிடும் தயங்காதே. கேட்ரு!"

மூக்கன் நிதானமா உருக்கமாக  கேட்கிறான்.

'ஒனக்கு  செவப்பி  மேல நோக்கமா ....ஆசைப்படுறியா?"

ஊளமூக்கன் இப்படி ஒரு கேள்வியை  சடையனிடம் எதிர்பார்த்திருக்கவில்லை.

------அடுத்து வரும் ஞாயிறு பதில் கிடைக்கும்,
.
.


Sunday, 3 July 2016

குற்றப்பரம்பரை.(6.)

'நாந்தாண்டி  மாயி. சத்தம் கித்தம் போட்டு  ஊரை கூட்டிராதே!!" -கையை  வாயிலிருந்து  எடுத்தாள்.

 படபடவென அடித்துக்கொண்ட  சிவப்பியின்  நெஞ்சு துடிப்பு வெளியில்  கேட்டது. வியர்த்து கொட்டுகிறது,அந்த குளிர்ந்த முன்னிரவு நேரத்திலும்.! பதட்டத்திலிருந்து தன்னை முழுமையாக விடுவித்துக் கொள்ள சற்று நேரமாகியது.

'இப்ப எதுக்காக என்னை இப்படி மடக்கிப் போட்டு கொடைய  பாக்கிறே..நீதான்  வேலையத்துப் போய் கெடக்கிறேன்னா என்னையும் அப்படி நெனக்கிறியா?"உடம்பில் இருந்த வைக்கோலை எடுத்தபடியே 'சனியன் இது வேற அரிக்கிது!'

'இல்லடி...அந்த  ஊளமூக்கனுடன்  சினேகமா  இருக்கியாமே..அவன்  கெட்ட பயடி! அவனுக்கு  செவனம்மா .மேல ஒரு கிறுக்கு. குடுத்துணி  வாங்க வக்கத்த அந்த களவாணிப் பயலோட உனக்கென்னடி ஓரப்பார்வை.?"

'அத நீ பாத்தியா? எத நெனச்சு இப்படி சொல்ற? வம்பா வாய்ல பச்சனாவிய தடவிட்டு பேசாதே!'---எரிச்சல் அவளுக்கு.! அதே நேரத்தில்  தெரிஞ்சுதான்  பேசுறாளா.இல்ல வாயப் புடுங்கப்பாக்கிறாளா என்கிற  சந்தேகமும்  இருந்தது.

'உன் வேசாடு  தாங்கல..என்னை என்ன வெவரம் கெட்ட சிறுக்கின்னு  நெனச்சிட்டியா? அப்படியெல்லாம்  சிநேகம் இல்ல...." என்று  மாயக்காளிடம் இருந்து  விடுபடபார்த்தாள்.

அவளோ அவ்வளவு லேசா  விடுவதாக இல்லை.

'சங்கிலி கருப்பன் கோவிலில் உனக்கு தேங்கா சில்ல ஊட்டி விட்டானேடி
..ஏண்டி என்னை கொங்கா சிறுக்கி  கூறு கெட்டு திரியிறான்னு நெனச்சிட்டியா? நீ எக்கேடு கெட்டா எனக்கென்னடி ? அவன்  கெட்டலையிறான்னு  .சொல்றேன்.கேட்டா கேளு. கேக்காட்டி  சீரழி.!ஆத்தா இல்லாதவளுக்கு   பச்சதாபபட்டு சொல்லவந்தா சொரிஞ்சிட்டுபோறேன்னு தள்ளுறே.எனக்கென்ன போச்சு." என்றபடி சிவப்பியை தள்ளிவிட்டு கிளம்பிவிட்டாள்.

சிகப்பிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

மாயக்காள் அறுத்துக்கட்டியவள் என்றாலும்  இன்னொரு ஆம்பளைய அவ தேடி அலையவில்லை.நல்லது பொல்லது தெரிஞ்சு நடக்கிறவ..அவளுக்கு  இதுனால என்ன லாபம் கிடைக்கப்போகுது?நாம்ப மூக்கனுடன்  பழகுறது  எதுக்காக என்பதை சொல்லிவிடலாமா? சொன்னா நம்புவாளா?

சொல்லவேனாம்....என்னதான் ஆவுதுன்னு பார்க்கலாம்னு  வைக்கோல் போரை விட்டு எழுந்தாள்.சுத்திப் பாக்கிறா. ..யாரும் இல்ல..பின்கொசுவத்தை தட்டிவிட்டு வீட்டை நோக்கி நடந்தாள்.

கொட்டத்தில் ஒளிந்திருந்த மாயக்காள்  அவளை பின் தொடர்கிறாள்,
சிவப்பிக்கு தெரியாமல்.!

'நேத்து ஆளான பொட்டச்சி எனக்கே காது குத்தப்பாக்கிறாளா ? பாக்கிறேண்டி  உன் சமத்தை !"என்று  மனசுக்குள் சிரித்தபடி பின் தொடர்ந்தாள்.

மூக்கனும் சிவப்பியும் அன்று சந்திப்பதாக  திட்டமிட்டிருப்பது அவளுக்கு  தெரியும்...தலைமறைவாக திரிகிற சடையன்தான் சொல்லியிருந்தான்.சடையனும் சிவப்பியை  விரும்புகிறான். கொலையை  பண்ணியதாக  தேடப்படுபவன்!.அவனுக்கு ஒவ்வொரு வியாழனும்  சேதி சொல்லிவந்தவள்தான் மாயக்காள்.

அதற்கு காரணமும் இருக்கிறது.

வெளக்குமாறு  விக்கவந்த ஒருத்தியை ஊளமூக்கன் வச்சிருந்தான்!

--இன்னும்  வரும்.



Sunday, 12 June 2016

குற்றப்பரம்பரை.( ஐந்து.)

சட்டென சிகப்பியை  கையைப் பிடித்து  வைக்கோல்போர் பக்கமாக தள்ளியது  வேறு யாருமில்லை. அரைக்கிழவி  மாயக்காள்தான்! சாதி  வழக்கப்படி  அறுத்துக் கட்டியவள்.முதல் புருசன் குடிகாரனாகிப் போனான்.,அவனுக்கு  உழைத்துக்  கொட்டியே  வீணாகிப் போனவள்.வெட்கத்தை விட்டு வலிய கூப்பிட்டாலும் கட்டுன பய கவுந்தடிச்சு படுத்துவிடுவான்.எத்தனை மாதம்தான் கன்னி கழியாமலேயே கிடக்கமுடியும்?

'இந்தாய்யா...நா ஒன்னும்  மலட்டுச்சிறுக்கி இல்ல.வெத போட்டா வெளையுற நெலம்.வீணா போறதுக்கு விட்ரமுடியாது.என்னோட  குத்த வச்சவளுக  எல்லாம்  பிள்ளை குட்டியோடு  திரியிறப்ப நா மட்டும் வெறுஞ்சிறுக்கியா திரியனுமா? ஒன்னு  குடிக்கிறத விட்டு  குடும்பத்த பாரு. இல்லியா என்ன அத்து விட்ரு. "

சுவரோரமா குத்த வச்சு  பீடியை இழுத்துக்கொண்டு இருந்தானே தவிர  வாயை திறக்கவில்ல.

'நா  சொல்றது  காதுல ஏறுதா இல்லியா? தாலிய கட்டுன அன்னிக்கி ராவு  முக்கி  தக்கியும் ஒன்னும் முடியல. ஆசுபத்திரிக்கு போன்னு காசு கொடுத்தா  அதையும் குடிச்சிட்டு  வந்து நின்ன. இந்தா திருந்திருவே அந்தா திருந்திருவேன்னு பாத்தா அதுக்கும் வழியில்ல. ஊருக்கெல்லாம் நொட்டை சொல்றவ வயிறு வீங்காம கெடக்கிறதா பாத்து  நாலு சிறுக்கிக நாலு வார்த்தை பேசத்தான் செய்ராளுக. விதி.வக்கத்துப் போன பயலுக்கு வாக்கப்பட்டதுக்கு  இதுதான் கண்ட பலன்"

'இந்தாளா...என்ன இருந்தாலும்  நா ஆம்பள!"

'வெளியே சொல்லாதே..வெக்கக்கேடு! எதுக்கு  வெட்டிப் பேச்சு.சாதி சனத்த  கூட்டி என்னை அத்து விட்ரு.அம்புட்டுதான்."

'அது எனக்கு கேவலமில்லையா?'

'அப்ப குடிக்காதே..ஆம்பளைன்னு நிருபி.அதத்தான ராசா  கேக்கிறேன். உங்கிட்ட சங்கிலி சரடுன்னா கேக்கிறேன்?'

அவனிடம் பதில் இல்லை. அழுகிறான். கட்டுனவ  அத்து விடு என்கிறாள்.இரண்டு வருசமாச்சு.கண்ணாலம் வேணாம் வேணாம்னு சொல்லியும் வம்படியா ஆத்தா அப்பன் சேர்ந்து மாயக்காளை கட்டி வச்சாங்க. மகன் திருந்துவான்கிற  நம்பிக்கை .ஆனால் திருந்துனபாடா இல்ல.ஒத்த சரம் போட்டிருந்தா.அதையும் வித்தாச்சு.அவதான் காடு கரைன்னு போயி  சம்பாதிச்சு கஞ்சி ஊத்திக்கிட்டிருக்கா..அவளையும் அத்து விட்டுட்டா?கஞ்சி யாரு ஊத்துவா, குடிக்க காசு யாரு கொடுப்பா?"

பயலுக்கு சிந்தனை இப்படி போகுது.

அவன் தன்னைப்பற்றியே  நினைக்கிறானே தவிர மாயக்காளை பற்றிய  கவலையே இல்லை.விளக்கு வைக்கிற நேரம் நெருங்குதே என்கிற பரபரப்பில் அவன். அவளோ  இன்னிக்கி  ரெண்டுல ஒன்னு என்கிற  முடிவு எடுத்தாக வேண்டும் என்கிற வெறியில்.!

'என்னய்யா  சொல்றே?' மிரட்டுகிறாள்.

'என்னத்தலா சொல்றது.? சபையில என்னை ஆம்பள இல்லேன்னு சொல்லச்சொல்றியா? நாண்டுக்கிட்டு  செத்துறலாம்லா!'

அவ்வளவுதான் ...எங்கிருந்து  அந்த தைரியமும் பலமும் வந்ததோ...
உலக்கையை  எடுத்து மண்டையில் போடாமல் வலது பக்க தோளில் ஒரே போடு!.

'கொன்னுட்டாளே "ன்னு உயிர் போகும் அளவு கத்தினான்.

'இது போதும்டா...சபையில சொல்றதுக்கு.!" அவிழ்ந்து போன கூந்தலை  அள்ளி சொருகினாள் .

அந்த மாயக்காள்தான் சிகப்பியை  வைக்கோல்போர் பக்கமாக தள்ளிவிட்டாள். ஏன் அப்படி  தள்ளினாள்?

அடுத்த ஞாயிறு  சந்திக்கலாம். குற்றப்பரம்பரை  ஐந்தாம் பகுதி காலதாமதம்  ஆகியதற்கு  வருத்தப்படுகிறேன்.தயவு செய்து  கருத்துகளை  பதிவிடுங்கள்.