Saturday, 8 July 2017

காதல்....காமம்.( 41.) விபசாரிகளிடம் ஓசியில்...!

டீ யை குடித்து விட்டு  தம் பற்ற வைத்தார் விளக்குத்தூண் குற்றப் பிரிவு  இன்ஸ்.ராசதுரை.

லாக் அப்பில் நாலைந்து பேர்  கிடந்தார்கள். இரவு நேர  களவாணிகள்

.சுடுதண்ணீர் பாய்லர், அண்டா, குண்டா, குடம் என செம்பு பித்தளை பாத்திர வகையறாக்களை  களவாடுவதில்  கில்லாடிகள். லாக் அப்புக்கு வெளியில் எஸ்.ஐ.டி.கேஸ்பெண்கள். இருளில் மறைந்து  கொண்டு  ஆண்களை விபசாரத்துக்கு அழைத்தார்கள் என்று சொல்லி  அவர்களை பற்றி கேஸ்  எழுதுவார்கள்.மாஜிஸ்திரேட்டிடம் ஒப்புக்கொண்டு தண்டிக்கப்பட்டாலும்  அவர்களை ஜாமீனில் கொண்டு வருவதற்கு ஆட்கள் தயாராக இருப்பதால்  அந்த மாதிரியான  பெண்கள் போலீசுக்கு அவ்வளவாக பயப்படுவதில்லை. பிரியாணி, வெத்திலை, பாக்கு, புகையிலை என தாராளமாக  ஸ்டேஷனின் புழங்கும். ஒரு வகையில் கவுரவ விருந்தாளிகள்தான்!

' ஏண்டி நாகு...ஒரு ராத்திரியில் எத்தனை கிராக்கிய சமாளிப்ப?"--பக்கத்தில் இருந்த கோடாலி  கொண்டைக்காரியிடம் ஒருத்திகேட்டாள்.

"அத ஏன் கேக்கிற. மூணு பேரை தாங்குறதே எம்பாடு உம்பாடுன்னு ஆயிரும். கஞ்சாவை இழுத்துட்டு வர்ற சண்டியர்கள சமாளிக்கிறதுக்குத் தான் மூச்சு  வாங்கும்.  நாசமா போவாய்ங்க குறுக்க ஓடிச்சிருவாய்ங்க.அசந்திட்டம்னு  வையி.சுருக்குப் பை காசையும் லாவிட்டு போயிருவாய்ங்க. நாய் பொழப்புதான்.இதில இவிய்ங்களுக்கு காசும் கொடுக்கணும்.கேசும் கொடுக்கணும்."என்று பதில் சொன்னவள்  போலீஸ் புள்ளிகளையும் விட்டு வைக்க வில்லை.

"கேஸ் போடுறதோடு விட்டா பரவாயில்லையே..புதுசா வர்றவளுகளையும்  இவிய்ங்கதான் போணி பண்ணுவாய்ங்களாம். ஒருத்தன் ரெண்டு பேர்னா சகிச்சுக்கலாம்.மொத்த டேசனும் வந்திருவாய்ங்கடி....குடிக்கி!" -அவள் அசிங்கமாக சொல்வதையும்   காதில் விழாததுபோல போலீஸ்காரர்கள்  கேட்டுக் கொள்வதுதான் ராஜதந்திரம்..அவளுகளை விட கேவலமான  பிறவிகள் அவர்கள்தான்.விபசாரிகளுக்கு அதுதான் பிழைப்பு.சர்க்காரிடம்  சம்பளம் வாங்கிக்கொண்டு சவடாலாக திரிகிற போலீஸ்காரர்களுக்கு என்ன கேடு.உடம்பை விற்பவள்களிடம் ஓசியில்....ச்சே!

எதையுமே கண்டு கொள்ளவில்லை  ராசதுரை! அன்னம் கேசை எப்படி முடிப்பது என்பது அவரது கவலை..   

"ஐய்யா...?" கைகளை கட்டிக்கொண்டு குனிந்து கும்பிட்டான்  வெள்ளிங்கிரி.

"என்னலே?"-எகத்தாளமாக பார்த்தார் இன்ஸ்.

"குத்தத்தை ஒத்துக்கறன்யா.!"

" நெசமாத்தான் சொல்றியா? கோர்ட்டுல போயி  அடிக்குப் பயந்து சொன்னதா  மாத்திடமாட்டியே? காசுக்காரப் பயடா நீ. எப்படி வேணும்னாலும் பல்டி  அடிப்பே! வெளியே போயிட்டா அப்பறம் நாங்கள்லடி  நாக்க தொங்க விட்டுக்கிட்டு உன் பின்னாடி திரியனும்.?"

"எங்காத்தா மேல சத்யம் ஐய்யா.!மாற மாட்டேன்.மாறுனா கொன்னே போட்டுருங்க.அந்த அன்னம் புள்ள மேல எனக்கு ஒரு நோக்கம் இருந்துச்சு . அதான் அது பின்னாலேயே திரிஞ்சேன். மடியிற மாதிரி தெரியல. கோயில்ல  வச்சு சத்யம் பண்ண வச்சிரலாம்னுதான் அப்படி நடந்துக்கிட்டேன். மத்தபடி  நான் அந்த புள்ளைய பத்தி சொன்னதெல்லாம் பொய்தான்.அந்த புள்ள என்ன  விரும்பலே."

"இத முதல்லையே சொல்லிருந்தா இவ்வளவு அடி தின்னுருக்க மாட்டேல்ல.!" என்ற ராசதுரை ரைட்டரை கூப்பிட்டு அவன் சொன்னதை அப்படியே  வாக்குமூலமாக எழுதிக்கொள்ள சொன்னார். அவரும் எழுதி முடித்தார்.

"ஜாமீனுக்கு ஆள் இருக்கா?"

"போன் பண்ணினா வந்திருவாங்க.!"

"சரி..எட்டய்யாகிட்ட சொல்லு. அவர் பேசுவாரு!"

அடிபட்ட வன்மம் நெஞ்சுக்குள் நெருப்புத் துண்டுகளாக கிடக்க வெள்ளிங்கிரி  வெளியேறுகிறான்.

"இனிமே உங்க கையில நான் மாட்டமாட்டேண்டா!"


Saturday, 1 July 2017

காதல்...காமம்.( 40.) சமஞ்ச புள்ளய எத்தன நாள் சொமக்க முடியும்?

உடம்பெல்லாம் வலி. போலீஸ் அடி . வீக்கம் தெரியாமல் அடிக்கிற வித்தைய
எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ!இருந்தாலும் அங்கங்கு தோல் கிழிந்து   ரத்தம்  உறைந்து  இருந்தது.வெள்ளிங்கிரி முதன் முதலாக பயப்படுகிறான். இனி என்னென்ன  செய்வார்களோ...! அன்னம் மீது வைத்த ஆசை இந்த அளவுக்கு நம்மை  கேவலப் படுத்தி விட்டது.. ஊரில் ஒருத்தனும் மதிக்கப் போவதில்லை. பேசாமல் காலில் விழுந்து விடவேண்டியதுதான் பகையாளியை  உறவாடிக்  கெடுன்னு  மூதாதையர்கள் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்.?

" அன்னத்துக்கு  அடுத்த ஜென்மத்திலும் என் ஞாபகம் இருக்கணும்.அதுக்கு என்ன செய்யணுமோ அத நான் செஞ்சாகனும்.அதுக்காக குத்தத்தை ஒத்துக்கிட்டு பணிஞ்சு போவோம்.அதனால நம்ம கிரீடம் இறங்கிடாது .காரியம்தான் பெரிசு.வீரியம் வேணாம்.முதலில் வெளியில் போகவேண்டும்.இந்த கேசிலிருந்து விடுபட வேண்டும்."

வெள்ளிங்கிரியின் மனதில் பயங்கரமான திட்டம் உருவாகியது.
*************************************************

ராசாங்கம்தலையை துவட்டியபடியே குளியல் அறையை  விட்டு வெளியில் வந்தார்.

'செவனு.?" மனைவியை அழைத்தார். வெட்கத்துடன் வந்து நின்றாள். வயதுக்கு வந்த மகள் இருந்தாலும் கணவன் மீது கொண்ட காமம்  குறைவதில்லை.அத்தனை நாள் கழித்து வந்திருக்கிற புருசனுக்கு  எவ்வளவு  ஆசை இருந்திருக்கும்.? கூப்பிட்டால் இணங்காமல் இருக்க முடியுமா? அன்றைய இரவு ராசாங்கத்துக்கும் அவளுக்கும் முதல் இரவு மாதிரிதான்  இருந்தது.

"சொல்லுங்க?'

முகம் பார்க்க வெட்கம் !

"வாய்க்கு ருசியா சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. வெரா,இல்லேன்னா கெளுத்தி கிடைச்சா வாங்கிட்டு வந்து கொழம்பு வையேன்! வெரா கிடைச்சா  கொழம்புக்கும்  ஆச்சு.கொஞ்சம் வறுத்து வை.தின்னுட்டு வடிவேலு வீட்டுப் பக்கமா போயி  பேசிட்டு வாரேன். உறவு முறை இருக்கு.அந்த வீட்டு சம்பந்தம்  கிடைச்சா  அன்னம் கொடுத்து வச்சதுதான்.பார்ப்பம்.அந்த மீனாச்சி நல்ல வழி காட்டமாட்டாளா?"

"சரிங்க.!நான் வெள்ளனவே எந்திரிச்சு பாய் கடைக்குப் போயி குடலு வாங்கிட்டு வந்து கொழம்பு வச்சிட்டேன்."

"இட்லிக்கு நல்லா இருக்கும்! நானே எடுத்து வச்சு  சாப்பிட்டுக்குறேன். நீ போயி  மீனு வாங்கிட்டு வந்திரு. காலாகாலத்துல போகலேன்னா வித்துரும்."என்று செவனம்மாவை கடைக்கு அனுப்பி வைத்தார்.

அவளும் கொண்டையில் சுற்றி இருந்த ஈரத்துண்டை கழற்றிவிட்டு பையை  எடுத்துக் கொண்டாள்.

அம்மா அங்கிட்டு கிளம்பியதும் அன்னமயிலு  அறையிலிருந்து  வெளியில்  வந்தாள்.

"அய்யா...நீங்க ஊஞ்சல்ல உக்காருங்க.நான் எடுத்துட்டு வாரேன்." என்று  அடுப்படிக்கு போனாள்.பெரிய தட்டில் ஆறு இட்லி .கூடவே குடல் . பெரிய அகப்பையில் எடுத்து வைத்தாள்.அய்யன் மாமிச பிரியர் என்பது அவளுக்கு  நல்லாவே தெரியும். "உழைக்கிறது எதுக்கு நல்லா சாப்பிடுறதுக்குத்தான்" என்று அவர் அடிக்கடி சொல்வார்.

இட்லியில் குழம்பை ஊற்றி நன்றாக பிசைந்துஅதனுடன்குடலையும் கலந்து வாய்க்குள் வைத்ததும் அவருக்கு எல்லாமே மறந்து விடும் .ரசித்து மென்று  சாப்பிடுவார்.அப்படி ஒரு பழக்கம்.

"ஏத்தா...நீ சாப்பிடல.?"

"அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்யா!" என்று சொன்னவள் மெதுவாக தனது  விருப்பத்தையும் சொன்னாள்.."எத்தனை நாளுதான் இங்கனயே இருக்க முடியும்? கோவில் குளம்னு போனா நாலு இளவட்ட பயலுக பார்க்கத்தான்  செய்வாய்ங்க.அவிய்ங்களை மிரட்டிக்கிட்டே இருக்க முடியுமா...?ஒரு எடுபட்டபய வம்படியா போலீஸ்ல மாட்டிக்கிட்டான்.கச்சேரிக்கும் கோர்ட்டுக்கும் நாம  அலைய முடியுமா. நாம பொழப்பு தளப்ப பார்க்க வேணாமா...? சொல்லுங்க"

"புரியிது தாயி. சமஞ்ச புள்ளைய நாங்களும் எத்தனை நாளுதான் சொமக்க முடியும்.? கடைக்கு போயிருக்கிற ஆத்தா வந்திரட்டும்.மத்தத நான் பாத்துக்கிறேன். இன்னும் நாலு இட்லி வைம்மா.!"

வயிறுக்கு வஞ்சகம் செய்யாமல் சாப்பிட்டு முடித்தார்.

Friday, 23 June 2017

காதல்...காமம்.( 39.) எல்லா ஆம்பளையும் ஒரே மாதிரிதானே...

மறுநாள் அன்னத்தின் வீடு..அவளின் அய்யா ராசாங்கம் ஊரில் இருந்து  திரும்பி இருந்தார்.மகளும் பொண்டாட்டியும் நடந்தவைகளை அப்படியே சொன்னார்கள்.

"அந்தப் பய உள்ளூர்தானா?"

' ஆமாம்' என்று  தலை ஆட்டினாள். "எம்பிட்டோ சொல்லியும் கேக்கல .வஞ்சும் பாத்திட்டேன்.செருப்ப எடுத்துக் காட்டியும் எம்பின்னாடியே சுத்தி  வந்தான்." என்றாள் சன்னக்குரலில்!

 சுயநிலை விளக்கம் சுருக்கமாக இருந்தது. அவளுக்கு அய்யனிடம் பயம்.கோபம் வந்தால் இடுப்பு வார் கைக்கு போய்விடுமே!

"பின்னாடி சுத்துன பயபிள்ளைய பத்தி உன் ஆத்தாக்கிட்ட சொன்னியா?"

".............!"

"ஏன்லா சொல்லல.?பயந்திட்டியா...இல்ல அவன் மேல நோக்கமா?"

"அப்பிடியெல்லாம் இல்ல.ஆத்தா ஊர கூட்டி ஒப்பாரி வச்சா எம்மானம்தானே  போகும்னு  பயந்துகிட்டு சொல்லல!"

"இப்ப கச்சேரி( போலீஸ்.) வரை போயிருக்கே!  நீயே டாம்டாம் அடிச்சுட்டியே! கோயில்ல வச்சு மானத்த வாங்கிருக்கான்.இனி கேசு விசாரணை கோர்ட்டுன்னு போகணும். சொந்தக்காரன் பூரா ராசாங்கம் பொட்டப்புள்ளைய  வளர்த்த லட்சண மொகரைய பாருன்னு காரி துப்புவாய்ங்களே! நம்ம  பண்ணக்காரய்ங்க கூட மதிக்கமாட்டாய்ங்க. கம்புக்கூட்டுக்குள்ள கிடக்கிற துண்டை எடுத்து உருமா கட்டிக்கிட்டு எதுக்க வந்து நிப்பாய்ங்க.காரை வீட்டுக்குன்னு இருந்த மானம் மருவாதை எல்லாம் போச்சு. எவன் வாசலேறி  வந்து பொண்ணு கேப்பான்?"

''நடந்தது நடந்து போச்சு. எந்த தப்பைய வச்சு கட்டுனாலும் நேரா நிக்கப்போகுதா என்ன..எதுக்கு வெசனப்பட்டுக்கிட்டு ...எந்திரிங்க.வந்ததும்  வராததுமா நோகனுமா? குளிச்சிட்டு வாங்க. யோசிப்போம்." என்று புருசனை  கிளப்பினாள் செவனம்மா.

அன்னத்துக்கு சற்று ஆறுதல். 'இவ்வளவு ஆனபிறகு எதுக்கு பயப்படனும்? ஆம்பள பயலுக்கு அம்புட்டு திமிர் இருந்தா ஆம்பளையின் திமிர தாங்குற பொம்பளைக்கு எம்பிட்டு சக்தி இருக்கணும்.அவன் அருவா எடுத்தா பொம்பளை அருவாமனைய எடுக்க வேண்டியதுதானே?பார்த்திருவோம். அவனா நானாங்கிறத?" மனசுக்குள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள் அன்னம்.

ராசாங்கம் குளிக்கப் போனார். செவனம்மா அடுப்பங்கரைக்கு சென்றாள். அன்னம் அவளது அறைக்கு போனாள்.

இந்த சிக்கலில் இருந்து வெளியேற அவளுக்கு ஒரே வழிதான் தெரிந்தது. சீக்கிரத்தில் கல்யாணம் .!

 'அப்பன் ஆத்தா பார்த்து வைக்கிற கல்யாணத்தில் பிள்ளை பிறக்காதா என்ன?  ஆம்பளையா ,பார்க்கிறதுக்கு லட்சணமா ,படிச்சவனா இருந்தால் போதும். காதல்  வெங்காயம் என்பதெல்லாம்  நாம்ப  சொல்லிக்கிற பேருதானே? ராத்திரி ஆனா எல்லா ஆம்பளையப் போலத்தானே புருசனா வர்றவனும் கட்டி  புடிக்கப்போறான் ?எல்லா எழவும் அந்த  ராத்திரி நேரத்துக்குத்தானே ஏங்குது? ஊருக்குப் போயி திரும்பி இருக்கிற நம்ப அய்யனுக்கு பொண்ணை பத்துன கவலை இருந்தாலும் பக்கத்தில ஆத்தா கிடகும்போது  பாயாம விட்ருவாரா? அய்யன் குளிச்சிட்டு வரட்டும் .கல்யாணத்தை பண்ணி வை சாமின்னு சொல்லிருவோம்"

இப்படி மனமெல்லாம் கல்யாண நினைவில் இருக்கிறாள் அன்னம்.

உண்மை நிகழ்வை அடிப்படையாக  வைத்து  புனையப்படுகிற  தொடர்.

Saturday, 3 June 2017

காதல்...காமம்.( 38.) "மச்சம் சொன்னானா?"

அன்னமயிலுவின் வீடு.

"உன் பேரென்னம்மா?"----இன்ஸ்.ராம்குமார் கேட்கிறார்.

"அன்னமயிலு....!  அன்னம்னு கூப்புடுவாங்க,!"

"வெள்ளிங்கிரிக்கும் உனக்கும் எவ்வளவு நாளா பழக்கம்?"

"அப்படி யாரும் எனக்குப் பழக்கமில்ல.!"

"பழக்கமில்லாமயா கோயில்ல உன் பின்னால வந்தான்?"

"ரோட்டுல போறபோது நாலு நாயி  திரியிது சார் !"

"உன்ன பாத்துதான் வாலாட்டிருக்கு ஒரு நாயி! நீ பிஸ்கட் போட்டதாலதானே  வால ஆட்டிருக்கு?"

"எச்சக்கல நாயி எல்லார்கிட்டயும்தான் வால் ஆட்டும். அந்த நாயை புடிச்சு  முனிசிபாலிட்டில கொடுக்காம என்கிட்டே என்ன சார் விசாரண?"

"என்னம்மா சின்னப் பொண்ணா இருந்திகிட்டு இப்படி வெடுக் வெடுக்குன்னு  பேசுற?"

"எனக்கும் எவனோ ஒரு எடுபட்ட பயலுக்கும் சம்பந்தம் இருக்கிறதா நெனச்சு  கேள்வி கேட்டா என்னத்த சார் சொல்றது?.பொம்பளக பின்னால சுத்துற சண்டியர்கள்ல அந்த தட்டுகெட்ட பயலும் ஒருத்தனா இருக்கலாம்.அவனை அடிச்சு மிதிச்சு நாலு சாத்து சாத்தாம என்கிட்ட என்ன சார் விசாரண? நானென்ன கம்ப்ளெயின்ட் கொடுத்தேனா?"

"நல்லாத்தான்மா பேசுறே? அவன் உன்ன லவ் பண்றதா சொல்றானேம்மா...?"

"அவனைத்தான் கேக்கணும்.அந்தப் பொண்ணும் உன்ன விரும்புதான்னு ஸ்டேசன்லய  கேட்டிருந்தா இம்புட்டு தூரம் வந்திருக்க வேணாமே?"

"நீயும் விரும்புறியாம்! அவன் வேற சாதிங்கிறதால  பயப்படுறியாம்.எங்கள ஒண்ணு சேத்து வையுங்க சார்னு சொல்றான்.இதுக்கு என்னம்மா சொல்றே ?"

"எனக்கு அங்கங்க மச்சம் கெடக்குன்னு சொன்னா அதையும் நம்பி என்ன விசாரிப்பிங்களா? அவன் யாருங்கிறதே எனக்கு தெரியாதுன்னு சொல்றேன். கேள்வி மேல கேள்வியா கேக்கிறீங்களே? .நானும் நாலு எழுத்து படிச்சிருக்கேன். கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணுகிட்ட இம்புட்டு கேள்வி கேட்டு விசாரணை பண்றது எங்க சொந்த பந்தங்களுக்கு தெரிஞ்சா  அசிங்கமாகிப் போகாதா? என்ன பெத்தவங்க என்ன நெனப்பாங்க."

பட படவென அன்னம் பேசியதை கேட்ட இன்ஸ்.ராம்குமாருக்கு  அவள் உண்மையைத்தான் சொல்கிறாள் என்பது புரிகிறது. ஒரு பெண்ணின் எதிர்காலத்துக்கு வேட்டு வைப்பதாகிவிடும் என்பதை உணர்ந்தவராக  விசாரணையை அத்துடன் நிறுத்திக்கொண்டார்.

அன்னமயிலுவின் அம்மா செவனம்மாவை அழைத்து  ஆறுதலாக பேசினார்.

அதுவரை  அறைக்குள் அழுதுகொண்டு இருந்த செவனம்மாவின் கண்கள் ரத்த சிவப்பேறி இருந்தது.வசதியான பெரிய குடும்பம்.புருசன் வெளியூரில்! அவரின் காதுகளுக்குப் போனால் என்ன ஆகுமோ என்கிற பயம்.

கையெடுத்து கும்பிட்டு அதிகாரியை அனுப்பிவைத்தவள்  மகளை கட்டிப்பிடித்துக் கொண்டு   ஒப்பாரி வைத்தாள் .

உண்மை  நிகழ்வின் அடிப்படையில் புனையபடுகிற தொடர்.

Saturday, 20 May 2017

காதல்..காமம். ( 37.)"கருணாநிதி வசனத்த நெஜமாக்கிடாதே!"

"என்ன எதுக்கு சார் கூட்டிட்டு வந்திங்க.?"- இன்ஸ்பெக்டரை பார்த்துக் கேட்டான் தங்கராசு.

"பதறாதே.!சாமர்த்தியமா பண்ணிட்டதா நினச்சுட்டிங்கள்ல நீயும் உன் பிரண்டும்! அவன் போட்டுக்கொடுத்திட்டான். கொள்ளை அடிக்கிறது, பொம்பள கிட்ட போறது இதிலெல்லாம் கூட்டு சேரவே கூடாதுடா.! கூட்டாளி தப்பிச்சிடுவான் "

"சார்! வெளங்குறமாதிரி சொல்லுங்க! நான் என்ன தப்பு பண்ணினேன்?"

"உங்கப்பா வச்சிட்டிருந்தாரே செல்லத்தாயி. அவ மர்டர் கேஸ்ல அக்யூஸ்டு  அவ புருசன் அடைக்கன் !. அவன காப்பாத்தி ஆந்திராவுக்கு அனுப்பினது நீயும் உன் நண்பன் வெள்ளிங்கிரியும்!அத உன் நண்பன் நேத்தே ஒத்துக்கிட்டு  ரிட்டர்ன்ல எழுதிக் கொடுத்திட்டான்.நீ என்ன சொல்ற? எழுதிக் கொடுக்கிறியா இல்ல உள்ள போயி உக்கார்றியா?."

"............"

"என்னடா ..வாய்ல வரலியா? ஊமச்சாமியா? உனக்கு கல்யாணத்த பண்ணி  வைக்காம இன்னொருத்தன் பொண்டாட்டி மேல  உங்கப்பனுக்கு ஆசை!வப்பாட்டியா  வச்சிருந்தா தாலி கட்டுனவன் என்ன பூபோட்டு கதவ சாத்தி  வைப்பானா ? ரெண்டு பேரையும்  சேத்து காலி பண்ணிருக்கணும். பொண்டாட்டிய மட்டும் போட்டுத் தள்ளிட்டான்.அவனுக்கு கல்யாணத்த  பண்ணி வச்சு சேப்டியா ஆந்திராவுக்கு  அனுப்பி வச்சிட்டிங்களே...ஒரு வகையில உங்கள பாராட்டணும்டா! என்ன சொல்றே  ...எழுதுறியா ..பேப்பர் தரச்சொல்லவா?"

தங்கராசு தலையை ஆட்ட ரைட்டர் பேப்பர் கொடுத்தார்.

எழுதிக் கொடுத்து விட்டு வெளியில் செல்ல, அதே நேரத்தில்  கைகளை பின்பக்கமா ஒரு துண்டில் கட்டி வெள்ளிங்கிரியை உள்ளே கொண்டு வந்தார்கள். அதை பார்த்தும் பார்க்காததுமாதிரி தங்கராசுகடந்தான்.

லா அண்ட் ஆர்டர், கிரைம் இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கும் ஆச்சரியம்.

"என்னய்யா ..என்ன பண்ணினான்?" ---சட்டம் ஒழுங்கு காப்பாளர் ராம்குமார் நாற்காலியை விட்டு எழுந்து வந்தார். "கை கட்ட அவுத்து விடுய்யா"

"கோவில்ல  மேல ஆடி வீதியில ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்திருக்கான்யா! எல்லாரும் சேந்து அடிச்சிருக்காங்க. கோவில் அவுட் போஸ்ட்ல வச்சிருந்து  இங்க கொண்டு வந்திட்டோம்.நம்ம லிமிட்லதான் கோவில் இருக்கு"--ஏட்டய்யா சொல்லி முடிக்க,

"என்னடா இப்படி வந்து மாட்டுறே.கோவிலுக்கு சாமி கும்பிடத்தான் போவாய்ங்க. நீ டாவ் அடிக்கிறதுக்குன்னு போவியா? யார்ட்ட வம்பு பண்ணுனே?"

கன்னத்தில் விழுந்தது.... பளார் அறை!

"பராசக்தி படத்தில கருணாநிதி எழுதுன வசனத்த நெஜமாக்கிடுவாய்ங்க போலிருக்கே!அசந்தா கோவில்லேயே படுக்கைய போட்டு பர்ஸ்ட் நைட்  நடத்திருவிங்க .இல்லடா ?" --இன்னொரு அறை!

வெள்ளிங்கிரி வாயை திறக்கவில்லை. அடி வாங்கிக் கொண்டு  நிற்கிறான்.

"செனப்பன்னி மாதிரி இருக்கேல்ல..அதான் தெனவெடுத்து எவ சிக்குவான்னு  அலையிறே? அதான் உங்கள மாதிரி திமிர் பிடிச்சவய்ங்களுக்காக சில சிறுக்கிக திரியிறாளுகளே...அவள்கல்ல எவள்ட்டாயாவது   போயி திமிரை காட்டவேண்டியதுதானே? சீக்கு வந்திரும்னு பயம்!"

அவன் பதிலேதும் சொல்லாமல் அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டான்.

ராம்குமார் அடித்து துவைத்து விட்டார். வெள்ளிங்கிரியை இழுத்துக் கொண்டு போய் லாக் அப்பில்  தள்ளினார்கள்.அந்த அளவுக்கு போலீஸ் அடி!

 உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு புனையப்படும் கற்பனை தொடர்.

  


Friday, 12 May 2017

காதல்..காமம்.( 36,) "அக்கா தங்கச்சி மார புடிச்சு பாரேன்"

"அன்னம்..கொஞ்சம் நில்லேன். சாவி கொடுத்த பொம்மை மாதிரி விசுக்.. விசுக்னு போயிட்டியே இருக்கியே..?"

மேல ஆடி வீதி பிரகாரத்தில் போய்க்கொண்டிருந்தவளை  தடுத்து நிறுத்துகிறான் வெள்ளிங்கிரி. போலீஸ் ஸ்டேஷனுக்கு தங்கராசுவை  கூட்டிக்கொண்டு போன அடுத்த அரை மணி நேரத்தில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டான். அன்னமயிலு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்  கோவிலுக்கு வருவாள் என்பது அவனுக்கு தெரியும். அவளை அவன் விரும்புகிறான் .

" நீ என்ன பாலோ பண்ணிட்டு வர்றது எனக்கும் தெரியும்.நீ எந்த மாதிரி ஆளுங்கிறதும் தெரியும். என் பின்னாடி அலையிறத நிப்பாட்டிக்கோ. வீணா வெட்டி வெவகாரத்த இழுக்காத.! அதுக்கேத்த ஆளு நான் இல்ல."

"என்ன பத்தி என்ன தெரியும்?"

"பொம்பள பொறுக்கி!"

"பொறுக்கி எடுத்ததால்தான்டி  உன் பின்னாடி வரேன்!"

"கோயில் பிரகாரம். அதான் என் கால்ல செருப்பு இல்ல!மரியாதைய கெடுத்துக்காத.!"

"பிரகாரம்கிறதாலதான் உன்ன கட்டி பிடிச்சி முத்தம் கொடுக்கல!"

"பெரிய வீட்டுப்புள்ளன்றதால அசிங்கப் படுத்த விரும்பல. போயிரு!"

"போகலன்னே என்னடி பண்ணுவே!?"

"எச்சக்கல நாய கோவிலுக்குள்ள விட்டதே தப்புன்றத  இங்க இருக்கிறவங்க  எல்லோரும் தெரிஞ்சிக்குவாங்க.உங்கூட  இம்புட்டு நேரம் பேசுனதே தப்பு.டா ..தட்டுக்கெட்ட நாயே!" என்று சத்தம் போட்டு சொன்னதுடன் அவனின் சட்டையை  இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். "எடுபட்ட பயலே "என்றபடியே  பளார் பளார் என அறை விட்டாள். ஆடி வீதியில் காற்று வாங்கியபடி உட்கார்ந்திருந்தவர்களும் ,பிரகாரம் சுற்றி வந்தவர்களும் சேர்ந்து கொண்டு சாத்துபடி நடத்தினார்கள். யாரும் காரணம் கேட்கவில்லை.அவர்களாகவே  சொல்லிக்கொண்டார்கள்.

"இடிக்கிறதுக்குன்னே வந்திருப்பான். மார புடிச்சிருப்பான்.சேட்டை பண்ணிருப்பான்" இப்படி இன்னும் என்னன்னவோ!

"ஏண்டா ..காவாலிப்பயல. உன் அக்கா..தங்கச்சி மார பிடிச்சுப்பாரேன். எப்படி  இருக்குன்னு வீட்டுலேயே தெரிஞ்சிருக்கலாமேடா " என்று  ஒருத்தன் மூக்கில் குத்து விட்டான்.இவ்வளவு நடக்கிறது. அதை பார்க்க அங்கு  அன்னம் இல்லை. கூட்டம் சேர்ந்ததும் கிளம்பி போய் விட்டாள்.   . 

அடி.... அவமானம் ..! அப்படியே உட்கார்ந்து விட்டான் வெள்ளிங்கிரி. இப்படி  நடக்கும் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. பொம்பள பொறுக்கி என்று அன்னம் சொன்னதும் அவனுக்கு ஆத்திரம் வந்து விட்டது.அவனும் வார்த்தையை விட்டுவிட்டான்..

தலையை குனிந்தபடி உட்கார்ந்து விட்டவனை  அதுவரை மொத்தியவர்களும்   விட்டு விட்டார்கள்.ஆனால் ஆலயத்தில் இருக்கிற போலீஸ்காரர்கள் விட்டு  விடுவார்களா?

கூட்டிக்கொண்டுபோய் விட்டார்கள்.

உண்மை  நிகழ்வு. புனைய பட்ட கதை. தொடர்.  

Tuesday, 9 May 2017

காதல்...காமம்.( 35.) நண்பனா துரோகியா?

"ஏப்பா ராசு...இம்புட்டு நாளாகியும் குத்தவாளியை கண்டுபிடிக்க முடியலியா? நல்லா தூங்கியே மாசக் கணக்காச்சுப்பா.! செல்லத்தாயியை   வச்சுக்கிட்ட நாள்லயும் நிம்மதி இல்ல. செத்து தொலஞ்ச பெறகும் நிம்மதி இல்ல! உனக்காவது  நல்லது நடக்கட்டுமேன்னு நெனச்சா அந்த புள்ள  நாண்டு  கிட்டு செத்திருச்சி.என்ன பாவம் செஞ்சேனோ அது உன்னையும்  சேத்து அலக்கழிக்கிது!"

மகன் தங்கராசுவின் கைகளை பிடித்துக்கொண்டு கலங்குகிறார் வடிவேலு.

 தூணில் சாய்ந்திருந்தாள் மாயக்காள் .வெத்திலை போட்டு வாரக்கணக்காகி  இருக்கலாம்.உதடுகள் வரண்டு போயிருந்தன.வெடிப்புகள் தெரிந்தது.

மகனை அருகில் வருமாறு கையால் ஜாடை காட்டினாள்!

"அய்யா ராசு..போன புள்ளைய நெனச்சிக்கிட்டு மருகிட்டு நிக்கிறதில எந்த பிரயோசனமும் இல்ல.தாய பிரிஞ்ச கோழிக் குஞ்சுக மாதிரி தெருவில நாங்க  அலைஞ்சுகிட்டு இருக்கோம்.கள்ளப்பிராந்து மாதிரி எமன்  எப்ப தூக்கிட்டுப் போவானோ....  தெரியலய்யா. நாங்க  நல்லது கெட்டத பாத்தாச்சு. நீ வம்சத்து ஒத்த  வாரிசு.பல்கி பெருகனும்யா! அவ நெனப்பிலேயே கரிகிடாதே சாமி!"

"ஆத்தா ...என்னத்த பேசுறே? "

"அந்த பொன்னியையே நெனச்சிக்கிட்டு கிடக்காதே சாமின்னு சொல்றன்யா.! வாழ கொடுத்து  வைக்கல அவளுக்குன்னு தண்ணிய குடிச்சிட்டு தாகத்த தீர்த்துக்கய்யா.!"

"ராசு...ஆத்தா சொல்றதில என்னய்யா தப்பு? உனக்குன்னு எவளோ பொறந்து  காத்திருக்கா.அதனாலதான் பொன்னிக்கு வாழ கொடுத்து வைக்கலன்கிறேன் . பொன்னிய கட்டி வைக்கனும்கிறதுக்குத்தானே வீடு தேடி போய் பேசினோம். என்னாச்சு?லட்சுமி  வீடு மாறி போயிட்டா.இவ மேல போய் சேர்ந்துட்டா.வீடு  மாறிப்போன லட்சுமி உன்னைத்தேடி கட்டாயம்  வருவா."

மகனின் தலையை பாசமுடன் தடவிக் கொடுத்தாள்.

"அப்பா ..ஆத்தா நல்லாருக்கிங்களா " என்று கேட்டபடியே வந்தான் வெள்ளிங்கிரி.

இவனை பார்க்க விரும்பாத தங்கராசு அம்மாவின் கைகளிலிருந்து  விடுவித்துக்கொண்டு  வீட்டுக்குள் போய் விட்டான்.

தங்கராசுக்கும் வெள்ளிங்கிரிக்கும் பேச்சு வார்த்தை இல்லை என்பது அந்த  கிழ தம்பதிக்கு தெரியாது.

"நல்லாருக்கம்பா! உன் சிநேகிதனுக்கு நல்லதா நாலு வார்த்தை சொல்லி  மனச மாத்தப் பாருப்பா! பொன்னிய நினைச்சு மருகிட்டு திரியிறான். "

"விடுங்கப்பா..கஞ்சி போட்ட சட்டை எத்தனை நேரத்துக்கு வெறப்பா இருக்கமுடியும்? அவன நான் பார்த்துக்கிறேன். செத்துப்போன செல்லத்தாயின் புருசன் அடைக்கன் இன்னொரு கல்யாணம் கட்டிக்கிட்டு ஆந்திராவ்ல இருக்கானாம் .நம்ம ஊர் போலீஸ் போயிருக்கு. எப்படியும் பிடிச்சாந்திருவோம்னு  இன்ஸ்பெக்டர் உங்ககிட்ட சொல்லச்சொன்னாரு. அதான்  வந்தேன். பயப்படாம இருங்கப்பான்னு சொல்லலாம்னு!"

"நல்ல சேதி சொன்னப்பா கிரி!தலையில இருந்த பாறைய எறக்கி வச்ச மாதிரி இருக்கு!" என்ற வடிவேலு எழுந்து வந்து மாயக்காளின் பக்கமாக உட்கார்ந்தார்.

"ஏ புள்ள.! சந்தோஷமா இருக்குளா..! வண்டியூர் மாரியம்மன் கோவிலுக்கு  போய் சாமிய கும்பிட்டு வந்திரலாம். எந்திரிச்சி குளிச்சிட்டு வா.  ஒரு எட்டு  போயிட்டு வந்துருவோம்."என்று சொன்னதும் மாயக்காளுக்கு கண்ணீரை  அடக்க முடியவில்லை.

அவரும் அவளும் ஒன்றாக எழுந்தார்கள்.

அதே நேரம் இன்ஸ்பெக்டர் ராம்குமார், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜதுரை  இருவரும் ஒன்றாக உள்ளே நுழைந்தார்கள்.

இவர்கள் எதற்காக இப்போது இங்கு வரவேண்டும்?

கும்பிட்டபடி வரவேற்கிறார் வடிவேலு. மாயக்காளுக்கு நெஞ்சு படபடக்கிறது.

"என்னங்கய்யா ..புதுசா ஏதாவது சொல்ல வந்திருக்கிங்களா?" என்று கேட்டார்  வடிவேலு.

"தங்கராசு வீட்லதானே இருக்காரு? அவரை ஸ்டேஷன் வரை கூட்டிட்டு போகவேண்டியது இருக்கு? அவரை  கூப்பிடுறீங்களா?" என்று சொல்லி  முடிக்க  "நானே வரேன் சார்!" என்று அறைக்குள் இருந்து வந்தான் தங்கராசு.

எதையும் கண்டு கொள்ளாமல் நின்றிருந்தான் வெள்ளிங்கிரி.

ஆனால் இன்ஸ்பெக்டர் ராம்குமார்  அவனிடம் " தேங்க்ஸ்பா!" என்று சொன்னது தங்கராசுவின் காதில்  விழாமல் இல்லை.!

உண்மை  சம்பவத்தின்  அடிப்படையில்  புனையப்படுகிற  தொடர்.