Saturday, 28 January 2017

காதல்....காமம்.( 22,)

தங்கராசு மட்டும் விடுவிடுன்னு அவனுடைய அறைக்குள் போகிறான்..

வெள்ளிங்கிரி பட்டாசாலையிலேயே நின்றுவிட்டான்.

"என்னப்பா எங்கிட்டோ கெளம்பராப்ல தெரியிது...மைனர் வெரசா ரூமுக்குள்ள போறத பார்த்தா சீமைக்கு போற மாதிரில்ல தெரியிது? எங்கிட்டு நோக்கம்?" --வடிவேலு கண்ணாடியை தூக்கிவிட்டுக்கிட்டு வெள்ளிங்கிரிய பார்த்து  கேட்கிறார்..

"தூரமா போகலைய்யா....சும்மா நத்தம் பக்கமாதான் போறோம். சிநேகிதனுக்கு  கல்யாணம். அதான்.ரெண்டு நாள்ல திரும்பிடுவோம்."

"ஊருப்பயலுக்கெல்லாம் நடக்கிது.இந்த கெடா மாடுக்குதான் இழுத்துக்கிட்டு திரியிது!" என்று வடிவேலு வஞ்சு முடியிற சமயமா கையில் பெட்டியுடன் வந்தான் தங்கராசு. "வாடா...பஸ்சுக்கு நேரமாச்சு." என்று வெள்ளிங்கிரியை கூட்டிக்கிட்டு புறப்பட்டு விட்டான்.

சத்திரப்பட்டியில் வெள்ளிங்கிரியின் வீடு....

வெள்ளிங்கிரியும் தங்கராசும் கயித்துக்கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார்கள். எதிரில் அடைக்கன் கையை கட்டிக்கொண்டு அடக்க ஒடுக்கமுடன் நிற்கிறான்.

"ஒன்ன காப்பாத்துனது யார்னு இப்பத் தெரியிதாடா? நாங்க நெனச்சத நீ முடிச்சிட்டே..நல்லது நடந்துருச்சு. மாட்டிருந்தா சென்மமோ தூக்கோ ..? ஒரு கேடுகெட்ட சிறுக்கிக்காக நீ ஏண்டா தண்டனை  அடையணும்? அதான் காப்பாத்தி அழகர்மலையில வச்சிருந்தோம். ஒனக்கு ஒரு கலியாணத்தை  பண்ணி வச்சுடுறோம். பொண்ணும் ரெடிதான். அவளுக்கும் இஷ்டம்தான். மலையில ஒனக்கு தொணையா இருந்தவனோட தங்கச்சிதான். இன்னிக்கி மொத ராத்திரிய  அவ வீட்டில முடிச்சிட்டு விடியிறதுக்குள்ள  ஆந்த்ரா பக்கமா போய்டுங்க.ஒனக்கு தொணையா இருந்தவனும் ஒங்களோடுதான் வாரான். சின்ன ஊரா பாத்து கூலி வேல செஞ்சு  பொளச்சுங்கங்க,. சம்மதமாடா அடைக்கா?"

"நீங்க இந்த நாயிக்கி என்ன செஞ்சாலும் சம்மதம்தான் எசமான்!"

மேளதாளமில்லாம.பேச்சியாயி கழுத்தில் தாலியை கட்டுகிறான்  அடைக்கன்!.கூரைப்பொடவை தங்கத்தாலி அவளுக்கு. எட்டு மொள வேட்டி,மல்லுத்துணி சட்டை .கையில ஐயாயிரம் என அவனுக்கு! மொத ராத்திரி  குடிசைக்குள்ள,.

நாக்கை துருத்தியபடி காளியாத்தா படம்.

மதுரைவீரன்,மாரியம்மன் இப்படி துடியான சாமி படங்களை மாட்டியிருந்தார்கள் குடிசைக்குள்.! கிராமத்து சாமிகள். அவை தவிர நிறைய  டப்பாக்கள். மருந்துகள்! வைத்தியர் வீடு மாதிரி இருக்கு! ..முதலிரவுக்கான  அடையாளம்னு சொன்னா அல்வா சிலேபி பால் பூ..ஊதுவத்தி இவ்வளவுதான் அங்கிருந்தன.

பாவாடை ரவுக்கையுடன் பாய் ஓரமா உட்கார்ந்திருந்தாள் பேச்சி..அவனை நிமிர்ந்து பார்க்க கூச்சம்.

"என்னலா...மொத ராத்திரி அதுவுமா பயமுறுத்துரமாதிரி சாமி படமா வச்சிருக்கே.! சினிமாக்காரிக படமா வச்சிருந்தா சாராயம் குடிச்ச மாதிரி இருக்கும்ல.நெறைய டப்பா டப்பாவா இருக்கே..அதில .என்ன இருக்கு?" பயலுக்கு சந்தேகம்.

"எங்கண்ணன் நமக்காக லேகியம் வாங்கிட்டு வந்திருக்கு.. எல்லாம் பழனில வாங்கியாந்தது......அசதியா இருந்தா அதுல கொஞ்சம் தின்னுட்டு படுத்தம்னா  நல்லதாம்."வெட்கத்துடன் இப்பதான் அவனை ஏறிட்டு பார்த்தாள்.அவனோ கடுப்புடன் பேசினான்.

"கெழட்டு பயன்னு நெனச்சிட்டானா ஒங்க நொண்ணன். ? ஒன் இடுப்ப பத்திரமா பாத்துக்கடி..கலப்ப புடிச்சு உழுத கையி. காச்சுப்போயி கெடக்கு."

அண்ணனை குத்தம்  சொன்னா  தங்கச்சிக்கு பொறுக்குமா?

''பேச்சுல காட்டாத மச்சான். செஞ்சு காட்டு. மூச்சு வாங்கப்போறது நீயா நானாங்கிறத மூணாம் சாமத்துல பாத்துறலாம்..இப்ப சிலேபி வேணுமா அல்வா வேணுமா?"---அவ அவசரம் அவளுக்கு!

"அதெல்லாம் வாணாம்  மொதல்ல .லவுக்கைய அவுத்துப்போடு!"

"அதென்ன சீமைய்ல இல்லாததா? அளந்தா பார்க்கப் போற. மொதல்ல வெளக்க  அமத்து. நான் லவுக்கைய  அவுக்குறேன்."

"கருப்பா இருந்தாலும் கெட்டியாதான்லா இருக்க.! கருவ மரம் மாதிரி."

"அய்யாமாருக சொன்னத மறந்துட்டியா மச்சான்.கருக்கல்ல எந்திரிச்சி போகணும்னு சொன்னாகள்ல. நீ பேசியே .....! ஒன்னால முடியுமா முடியாதா..இல்ல நான் ஆரம்பிக்கவா?"

பய வேகமாக வெளக்க அமத்திட்டு  அவ மேல படர்கிறான் .

அவ மென்னுட்டிருந்த வெத்தல செல்லம் இப்போது அவனது வாயில்!

இன்னும் வரும். உண்மை நிகழ்வை  புனைந்து  எழுதப்பட்டு வரும்  தொடர் இது. 



Saturday, 21 January 2017

காதல்...காமம். ( 21.)

அழகர் மலை அருகே இருக்கிற சத்திரப்பட்டியில்  வெள்ளிங்கிரிக்கு சொந்தமாக ஒரு காரை வீடு.! கொல்லைப்புறத்தில் மாடுகளை கட்டிப் போட்டிருக்கிறார்கள். பின்கொசுவம் கட்டிய வேலைக்காரப் பொண்ணுகள் அங்கும் இங்குமாக திரிகிறார்கள். அந்த வீடு வெள்ளிங்கிரிக்கு பரம்பரையாக  இருக்கிற வீடு.

"அடைக்கன் எப்படி இருக்கான்.பத்திரமா இருக்கானா..சூதானமா இருக்கனும்டா! நாயிங்க மோப்பம் பிடிச்சிக்கிட்டு திரியிதுக. கொஞ்சம் அசந்தம்னாலும் அள்ளிட்டு போயிருவாய்ங்க" என்று எதிரில் கையைக்கட்டிக்கொண்டு நின்றவர்களை பார்த்து சொல்கிறான் வெள்ளிங்கிரி.. அவன்  நாய்கள் என்றது போலீஸ்காரர்களை.! மதுரைக்காரர்களின் சங்கேத வார்த்தை.அவன்தான் அடைக்கனை கடத்திக்கொண்டு  போயிருக்கிறான்,

செல்லத்தாயி கொலை செய்யப்பட்டு ஒரு வாரமாகிப் போச்சு. வடிவேலுவுக்கு  சந்தோசம்தான் என்றாலும் அவர் மீதும் போலீசுக்கு ஒரு கண்.! அப்பப்ப வந்து  விசாரிச்சிட்டுத்தான் இருக்காங்க..அடைக்கனையும் தேடிட்டுத்தான் இருந்தாங்க.

மகன் தங்கராசுவை பத்தி சம்சாரத்திடம் விசாரிக்கிறார் வடிவேலு..

"ஒம்மவன் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பேசாமத் திரிவான்?.வாய தெறந்து பேசுனாத்தானே மனசுல உள்ளது தெரியும்? பயபிள்ளை அன்னாந்துபாத்துக்கிட்டே திரியிது. அந்த சிறுக்கிதான் செத்துப்
போயிட்டாள்ல.சனியன் தொலஞ்சதுன்னு எண்ணய தேச்சு தல முழுகிட்டுப்
போயிற வேண்டியதுதானே.?"

வடிவேலுவின் அம்மா அங்கம்மா இப்ப  வாய தொறக்கிறாள்..

"பண்றதையும் பண்ணிட்டு பேசுறான் பாரு தட்டுக்கெட்ட பய.! வீட்டுல  ஒரு  குந்தாணிய வச்சுக்கிட்டு தீனி போட முடியாம கண்ட சிறுக்கிட்ட படுத்திட்டு....  சனியனை தோள்ல தூக்கிட்டு வந்திட்டு...."

வடிவேலுக்குசொல்லமுடியாத ஆத்திரம். எந்த இடத்தில் எதை சொல்றதுங்கிற வெவஸ்தை இல்லாம போச்சா?

. " ஆத்தா! வாய மூடிட்டு இரு.!"

" சல்லிக்கட்டு மாடு மாதிரி  பய .வளந்து  நிக்கிறான். அவனுக்கு ஒரு பொட்டச்சிய பிடிச்சு கட்டி வைக்கனும்கிற  நெனப்பு அத்துப் போயி வப்பாட்டி சொகம் தேடுன ஒனக்கு என்னடா ரோசம் ?அதான் ஊரே சிரிச்சுப் போச்சே!"

"அத்தே...?" வடிவேலுவின் மனைவி மாயக்காளுக்கு  கோபம்.." ஏர்க்கால் ஏறி  ரணமாகி போயி கெடக்கிற ஆளுக்கிட்ட போயி எப்படி ஏர் பிடிக்கிறதுன்னு  சொன்ன கத மாதிரி ...புத்தி சொல்ற நேரமா இது? செத்த நேரம்  சும்மா கெடங்களேன்?"

"ஆமாடி...! ஊர்ல போற காளியாத்தா எம்மேல வந்து ஏறுடியாத்தான்னு எம்மேல பாயி! கெழட்டுபயதானேனு வெலகி படுத்தே!..வயசானா ஆசைக்கும்  வயசாகாதுடி.அவன் பாஞ்சிட்டு போயிட்டான். அதது அறிஞ்சு ஆம்பள பயலுகளை கைக்குள்ள  போட்டுக்காதவளுக கத இப்படித்தான் முடியும்! இப்ப  என்ன குத்தம் சொல்றதுல ஒரு எழவும் நடக்கப்போறதில்ல!"

"ஏத்தா ...இதுக்கும் மேல வாய தொறந்தேன்னு வச்சுக்க பெத்தவனு கூட பாக்க மாட்டேன். கொரவளையை  கடிச்சு துப்பிருவேன்."கத்தியது வடிவேலுதான்!

"ஆமாடா இப்படித்தானே வப்பாட்டி கொரவளையை நெரிக்கிறதா சொன்னே?  அதத்தான் டேசன்ல அவளே சொன்னாலாம்ல.?" என்று ஆத்தா அங்கம்மா சொன்னதும் அடங்கிப் போயிட்டார் வடிவேலு.

சொந்த வீட்டிலேயே அவருக்கு ஆதரவு இல்ல.

"மாயி...ஒங்கத்தகிட்ட சொல்லு. இப்படியே பேசிட்டிருந்தா கொடம் ஒடச்சு கொள்ளி வைக்கிறதுக்கு பிள்ள இருக்கமாட்டான்னு சொல்லிடு.!" இப்போது வடிவேலுவின் ஆத்திரம் சென்டிமென்டாக திரும்புது.

"ஆமாடி...செத்தபெறகு இவன்தான் கொள்ளி வைக்கப்போறான்னு விழிச்சு விழிச்சு பாக்கப்போறன் பாரு! எந்த நாயி எனக்கு தீயை வச்சா என்ன? எரியாம போவுமா?"

அங்கம்மா பேசிட்டிருக்கிறபோதே வெள்ளிங்கிரியும் தங்கராசுவும்  வீட்டுக்குள்  நுழைந்தார்கள்.

இன்னும்  வரும் அடுத்தவாரம். உண்மை நிகழ்வை வைத்து புனையப்படும் தொடர்.

Friday, 13 January 2017

காதல்....காமம்.( 20. )

இன்னும் அவனின் வெறி அடங்கல. கண்கள் செம்மண் நிறத்தில  சிவப்பேறிக் கெடக்கு. வரப்பையே விட்டுக்கொடுக்காத  ஊரில்  கட்டின பொண்டாட்டியை  அடுத்தவன்  தட்டிட்டுப் போனா  சும்மா  கெடப்பானா..அத்தன நாளும்  அவன்  அடங்கிக் கெடந்ததே அவ எப்படியும்  அத்துக்கிட்டுதான்  வருவா, அன்னிக்கி  போட்டுத்தள்ளலாம்னுதான்  அடைக்கண்  காத்திட்டிருந்தான்,

காரியத்தை முடிச்சிட்டான் ! அருவாளுடன்  போயிட்டிருக்கான்  போலிஸ் டேசனுக்கு.

 திடீர்னு குறுக்கால வெள்ள நெர அம்பாசடர் கார் வந்து நிக்கிது.. அவன்எதிர்பார்க்கல, சட்டுன்னு  அருவாளை  ஓங்கிட்டான். செல்லத்தாயின் சொந்தக்காரன் எவனோ  வந்து மறிக்கிறான்னு  நெனச்சிட்டான்.எல்லாமே கண் சிமிட்டிற நேரம்தான்!

"அடைக்கா! காருக்குள்ள ஏறு!"

முக்காடு போட்ட நாலுபேரு  அவனை மடக்கி  காருக்குள்ள தள்ளிட்டானுக. வானவெடி வேகத்தில அழகர்கோயில் கோயில்  மலையை நோக்கிப்  பறக்குது!

"வெட்டி தள்ளிட்டு வேலய முடிச்சவன் எதுக்குடா  டேசனுக்கு போறே? நீதான்  அவள போட்டுத்தள்ளினேங்கிறதுக்கு  என்னடா சாட்சி? பஸ்ல போறவன்  வந்து சாட்சி சொல்லப் போறானா? அவள போட்டுத் தள்ளனும்கிறதுக்காகதான் நாங்களே பஸ்சு  பின்னாடி வெரட்டிக்கிட்டு வந்தோம். ஆனா காரியத்த நீ கச்சிதமா  முடிச்சிட்டேடா !"

முக்காடை  எடுக்காம  பேசுறான். அடைக்கன் கொஞ்சம் நிதானத்துக்கு  வந்தான் .

"நீங்கள்லாம் யாரு?"

"ஒன்ன காப்பாத்த வந்தவங்கன்னு  நெனச்சுக்க." என்று எல்லோருமே முக்காடை  எடுத்துட்டு மொகத்தைக் காட்டுறானுங்க. யாரையும் அவனுக்கு  தெரியல.

அடைக்கன் தெளிவாயிட்டான்.

"என்ன காப்பாத்துறதுக்கு நீங்க யாரு? "

"அதான் சொன்னம்ல! அழகர்மலைய்ல ஒனக்கு பாதுகாப்பான எடம் இருக்கு. நேரா நேரத்துக்கு சோறாக்கிப் போடவும் ஆளு இருக்கு. வசதியா இரு. எங்கள  அனுப்பினவரு வருவாரு.அவர் சொல்வாரு. சந்தேகப்பட்டு போலீஸ் ஒன்ன தேடலாம்.அவங்க கிட்ட மாட்டாம இருக்கிறதுக்கு அவரு யோசனசொல்வாரு.
கேட்டு நடந்துக்க.அதுவர அங்கிட்டு இங்கிட்டு போகாம கெட.!"

"நம்மள காப்பாத்துறதால யாருக்கு லாபம்னு" யோசிக்க ஆரம்பிச்சிட்டான். பிடிபடல. சரி வர்றது வரட்டும்னு சும்மா இருந்துட்டான்.

அழகர்மலை அடிவாரம் வந்திருச்சு. இப்ப யாருக்கும் பயமில்ல. அவனை கூட்டிக்கிட்டு அத்தன பேரும் மலை மேல ஏற ஆரம்பிச்சிட்டாங்க. ஆள் அண்டாத எடம். நரி வரும். காட்டுப்பன்னி வரும். சமயங்களில் சிறுத்தையும்  வரும்.அதனால மூலிகை பறிக்க வர்றவங்க கூட அங்க வரமாட்டாங்க. பொதுவா சங்கிலி அறுக்கிறவன்ல இருந்து கொலை பண்றவன் வரை  பதுங்கிறதுக்கு அது  வசதியா இருந்துச்சு. போலீஸ் தேடி வந்தா மேல இருந்து பார்த்தா கீழே வர்றவனுங்களை நல்லா பாக்கமுடியும்.ராத்திரி வந்தாலும்  டார்ச்சு லைட் அடிக்காம மலை ஏறமுடியாது..அதனால பதுங்குறவனுகளுக்கு  அத விட  பாதுகாப்பு  எதுவும் இல்ல,

குனிஞ்சி போற அளவுக்கு ஒரு குடிசை.ஒசரமான புதர்களுக்கு நடுவில்  இருக்கு. அங்க நின்னிட்டாங்க.

"இதான் ஒன்  எடம்.ராத்திரிக்கு ஒதவிக்கு ஒருத்தன் சோறு கொண்டாருவான்  அவன்தான் ஒங்கூட இருக்கப்போறவன். ராத்திரி ஆனா பீடி சிகரெட்டு பிடிக்காதே..குடிசைக்குள்ளய பிடி."

'' மிருகம் ஏதாவது  வருமா?"

"பயப்படாதே. அத மத்தவன் பாத்துக்குவான், ஆயுதம்லாம் இருக்கு"

கடத்திக்கொண்டு வந்தவர்கள் மலையை விட்டு எறங்க ஆரம்பிச்சிட்டாங்க.

அடைக்கனுக்கு இன்னும் எதுவும் புடிபடல. நம்மள காப்பாத்தி அடை காக்கிற  அவசியம் யாருக்கு இருக்க முடியும்? அருவாளை கழுவனும். ஒடம்பில இருக்கிற ரத்தக்கறையை போக்கனும். பக்கத்தில ஓடை எதுவும் ஓடுமா?

அடைக்கனை  கடத்தியது  யாராக  இருக்க முடியும்? உண்மை நிகழ்வை  அடிப்படையாக  வைத்து  புனைகிற  தொடர் இது. அடுத்த வாரம்  மற்றவை  !

Saturday, 7 January 2017

காதல்..காமம். ( 19.)

மழை விட்டிருந்தாலும் பன்னீர் தூறல்! முந்தானையை  தலையில் போட்டுகொண்டு  இடது கையில் பிடித்துக்கொண்டாள். வலது கையினால்  சேலையை  தூக்கிப் பிடித்துக் கொண்டு தேங்கிக் கிடந்த தண்ணீரை  கடந்து  சென்றாள். பாதகத்தி! சேலை நனைந்து விடக்கூடாது என்று  நினைக்கிற  அந்த சிறுக்கி  தன மானத்தை ஒரு வீட்டுக்காக வித்துட்டாளே! நத்தம் போகிற  பஸ்சை பிடிப்பதற்காக  எட்டி நடந்தாள்.அவளை அறியாமல் கண்களில் கண்ணீர்.
"இப்படி சீப்பட்டு ...சீரழிஞ்சு போறியே...எதை நம்பிடி வாழப்போறே? ஒரு பய வேலை  கொடுப்பானா? மானங்கெட்டவளேன்னு  ஊரு பேசாதா? " என்று  மனசு கேட்டுக்கிட்டே இருக்கு! அதான் விம்மலும் வேதனையுமா போகிறாள்.

இங்கிட்டு வடிவேலுக்கு வேற பிரச்னை. "பிள்ளையும் மதிக்கல. மாயக்காளும் முந்தியே காரி துப்பிட்டா. ஆத்தாளும் வெளக்கமாத்தால அடிக்காத குறைதான்! அந்த வீட்டில கவுரதையா வாழ முடியுமா? நாய்க்கு  வைக்கிற மாதிரிதானே சோத்தை வைப்பாளுக..பேசாம  நாண்டுக்கிட்டு செத்துரலாமா?" இப்படி துடிக்கிது மனசு. ஆனாலும் அந்தாளு அப்படியெல்லாம்  சாகமாட்டார். கூத்தியாளுக்கு கூசாம காரை வீட்டை எழுதி வச்சவராச்சே!  அந்த தூறலிலும்  உடம்பு  சூடா  இருக்கு.மனசு  வேகும்போது  உடம்பு நடுங்கத்தானே  செய்யும்!கார், சைக்கிள் எல்லாம் மழைத்தண்ணீர் ,சேற்றையும் கலந்து அந்த ஆள் மீது  அடிக்கிது. சொரணை இல்லாமல்தான் நடக்கிறார்.

அங்கிட்டு பஸ்சை பிடிச்சு  ஏறி உட்கார்ந்தவளை முக்காடு போட்டிருந்த  ஆம்பளை ஒருத்தன் ரகசியமா  பார்த்து ரசிக்கிறான். ஈர ரவுக்கையில்  எடுப்பாக இருந்த இளமையை கள்ளத்தனமாக பார்க்கிறானோ என்னவோ! ஆம்பளையின்  கண்கள்  முதலில் மேய்வது அங்குதானே!

பஸ் நத்தம்  நெருங்குகிறது.. கண்டக்டர்  செல்லத்தாயி பக்கமாக வந்தான்.

"என்னத்தா...டேசனுக்கு போனியே...என்னாச்சு?" இளக்காரமாகத்தான் கேட்கிறான்.." அவுக  காசு பணம் உள்ள செல்வாக்கான ஆளுக. அந்தாளு கிட்ட போகும்போது யோசிச்சிருக்கவேணாமா?"

"பொத்திட்டு போடா! ஒன் பொண்டாட்டி ஊர் மேயாம பாத்துக்க!"--அவள் போட்ட சத்தத்தில் பஸ் சடன் பிரேக்  அடித்தது. அத்தனை பேரும் இடி விழுந்த எபெக்ட்டில்.!

அதே நேரத்தில் கண் இமைக்கும் நேரத்தில் முக்காடு போட்டிருந்த அந்த ஆளு  சாமியாடி மாதிரி  அருவாளுடன் கத்துகிறான்.

"ஆமாடி ..என் பொண்டாட்டிய  ஊர் மேயாம பாக்கலேடி" என்றபடியே  செல்லத்தாயின் கழுத்தில் அருவாளை வீசினான்.

மொத்த பஸ்சும் காலி...செல்லத்தாயியும் சில வினாடி உடல் துடித்தபடி காலி!

அவன்  செல்லத்தாயிக்கு தாலி கட்டியவன்! பெயர் அடைக்கன்.

ரத்தம் சொட்டும் அருவாளுடன் போலீஸ் ஸ்டேஷன் நோக்கி  நடக்கிறான்.!

உண்மை  சம்பவத்தை  அடிப்படையாக வைத்து  புனையப்படும் தொடர்,.அடுத்த வாரம்  வரும்!

Saturday, 31 December 2016

காதல்..காமம். ( 18.)

"தம்பி..யாரு?"

உள்ளே வந்த வெள்ளிங்கிரியைப் பார்த்து கேட்டார் எஸ்.ஐ.

''நான் இவனோட பிரண்டு சார்"---தங்கராசுவை  கை காட்டினான்.

"நீ எதுக்கு வந்தே? ஒன்னை நாங்க கூப்பிடலியே?" - ஆசனத்தை விட்டு எழுந்து வந்தார்.

"எனக்கு இவங்க மேட்டரு தெரியும் சார். செல்லத்தாயி நல்ல பொம்பள இல்ல  சார்."

"இத சொல்லத்தான் வந்தியா? அந்த பொம்பள கொடுத்திருக்கிற கேசு  கொலை முயற்சி கேசு ! "

"தெரியும் சார்.! என்னிக்கு எங்கய்யா அப்படி செஞ்சார்னு அந்த  பொம்பள ய
சொல்லச்சொல்லுங்க ....?"

ஹெட்கான்ஸ்டபிளை பார்த்தார்   எஸ்.ஐ.. " எந்த தேதியில அக்கரன்ஸ்  நடந்ததா சொல்லிருக்கா? தம்பி கேக்கிறார்ல..சொல்லுங்க ஏட்டய்யா?"

"பிராதுல சொல்லல சார்! சும்மா மொட்டையாத்தான்  எழுதிருக்கு!"

எஸ்.ஐ.யின் கோபம் ஏட்டு மேல திரும்புகிறது.. "என்னய்யா ...கேசு பாக்கிறிங்க. கட்ட பஞ்சாயத்தா ?பிராத புல்லா படிக்கமாட்டிங்களா? உங்கள கவனிக்கிறதா சொல்லிட்டாளா? வடிவேலு சொல்றத வச்சு பாத்தா அவ அப்படிப்பட்ட ஆளு மாதிரிதான் தெரியிது" என்றவரின் ஆத்திரம் இப்போது  செல்லத்தாயி மீது  திரும்பியது.

"என்னடி...வெளையாடப் பாக்கிறியா? பொய்யா புகார் பண்ணி  அந்தாள் கிட்ட என்னத்த எதிர்பாக்கிறே? அதான் வீட்டை எழுதி வச்சிருக்காரே அந்த ஏமாளி!அப்பறம் என்ன..பேசாம ஒன் புருசனோடு  சேந்து வாழவேண்டியதுதானே?"

அதுவரை  வாயில் முந்தானையை வைத்து அமுக்கிக்கொண்டிருந்த செல்லத்தாயின் கண்களில் கண்ணீர் பொங்க ஆரம்பித்தது.

"என் புருஷன் மானஸ்தன். அந்தாளு என்ன ஏத்துக்க மாட்டாரு..இந்தாளும் நிரந்தரமா  இருக்கப்போறதில்ல. பொண்டாட்டி புள்ளன்னு போயிருவாரு. நான் சாகுறவரை எனக்கு என்ன ஆதரவு ? யாரு கொடுப்பா?  ஆதரவு கெடைக்கனும்னா இந்தாளு மூலமா எனக்கு ஒரு பிள்ள வேணும்னுதான்  எஜமான்.  இப்படி  புகார் கொடுத்தேனுங்க!"

"தப்பா நெனச்சிருக்கே..அந்தாள  ஜெயிலுக்கு அனுப்பிட்டா கடேசிவரை ஒனக்கு எப்படி சப்போர்ட் இருக்கும்.?பொய்யா கொடுத்திட்ட. "என்ற  எஸ்.ஐ. ஓரமாக நின்றிருந்த வடிவேலுவை பார்த்தார்.

''உண்மையில ஒரு குடும்பத்தை கெடுத்திருக்கேய்யா!.சாதி திமிரு!,களை எடுக்கிறவதானேன்னுஎளக்காரமா நெனச்சு  கையை வச்சிட்டே! உன்னோட பொம்பள பசிக்கு இவள தின்னிருக்கே! இவளும் எதோ ஆசையில சபலபட்டிருக்கா! தப்புதான். வீட்டை எழுதிகொடுத்திருக்கிறவன்செல்லத்தாயி கடேசிவரை  கண்கலங்காம இருக்கணுங்கிறதுக்கு ஏதாவது பண்ணித்தான் ஆகணும்.! என்ன பண்ண போறே? முடியாது..மாட்ன்னுடே சொன்னா நான் சும்மா விடமாட்டேன்..!"

"ஐயா...வீட்டில கலந்து பேசணும்!" ---வடிவேலுவின் குரலில் பயம் இருந்தது.

"வீட்டை எழுதி கொடுத்தபோது  யாரைய்யா  கன்சல்ட் பண்ணினே? குடும்பத்துக்கு தெரியுமா அது?"

"தெரியாதுங்க!"

"அப்ப எதுக்குய்யா வீட்டில கேட்கணும். இங்கதான் உன் மகன் இருக்கான். சாட்சிக்கு அவனோட பிரண்டு இருக்கான். முடிவ சொல்லிடும்!"

தன்னுடைய மானம் போனதில் ரொம்பவே உடைந்தபோயிருந்த வடிவேலு தனது முடிவை சொன்னார்." மாசம் ஒரு மூட்டை நெல்லு  கொடுத்திர்றேன்."

செல்லத்தாயிக்கும் அது சரி எனப்பட்டது. ஆனாலும் குமுறி அழுகிறாள்.

காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முன்னிலையில் எழுத்து மூலமாக  அந்த சிக்கல் முடித்து வைக்கப்பட்டது.

வெளியில் வந்த தங்கராசு  " நீ வெளங்கமாட்டே" என்று அப்பனுக்கு   சாபம் கொடுத்துவிட்டு நண்பனுடன் புறப்பட்டுப் போய்விட்டான்.

இது உண்மை  நிகழ்வை  அடிப்படையாக வைத்து  புனையப்பட்டது.

Sunday, 25 December 2016

காதல்..காமம்.( 17.)

வானம் குமுறிக் கொண்டிருந்தது. பலத்த மழை வருவதற்கான  அறிகுறி.

செல்லத்தாயி போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தாள்.

"ஐயா ,வடிவேலு அவர் பையனுடன் வந்திட்டிருக்காருங்க." கான்ஸ்டபிள் ஸல்யூட் அடித்துவிட்டு அவரின் வேலையைப் பார்க்க போய்விட்டார்.

"வீட்டுல போயி பேயாட்டம் போட்டியா.?" சப்- இன்ஸ்பெக்டர் கேட்டார்.

பதறிப்போனாள் செல்லத்தாயி.

"ஐயோ சாமி...நான் கம்முன்னுதான் இருந்தேன்.அவரு பொண்டாட்டிதான் .மண் அள்ளி தூத்தாத குறையாக வஞ்சு  சாபம் கொடுத்துச்சு!"

"பின்ன... ஆலாத்தி எடுத்து உள்ள வாடின்னா....உன்ன கூப்புடுவாங்க...?" என்று  சப்இன்ஸ்பெக்டர் நக்கலாக சொல்ல ,  அதே சமயத்தில்வடிவேலு  ஸ்டேஷனுக்குள் நுழைந்தார். பின்னாடியே  தங்கராசுவும் வந்தான்.

குமுறிக்கொண்டிருந்த வானம் இடி மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.

"வாங்க..வடிவேலு..." என்ற எஸ்.ஐ. சற்று  கடுமையாகவே விசாரணையை  தொடங்கினார்.

"இந்த பொம்பளை யாருன்னு தெரியிதா?"

"எங்க  வயக்காட்டுல வேலை பார்க்கிற செல்லத்தாயிங்க!"

சிரிக்கிறார் எஸ்.ஐ.

"வேலை பாக்கிறவளா? என்னய்யா சொல்றே. அவ ஒன்னோட  வைப்புன்னு  சொல்றா! வைப்பா? ஒய்பா? சொல்லுமய்யா?"

"..............................!"

"வாயை தொறந்து சொல்லும். அவளும் நீயும் ஒண்ணா படுத்திருந்தப்ப  கொரவளையை நெரிச்சு கொல்ல பாத்ததாக கம்ப்ளெய்ன்ட் கொடுத்திருக்கா. அவ ஒம்மோட வப்பாட்டியாம்.நத்தத்தில இருக்கிற வீட்டை அவ பேருக்கு  எழுதி கொடுத்திருக்கிறீர்.ஆனா வயக்காட்டில வேல பாக்கிறவளா சொல்றீர்?ஒனக்கு இருக்கிற  வசதிக்கு எத்தனை வப்பாட்டியும் வச்சுக்கலாம். ஆனா  அவள ஏன்யா கொலை செய்ய பாத்தே?"

"சத்தியமா  அவள கொல்ல பாக்கலைங்க. பொய் சொல்றா தேவடியா முண்டே!"

"ஏங்கானும்...அந்த பொம்பளைய எந்த உரிமைய்ல அப்படி வய்யிரே? ஒங்கூட  படுத்தவங்கிற திமிர்லதானே ? களை எடுக்க வந்தவ அவ புருசன  விட்டுட்டு  ஒங்கூட வந்திட்டான்னா ....நீ ஆசை காட்டாம அவ்வளவு பெரிய தப்பை  பண்ணிருப்பாளா? சொல்லுய்யா? ஒண்ணை மாதிரி வசதியானவனுங்க ஏழை பாளைகளதான்யா குறி வக்கிறிங்க. களை எடுக்க வந்தவ வசதி இல்லாதவ  அவ புருசனும் அடக்கப்பட்ட சாதிங்கிறதால....காசு பணம் இல்லாதவங்கங்கிற  காரணத்தால ஒண்ணும் பண்ண முடியாதுங்கிற ஒங்க சாதி திமிரை காட்டுறிங்க.அவள கொலை பண்ணிட்டா  பணம் செல்வாக்க பயன் படுத்தி  தப்பிச்சிக்கலாம்கிற எண்ணம்,அவள அனுபவிச்சிதுமில்லாம கொல்லவும் பாத்திருக்கிறே? ஒம்மகன் வளந்து கல்யாணம் பண்றதுக்கு காத்திருக்கான். இந்த வயசில எதுக்குயா எழவெடுத்த காரியத்தை பண்ணிருக்கே?"

"அய்யா...அவ என் தொடுப்புதான். ஒத்துக்கிறேன்.மனசோடு வீட்டை எழுதிக் கொடுத்தவன் எப்படியா கொல்ல மனசு வரும்? அவ வீட்டுக்குப் போயி ரொம்ப நாளாச்சு...பொய்யி சொல்றா. மொட்ட கோபுரத்தான் சாமி மேல சத்தியம் பண்ண சொல்லுங்க..பாண்டி முனி மேல சூடம் அணச்சு சத்தியம் பண்ணுவாளா? கேளுங்க."  ---தலை கவிழ்ந்தபடியே கேட்கிறார் .

"செல்லத்தாயி...சத்தியம் பண்ணச்சொல்றாரு...பண்ணுறியா?" எஸ்.ஐ. அவளிடம் கேட்டார்.

"இனிக்க இனிக்க பேசி என்ன அனுபவிச்சிட்டு இப்ப சத்தியம் பண்ண சொல்றியா?"--செல்லத்தாயி இப்ப வடிவேலுவை பார்த்து நேரடியாக பேச ஆரம்பித்து விட்டாள்." கோழி அடிச்சு போடு...ஒன் கை ருசி அவளுக்கு வராதுன்னு சொல்லி மத்தியானமே வந்து படுத்தியே...அன்னிக்கி ராத்திரி வீட்டுக்குப்  போகாம என் காலடியே கதின்னு அனுபவிச்சியே...அதெல்லாம் பொய்யா? சத்தியம் பண்ணுவியா? நிரோத்து இல்லாம படுக்கிறதுக்கு என்னய்யா  காரணம் சொன்னே? ஞாபகம் இருக்கா? பிச்சிப்பூ வாங்கிட்டு வந்து கொண்டைய்ல வச்சு விட்டுட்டு ....வெக்கத்த விட்டு சொல்றேன்....என் மாருக்கு நடுவுல மொகத்தை வச்சு கொஞ்சுனியே.." என்று அவள் சொல்லியதை கேட்க முடியாமல்  தங்கராசு வெளியே செல்கிறான்.

மழை விட்டபாடில்லை. உள்ளே செல்லத்தாயி வெளிப்படையாக பேச முடியாததை எல்லாம் வெட்கத்தை விட்டு சொல்லிக்கொண்டிருக்கிறாள். வடிவேலுவின் தலை கவிழ்ந்து கிடக்கிறது. மானமோ  ஏலம் போய்க்கொண்டிருக்கிறது.

"செல்லம்...என்ன இருந்தாலும் நீதாண்டி எனக்கு எல்லாமேன்னு ஆயிப்போச்சு.இனி என்னடி தொடுப்பு வைப்புன்னு? என் ராசாத்தி நீதான்னு கண்ணிர் வடிச்சியே இல்லேன்னு சத்யம் செய்வியா...செத்த பெறகு உரிமையோடு வந்து நில்லுடின்னு இந்த மஞ்ச கயிரை கட்டுனியே..பொய்யா?" தாலியை எடுத்துக் காட்டுகிறாள். "இத்தனை மாசம் கழிச்சு  இந்த கயிரை கட்டுறியேன்னு கேட்டதுக்கு 'தப்புத்தாண்டி செல்லம்'னு கொஞ்சுனது மறந்து  போச்சா?" என்று தொடர்ந்து அவள் சொல்லிக்கொண்டே போக எஸ்.ஐ.இடை மறித்தார்.

"ஒங்க ராத்திரி அனுபவத்த சொன்னதெல்லாம் போதும்.சத்தியம் யாரும் பண்ண தேவை இல்ல.கம்ப்ளெயிண்ட் மேட்டருக்கு வாங்க! வடிவேலு ! என்னய்யா சொல்றே? கொரவளையை நெரிச்சியா...ஏன் கொல்ல பாத்தே..சொன்னா மரியாதை ..இல்லன்னா...?"

"சத்தியமா அவள கொல்ல பாக்கல..நெனைக்கவும் இல்ல. அவ பொய் சொல்றா! என் வழியா அவளுக்கு ஒரு பிள்ளை வேணும்னு கேக்கிறா..அதான்  உண்மை. இந்த உண்மை என் வீட்டுக்கும் தெரியும். நான் முடியாதுன்னு சொன்னதுக்குத்தான் என்ன இப்படி சந்தி சிரிக்க வைக்கிறா! அவ கிட்டய கேளுங்க" என்று வடிவேலு சொல்லியபோதுதான் அங்கு வெள்ளிங்கிரி  வருகிறான்.

"ஏண்டா..வெளில நிக்கிற?" என்று தங்கராசுவையும் கூட்டிக்கொண்டு உள்ளே சென்றான்.

மற்றது  அடுத்த வாரம். உண்மை  சம்பவம் இங்கு புனைவுக் கதையாக  தொடர்கிறது.

Sunday, 18 December 2016

சசிகலா---சினிமா படத்தின் பெயர்.

இந்தி,தெலுங்கு சினிமாப்பட உலகில் தெளிவான ஆளு ராம் கோபால் வர்மா! காரியவாதி! எது டிரண்டில் இருக்கோ அதை வச்சு பின்னி எடுத்திடுவார். அதனால அவர மத்தவங்களும் பின்னி எடுத்திருக்காங்க. ஆனா  எதை பத்தியும் கவலைப்பட மாட்டார்.பாறை மேல மழை பேஞ்சாலும் இடி  விழுந்தாலும்  யாருக்கு நோகப்போகுது!

இப்ப டிரண்டில் இருப்பது சசிகலாதான். ஜெயலலிதா இல்லாத எடத்தை  இந்த அம்மாதான் பில் அப் பண்ணப்போறாங்கன்னு ஊரு உலகமே பேசிக்கிட்டு இருக்கு.! அதனால சசிகலா பேரை தனது அடுத்த படத்துக்கு வைக்கப்
போறாராம்.

"இது சுத்தமான காதல் படம்"னு சொன்னதுடன் விட்டிருந்தால் கவலைப்பட்டிருக்க மாட்டோம். 'தமிழனின் காதல் கதைன்னு " சொல்லி இருப்பதுதான் கவலையா இருக்கு! உண்மையை சொல்றோம்னு வீரப்பனை கந்தல் கந்தலாக காட்டுன பெரிய மனுசந்தான் இவரு!

தனக்கு ஜெயலலிதாஜி மேல மதிப்பு மரியாதை இருந்தாலும் அதை விட மிக  உயர்வான மதிப்பு மரியாதை சசிகலாஜி மேல இருப்பதாக சொல்லி இருக்கிறார். நல்ல காலம் ஜெயலலிதா மேல பக்தியா இருந்த விசுவாசிகள் இப்ப  தோழி பக்கம் மாறி விட்டதால் யாரும் கண்டிக்கப் போறதில்ல.
சசிகலாவின் கண்கள் வழியாக ஜெயலலிதாவை பார்க்கப்போகிறாராம்.

சிங்கம் இருந்த காட்டில் சிறுநரி ஊளை இடுவதால்  காடு அதிரவா போகுது. ராம்கோபால் ஜி உங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைச்சாலும் அதிசயமில்ல. ஆடுங்க!