Saturday, 3 June 2017

காதல்...காமம்.( 38.) "மச்சம் சொன்னானா?"

அன்னமயிலுவின் வீடு.

"உன் பேரென்னம்மா?"----இன்ஸ்.ராம்குமார் கேட்கிறார்.

"அன்னமயிலு....!  அன்னம்னு கூப்புடுவாங்க,!"

"வெள்ளிங்கிரிக்கும் உனக்கும் எவ்வளவு நாளா பழக்கம்?"

"அப்படி யாரும் எனக்குப் பழக்கமில்ல.!"

"பழக்கமில்லாமயா கோயில்ல உன் பின்னால வந்தான்?"

"ரோட்டுல போறபோது நாலு நாயி  திரியிது சார் !"

"உன்ன பாத்துதான் வாலாட்டிருக்கு ஒரு நாயி! நீ பிஸ்கட் போட்டதாலதானே  வால ஆட்டிருக்கு?"

"எச்சக்கல நாயி எல்லார்கிட்டயும்தான் வால் ஆட்டும். அந்த நாயை புடிச்சு  முனிசிபாலிட்டில கொடுக்காம என்கிட்டே என்ன சார் விசாரண?"

"என்னம்மா சின்னப் பொண்ணா இருந்திகிட்டு இப்படி வெடுக் வெடுக்குன்னு  பேசுற?"

"எனக்கும் எவனோ ஒரு எடுபட்ட பயலுக்கும் சம்பந்தம் இருக்கிறதா நெனச்சு  கேள்வி கேட்டா என்னத்த சார் சொல்றது?.பொம்பளக பின்னால சுத்துற சண்டியர்கள்ல அந்த தட்டுகெட்ட பயலும் ஒருத்தனா இருக்கலாம்.அவனை அடிச்சு மிதிச்சு நாலு சாத்து சாத்தாம என்கிட்ட என்ன சார் விசாரண? நானென்ன கம்ப்ளெயின்ட் கொடுத்தேனா?"

"நல்லாத்தான்மா பேசுறே? அவன் உன்ன லவ் பண்றதா சொல்றானேம்மா...?"

"அவனைத்தான் கேக்கணும்.அந்தப் பொண்ணும் உன்ன விரும்புதான்னு ஸ்டேசன்லய  கேட்டிருந்தா இம்புட்டு தூரம் வந்திருக்க வேணாமே?"

"நீயும் விரும்புறியாம்! அவன் வேற சாதிங்கிறதால  பயப்படுறியாம்.எங்கள ஒண்ணு சேத்து வையுங்க சார்னு சொல்றான்.இதுக்கு என்னம்மா சொல்றே ?"

"எனக்கு அங்கங்க மச்சம் கெடக்குன்னு சொன்னா அதையும் நம்பி என்ன விசாரிப்பிங்களா? அவன் யாருங்கிறதே எனக்கு தெரியாதுன்னு சொல்றேன். கேள்வி மேல கேள்வியா கேக்கிறீங்களே? .நானும் நாலு எழுத்து படிச்சிருக்கேன். கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணுகிட்ட இம்புட்டு கேள்வி கேட்டு விசாரணை பண்றது எங்க சொந்த பந்தங்களுக்கு தெரிஞ்சா  அசிங்கமாகிப் போகாதா? என்ன பெத்தவங்க என்ன நெனப்பாங்க."

பட படவென அன்னம் பேசியதை கேட்ட இன்ஸ்.ராம்குமாருக்கு  அவள் உண்மையைத்தான் சொல்கிறாள் என்பது புரிகிறது. ஒரு பெண்ணின் எதிர்காலத்துக்கு வேட்டு வைப்பதாகிவிடும் என்பதை உணர்ந்தவராக  விசாரணையை அத்துடன் நிறுத்திக்கொண்டார்.

அன்னமயிலுவின் அம்மா செவனம்மாவை அழைத்து  ஆறுதலாக பேசினார்.

அதுவரை  அறைக்குள் அழுதுகொண்டு இருந்த செவனம்மாவின் கண்கள் ரத்த சிவப்பேறி இருந்தது.வசதியான பெரிய குடும்பம்.புருசன் வெளியூரில்! அவரின் காதுகளுக்குப் போனால் என்ன ஆகுமோ என்கிற பயம்.

கையெடுத்து கும்பிட்டு அதிகாரியை அனுப்பிவைத்தவள்  மகளை கட்டிப்பிடித்துக் கொண்டு   ஒப்பாரி வைத்தாள் .

உண்மை  நிகழ்வின் அடிப்படையில் புனையபடுகிற தொடர்.

No comments:

Post a Comment