Monday, 27 February 2017

காதல்..காமம். ( 26.)

"... ஏட்டி  ராசு...?" மனைவி ராசம்மாவை இப்படித்தான்  சிவனாண்டி கூப்பிடுவார். பொன்னியின் அப்பா அம்மாதான் இவர்கள்.

"கூப்பிட்டிங்களா" என்றவாறே  அடுப்பங்கரையில் இருந்து வந்தாள் ராசம்மா.
"மொச்சக்கொட்டையும்  நெய்மீன்கருவாடும் போட்டு கொழம்பு வச்சு ரொம்ப நாளேச்சின்னு  பிச்ச ராவுத்தர் கடைக்குப் போயி கருவாடு வாங்கியாந்தேன்.எதுக்கு கூப்பிட்டிங்க?" என்ற படியே முந்தானையில் கையை துடைத்துக் கொண்டாள்.

புருசனின் பக்கத்தில் நிற்கிறாள்  மகள் பொன்னி. அப்பனுக்கும் மகளுக்கும் என்ன பஞ்சாயத்தோ? அவர்கள் இருவரும் முறைத்துக்கொண்டிருக்கிற  போதுதான் சம்சாரத்தை சிவனாண்டி கூப்பிடுவார்.

'என்னங்க?எதுக்கு கூப்பிட்டிங்க ?அடுப்படியில வேல கெடக்கு!"

"உம் மவ  பொன்னி என்ன சொல்லுதுன்னு கேளு. உனக்கு  புரியிதின்னான்னு பாரு?".

அம்மாவுக்கு பேச இடம் கொடுக்கவில்லை மகள்.!

"எனக்கு சுத்தி வளச்சு பேசத் தெரியாது ! ஆத்தா! தெளிவா சொல்லிடுறேன். எனக்கு வயசாயிடிச்சின்னு படிப்பு  முடிஞ்சதும் மாப்ளய தேடுவீங்கள்ல.. அந்த  கவலை வேணாம்னு அய்யாகிட்ட சொன்னேன்.அது அவருக்கு புடிபடலயாம் , உன்னய  கூப்பிட்டு அருத்தம்  கேக்கிறாரு,நான் என்ன சொன்னேன்னு உனக்காச்சும் வெளங்குனா சரி!?"

அதுவரை தன்னுடைய மகள் அப்படி பேசி  ராசம்மா கேட்டதில்லை.

"என்னலா...என்னத்த சொல்ற? புருசன இப்பவே தேடிக்கிட்டேன்னு சொல்ல வர்றியா...துளுத்துப் போச்சா?என்னடி கருமாயம் இது? எவன்டி சொக்குப்பொடி  போட்டான்?"

"அய்யாவுக்கு நீ போட்ட சொக்குப்பொடியிலதான்  இப்படி  ஆடுறாரா?அப்படி ஒரு பொடிய நான் இதுவரை பாத்ததில்ல ஆத்தா? நீயே செஞ்சுக்குவியா? அப்படி என்னென்ன சரக்கு சேர்த்துக்கனும் ..சொல்லு! நானும் கத்துக்கிறேன்" என்றவள்  ராசம்மாவை நெருங்கினாள். " பெத்த மகள் கிட்ட இப்படி கேக்கிறியே..நாக்கு கூசல.? என்னை பெத்தியா..இல்ல தவுட்டுக்கு வாங்கினியா ...வெத்தல பாக்கு பொகையில போட்டு போட்டு நாக்கு தடிச்சிப் போச்சு?"என்று  அம்மாவின் தண்டட்டியை ஆட்டிவிட்டபடியே பேச ஆரம்பிக்கிறாள்.

ராசம்மாவும்,சிவனாண்டியும் என்ன பேசுவது என்பது புரியாமல் திகைத்து மகளையே பார்க்கிறார்கள்.

"புருசன தேடிக்கிட்டியான்னு கேட்டில்ல. ..ஆமா ..தேடிக்கிட்டேன். அதுல என்ன தப்பு? மனசுக்கு புடிச்சவனோடு  குடும்பம் நடத்துறது தப்புன்னு நீங்க  ரெண்டு பேரும் சொல்றீங்களா? நீங்க எவனையாவது கட்டி வைப்பீங்க. அவன் சண்டியர்த்தனம் பண்ணுவான்.குடிச்சிட்டு வந்து  குடும்பம் நடத்த கூப்பிடுவான் .நான் அடங்கி  கிடக்கணும்  வெள்ளென எந்திரிச்சி அவன் காலை தொட்டுக் கும்பிட்டு தாலி பாக்கியம் நெலைக்கனும்னு கண்ல தாலிய ஒத்திக்கணும்! உன் தம்பிக்கி வாக்கப்பட்டு வந்தாளே ஒரு மகராசி   ரெண்டாவது மாசமே அத்துக்கிட்டு ஓடல?...திரும்பி வந்தாளா? வாழாவெட்டியா இருந்தாலும் இருப்பேன்னு உன்னோட  குடும்பம் நடத்த முடியாதுன்னு  தாலிய கழத்தி கலனிப்பானையில போட்டுட்டு போனத மறந்திட்டியா?".

ராசம்மா  தலையை விரித்துப்போட்டுக்கொண்டு ஆங்காரமுடன் பேசுகிறாள்..
கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது.

"நாக்கால கெட்ட சிறுக்கி! பெத்தவக கிட்ட பேசுற மாதிரியா பேசுற? வாப்பட்டி நாயே! நீ எக்கேடு கெட்டா எனக்கென்னன்னு விட்ற முடியாதுடி. என் புருசன் குடும்பத்துக்குன்னு ஒரு பேரு இருக்கு. மச்சு வீட்டு மவராசன்டி ! தெருவில இன்னிக்கும் நடந்து போனா வாசல்ல உக்காந்திருக்கிறவளுக எந்திரிச்சி நிப்பாளுகடி.ஆம்பளைக தோள்ல கெடக்கிற துண்டு கக்கத்துக்கு போயிரும்டி .இப்பேர்ப்பட்ட குடும்பத்தில   பொறந்திட்டு இப்படி ஒரு கேடு கெட்ட காரியத்தை பண்ணுவேன்னு சொன்னா ஒன்ன உசிரோடு விட்டு வப்போம்னு நினைக்கிறியா ? உத்திரத்தில தொங்க விட்ருவோம்."

சிவனாண்டியின் கச்சேரி ஆரம்பமாகிறது.

"ஏட்டி  சீவனை விடுறே! நாலெழுத்து படிக்கவச்சது நம்ம தப்பு.! கொட்டத்தில மாட்ட குளிப்பாட்டி சாணிய அள்ள விடாதது நம்ம தப்பு? கெண்டைக்கால்  நரம்ப அறுத்து விட்டு வீட்டோடு கெட நாயேன்னு செஞ்சிருக்கணும்.எப்படி  நெஞ்சழுத்தமுடன் பேசுது கழுத! "

"இப்படியெல்லாம் பேசுனா பயந்து போயிருவேன்னு நெனைக்கிறிங்களா? உங்களுக்கு மாப்ள பாக்கிற கஷ்டம் வேணாம்னு மட்டும் சொன்னதுக்கே  ரெண்டு பேரும் இப்படி ஆடுறீங்களே! நான் யார கட்டிக்கப்  போறேனுன்னு சொன்னா என்னா ஆட்டம் ஆடுவிங்க? அவரும் மச்சு வீடு காரை வீடுன்னு  பண்ணை வச்சு வாழுற குடும்பம்தான்."

"அப்ப ஓடிபோவேன்னு சொல்றியாடி?"

"நான் ஏன் ஓடிப் போவனும்? நீங்க ரெண்டு பேர் தாங்கித்தான்  சாமி தெருவில  ஊர்கோலம் போவுதா? நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குதுன்னு சொல்வாங்க. உங்க ரெண்டு பேர பாத்துதான் சூரியன் மொளைச்சி வருதாக்கும்?"

வாசலில் ஜட்கா வண்டி வந்து நிற்கிற சத்தம் கேட்டு மூன்று பேரும் சண்டையை நிறுத்திவிட்டு  அவரவர் இடத்துக்கு சென்றார்கள். ராசம்மா  அடுப்படிக்கு போனாள். பொன்னி அவளுடைய அறைக்கு சென்று விட்டாள். சிவனாண்டி மட்டும் வாசலுக்கு போகிறார்.

இது  உண்மைச்சம்பவத்தின்  புனைவு, இன்னும்  தொடரும்.

Sunday, 19 February 2017

காதல்...காமம்..( 25. )

"மனசு ஆறல..பொன்னி.,உசிருக்கு உசிரா பழகின எங்கிட்டய மறச்சிருக்கான். எதுக்கு மறைக்கணும்.? அவன் ஆசைப்பட்ட பிள்ளக்கிட்ட பழகுறான். பழகிட்டுப்போ ! கல்யாணம் பண்ணு..இல்ல பண்ணாமப்போ!அது அவனோட  இஷ்டம்...நான் குறுக்கே விழுந்து மறிக்கப் போறனா? அது என் வேல இல்லியே.! எதுக்காக மறைக்கனும்கிறேன்?"

தங்கராசு சரியாகத்தான் பேசுகிறான் ஆனால் வெள்ளிங்கிரி தரப்புக்கு எதிராக அல்லவா இருக்கு! சொந்த சாதிக்காரி.. அதுவும் ராசுவின்  உறவுக்காரப் பொண்ணு. சுருக்கென குத்தாமல் இருக்குமா?   அவன் பேசிக்கொண்டே போக  பொன்னியின் மனசில் இப்படியெல்லாம் ஓடுகிறது,

"இதப்பாரு ராசு. அவன் பக்கத்து நியாயம் என்னன்னு தெரியாம கோவிக்காத. அது  சரி  இல்ல.! அவனோட சொந்த விசயம்.இத்தோடு விட்ரு! அத கிண்டி கிளறி பெருசாக்காத.!"---பொன்னி சமாளிக்கிறாள் . வாய் தவறி எதுவும் வந்துவிடக்கூடாதே என்கிற பயமும் இருக்கிறது.

"சரி...அதப்பத்தி பேசினனா ஏன்டா எருமைன்னு கேளு..இத்தோட அவன் சங்காத்தமே வேணாம்.பொன்னி.! எங்கிட்ட பேசவேணாம்கிறத நீயே அவன்கிட்ட சொல்லிரு.மீறி வந்தான்னா மரியாதை கெட்டிரும்.என்ன வேணும்னாலும் நடக்கும்கிறதையும் சொல்லிரு!"

"ராசு.  இது சின்ன விசயம்.இதப்போயி பூதக்கண்ணாடி வச்சா பார்ப்பே! ?"

"உனக்கு தெரியாது பொன்னி.அவன் மனசில பெருசா திட்டம் இல்லாம அவன்  என்கிட்டே மறைச்சிருக்கமாட்டான்.எங்கேயோ கைய வச்சிருக்கான்." என்றதும்  பொன்னிக்கு  கட்டெறும்பு கடித்த மாதிரி கடுக்கிறது. ராசுவின் சொந்தக்கார பெண்ணைத்தான் காதலித்திருக்கிறான் என்பது தெரிந்து விடுமோ என்கிற பயம் வந்துவிட்டது.

தெரிந்திருந்தும் தன்னிடம் பொன்னி சொல்லாமல் மறைத்து விட்டாள் என்று  ராசு நாளை  ஆத்திரம் அடைந்தால் என்ன பண்ணுவது என்கிற பயமும் வந்துவிட்டது.

"வீணா மனசை குழப்பிக்காதே..கோவிலுக்கு வந்திட்டு சங்கடத்தோடவா வீட்டுக்கு திரும்புவாங்க. நான் வெள்ளிங்கிரிகிட்ட சொல்லிடுறேன். உன் வீட்டுப்பக்கம்  இனிமே வரமாட்டான்.எந்திரி. காப்பி கிளப்ல சாப்பிட்டிட்டு  போகலாம்"

********************
சொ ன்னமாதிரியே  மறுநாள் கிரியை சந்தித்து  பேசினாள் பொன்னி.

 நண்பனை பிரியப்போகிறோம் என்கிற கவலையை விட  காதலித்து  கழுத்தறுத்து விட்டாளே என்கிற கோபம்தான் அவனிடம் மேலோங்கி இருந்தது.

"விடு பொன்னி! அவனை நீ ஏமாத்தினால்  தாங்குவானா? துடிப்பான்ல. அவனுக்கு நெஞ்சு கருகும்ல..அத மாதிரிதான் எனக்கும் பொன்னி...என்னை ஏமாத்தினவள சும்மா விடப்போறதில்ல. காலம் முழுக்க அவ நெனச்சு நெனச்சு அழுவனும்! "

"கிரி நீ பேசுறது சரியில்ல.அவ உன்னை காதலிச்சிட்டு இப்ப வேணாம்கிறாள்னா அவளுக்கு என்ன நெருக்கடியோ! மனசில உன்னையே  வச்சு பழகிட்டு வந்தவ ஏன் மாறுனாங்கிறது  உனக்கு தெரியுமா? நீ ஆம்பள.  உங்களுக்கெல்லாம் ஒத்த பொண்ணு பத்தாது. கல்யாணம் கட்டிக்கிட்டு வேற  பொண்ணுங்களை பார்க்காம இருக்கிங்களா? எங்கேயோ ஒரு சத்தியவான் உத்தமனா இருப்பான். நான் உன்னை மட்டும் குத்தம் சொல்லல.உன்னோட சிநேகிதனையும் சேர்த்துதான் சொல்றேன்.  காலேஜ்ல படிக்கிறப்ப தப்பான வீட்டுக்கு நீங்க போகலேன்னு சொல்லு?அதெல்லாம்  தெரிஞ்சிதான்பா பழகிட்டு வரேன்"

நெரிஞ்சி முள்ளை நெஞ்சில் வைத்து அழுத்துவதைப்போலஇருக்கிறது,. இதுக்கும் மேல அவளை பேச விடுவதை கிரி  விரும்ப வில்லை. படக்கென இரு கையும் சேர்த்து கும்பிட்டான்   "பொன்னி. வேணாம் இதுக்கும் மேல நீ பேசாதே. அவனை இனிமே பார்க்க மாட்டேன்,பேச மாட்டேன். உன் ஆளுகிட்ட போயி  சொல்லிடு! அவன் சோறு போட்டு நான் வாழல. நான் சோறு போட்டு அவனும் வாழல..எனக்கும் வயக்காடு இருக்கு.வசதி இருக்கு."

வேகமுடன் கிளம்பி சென்றுவிட்டான்.

பொன்னி பெருமூச்சு விட்டாள்.

தங்கராசு---வெள்ளிங்கிரி இருவரும் அதற்கு பிறகு சந்திக்கவும் இல்லை .பேசவும் இல்லை.

ஆனால் அது நிரந்தரம் இல்லை என்பது போகப்போகத்தான் தெரிந்தது..

உண்மை  நிகழ்வின் புனைவு, தொடராக  வருகிறது, அடுத்து நடந்ததை  பின்னர் பார்ப்போம்.

 ,.

Saturday, 11 February 2017

காதல்...காமம்.( 24.)

வீட்டை  விட்டு வெளியில் வந்த தங்கராசு,பொன்னி இருவரும் பொடிநடையாக நடந்தார்கள்.

"நெறைய பேசணும் போல இருக்கு பொன்னி.!..சந்தோசமா இருக்கு. எங்கய்யாவும்.ஆத்தாளும் நம்ம கல்யாணத்துக்கு இவ்வளவு வெரசா சரி  சொல்லுவாங்கன்னு நெனக்கல.! நீ எதிர்பாத்தியா? ஒங்க வீட்லயும் இப்படி  சம்மதம் கெடச்சிருச்சுன்னா ...." நடந்து கொண்டே  கேட்டான் தங்கராசு,

"அத நான் பாத்துக்கிறேன். எனக்கும் மனசு நெறஞ்சு இருக்கு!இப்ப . கோயிலுக்கு போலாமா...மீனாட்சிக்கு அர்ச்சனை பண்ணனும்னு ஆசைப்படுறேன் ராசு!"

" போலாமே   உனக்கு தாய் மாமன்னு யாரும் இருக்காங்களா?" பயலுக்குள் பதுங்கிக்கிடந்த பயம் மெதுவாக   தலையை காட்டியது.

சிரித்தபடியே  அவனை ஏறிட்ட  பொன்னி. ." வெவகாரம் பண்ணுவாய்ங்கன்னு  பயப்படுறியா? எளந்தாரிக ரெண்டு பேரு ...பயில்வானுக மாதிரி...?"என்றாள்.

பயலுக்கு மனசுக்குள் பந்து உருளுது..ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல்  " இருக்கட்டுமே...எனக்கென்ன பயம்? நீ இருக்கில்ல!"

"அதான பார்த்தேன். ஆம்பளைக ஏன் பொம்பளைக பின்னாலய பதுங்குறிங்க?
எதுத்து நிக்க துப்பு இருக்கணும் மச்சான்.! மீச இருந்தா மட்டும் போதுமா?" ரோடு என்றும் பார்க்காமல் அவனை தோளில் இடிக்கிறாள்!

"இந்தாரு புள்ள. எனக்கொன்னும் பயமில்ல.வெவகாரம்னு வந்தா ஒம்பாடு ஒன் மாமனுங்க பாடுன்னு வேடிக்கை பாத்திட்டு நிக்கப்போறேன்..வருங்கால எம்மா மனும் அத்தையும் அத பாத்துக்கப்போறாங்க..பந்தல்ல உக்காந்து தாலி கட்டப்போறது நான்தானே...தாய்மாமன் சடங்கு  ஒனக்கு செய்யணுமே...கெட வெட்டி சோறு போடனுமே  அதுக்காகத்தான் நான் கேட்டேன்."

"நல்லாத்தான் சமாளிக்கிறே.!அ ந்த கவலை ஒனக்கு  வேணாம் மாப்ள!. என் மாமனும் அத்தக்காரிகளும் செய்மொறைகள்ல  குறை வைக்க மாட்டாங்க!" என்று பொன்னி சிரித்த பிறகுதான் நம்ம ஹீரோவுக்கு  மூச்சு சீராகிறது.
.'அப்பாடா."என்று ராசுவும் சிரிக்க  மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்தனர் !

தரிசனம் முடிந்தது.!அர்ச்சனை செய்த தேங்காய் பழத்தை பொற்றாமரைக் குளக்கரையில்   .உட்கார்ந்து பங்கு போட்டுக்கொண்டிருந்தபோது  எதிர்பாராத விதமாக வெள்ளிங்கிரி அங்கு வந்து சேர்ந்தான் .. இருவருக்கும் ஆச்சரியம். பின் தொடர்ந்து வந்திருப்பானோ? கிரியின் முகத்தில் அப்பியிருந்த சோகத்தை இருவருமே உணரவில்லை.

"வெள்ளிக்கிழமைதானே  ஜாரிகளை பாக்க வருவே..இன்னிக்கி வியாழன்டா ..?" என்று வழக்கம்போல  நக்கலடித்தான்  தங்கராசு.

"உஷ்,,,சும்மா இரு ராசு!"என்று அவனை அதட்டிவிட்டு வெள்ளிங்கிரிக்கு பழம் கொடுத்தாள் பொன்னி."என்னண்ணே...வீட்ல சண்டை போட்டிங்களா.
.சாமிகிட்ட சொல்லலாம்னு வந்திங்களா ?"

"இல்லம்மா....என்ன ஒரு பொம்பள புள்ள எமாத்திருச்சி! உசிரா நெனச்சு பழகுனேன்..அந்த புள்ளயும் அப்படித்தான் பழகுச்சு."

இடை மறிக்கிறான்! தங்கராசுக்கு கோபம். அது நியாயமும்தான் ." இதுநா வரை எங்கிட்ட இத பத்தி மூச்சு விட்ருப்பியாடா? நாங்க சினேகமா இருக்கிறத  எப்பவாவது  மறச்சமா? நாங்க சொத்தைக. நீ மட்டும் கெட்டி! இப்ப என்ன மயிருக்கு எங்ககிட்ட சொல்ற?"

"ராசு...இது கோயிலு. அசிங்கமா பேசாதே,!" என அவனை அடக்கப்பார்த்தாள் பொன்னி.."நெறையப்பேரு வந்து போகிற எடம்.  வாய விடாதே,,படிச்சவன் மாதிரி நடந்துக்க! எதுக்கு இப்படி கத்துறே? " என்றதும் . விருட்டென எழுந்த தங்கராசு பத்து படி எறங்கி போய் உட்கார்ந்துவிட்டான்

"பொன்னி..ஒனக்கு தெரியாதது இல்ல. நான் வேற சாதி. அந்த புள்ள வேற சாதி.அதுவும் . ராசுக்கு சொந்தக்காரபுள்ள. இத சொன்னா அவன் வெடச்சுக்குவானா மாட்டானா? .தயவு செஞ்சு  இப்பவும் அவன்கிட்ட இத சொல்லாதே.

 இந்த மீனாட்சி மீது சத்தியம்!.

 பழகுறது வேற. சிநேகம் வேற. ராசு வீட்டில என்னை அவங்க வீட்டுப்புள்ள மாதிரி நினைக்கிறாங்கன்னா அவங்க குணம் உசத்தியா இருக்கு,!என்னை விரும்புனவளுக்கு  அவங்க வீட்டை பகைச்சிக்கிட்டு வெளியே வர தைரியம் இல்ல. எப்படியும் சம்மதம் வாங்கிடலாம்னுதான் என்கிட்டே பழகினாளாம்.கொன்னுபோட்றுவோம்னு இப்ப பயமுறுத்துறாங்கன்னு அழுகுறா! பார்க்காதேன்னு சொல்றா! எப்படி பொன்னி தாங்குவேன்.?"

தலை குனிந்தபடி சொன்னான் .கண்ணீர்த்துளிகள் மட்டும் படி மீது விழுகிறது.

"ஐயோ கிரி...நீ இப்படி பேசுறத பார்த்து யாராவது நம்மள   தப்பா நெனச்சுக்க ப்போறாங்க.  மனச தேத்திக்கிட்டு அந்த மீனாட்சி கிட்ட போயி சொல்லு! அவ பார்த்துக்குவா!"

கிரியின் பதிலைக்கூட எதிர்பார்க்கவில்லை .மடமடவென இறங்கியவள்  தங்கராசுவின் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள் . அவனின் தோள் ஒட்டி  உட்கார்ந்தவளுக்கு  இப்போதுதான் பயம் வருகிறது.

"நம்முடைய வீட்டிலே காதலுக்கு இடம் இருக்குமா?"

அவனது நெருக்கம் ஆதரவாக இருந்தது.

உண்மை நிகழ்வின்  புனைவு  இது. தொடராக  வந்து கொண்டிருக்கிறது.
Tuesday, 7 February 2017

குருவம்மாளும் செங்காந்தள் பூவும்!

"குருவம்மாள்னு பேரு வச்சிருக்காங்களே ...குலதெய்வத்தின் பேரா?"

வகுப்பிலிருந்து வெளியேறியதும் ஸ்ரீதர் கேட்டது இதைத்தான். என்னமோ  தெரியவில்லை. இத்தனை நாள் பழகி இருந்தும் இன்றுதான் அப்படி கேட்டான்..

ஒரு நொடி அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு " எதுக்காக இப்ப இந்த கேள்வியை  கேக்குறே?" என்று மெலிதாக சிரித்தாள். மேலே போட்டிருந்த சால்வையை முன்பக்கமாக நன்றாக விரித்து விட்டுக் கொண்டாள்.அவள்  வழக்கமாக அப்படி செய்வதுதான். இருந்தாலும் அந்த நேரத்தில் தன்னுடைய  கேள்வி அவளை டிஸ்டர்ப் பண்ணிவிட்டதோ? அவளுக்கு தன்னை எந்த வகையிலும் கவர்ச்சியாக காட்டிவிடக்கூடாது என்பதில் அக்கறை உண்டு.

"சும்மாதான்..!" இழுத்தான் ஸ்ரீதர்.

"ஏன் இழுக்கிறே...காலேஜில் படிக்கிறவ இப்படியொரு  பேரை  வச்சிருக்காளே..
பட்டிக்காட்டுத்தனமா இருக்கேங்கிற டவுட்தானே ?"

"அல்ட்ரா மாடர்னா டிரஸ் பண்றே..இங்க்லிஸ்ல ப்ளுயன்ஷி..காலேஜ்ல  நீதான் அழகி. எல்லோரும் உன் மருதாணி போட்ட விரல்களை பார்த்து  கவிதை படிக்கிரானுக.செங்காந்தள் விரல்கள்னு புகழ்றானுக. நீயோ குருவம்மா குப்பம்மான்னு சேரி ரேஞ்சுக்கு பேரு வச்சிருக்கியே...பேரை  மாத்தி இருக்கலாமேன்னு தோணுச்சு! ஸ்டைலிஷா பேரு இருந்தா  உன் பியூட்டிக்கு இன்னும் தூக்கலா இருக்குமே....அதான் குரு அப்படி கேட்டேன்?"

"செங்காந்தள்  பூவை பார்த்திருக்கியாடா?"

"இல்ல,! தமிழ் வாத்தியார் சொல்ல கேட்டிருக்கேன். அவ்வளவு செவப்பா இருக்குமாம்.!"

"கரெக்ட். ஆனா அந்த பூ ..ஒற்றை விதை தாவரத்தை சேர்ந்தது. ரோடு சைடில, வேலி ஓரம்னு இருக்கும்.விரல்களை மாதிரியே நீளம் நீளமா இருக்கும்.!.கார்த்திகை மாசம்தான் மலரும். அந்த பூவிலிருந்து  தண்டு ,வேர்னு எல்லா பார்ட்ஸ்சுமே பாய்சன்! அந்த மாதிரிதான்  என் விரல்களும் பாய்சன்னு சொல்றியா?"

ஸ்ரீதர் ஆடிப்போனான்..

"அய்யோ  அப்படியெல்லாம் இல்ல.குரு! தெரியாம சொல்லிட்டேன்.பசங்க கவிதை படிச்சப்ப அது மல்லிகை, முல்லை மாதிரி இருக்கும்னு நெனச்சிட்டேன். சாரி..குரு!"

"நீ எதுக்குடா பீல் ஆகுறே? ஆனால் அந்த பூவின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி வைத்தியங்கள்ல மருந்தா பயன்படுது.! அதனால் பேரை வச்சு எதையுமே ஜட்ஜ் பண்ணக்கூடாது ஸ்ரீதர். சரி என் பேரை பத்தி இப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணினதுக்காக நீதான் காப்பி ஷாப் கூட்டிட்டு போறே? ஓகே?"

"வித் பிளஷர்."
.

Saturday, 4 February 2017

காதல்...காமம்.( 23.)

இன்னும்  சேவல் கூவவில்லை. அடைக்கனின் பிடியிலிருந்து  மெதுவாக  தன்னை விடுவித்துக் கொண்டாள் பேச்சி. கலைந்த கூந்தலை  அள்ளி முடிந்து கொண்டாள். அவள் மனம் சொல்கிறது."கருவாயன்..காரியத்தில கெட்டிதான்.! "
 மண்ணெண்னை விளக்கை ஏற்றிவைத்து விட்டு மற்ற காரியங்களில் வேகமுடன் இருந்தாள்.குளிப்பதற்கு குளிர்ந்த தண்ணீர் சுகமாகவே இருந்தது.

கன்றிப் போயிருந்த  மாரை பார்த்தாள். இடுப்பு வலி இருந்தது. ஆனாலும்  அது  அவளுக்கு ரொம்பவே பிடித்துஇருக்கிறது.ஆங்காங்கே சற்று எரிச்சல் இருக்கிறது. அதுவும் அவளுக்கு சுகம்தான்!. படுத்திருந்த பாயை  அந்த இருட்டிலும்  தண்ணீரை விட்டு நன்றாக கழுவி சுவர் ஓரமாக சாத்தினாள்.

"மச்சான்..மச்சான்! "மெதுவாக அவனை எழுப்புகிறாள்.

"எந்திரி மச்சான்...விடியறுதுக்குள்ள வெளியேறி பஸ்சு பிடிக்கணும். அண்ணனும் வந்துரும்,எந்திரி!"

அவனுக்கு களைப்பாக இருந்தது. அந்த மெல்லிய வெளிச்சத்தில் பேச்சியை பார்க்கிறான்.

"அதுக்குள்ளே குளிச்சிட்டியா..?"

"எந்த நோக்கத்தில கேக்கிறேங்கிறது புரியிது. அதுக்கெல்லாம் இது நேரமில்ல. மிச்சம் சொச்சமேல்லாம் புது எடத்தில போயி வச்சிக்கலாம். முதல்ல குளி. நான் எங்கண்ணனை உசிப்பிவிட்டு வந்திறேன். சாமான் சட்டெல்லாம் கட்டியாகணும். ஒரு பய கண்ல பட்ற கூடாது. கரித்தூளு இருக்கு. பல்ல வெளக்கிட்டு குளி"

அரை மணி நேரத்தில் மூவரும் ரெடி. அவர்கள் பயணப்பட்டு விட்டார்கள்.

"அய்யா! இவ பேரு பொன்னி. பழக்கம்.நானும் அவளும் ரொம்ப நாளா பழகிட்டிருக்கோம்.!" என்று  வடிவேலுவிடம்  அறிமுகம் செய்கிறான்  தங்கராசு.

அவளை மேலும் கீழும் பார்க்கிறார்  வடிவேலு, " இங்க வர்றது அந்த பொண்ணு வீட்டுக்கு  தெரியுமா...ஒங்காத்தா கிட்ட சொன்னியா?" என்று  மகனிடம் கேட்டவர்  அப்படியே பொன்னியிடம்  பேச்சுக் கொடுக்கிறார்

"எந்தாயி...இந்த பயல நல்லா புரிஞ்ச்சிக்கிட்டுத்தான் பழகிறியா...உங்கம்மா அப்பனுக்கு தெரியுமா? உங்கய்யா என்னத்தா பண்றாரு?"

"வெவசாயம். நான்  சிவனாண்டி மக.!ஒங்கள  எங்கய்யாவுக்கு  தெரியும்.!"

"இப்ப வெவரம் புரியிது  தாயி, ஒங்கய்யாவையும் தெரியும். ஒங்கண்ணன் ஒருத்தன் மாடு குத்தி செத்துப்போனான்ல? நல்ல குடும்பம்தான்.. ஆண் வாரிசு இல்லாம போச்சேன்னு ஒங்கய்யா ரொம்ப வெசனப்பட்டான்."

 பேசி கொண்டிருக்கும்  போது தங்கராசுவின் அம்மா மாயக்காள்  பேச்சு சத்தம் கேட்டு அங்கு  வந்தாள். பொன்னியை அவள் இதற்கு முன்பு பார்த்ததில்லை.

"வந்திட்டியா...காப்பி ஆத்திட்டு வாடி. நமக்கு ரொம்பவும் வேண்டிய பொண்ணு. தங்கராசுதான் கூட்டிட்டு வந்திருக்கான். போயி வெரசா கொண்டா!".சம்சாரத்திடம் சொல்ல அவளும் கிளம்பி சென்றாள்.

அடுப்படிக்கு வேகமாக போன மாயக்காள் சொம்பு நிறைய  கருப்பட்டி காப்பியுடன் வந்தாள்! லோட்டாவில் ஊற்றி கொடுத்துவிட்டு  பொன்னியை  ஒரு வித ஏக்கமுடன் பார்க்கிறாள். அந்த பார்வை அவளது உள்ளத்தில் உறங்கி கிடக்கும் ஆசையை  உணர்த்தியது.

'"மகராசி,  வாக்கப்பட்டு வந்தா லட்சுமி  குடி வந்தா மாதிரிதான் இருக்கும்! நல்லது நடந்தா சரி."

இப்போது  பொன்னியிடம் பேச்சு கொடுத்தாள்.

"படிக்கிறியா தாயி! தங்கராசுவ ஒனக்கு பிடிக்குதா, ஆசைப்பட்டுத் தானே  பழகிட்டு  வர்றீக?"

கோபம் வருகிறது தங்கராசுக்கு.!

"ஆத்தா செத்த சும்மா இருக்கியா,,,ஆசை இல்லாமலா வீட்டுக்கு வந்திருக்கும் " என்று மாயக்காளை  அடக்கிவிட்டு பொன்னியை பார்த்து  "சாரி" சொன்னான்.

"விடு  ராசு.! இதையெல்லாம் பெரிசாக்காதே! பெரியவங்க மனச புரிஞ்சி நாமதான் நடக்கணும்"!

பொன்னியை அவர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது.

வடிவேலு ஒரு தீர்மானத்துக்கு வந்தவராக." தாயி...எங்க வீடு  ரொம்ப நாளாவே  நிம்மதி இல்லாம கெடக்கு. ஒரு கொலை கேசு  இன்னும் முடியல. எம் பேரும் ஊர்ல கெட்டு கெடக்கு! இந்த சமயத்தில  ஒங்கப்பன்  நாங்க வந்து பொண்ணு கேட்டா  என்ன நெனப்பானோ...பயமா கெடக்கு தாயி.! அவசரப்படாம  ஆறப்போட்டு  பண்றதுதான் நல்லதுன்னு படுது! படக்குன்னு  ஒங்கப்பன் இஷ்டமில்லன்னு சொல்லிட்டானு வச்சுக்க.அப்புறம்  என்ன பண்ண முடியும்னு நெனக்கிறே?"

இப்பத்தான் முதன் முதலாக  வடிவேலுவை  முறை வைத்து பேச ஆரம்பித்தாள்.

"மாமா! நாங்க ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணிக் கொள்றதுங்கிறதில ஒரே மனசோடுதான் இருக்கிறோம். ரெண்டு குடும்பமும் சம்மதம் சொல்றவரை  காத்திருப்போம். அத ஒங்க கிட்ட இப்ப சொல்லிட்டேன். இதை எங்கய்யா அம்மாவிடமும் சொல்லிடுவேன்..ஒங்க கிட்ட  நீயே சொல்லிடுன்னுதான் ராசு என்னை இங்க கூட்டிட்டு வந்தார், அதான் வந்தேன். தப்பா நெனச்சுக்காதிங்க மாமா..வரேன் அத்தே" என்று  மாயக்காளிடமும்  சொல்லிவிட்டு  தங்கராசுவை அழைத்துக்கொண்டு  புறப்பட்டாள்.

வடிவேலுவுக்கு சந்தோசம்.

உண்மை சம்பவத்தை  அடிப்படையாக கொண்டு  புனையப்படுகிற  தொடர்,!