Wednesday 30 March 2016

விக்ரமுக்கு தேசிய விருது ஏன் இல்லை?

நீ  ஒரு  தமிழன். 
"இது போதுமா? உடலை வருத்துவதும்  நடிப்பதும்  உனக்கு தொழில்தானே? நாய்  வேஷம் போட்டால்  குரைத்துத் தானே  ஆக வேண்டும். அதற்காக  இந்தியாவின்  சூப்பர் ஸ்டாரை  விஞ்சி விட்டதாக  அர்த்தமா?"  
                              
                             இப்படியெல்லாம்  தேர்வுக்குழுவில்  விவாதித்திருப்பார்கள். அங்கிருந்தவர்களில்  பெரும்பாலும் 'அகண்ட  பாரதம்' பார்த்தவர்கள். அவர்களது  கண்களில்  பாரதமாதாவை  விட  தமிழன்னை  பரம ஏழையாகவே தெரிந்திருப்பாள்.  சாகாவரம் பெற்ற  அந்த அன்னையின்  பிள்ளைகள் சவலையாக தெரிவார்கள்.  தமிழ்ச்சினிமா  வரலாற்றில்  திருப்புமுனையை  ஏற்படுத்திய  நடிகர் திலகத்தை  உலகம் உற்று ப் பார்த்து  வியந்த காலத்தில்  பாரத புத்திரர்கள்  அந்த திருமகனை  புறக்கணித்ததை   மறக்கவில்லை. மறக்கவும் கூடாது.   எவனாவது  அன்று  எதிர்த்து  கொடி பிடித்தானா? கோஷமிட்டானா?

                    அன்றைய  தமிழக  அரசாவது  நெஞ்சு  நிமிர்த்தியதா? இல்லையே!

                   இன்று மட்டும்  நடிப்பில்  அரிய சாதனையை செய்த  விக்ரமுக்கு  எப்படி  விருது  கொடுப்பார்கள்?

                       எல்லாமே  அரசியல்தான்!

                     இயக்குநர்  ஷங்கர்  ஏதாவது  வாய் திறந்திருக்கிறாரா? தன்னால்  உடல் நலத்தை  கெடுத்துக்கொண்டு தனது  கதாபாத்திரத்துக்கு  உயிர்  கொடுத்த  உயர்ந்த  நடிகனுக்கு  ஏன்  விருது  வழங்கவில்லை  என கேள்வி  எழுப்பினாரா? சுயநலம். ஊமைத்தனம். 

                   நடிகர் சங்கமாவது  கண்டனத்தை  பதிவு  செய்ததா?

                   அதுவும்  பம்மாத்துடன்  பதுங்கி  கொண்டுவிட்டது. இது  எல்லா  காலத்திலும்  நடப்பதுதான்!

                            அரசியல்  கட்சிகளுக்கு  அதிகாரத்தின்  மீது  நாட்டம். பதவிகளே  குறிக்கோள். அவர்களுக்கு  தேவைப்படும்போது  ஆட்சியின்  பலத்தை அதிகாரத்தை  பயன்படுத்தி  அச்சுறுத்தி  காரியத்தை  சாதித்துக் கொள்வார்கள். இதுவும் காலம் காலமாக நடப்பதுதான்!

                        எனவே  அமிதாப்  பச்சனுக்கு  தேசிய விருது  கிடைத்திருப்பது  மத்திய அரசின்  கடைக்கண்  பார்வையில்  கிடைத்திருக்கும்  அருட் கொடையே!

                            ஆகவே  புலம்பிப்  பயனில்லை!

 

Monday 28 March 2016

நான் ஒரு முட்டாளுங்க!

              " ஏய், குரங்கே....எத்தனை பேரு உன்னை  ஏப்ரல் முட்டாளாக்கினாங்க?"

             குரங்குன்னா அவ்வளவு கேவலமாகிப் போச்சு! அந்த ஆளு என்னை ரொம்பவும் இன்சல்ட் பண்ணினாலும் மனதுக்குள் " இருடா எனக்கும் ஒரு  நேரம் வரும்"னு நினைத்துக்கொண்டு  பதில் சொன்னேன்.

                     "மொத்த தமிழ்நாட்டில எத்தனை கோடி முட்டாளுங்க இருப்போம்கிறது மே மாதம் பத்தொன்பதாம் தேதி தெரியப் போகுது... இப்போது  ஏன் ஓய் அவசரம்?" என்றேன் ,

                    " உன் புத்திய காட்டிட்டில்ல! அதென்ன  மே 19?"

             "அன்னிக்கித்தானே எலக்சன் ரிசல்ட். நான் நினைச்ச கட்சி தோத்துப்  போச்சுன்னா நான் முட்டாள். நீ நினைச்ச கட்சி ஆட்சிக்கு   வரலின்னா  நீ முட்டாள்.இப்படி  நாடு முழுக்க முட்டாளுங்க  இருப்பாங்கள்ல! அதத்தான்  சொன்னேன்."

                   "இதுக்குத்தான் குரங்குபுத்தின்னு பேரு! நான் கேட்டது ஏப்ரல் முட்டாளுங்களை பத்தி!"

                 "யப்பா.. என்னை யாரும் ஏப்ரல் முட்டாளாக்கல.நானும் அந்த மாதிரி  செய்யல. அது உங்களுக்கு மட்டுமே தெரியும்! இந்த ஏப்ரல் முட்டாள்  தினம்  கொண்டாடுறாங்களே ,அதன்  அசல் வித்து எந்த நாடுன்னு  தெரியல.காரணம் என்னங்கிறதும் தெரியல. எட்டாம் நூற்றாண்டிலிருந்து பதினாலாவது  ஆண்டுக்கும் இடைப்பட்ட  காலத்தில்தான் வந்திருக்கணும்னு ஆராய்ச்சி  பண்றவங்க சொல்றாங்க." என்றேன்.

              "கேப்டன்  பேசுற மாதிரி இருக்கு. நீ  சொல்றது? தெளிவா சொல்லு குரங்கே?"

                  "உனக்கு புரிஞ்சிக்கிற  கபாசிட்டி கம்மியா இருக்கிறதால  நான்  உன் மண்டைய சொறியனுமா? இருந்தாலும் கேட்டுட்டே. சொல்றேன்..பருவகால  மாற்றம், புதிய காலண்டர் நாள்  இவைகளின் அடிப்படையில்தான்  முட்டாள் தினம் வந்திருக்கணும்னு சொல்றாங்க. 1582-ம் வருசம் ஐரோப்பாவில்  புதிய போப்பாண்டவர் கிரிகோரி   அதுவரை புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்ட ஏப்ரல்  ஒன்னாம் தேதியை ஜனவரிக்கு மாத்தினாராம். இதை  அறியாதவர்கள் ஏப்ரலி ல் புத்தாண்டு கொண்டாட அதை மற்றவர்கள் முட்டாள்கள்னு    கேலி செய்ததால் முட்டாள்கள் தினம்னு சொன்னதாக ஒரு சேதி இருக்கு! இன்னொரு கதையும் இருக்கு. கான்ஸ்டன்ட்  காலத்தில் சில அறிவற்றவர்கள் மன்னனை  ஆளும் திறன் இல்லாத முட்டாள்னு கிண்டல்  பண்ண கடுப்பாகிப் போன மன்னர் அந்த முட்டாள்களில் ஒருத்தனை ஒரு நாள் மன்னனாக்கி அந்த நாளை முட்டாள்கள் நாள்னு  அறிவிச்சார். அதான்  இப்ப நாம்ப கொண்டாடுகிற முட்டாள்கள் தினம்னு ப்ரொபசர் ஜோசப் பாஸ்கின் என்பவர்  சொல்றார். நம்ம டைரக்டர் ஷங்கர்  ஒரு நாள் முதல்வர் கதையை  இங்கிருந்துதான் சுட்டிருப்பாரோ? இன்னொரு கதையும்  இருக்கு.1466-ல் பிலிப் மன்னனை அரசவை கோமாளிகள்  ஒரு பந்தயத்தில் தோற்கடித்து விட்டார்களாம்.அந்த நாள்தான் ஏப்ரல் 1 என்கிறார்கள் .என்ன கதை போதுமா?" என்று சொல்லி முடித்தேன்.
o

                     எனக்கு வாக்களிங்க. என்னோட சின்னம் குரங்கு!



                       "

Sunday 27 March 2016

திமுக .கூட்டணிக்கு மெஜாரிட்டியா?

இன்னமும் கூட்டணி பற்றிய முடிவுகள் எந்த அணியிலும் முடிவு பெறவில்லை.பேச்சு வார்த்தை நடப்பதாகவே சொல்லிவருகிறார்கள். ஆனால்  ஊடகங்களின் பெயரால் 'வாட்ஸ் அப்களில்'கருத்துக் கணிப்பு என்கிற பெயரில் தவறான செய்திகள் பரவி வருகின்றன.பெரும்பாலும் அத்தகைய  கணிப்புகளை கட்சிகளை சார்ந்த கணினி வித்தகர்களே உருவாக்குகிறார்கள்.இது வெளிநாடுகளில் வாழ்கிற தமிழர்களை மட்டுமில்லாது தாயகத் தமிழர்களையும்  குழப்பும் செய்திகளாகவே தோணுகிறது.

பெரும்பான்மையான ஊடகங்களில் ஆளுகிற அதிமுகவுக்கு ஆதரவாகவே  செய்திகளும் கணிப்புகளும் வெளியாகின்றன.இது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் அச்சமும் இருக்கவே செய்கின்றன.ஒருவேளை கணிப்பு பிழையாக இருந்துவிட்டால் ஆட்சிக்கு வரக்கூடிய  கட்சியின் வெறுப்புக்கு உள்ளாகநேரிடுமோ என்கிற பயம்தான் அது.  வெறுப்புக்கு ஆளாகிவிட்டதால் சில நாளேடுகள் அரசின்  விளம்பரங்களை பெறவில்லை என்பதற்கு  முன்னுதாரணம்  இருக்கிறது.அரசு விளம்பரங்கள் ஒரு பத்திரிகையின் சுவாசம் .. கணிசமான வருமானமுமாகும். ஆகவே அரசின் கோபத்திற்கு  அஞ்சி,அத்தகைய பாதிப்புக்கு உள்ளாக கூடாது என்பதால் செய்திகளை அப்படியும் இப்படியுமாக போட்டுவருகிறார்கள்.பத்திரிக்கை சுதந்திரம் என்பது தமிழகத்தை பொருத்தவரை கண்காட்சி பொருளாகிவிட்டது.

மக்களை குழப்பி இதுதான் உண்மை போலும் என அவர்களை நினைக்கவைப்பதற்கே இத்தகைய கருத்துக் கணிப்புகள் என்பதை மறந்து விடக்கூடாது.ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் பத்திரிகைகள் தங்களின் கடமையை மறந்து செயல்படுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.இதற்கு அரசியல் கட்சிகளின் அச்சுறுத்தலும் ஒரு காரணம்.

தமிழகத்தை பொருத்தவரை ஆளும் கட்சிக்கும் முக்கியமான எதிர்க்கட்சியான திமுகவுக்கும் 'நெக் டு நெக் பைட் 'என்பது சொல்லாமலேயே  தெரியும் விஷயம்தான் கூட்டணி உறுதியாகி ,தொகுதிகள் இறுதியாகி வேட்பாளர்கள் தேர்வில் குழப்பம் இல்லாமல் வெளிவரும்போதுதான் கணிக்க முடியும்.ஆளும் கட்சிக்கு அதிகார பலம் பண பலம் பக்க துணை என்றாலும்  மக்கள் முடிவெடுத்துவிட்டால் அதை ஆண்டவனாலும் மாற்ற இயலாது.
திமுக கூட்டணிக்கு நூற்றி அறுபது இடங்கள் கிடைக்கலாம் என வருகிற கருத்துக் கணிப்புக்கு நாளை இன்னொரு கணிப்பு அதிமுகவுக்கு நூற்றி எழுபது என்பதாக வெளியாகலாம்.

ஆகவே ஊடகங்களின் வலிமையை அரசியல் கட்சியினர் மோசடிக்காக பயன்படுத்தக்கூடாது  என்பதே குரங்காரின் கருத்தாகும். ஆனால் இது எடுபடாது என்பதும் குரங்காருக்கு தெரியும்.




என்னடா...நீ... பெரிய ம.....ரா?

தற்போதைய  இளைஞர்களின் 'ஹேர் ஸ்டைல்"களை பார்க்கிறபோது  பாலாவின் பரதேசி பட ஹீரோ அதர்வாவின்  தோற்றம் கண்களில் படராமல்  இருக்கமுடியாது, அதர்வாவைவிட வேறு மாடல்களில் தலை அலங்கோலம்  சாரி...அலங்காரம் பண்ணிய  அழகன்களை காண முடிகிறது. எரிச்சல்தான்  வருகிறதே  தவிர ஈர்க்கவில்லை.

' பாரு அப்பன் சொல் கேக்காத தறுதலைகளை!'' என முனகிக்கொண்டேதான்  செல்கிறார்கள்.அதற்கான 'ஹேர்கட்' கட்டணத்தைக் கேட்டால் தலை சுற்றிப் போகிறது. ஆயிரக்கணக்கில் சொல்கிறார்கள். ஆனால் நீளமான முடிகளை  வைத்திருப்பவர்களுக்கு  அது ஆறாவது சென்ஸ் என்கிறது புராதன வரலாறு.

இங்கிருந்து உதாரணம் சொன்னால் கலாசாரத்தின் கற்பை நான் சூறையாடி விட்டதாக குற்றம்,பழி,பாவம் சொன்னாலும் ஆச்சரியப்பட மாட்டேன். அதனால் ஆசைப்படுகிற வெளிநாட்டு உதாரணங்களை சொல்கிறேன் மக்களே!

சாம்சன் என்கிற மாவீரனை பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்.ஒரு வேளை சாம்சனும் டிலைலாவும் என்று காதலியையும் இணைத்துச்சொன்னால்  சடக்கென ஞாபகம் வந்தாலும் வரலாம். சாம்சனுக்கு பலமே அவனுடைய  முடியில்தானாம். நீளமாக தலைமுடியை வளர்த்து இருந்ததினால்தான்  அவனால் சிங்கத்தை வெல்ல  முடிந்திருக்கிறது.,இந்த ரகசியத்தை அறிந்ததும் சாம்சனின் முடியை வெட்டி எறிந்ததாக ஒரு கதை உண்டு. இதை கதை என்று  ஒதுக்கி விட்டாலும்  பழைய காலத்து சிலைகளும் கண்டு பிடிப்புகளும்  மயிருக்கு மரியாதை உண்டு என்று நினைக்க வைக்கிறது.
என்னடா மயிரு..அவன் கெடக்கிறான் என்று நம்மால் ஒதுங்கிப்போக முடியாது. அவன் அலட்சியப் படுத்தப்படக்கூடியவன் அல்லன்..

ஆதிகாலத்து அமெரிக்கனுக்கு மயிர்தான் 'ஆன்டனா'வாக  உதவியிருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மிலிட்டரி கட் பண்ணியதால்தான்  எதிரிகளிடம் சில நேரங்களில் தோல்வியுற நேர்ந்ததாம்.சொல்கிறார்கள்.நரம்பு மண்டலத்துடனான தொடர்பு பாதிக்கப்படுகிறதாம்.ஆதிகாலத்து 'மம்மி'களை ஆராய்ந்ததில் மயிர்களை வைத்துதான் சில உண்மைகளை கண்டறிந்திருக்கிறார்கள்.கடல் வாழ் உயிரினங்கள் உணவாக பயன்பட்டிருக்கிறது.பீர்  குடித்திருக்கிறார்கள்.கிரேக்கத்துப் பெண்கள் தங்கள் முடியை விதம் விதமாக அலங்கரித்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். அத்தகைய மயிரைத்தான் வெட்டி எறிகிறார்கள்..

இது ஒரு தகவலுக்காகதான். குரங்கு உடம்பு முழுவதும் மயிர்தான். அதற்கு ஆறு அறிவு இருக்கிறதா என்று என்னிடம் கேட்கக்கூடாது.

வலைப்பூ நண்பர்களே..எனக்கு ஓட்டுப் போட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்!

 . 

Wednesday 23 March 2016

வைகோவை விட 'சி.எம்'.பதவிக்கு கேப்டன் பொருத்தமானவரா ?

வணக்கம்,
                   இரண்டு நாளைக்கு முன்னர்தான் கொன்னவாயன் சொல்லி இருந்தார் கேப்டனின்  ஜாய்ஸ் வைகோதான் என்பதாக!

                    அதுதான்  சரியாகவும் வந்திருக்கிறது. என்ன, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கவேண்டிய கட்டாயம் மக்கள் நலக் கூட்டணிக்கு ஏற்பட்டிருக்கிறது.அதுதான் அவர்களுக்கு  ஒரு சறுக்கல். மக்கள் நலக்கூட்டணியின் பொதுவான கருத்துகளுக்கும் கேப்டனின் தேர்தல் கொள்கைகளும் ஒற்றுமை -வேற்றுமை எவை எவை என இரு தரப்பும் விளக்குமா?

                  பொதுவான எதிரி அம்மா திமுகதான் ( இனி எதிர்வரும் காலத்தில் இப்படித்தான் இருக்கும் என்பது குரங்காரின் கருத்து.) என்கிறார்கள்.லஞ்சம்  உழல் தான் அவர்களது குற்றச்சாட்டில்  முக்கிய கருத்து. எதிர்வரும் காலத்தில் அத்தகைய ஊழல்கள்,கைஊட்டுகள் நிகழாது என்பதற்கு  உறுதியான வழிகள் எதுவும் சொல்லப்படவில்லை. தற்போதைய உடன்பாடு கூட அதை வலியுறுத்துவதாகவும் இல்லை.தொகுதிகள் நூற்றி இருபத்தி நான்கும் ,முதலமைச்சர் பதவியும் தே.மு.தி.க.வுக்கு மட்டுமே என சொல்லப்பட்டு இனி 'விஜயகாந்த் அணி என்றே அழைக்கப்படும் என்பதாகவும்  வைகோ  அதே மேடையில் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த்,வைகோ,தொல்,.திருமாவளவன்,முத்தரசன், ராமகிருஷ்ணன் ஆகிய ஐவர் மட்டுமே இனி தீர்மானிக்கும் சக்திகள்.இவர்களில் தர்மராக கேப்டனும் அர்ச்சுனனாக வைகோவும், வீமனாக தொல்.திருமாவும்  வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள் வைகோவினால்!

                         மக்களுக்குள்ள ஐயம் எல்லாம் வைகோவை விட கேப்டன் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்தானா என்பதுதான்!உலக அரசியல் உள்ளூர் அரசியல் பேச்சாற்றல்.நிர்வாகத்திறமை நிதானம்,மத்திய அரசுடன் போராடும் வியுகம் இன்னும் பலவற்றில்  வைகோவை விட கேப்டன் எந்த அளவுக்கு  சரியாக இருப்பார்? ஊழலால் சீர்கெட்டிருக்கும் தமிழகத்தை மீட்டெடுக்கும்  திண்மை வழிமுறை, குடும்ப தலையீடு இல்லாமல் இருக்குமா?

                 தெளிவாக்குவார்களா? குடும்ப அரசியல் இல்லாமல் நடக்குமா?

                 கடவுளே ,எமை காப்பாற்றும்!

Tuesday 22 March 2016

இதுக்குத்தானா கோயில்?

''பிரதோஷம்  ! கோயிலுக்கு போகணும்..நீங்களும் வர்றிங்களா? ஆபிஸ்  முடிஞ்சிதான் வந்தாச்சே! ஒரு குளியல போட்டுட்டு கெளம்புங்களேன்! சும்மா உக்காந்து கெடக்கிறதுக்கு  சாமியையாவது கும்பிட்டு வரலாம்!"

           இது கட்டளையா, வேண்டுகோளா, தெரியாது! வந்தால் வா, வராட்டி போ  என்கிற தொனியும் வந்துதான் ஆகவேண்டும் என்கிற கண்டிப்பும் கலந்திருந்தது, எனது திருவாட்டியிடம்!

           அவள் சொன்னதைப் போல குளித்துவிட்டு எட்டு முழ வேட்டி, வெள்ளை  ஜிப்பாவுமாக  நிலைப்படி கடந்தேன். வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை  அவளது இடுப்பில் வழக்கம்போல சொருகிக் கொண்டாள்.

          அம்மன் சன்னதி தெரு வழியாக  நகரா மண்டபம் கடந்ததும் ,கோயில்  வாசலில் உட்கார்ந்திருந்த பூக்காரியிடம்  பேரம் நடந்தது.

                   "ங்க....!மல்லிப்பூ வாங்கவா? பிச்சிப்பூ  வாங்கவா?"

                    "எதாச்சும் வாங்கு! இல்லேன்னா  ரெண்டையுமே வாங்க்கிக்க! வச்சுக்க போறவ நீதானே?"-----வாங்கிக்க என்பதில் சற்று அழுத்தம் கொடுத்தது தப்பாகிப் போச்சு!

                "கூறு கெட்ட மனுஷன்.உங்க கிட்ட கேட்டன் பாருங்க.என்னை சொல்லணும்."என்ற முணுமுணுப்புடன் "மல்லி இருநூறும் பிச்சி   முன்னூறும் கொடும்மா"என்று  வாங்கிக்கொள்ள  வழக்கம் போல  பணத்தை நான் கொடுத்தேன்! ரவுண்டு  கொண்டையில்  பிறை வட்டமாக பிச்சி மட்டும் அமர்ந்து கொண்டது.

                  "ம்ம்ம். நடங்க!"

             அர்ச்சனை தட்டு வாங்கியது நான்தான்! அவளிடம் அர்ச்சனை  பெறுவதும் அடியேன்தான்! விநாயகர், சுப்பிரமணியர் சிலைகளை  வணங்கிவிட்டு  அம்மன் கோவிலில் கால் வைத்தோம். எல்லா சிவாலயங்களிலும்  சுவாமியை கும்பிட்ட பிறகுதான்  அம்மனை கும்பிடுவார்கள். மதுரையில் மட்டும்தான் முதலில்  அம்மன்.பிறகுதான்  சுந்தரேஸ்வரர்.

                       பொற்றாமரையில் கால் கழுவிக்கொண்டு ,அதே தண்ணீரை  தலையிலும் தெளித்துக்கொண்டு அம்மனை வணங்க புறப்பட்டால்...
எதிரில் அன்னபூரணி. எதிர் வீட்டு எஜமானி!

                  "என்ன மங்களம் சாமி கும்பிட வந்திகளா?"

                  "ஆமாக்கா! இன்னிக்கி பிரதோஷம் ஆச்சே! அதான் அந்த சொக்கனிடம் குறைகளை சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்." .உடன் வந்திருக்கிற புருஷனையே  மறந்து விட்டாள்!

                    ''என்னத்த சொல்லி அழுதாலும் நம்ம கவலை நம்மை விட்டு போகுதா? எம் புள்ள ...அதான் பெரியவன் பொண்டாட்டியே கதின்னு கெடக்கிறான். ராப்பகல்னு பாக்கிறதில்லை. ரூமே கதின்னு  கெடந்தா வீட்டுக்கு ஆகுமா? நீயே சொல்லு மங்களம்?"

               "அக்கா... நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதே. கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை.தனிக்குடித்தனம் வச்சிரு! சின்னஞ்சிறிசுக  அப்படியும் இப்படியும் இருக்கத்தான் செய்யும்.நாமதான் பொறுத்து போகணும்!" அடிப் பாவி! கோவிலில் பேசுகிற பேச்சா இது? மனசுக்குள்  பொருமல்.!

          ''நல்லாருக்குடி..நீ நியாயம் பொளந்தது. உன்கிட்ட வந்து சொன்னேனே  எனக்குதான்டி கிறுக்கு பிடிக்கும். போடி பொசகெட்ட சிறுக்கி!" என்றபடியே  எங்களை ஒரு பார்வை பார்த்து விட்டு அம்மன் சந்நிதியை நோக்கி நடந்தாள்!

          ''பாத்திங்களா அந்த சிறுக்கியின் வாயை! கோவிலா போச்சு. இல்லேன்னா கிழிச்சு தொங்கவிட்டிருப்பேன். சரி சரி வாங்க " என என்னை அழைத்துக் கொண்டு நேராக சுவாமி கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

         எதிர்த்த விட்டுக்காரியை  அம்மன் கோவிலில் பார்த்து விடக்கூடாதாம்!

          அடி பாவிகளா? இதுக்குதான் கோவிலா?

    

Monday 21 March 2016

நீ யார்ரா.........தொன்ன..?


                         ''நீ   யார்றா தொன்ன...?"

                         கன்னத்தில் விழுகிறது 'பளார்!'
                         
                         எதிரில் நின்றிருந்தவன் எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு அறை விழும் என்பதை!

                       கன்னத்தை தடவியபடியே கேட்கிறான் .கண்கள் கலங்கியிருந்தன.

                        ''அப்படியென்ன தப்பா கேட்டேன்.இந்த வாட்டி யாருக்கு ஓட்டு போடுவிங்கன்னுதானே கேட்டேன்.!அதுக்கா தொன்னன்னு கெட்ட வார்த்தை? நீங்க யாரு  என்ன அடிக்க? நான் கேட்டதுல என்ன தப்பு?"- பலவீனம் குரலில்!

                     ''பேசாம போயிரு..நீ கேட்டா நா சொல்லனுமா? மவனே! மாத்து  வாங்கியே வீங்கிடுவே!போயிரு!"

                        "சின்ன பையன  அடிக்கிற மாதிரி கை நீட்டிட்டிங்க.நா ஒன்னும் அனாதப்பைய  இல்ல. நானும் டெய்லி  ஷேவ் பண்ற ஆம்பளதான்!"

                     "பார்றா..எதித்து பேசறத! நீ செரச்சா என்ன... செரய்க்காட்டி என்ன...பாக்கிறதுக்கு ஷூவெல்லாம் போட்டிருக்கியேன்னுதான்  அறையோடு  விட்டேன்.இல்லேன்னா  மண்ணுல பொரட்டி எடுத்திருப்பேன்.இன்னிக்கி  கட்டிங்  போடக்கூட காசு தேறல.எல்லா பொறம்போக்குகளும் கிரடிட் கார்டோடுதான்  அலையிறான். இப்ப சொல்றா... நீ..யார்றா?"

             "நான் கருத்துக் கணிப்பு எடுக்கவந்த ரிப்போர்ட்டருங்க!" .  
இது தான் தற்போது  நாட்டு நிலைமை....நான் சொன்னது  சரியா இல்லையான்னு சொல்லவேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கு, உண்மையை  எழுத முடியலிங்க!
 எனக்கு லைக் போடுங்க சார்! குரங்கு பாவம் பொல்லாதுங்க!
























Sunday 20 March 2016

குரங்கு பயலுக...

வணக்கம்ணே,
                       வம்பு தும்புன்னு இருந்தாதான்  எங்க இனத்துக்கு மரியாதை. இப்ப கோவிலுக்கு வர்றவங்க கையில தேங்கா,பழங்கள்  கொண்டு வந்தால் அதை  பறிச்சு தின்றது எங்க குல வழக்கம், ஆனா இந்த மனுசனுங்க  அடுத்தவன் சொத்தை பறிச்சு அமுக்குறானுங்க.கவர்மெண்டுல இருக்கிறவங்களும்  அதைத்தான் செய்றானுங்க.எங்களுக்குன்னு  இருக்கிற குல வழக்கத்தை மனுசப்பயலுக லாவுறது  என்ன நியாயம், நேர்மை?

இப்ப வாழறதுக்கு இடமில்லாம நாங்க டவுனுக்குள்ள வரவேண்டியதாகிப் போச்சு. காட்டைஎல்லாம் கள்ளத்தனமா பட்டா போட்டுக்கிட்டு வீட்டை கட்டிப் போட்டுக்கிட்டா நாங்க எங்க வாழ்றது? மிருகங்க வாழ்ற எடத்தை கைப்பத்தி வீட்டை கட்டுறோமேன்னு வெட்கப்பட வேணாமா? கிண்டிக்கி பக்கமா இருக்கிற காட்டுக்குள்ள வீடு கட்டப்போறாய்ங்கலாம்.இவனுங்களைஎல்லாம்  இன்னொரு பேய் வெள்ளம் வந்து கொண்டு போவணும்.நாங்க புருஷன் பொண்டாட்டி சந்தோசமா இருந்தால் பிடிக்காம கல்ல  கொண்டு எறியிராய்ங்க  நாங்க  பரவாயில்லை. நாய் அண்ணாத்தைகள்  பாடுதான் படுபாவம். என்னமோ இவனுக சந்தோசத்தை நாங்க வந்து கெடுத்த மாதிரி ஈரக்கொலை  அந்து விழுகிற அளவுக்கு  ஆக்ரோசமாக வீசுவாய்ங்க. வெளங்குவானய்ங்களா?

நாங்கள்லாம் அஞ்சறிவு!.மனுசங்களுக்கு எக்ஸ்ட்ரா ஒரு அறிவு. ஆறறிவு இருக்கிறவய்ங்க பண்ற காரியத்தையா பண்றாய்ங்க! தார்ப்பாய் சுருட்டி!.கம்மாய்கள், மலைகளை முழுங்கிட்டு சுக்குத்தண்ணி குடிக்கிராய்ங்கய்யா.! .தேர்தல் வரப்போகுதாம். ஊர்ப்பயலுக  சொத்தை அமுக்குறதுக்கு அதிகாரமா ?.எச்சரிக்கையா ஒட்டு போடுங்க.

உங்க அன்புள்ள குரங்கார்.
இது பிடிச்சிருந்தா என்னை ஆதரிங்க.