Saturday 24 September 2016

காதல்..காமம். ( பகுதி.7.)

"செங்கமலம்...ஏதாவது  கெடைச்சிச்சா...! அங்கம்மா கெழவி சொல்றபடி  பாத்தா  அன்னிக்கி பர்ஸ்ட் நைட்  நடந்திருக்கு,,," என்று  சொல்லிவந்த  இன்ஸ்பெக்டர்  ராம்குமார் என்ன நினைத்தாரோ ...சற்று  தயங்கியபடி  "பொதுவா பர்ஸ்ட் நைட்  பொண்ணு வீட்டில்தானே நடக்கும். இவங்க ஏன் மாப்ள வீட்டில நடத்திருக்காங்க. இந்த ஆங்கிலும் நாம்ப இன்வெஸ்டிகேட் நடத்தனும்?" என்றார்.

எதிரில் இருந்த எஸ்,ஐ. சிதம்பரம் " அந்த ஆங்கில்லேயும் என்கொயரி  பண்ணிட்டேன் சார், அன்னமயிலுவுக்கு ஒரு அக்கா இருக்கா. அவளுக்கு  அம்மை போட்டிருந்ததால சுத்தபத்தமா இருக்கணும்கிறதுக்காக மாப்ள  வீட்டிலேயே பர்ஸ்ட் நைட்டை நடத்திருக்காங்க. அன்னமயிலுவின் அக்கா  ரொம்பவும் நொந்து போயிருக்கு.அன்னமயிலுக்கு தங்கராசுவை ரொம்பவும்  பிடிச்சிருந்ததாலதான் கல்யாணத்தை தடபுடலா நடத்திருக்காங்க."

"வெல்....  பர்ஸ்ட் நைட் நடந்த பெட்ல இருந்த பெட்ஷீட், அந்த பொண்ணோட  இன்ஸ்கர்ட், பிளவுஸ் இதெல்லாம் பாரன்சிக் ரிப்போர்ட்டுக்கு  அனுப்பிச்சிருந்தமே வந்திருச்சா,,அது வந்தாதான்யா .மேக்கொண்டு ஏதாவது  கெடைக்கும்."

"இன்னும் ரெண்டு நாள்ல வந்திரும். நாம்ப இதுவரை விசாரிக்காம இருக்கிறது செத்தவனோட அம்மா மாயக்காளத்தான். எது கேட்டாலும் மயக்கம் போட்ருது. அது டிராமா போடுற மாதிரி தெரியிது. மாயக்காளை அரட்டி மெரட்டி கேட்டாத்தான்  வாயை புடுங்கமுடியும் சார்!"

"சுகர் பேஷண்டா இருந்து தொலச்சிறப் போறாப்பா! செங்கமலத்த அனுப்பி நைசா  விசாரிக்க சொல்லுவோம்."

"செய்றேன் சார்!" அருகில் நின்று கொண்டிருந்த செங்கமலம் சல்யூட்  அடித்தாள்.

''உனக்கு அந்த வீட்டில வேற யாரையாவது தெரியுமா?"என்று கேட்ட ராம்குமாருக்கு அப்படி ஒரு பதில் வரும் என்பது தெரியாது.

"நான் கட்டிக்கபோறவரு அங்கதான் பண்ணை வேலை பார்க்கிறாரு."

ராம்குமாரும் சிதம்பரமும் சேர்ந்து சிரிக்கிறார்கள்." அப்ப ஈசியா போச்சு..மாயக்காளை செங்கமலம் வளச்சி போட்றமாட்டாளா  என்ன.? நீ மொதல்ல கெளம்பு ..."என்று அவளை அனுப்பி வைத்தார்கள்.

இப்போது அந்த அறையில் அவர்கள் இரண்டு பேர் மட்டுமே!

" ஏய்யா..சிதம்பரம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல  ரொம்பவும் கிளீயரா  இருக்கு.தங்கராசு உடலுறவு வைக்கல. அதுக்காக அவன் எந்த முயற்சியும் பண்ணியிருக்கமாட்டான். சிங்கிள் டிராப் செமன் கூட வரலன்னு  அழுத்தம் திருத்தமா இருக்கு. ஆனா  அன்னமயிலு  விஷயம் வேற மாதிரி இருக்கு. கன்னி கழிஞ்சிருக்குன்னு  சொல்றாங்க. அந்த பொண்ணும் வாய தெறக்க மாட்டேங்கிது..பாரன்சிக் ரிப்போர்ட் வந்தா கடுமையா  ஆக்சன் எடுக்க முடியும். "

"சார் ..வெள்ளிங்கிரி பய வெளையாடியிருப்பானோ...?

"அதெப்படி சார் பர்ஸ்ட் நைட் ரூமுக்கு அவன் போயிருப்பான்? குடும்பத்தில் உள்ளவங்க சும்மா விட்ருப்பாங்களா? எனக்கென்னமோ வேற மாதிரியான டவுட்  இருக்கு சார்.தங்கராசுக்கும் அன்னமயிலுக்கும் அந்த ரூம்ல சண்டையோ,வாய்த்தகறாரோ நடந்திருக்கலாம்?"

"சரி ..உன் பாயின்ட் படியே டிஸ்கஸ் பண்ணுவோம்.எதுக்காக சண்டை வந்திருக்கும்னு நெனைக்கிறே? சண்டை போடுற மூடே வராதேய்யா. இந்த காலத்து பயலுக போனமா ஜோலியை முடிச்சிட்டு அடுத்த ரவுண்டுக்கு  எப்படா போகலாம்னுதான் இருப்பாங்க. அதான் பழனி டாக்டருங்க லேகியம்  விக்கிறாங்களே?"

சிதம்பரம்  தொப்பியை கழற்றி விட்டு மண்டையை சொறிகிறார்.

 "எதுக்குய்யா அங்க சொறியிற? எதுக்கும் வீடியோவை பார்த்து வைக்கலாம்.ஏதாவது க்ளு கெடைக்காதா?"

"ஒ.கே சார்"

தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு கிளம்பினார்.

அடுத்து என்ன நடந்திருக்கும்? வீடியோவில் க்ளு கிடைக்குமா?

( மதிப்பிற்குரிய நண்பர்களே! என்னுடைய பதிவுகள் பற்றி எதுவுமே, சொல்லாமல்  இருந்தால் அறிமுக எழுத்தாளன்( ?) எப்படி திருந்த முடியும்.பாலோ பண்ணுங்க சார், கருத்தை சொல்லுங்க சார்!)

Thursday 22 September 2016

தொடரி. பட விமர்சனம் அல்ல. ஒரு பார்வை.!

டைரக்டர் பிரபுசாலமன் படம் என்றால் விரும்பி பார்ப்பேன்.மனம் விட்டு சிரிக்கலாம். மனதில் உள்ள கவலைகளை சற்று கரைக்க முடியும்.அதை எதிர்பார்த்தே  சென்றேன்.

பல பத்து வருடங்களாக படங்களை பார்க்கிறவன்,எனவே குற்றம் குறைகளை சொல்லக்கூடிய பெரிய புடுங்கி என்கிற புத்தி எல்லாம் எனக்கு கிடையாது.

டில்லியிலிருந்து சென்னை செல்லக்கூடிய  ரயிலில் ( தொடரி .) மத்திய அமைச்சர் ராதாரவி, சினிமா நடிகை அவரது அம்மா மற்றும் நடிகையின் உதவிப்பெண் கீர்த்தி ,பான்ட்ரி காரில் வேலை பார்க்கிற தனுஷ் ,பயணிகள் இவர்கள்தான்  முக்கிய கேரக்டர்கள் .என்றாலும் தம்பி ராமையா,கருணாகரன்  ஆகியோரை  மறக்கவே முடியாது.

 வந்தாரை வாழவைக்கிற  தமிழ்நாடு என்று தனுஷ் தமிழனாகவும் ,திறமைசாலிகள்டா மலையாளிகள்  என்று தமிழ் படங்களால்  வாழ்வு பெற்றவர்களை சொல்லும் மலையாள அதிகாரி ஒருவரையும்  காட்டுவதால் தமிழ்நாட்டில் இருக்கிற மலையாளி விமர்சகர்களுக்கு இந்தப் படம் கசக்கவே செய்யும்.அதிலும் அந்த மலையாளி அதிகாரியை அமைச்சர் ராதாரவி மட்டம் தட்டுவதால்  கோபத்துடன் படத்தை விமர்சனம் செய்வார்கள் என்றே நினைக்கிறேன்.

நான் படத்தில் மிகவும் ரசித்தது  தொலைக்காட்சிகளின் வியாபார புத்தியை  துணிச்சலுடன் தோல் உரித்திருப்பதுதான். விமர்சனம் என்கிற பெயரில் படங்களை மட்டம் தட்டுகிறவர்கள் தங்களை சினிமாக்காரர்கள் விமர்சிக்கிறபோது தாங்கிக் கொள்ளவே வேண்டும் அதிலும் விவாத மேடை என்கிற பெயரில்  சில அறிவுக் கொழுந்துகளை விட்டு நையாண்டி பண்ணுவதையும் ,அதில் உள்ள நியாயங்களையும் மறக்கவே முடியாது.
கட்டுப்பாடு இழந்து வேகம் கடந்து செல்லும் ரயிலின் மேற்கூரையில் தனுஷ்  சர்வசாதாரணமாக நடமாடுவது ஏற்க  முடியாத காட்சி ,கிளைமாக்ஸ் நகைக்கவைக்கிறது என்றாலும்  ஓடும் ரயிலை வைத்து மீடியாக்களும் அரசு அதிகாரிகளும் கதை விடுவது மிக மிக ரசனைக்குரியதாக  இருக்கிறது. அரசியல்,மீடியா,இவைகளின்  அநாகரீக முகத்தை பிரபுசாலமன்  காட்டியிருப்பது  இனி தொடரும் என எதிர்பார்க்கலாம். .

Saturday 17 September 2016

ராமன் தேடிய இலங்கை எது?

இராமாயணம் என்பது கற்பனையே அது வரலாறு இல்லை என்பதாக சொல்வதில்  இரு கருத்துகள் எதிர் எதிராக  நிற்கின்றன.

அந்த கதாபாத்திரங்களை கடவுளாகக்  கருதி வணங்குபவர்கள்  பெரும்பான்மையாக  இருக்கிறார்கள்.

காலம் காலமாக  நாடகமாக நடத்தி அந்தக் கருத்தை  வாழையடி வாழையாக மக்கள் மனதில் விதைத்து வந்திருக்கிறார்கள்.

இதை மறுக்க முடியாது!.

 இராவணனை கடுமையான அரக்கனாகவே மாற்றியிருந்தன .அன்றைய தெருக்கூத்தும்  நாடகமும்.!ஆத்திகர்களுக்கும் இதில்  பங்கு உண்டு.!

இராவணன்  பன்முகம் கொண்ட சிவ பக்தன் மன்னவர் மன்னன்,.மனைவியை மதித்து வாழ்ந்தவன் என்பதை அந்த நாடகங்களும் தெருக்கூத்தும்  மறைத்து கொடியவனாக  வரைந்து விட்டன..

டென்னட் என்கிற  வரலாற்று ஆய்வாளர்   இலங்கையின்  வரலாறு பற்றி  அவரது கருத்தை  பதிவு செய்திருக்கிறார்.

"இராமன்  வாழ்ந்த காலத்தில் தமிழகத்தின் நிலப்பரப்பும் இலங்கையின் நிலப்பரப்பும்  ஒரே நிலமாக இணைந்தே  இருந்தன.அங்கு கடலே இல்லை.கி.மு.2387 -ல் ஏற்பட்ட கடல் கோளின் போது இந்தியாவும் இலங்கையும் கடலால்  பிரிக்கப்பட்டன"

வால்மீகி குறிப்பிடும்  இலங்கை என்பது நிலா நடுக்கோட்டுக்கு அருகில்  அதாவது  குமரி முனைக்கும் தெற்கே உள்ள 'தியாகோ கார்சியா" எனும் சூரியப் பகுதியை சேர்ந்ததாக இருக்கலாம்  என்பது  ஆய்வாளர்கள் கருத்து.!
நூறு யோசனை தொலைவில்  இலங்கை இருந்ததாக வால்மீகி சொல்கிறார்.
( நூறு யோசனை : ஐநூறு மைல்.)

தற்போதைய  இலங்கை  தமிழ்நாட்டுக்கு  மிகவும் அருகில் இருக்கிறது. முப்பது மைல் தொலைவுதானே!

ஆக  நமது நாடு  மிகப்பெரிய பேரழிவு சுனாமியால்  இலங்கையை  துண்டாக  கத்திரித்து போட்டிருக்கிறது.

அது  நமது நாடுதான்!

Tuesday 13 September 2016

பாரதிராஜாவின் எச்சரிக்கை....!

கையறு நிலையில் தமிழகத்தில்  வாழ்கிற  தமிழர்கள்...

பண்ணையார்கள் மாதிரி  அரசியல் கட்சித் தலைவர்கள்...

எவன் செத்தால் எனக்கென்ன என்று  டாஸ்மாக்கிற்கு விலைபோன  அடிமைத் தமிழர்கள்...

அறிக்கைகளில்  குளிர் காயும் சந்தர்ப்பவாதிகள்....

இவர்களுக்கு  மத்தியில்  கூட்டறிக்கை விட்டு  கையை  கழுவிக்கொண்டு விட்ட  திரையுலக சொந்தங்கள்....

இவர்களை விட  எந்த  வகையில்  பாரதிராஜா  உயர்ந்து  நிற்கிறார்?

ஈழ சொந்தங்களை  சிங்கள  இனவெறி  அரசு வேட்டையாடியபோது துணிந்து  பத்ம விருதினை  திருப்பியனுப்பிய இனமான  தமிழன்  பாரதிராஜா!

இதைவிட  வேறு தகுதி  என்ன வேண்டும்?

காங்கிரஸ் ஆட்சியின்  மீது  மக்களுக்கு  வெறுப்பு  ஏற்படவேண்டும் என்பதற்காக  வன்முறைக்கு  பாஜக  துணையாக  கன்னடத்தில்  இருக்கிறது.

அதனால் மத்தியில்  ஆளும் பாஜக அரசு  மவுனமாக  இருக்கிறது. 

பலியாவது  அப்பாவி  தமிழர்களே! உயிர் இழந்து ,சொத்துகள் இழந்து  அகதிகளாக  வாழ்கிறார்கள் !

அதைத்தான்  பாரதிராஜா தனது அறிக்கையில் சொல்லி இருக்கிறார்.

"இன அழிப்பில் ஒன்னரை லட்சம் உறவுகளை  இழந்து  சொல்ல முடியாத சோகத்தில் இருந்தபோது  மரம் வெட்ட வந்ததாக சொல்லி இருபது தமிழர்களை ஆந்திர அரசு  சுட்டுக் கொன்றது. முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் அணை பிரச்னையில்  தமிழர்களை  தாக்குவது என்கிற நிலையில்......

உடமைகளுக்கும் உயிர்களுக்கும்  உறுதி இல்லாத நிலையில்  கர்நாடகத்தில் தமிழர்கள்!

நாங்கள் இந்த  தேசத்தில்தான்  இருக்கிறோமா? 

கேள்வி எழுகிறது!

இந்திய அரசு  இதுவரை  தலையிடாதது  பெரும் துயரம்.ஐநூறு  ஆண்டுகளுக்கு  முன்பு  இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு  தேசிய இனமும்  தனித்தனியாக  ஆண்டதுபோல நாங்களும் ஏன் எங்களை  ஆண்டு  கொள்ளக் கூடாது என்கிற  கேள்வியை  எங்கள் இளைஞர்களின்  மனதில்  மத்திய அரசு  புகுத்திவிடக்கூடாது!"

இதுதான்  இயக்குநர் பாரதிராஜா  வெளியிட்டிருக்கும்  அறிக்கை.

  

Sunday 11 September 2016

போங்கடா ..நீங்களும் உங்க விமர்சனமும்!

சித்தார்த்  சொன்னதில் தவறு இருக்குமா?

 டிவிட்டரில் இரு வரிகளில் மொத்தப் படத்தையும்  சிலர்  முடித்து வைத்து விடுகிறார்கள்..

அதைப்பற்றி விமர்சிப்பது  குரங்கின்  நோக்கம் இல்லை.

 அப்படி டிவிட்டரில்  பதியும் பலர்  பத்திரிகைகளில்  பணி புரிகிறவர்கள் இல்லை.  ஆனாலும்அ வர்களுக்கு  விமர்சிப்பதற்கு  உரிமை  இருக்கிறது.

இது ஜனநாயக நாடு. எழுத்துரிமை,பேச்சுரிமை எல்லாருக்கும் உண்டு. ஒருவரின் கருத்தை ஏற்பதும் மறுப்பதும் மக்களின் கையில்!

அதைப் போலவே தனது கருத்தை நடிகர் பதிவு செய்திருக்கிறார்.

"படத்தில் அரை மணி நேரம் ஓடி விட்டாலே கையில் இருக்கிற செல்போனில் மொக்கை என்பதாக டிவிட் பண்ணி விடுகிறார்கள்.படத்தில் ஒரு கண்ணும் ,செல்போனில்  இன்னொரு கண்ணும் வைத்து யாரும் படமும் பார்க்க முடியாது.டிவிட் பண்ணவும் இயலாது. டிவிட் தட்டும் நேரத்தில் திரையில் எவ்வளவோ காட்சிகள் ஓடியிருக்கலாம். அத்தகைய நிலையில் ஒரு படத்தின் தலைவிதியை  நிர்ணயிப்பது  நியாயமா?" என கேட்டிருக்கிறார்  நடிகர் சித்தார்த்.

"எத்தனை நடிகர்கள்,நடிகைகள், டெக்னிஷியன்கள் ,நிபுணர்கள் வருடக் கணக்கில் உழைத்து  உருவாக்கிஇருக்கிறார்கள்  அந்த  படத்தை பத்து நிமிடமே பார்த்துவிட்டு  மொத்த படத்தின் ரிசல்ட்டை எப்படி முன்னதாகவே  கணிக்க முடியும்?"

கேட்டிருப்பவர் நடிகர் சித்தார்த்.

"முழுமையாக படத்தை பாருங்கள். பிறகு விமர்சியுங்கள்.அது நேர்மை! நல்லா இருக்கு. நல்லா இல்லை என முடிவை சொல்லுங்கள். அதை விடுத்து  'படத்தை பார்க்காதீர்கள் என மக்களிடம் சொல்வதற்கு  உங்களுக்கு  உரிமை  இல்லை " என்கிறார்.


பாவம்  சித்தார்த்.! டிவிட்டரில்  அப்படி எழுதுவதற்காக  சிலருக்கு தயாரிப்பாளர்கள் சிலர் பல்லாயிரக்கணக்கில்  பணம்  கொடுப்பது  தெரியவில்லை. 

அவர்களை கண்டுபிடியுங்கள் சித்தார்த்!

இது  அறிவியல் உலகம். எல்லாமே நடக்கும்!  அதற்காக  எல்லாவற்றையுமே  டிவிட்டரில்  பதிவிட முடியுமா?

படிப்பவர்களும் புத்திசாலியாகத்தானே  இருக்கிறார்கள் ? இரண்டு வரியை  பார்த்துவிட்டு  முடிவெடுப்பார்கள் என நம்பலாமா? 

இது  இரண்டு தரப்பினரும் முடிவு செய்யவேண்டியது!

Saturday 10 September 2016

பாரதி..உன்னை உண்மையுடன் நேசிப்பவன் எவனும் இல்லை!

செப்டம்பர் 11.

புரட்சி கவிஞன்...அதிலும் உண்மையாகவே  புரட்சி செய்தவன் சுப்பிரமணிய பாரதி.

அந்த அரிமாவை  ஆலயத்து  யானை தூக்கி எறிந்து பலி கொண்ட நாள்.!

எனக்கென்னவோ ....''பார்ப்பானை  அய்யர் என்ற காலமும் போச்சே " என்று  பாடியதற்காக  சிலர் யானையின்  வழியாக  சதி  செய்திருப்பார்களோ  என்றே  தோன்றுகிறது.

அமைச்சர்களும் சில அமைப்புகளும் மரபுக்காக  உனது சிலைகளுக்கும் , படங்களுக்கும்  பளபளப்புடன் வந்து மாலையை அணிவித்து  மவுனம்  காத்து விட்டு திரும்பிவிடுவர்.

ஆனால் காலத்தால் அழிக்கமுடியாத பாட்டு வரிகளை  உனது அடிப்பொடி பாவேந்தன் பாரதிதாசன் பாடிவிட்டு மறைந்துவிட்டான்.

அதைவிட  வேறு நினைவஞ்சலி  எதுவுமில்லை. அவைகளுக்கு நிகராக  இன்னும்  எவனும் எழுதவில்லை.

அதையே  உனக்கு  காணிக்கை ஆக்குகிறேன்.

பாரதி...ஏற்றுக்கொள்!

"பைந்தமிழ்த் தேர்ப் பாகன் .அவனொரு
செந்தமிழ்த் தேனீ,சிந்துக்குத் தந்தை.!
குவிக்கும் கவிதைக்  குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையை கவிழ்க்கும் கவிமுரசு!
நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்!
திறம் பாட வந்த மறவன்.புதிய
அறம் பாட வந்த அறிஞன்.நாட்டிற்
படரும் சாதிப்  படைக்கு மருந்து.!
மண்டும் மதங்கள்  அண்டா நெருப்பவன்:
அயலார் எதிர்ப்புக்  கணையா விளக்கவன்.
என்னென்று சொல்வேன்.என்னென்று சொல்வேன்!
தமிழால் , பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி  பெற்றதும்
எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்!"

என  அயலார் நடுங்க சொன்ன  பாரதியே  நீ வாழ்க.!

Friday 9 September 2016

காதல்...காமம். (பகுதி ஐந்து.)

தல்லாகுளம் போலீஸ் நிலையம்.
இன்ஸ்பெக்டர் ராம்குமாருக்கு எதிர்பக்கமாக  சுவரோரம் நின்றபடி  வெள்ளியங்கிரி!

மனசுக்குள் டிராக்டர் ஓடினாலும் அதை மறைக்க எவ்வளவோ முயற்சிக்கிறான். முடியவில்லை. வேர்க்கிது.வேட்டியால் துடைத்துக் கொண்டான்.

ராம்குமார் கவனிக்காதது போல் காட்டிக்கொள்கிறார். அவரின் மனசு தங்கராசுவின் தற்கொலைக்கு இவன் எப்படி  காரணமாக இருக்கமுடியும்  என்பதை பலவிதமாக படம் பிடிக்கிறது. ஆனால் அந்த கோணத்தில்  அவரால்  விசாரிக்க முடியாது. அவன் குற்றம்  செய்தான் என்பதற்கு  எதை மோடிவ்  ஆக சொல்லமுடியும்?

''ஏலேய்! ஏன்டா இப்படி வேர்க்கிது.. அடிக்க கிடிக்க மாட்டேன்.உனக்கும் தங்கராசுக்கும்  என்ன பிரச்னை. அவங்கூட அடிக்கடி சண்ட போடுவியாம்ல?"

போட்டு வாங்கப் பார்த்தார்.

"அப்படியெல்லாம் இல்ல சார்! அவங்கூட சண்ட போட்டதில்ல. யாரோ  மூட்டி விட்ருக்காங்க.அத வச்சுக்கிட்டு  நீங்க கேக்கிறிங்க! அவன் எனக்காக எவ்ளோவோ விட்டுக் கொடுத்திருக்கான்.காசு பணம் பாக்கமாட்டான். நல்லவன் சார்.டூர் போனா என்னோட செலவெல்லாம் அவந்தான் பாத்துப்பான்.அவங்க வீட்ல நானும் செல்லப் பிள்ளயாதான் வளந்தேன்."

"நீதான் அவனோட தற்கொலைக்கு  காரணமாக இருந்திருக்கே! ஸ்ட்ராங்  எவிடென்ஸ்  இருக்கு. ஒழுங்கா ஒத்துக்கிட்டேன்னா  சின்னதா கேஸ போட்டு  தண்டனையை  கொறைக்கலாம்.இல்லேன்னா அடி உத  வாங்கி  வீணா ஒடம்ப ........!"

 "சத்தியமா......  எங்காத்தா மேல சத்தியமா சொல்றேன்   எனக்கும் அவன் சாவுக்கும்  சம்பந்தம் இல்ல எஜமான்!"

அவனது பயம் 'எஜமான்' என சொல்ல வைத்ததோ என்னவோ! படக் கென இன்ஸ்பெக்டர் காலில்  விழுகிறான்

'ச்சிய்! நாயே! எந்திரிடா! ஒன்னமாதிரி எத்தன கேடிப்பயலுகள  பாத்திருப்பேன்.
எங்கிட்டேயே ட்ராமா  போடுறியா? அடிச்சு சாவடிச்சு  ஆனை விழுந்தான் பள்ளத்துல வீசிருவேன். என்ன பொருத்தவர  இன்னொரு  சூசைட் கேஸ்.! மொத  ராத்திரி முடிஞ்சதும்  அவன் சூசைட் பண்றதுக்கு முன்னாடி அவன் உங்கூடதான் பேசிருக்கான்.என்ன சொன்னாங்கிறத மறைக்காம  சொல்லிடு!"

இன்ஸ்பெக்டர் ஒரு ஊகத்துலதான் அப்படி கேள்வியை போட்டிருக்கிறார் என்பது  அவனுக்கு தெரியவில்லை. தன்னை எப்படியாவது மாட்டவைக்கப் பார்க்கிறார் என்பது மட்டும் புரிகிறது.

ராம்குமாரும் அதுவரை அவன் மீது சந்தேகப்படவில்லை. அவரும் தனது திறமைகளை காட்டி எப்படியாவது  ஒரு க்ளு கிடைக்காதா என்றுதான் அடிக்கிறார். விசாரிக்கிறார்.

அப்போதுதான் அங்கு வந்த எஸ்.ஐ. சிதம்பரம் ஒரு வெள்ளைத்தாளை நீட்டினார்.

அதைப் படித்ததும்  ராம்குமாருக்கு கடுமையான கோபம்!

வெள்ளியங்கிரிக்கு. ஓங்கி விட்டார் ஒரு உதை!

'இந்த நாயை லீடிங் செயின் போட்டு லாக்கப்பில் தள்ளுய்யா!"

உதை பட்டவனுக்கு  உலகமே  சுற்றுவதைப் போல் இருந்தது.


.

Wednesday 7 September 2016

ஸ்ருதி, நயனுடன் போட்டியிடும் காஜல் அகர்வால்!

வால்  அறுந்தாலும் உயிர் வாழும்  பல்லி மாதிரி ஆகியிருக்கிறார் காஜல் அகர்வால்.!

எப்படியாவது மார்க்கெட்டை  நயன்தாராவுக்கு சமமாக கொண்டு செல்லவேண்டும் என்கிற  ஆசை அவருக்கு.! பாலிவுட்டில்  ஸ்ருதி ஹாசனை  வீழ்த்துகிற நோக்கத்துடன்  படை எடுத்துச் சென்ற  அவருக்கு பிரபல புத்தகம்  கேடயமாகி  இருக்கிறது.,அதனால்  வாலை இழந்து இருக்கிறார்.!

அரை நிர்வாணமாக  அட்டையில் பளபளக்கிறார். யார் கொடுத்த ஐடியாவோ தெரியவில்லை.

இப்போது  அவருக்கு பாலிவுட்டில் கை சரக்கை  காட்டிவிட வேண்டும் என்கிற ஆசைதான்  அதிகமாகி இருக்கிறது. பிகினியில் கலக்குவதற்கு  பாலிவுட்டிலா பஞ்சம்? இவரை விஞ்சுவதற்கு அழகிகள் அணிவகுத்து  நிற்கிறார்கள்.

ஆனால் காஜலை வைத்து  படம் எடுத்துக் கொண்டிருக்கிற  தமிழ்,தெலுங்கு  படத் தயாரிப்பாளர்கள்  'நாங்கள் என்ன பாவம் செய்தோம். எங்களுக்கும் அந்த  படுகவர்ச்சி காட்சியில் நடித்தாக வேண்டும் 'என்று நிபந்தனைகளை அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள்.

"ஆங்கில பத்திரிகையில் எந்த அளவுக்கு கவர்ச்சியை  கடை விரித்திருக்கிறிர்களோ  அதே அளவுக்கு சினிமாவிலும் நடிக்க வேண்டும்" என வற்புறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதை ஏற்றுக்கொண்டு  தமிழகத்தில் நடிக்க ஆரம்பித்தால்  அயிட்டம் டான்ஸ்  ஆடுகிற நடிகை என்கிற பெயர்தான் கிடைக்கும்  ஆபத்து இருக்கிறது.

என்ன செய்வது  ?

படு கவர்ச்சியை  பாலிவுட்டுக்கும் ,போர்த்திக் கொண்டு நடிப்பதை தமிழுக்கும் என  எல்லைக்கோடு  போட்டுக் கொள்ளலாமா  என யோச்சிப்பதாக சொல்கிறார்கள்.

தெலுங்கில் ஏற்கனவே  அயிட்டம் டான்ஸ் ஆடி அரை கோடி  சம்பளம் வாங்கிவிட்டதால்  அங்கு தனது நிபந்தனை  போணி ஆகாது என்பது  தெரியாதா? தமிழ் ரசிகன்தான்  ஏமாந்தவன் மிளகாய்  அரைக்க முடியும். ஏன் மண்டையில் தேங்காயே உடைத்தாலும் சும்மாதான் இருப்பான்.

Sunday 4 September 2016

சூப்பர்ஸ்டார் கர்ணன்.அப்ப துரியோதனன் யாரு?

உலகமே  சினிமாவை சுத்தும் போது  நாமும்  சேந்து சுத்துனாதான் மருவாதி.! இல்லேன்னா  கூடைய போட்டு நம்மை  கவுத்திப் போட்ரும்!அதனால்தான் ஊரோடு நீயும் சேந்துக்கன்னு  எப்பவோ சில பெரிசுக சொல்லிட்டுப் போயிருக்கு, ஓலகத்தொடு ஒத்து போ!

ஒலகத்தில் உள்ள அழகிக  ஆயிரம் பேரை  அமெரிக்காவில்  உள்ள ஒரு பேப்பர் கணக்கு எடுத்திருக்கு, அதில என்ன  சிறப்புன்னா இந்தியாவை சேந்த ஒரு அழகியா  தீபிகா படுகோனே தான் செலக்ட்  ஆகியிருக்கு.

தமிழ்சினிமாவில் நாம்ப எவ்வளவோ பேரை நெனச்சு  ஜொள்ளு உட்ருக்கோம் பகல்லேயும் கனா கண்ட்ருக்கோம்.ஆனா வெள்ளைக்காரனுக்கு வடக்கத்தி பொண்ணுதான் ஒசத்தியா தெரிஞ்சிருக்கா! கஷ்டமா  இருக்குய்யா! நயன்தாரா  அழகியா தெரியலியா. காஜல தெரியலையா,அன்சிகா மொத்வானியை கூட  சேக்கலேங்கிரபோதுதான்  டவுட்டா இருக்கு,ஊழல் நடந்திருக்கும்னு!என்னவோ தெரியல..காமால கண்ணுக்கு  பாக்கிறதெல்லாம் மஞ்சளா  இருக்குமாமே! ஊழல் நமக்கு  பழகிப் போச்சுங்கிறதால இப்படியெல்லாம்   நெனைக்கிறேனோ?

இருக்கலாம்ங்க!

சென்னை தண்ணிய குடிச்சு  வளந்த  ஆந்திரகாரு மோகன் பாபு  நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு திக்  பிரண்ட். .பாபு  படம்  பண சிக்கல்ல  மாட்டிக்கிட்டு முளிச்சபோது  பணம் கொடுத்து  உதவுனவர்  சூப்பர்தான்! அவர்  சென்னைக்கு  வந்து  தன்னுடைய  நெருங்கிய நண்பர் ரஜினிய சந்திச்சு  கட்டித்தழுவி  பாராட்டியிருக்கார். "ரஜினி  இந்த அளவுக்கு வளந்ததுக்கு   மனைவி லதாதான்  காரணம்னு  சொல்லிட்டு  ரஜினிய கர்ணனாகவும் தன்னை துரியோதனன் னு  சொல்லி  சிலித்திருக்கார்  .இந்த காலத்திலேயும்  இப்படிப்பட்ட  ஆளுங்க  இருக்காங்கிற போது  கடவுள்  இருக்கார்னு நம்பித்தான்  ஆகணும்,


Thursday 1 September 2016

அன்னம்...எத்தனை நாளைக்குத்தான்....!

''அன்னம் ...இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வவுத்தை  காயப்போடுவே! பட்டினி கெடந்தா செத்தவன்  திரும்பவும்  வந்துருவானா...மனச  தேத்திக்க தாயி! அப்பனும் ஆத்தாளும் கெடந்து நொம்பல படுதுகள்ல! சாப்பிடு தாயி!"
.என்றபடியே  கும்பாவை  கொண்டுவந்தாள் வீட்டுக்கு  பெரிய மனுசி .அங்கம்மாள். வடிவேலுவை பெத்த மகராசி.அவள் பேசுகிறபோது தண்டட்டி அங்கிட்டும் இங்கிட்டுமாக  ஆடும்.காது கழுத்துவரை தொங்குகிறது.! ஒவ்வொரு  தண்டட்டியும் ரெண்டு பவுன் .அந்த காலத்தில் ஒரு பவுன் தங்கம் நூறு ரூபாய்தான்.இருந்தாலும்  அரிசிக்கு பஞ்சம். கல்யாணப் பத்திரிகைகளில் விருந்தினர்களுக்கு வேண்டுகோள் வைத்திருப்பார்கள். 'மறக்காமல் தங்கள் ரேஷன் கார்டை  கொண்டு வரவும்!"

அந்த காலத்து கஷ்டம் இந்த காலத்து மனுஷங்களுக்கு அவ்வளவாக தெரியாது.!பிள்ளைகளுக்கு தங்களது கொடிவழியையே சொல்லிக் கொடுக்காத பெரிய மனுசனுங்க  நாட்டு நிலவரத்தையா சொல்லியிருக்க போறானுங்க. போவட்டும் விடுங்க.நம்ம கதைக்கு வருவோம்.

 அங்கம்மாள்  சொன்னதை  அன்ன மயிலு கேட்டபாடில்லை. விட்டத்தை பார்த்தபடியே கண்ணீர் விடுகிறாள்.முத ராத்திரிக்கி   வச்ச முல்லைப்பூ இன்னும் வாடலய  பய மக்கா!.. சாந்தி  கழிஞ்சிருக்கான்னு  படுக்கையை  நோட்டம் கூட  பார்க்க முடியாதபடி  கலைஞ்ச கூந்தலோடு அந்த எடத்திலேயே  உட்கார்ந்து  இருக்காளே பாவி மக.! சந்தோசமா இருந்தியான்னு கூட கேலி பண்ணவும் முடியாம சிறுக்கி  இப்படி சீரழிஞ்சு கெடக்கிறாலேன்னு   வர்றவ போறவளல்லாம் மூக்கை சிந்தி சுவத்தில தடவி கண்ணீர் விட்டுட்டு போறாளுங்க.!

"ஆத்தா...அன்னமயிலு.....இந்த கோலத்திலேயே  இருந்தா  குடும்பத்துக்கு  ஆகாதுடி! எந்திரிச்சி பல்ல வெளக்கு! குளி!  மாத்து  துணிய கட்டிக்க!. காட்டுக்கு போயிருக்கிறவுங்க வந்திருவாங்க. .  ரெண்டாம் நாளு சடங்கு  நடக்கணும். மனச ஆத்திக்கிறத தவிர வேறு வழியில்ல.! எந்திரி!" என்றபடி அன்னத்தை  தூக்க வந்தாள், சின்னாத்தாக்காரி!

எங்கிட்டு  இருந்து அப்படி பலம் வந்துச்சோ ...சின்னாத்தாளின்  நெஞ்சில் தனது  இரண்டு கையையும் வச்சு  முழு வீச்சுடன்"போங்கடி தட்டுவாணிகளா!" என்று ஆங்காரத்துடன்த ள்ளிவிட்டாள் அன்னம்!கல்யாணம் நடந்த அன்னிக்கே தாலி அறுக்கிறோமே  என்கிற ஆங்காரம்.!. சற்று தள்ளிப்போய்  மல்லாக்க விழுகிறாள் சின்னாத்தா. மடேர் என்ற சத்தம்.! தொடர்ந்து  'எந்த சிறுக்கி எக்கேடு கெட்டா எனக்கென்ன?" என்ற சின்னாத்தாளின்  புலம்பல். !அந்த கலவரத்திலும் பெரியமனுஷி  அங்கம்மாவின் கண்களுக்கு  அது தப்பவில்லை. அன்னம் போட்டிருந்த ரவுக்கை  அவசர கோலத்தில் கிடந்தது. உள்பாடியின்  முன்பக்க முடிச்சு அவிழ்ந்திருந்ததை  பார்த்து விட்டாள்.! அந்த காலத்தில் ப்ராவுக்கு அவ்வளவு கிராக்கி இருக்கவில்லை.!. அன்னம் கையை உயர்த்தியபோது முந்தானை  நழுவி.வெள்ளை நிறத்தில் வெயில் தொடாத  பருவ அடையாளத்தை காட்டிவிட்டது.

'கன்னி  கழிஞ்சிருச்சு !" என்று மனசுக்குள் பொருமுகிறாள் ! என்ன பண்றது  விதின்னு சொல்லி கடனை  கழிக்கிற காரியமா  அது?

"என்னாங்கடி...இப்படி  ஆளுக்காளு  மசமசன்னு இருந்தா   காரியம்  நடந்திருமா..எந்திருச்சி  அவ, அவ  வேலைய பாருங்கடி! "என்று ஒருத்தி  சத்தம் போட்ட பிறகுதான்  சிலர் பெரு மூச்சுவிட்டபடி  எழுந்தார்கள்.

எழவு  வீட்டின் அடையாளம்  அழுத்தமாகவே   வடிவேலுவின் வீட்டில்  பதிந்திருந்தது.!

இன்னும் எவ்வளவோ  இருக்கிறது. அடுத்த வாரம்  படிக்கலாம்.