Saturday 20 May 2017

காதல்..காமம். ( 37.)"கருணாநிதி வசனத்த நெஜமாக்கிடாதே!"

"என்ன எதுக்கு சார் கூட்டிட்டு வந்திங்க.?"- இன்ஸ்பெக்டரை பார்த்துக் கேட்டான் தங்கராசு.

"பதறாதே.!சாமர்த்தியமா பண்ணிட்டதா நினச்சுட்டிங்கள்ல நீயும் உன் பிரண்டும்! அவன் போட்டுக்கொடுத்திட்டான். கொள்ளை அடிக்கிறது, பொம்பள கிட்ட போறது இதிலெல்லாம் கூட்டு சேரவே கூடாதுடா.! கூட்டாளி தப்பிச்சிடுவான் "

"சார்! வெளங்குறமாதிரி சொல்லுங்க! நான் என்ன தப்பு பண்ணினேன்?"

"உங்கப்பா வச்சிட்டிருந்தாரே செல்லத்தாயி. அவ மர்டர் கேஸ்ல அக்யூஸ்டு  அவ புருசன் அடைக்கன் !. அவன காப்பாத்தி ஆந்திராவுக்கு அனுப்பினது நீயும் உன் நண்பன் வெள்ளிங்கிரியும்!அத உன் நண்பன் நேத்தே ஒத்துக்கிட்டு  ரிட்டர்ன்ல எழுதிக் கொடுத்திட்டான்.நீ என்ன சொல்ற? எழுதிக் கொடுக்கிறியா இல்ல உள்ள போயி உக்கார்றியா?."

"............"

"என்னடா ..வாய்ல வரலியா? ஊமச்சாமியா? உனக்கு கல்யாணத்த பண்ணி  வைக்காம இன்னொருத்தன் பொண்டாட்டி மேல  உங்கப்பனுக்கு ஆசை!வப்பாட்டியா  வச்சிருந்தா தாலி கட்டுனவன் என்ன பூபோட்டு கதவ சாத்தி  வைப்பானா ? ரெண்டு பேரையும்  சேத்து காலி பண்ணிருக்கணும். பொண்டாட்டிய மட்டும் போட்டுத் தள்ளிட்டான்.அவனுக்கு கல்யாணத்த  பண்ணி வச்சு சேப்டியா ஆந்திராவுக்கு  அனுப்பி வச்சிட்டிங்களே...ஒரு வகையில உங்கள பாராட்டணும்டா! என்ன சொல்றே  ...எழுதுறியா ..பேப்பர் தரச்சொல்லவா?"

தங்கராசு தலையை ஆட்ட ரைட்டர் பேப்பர் கொடுத்தார்.

எழுதிக் கொடுத்து விட்டு வெளியில் செல்ல, அதே நேரத்தில்  கைகளை பின்பக்கமா ஒரு துண்டில் கட்டி வெள்ளிங்கிரியை உள்ளே கொண்டு வந்தார்கள். அதை பார்த்தும் பார்க்காததுமாதிரி தங்கராசுகடந்தான்.

லா அண்ட் ஆர்டர், கிரைம் இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கும் ஆச்சரியம்.

"என்னய்யா ..என்ன பண்ணினான்?" ---சட்டம் ஒழுங்கு காப்பாளர் ராம்குமார் நாற்காலியை விட்டு எழுந்து வந்தார். "கை கட்ட அவுத்து விடுய்யா"

"கோவில்ல  மேல ஆடி வீதியில ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்திருக்கான்யா! எல்லாரும் சேந்து அடிச்சிருக்காங்க. கோவில் அவுட் போஸ்ட்ல வச்சிருந்து  இங்க கொண்டு வந்திட்டோம்.நம்ம லிமிட்லதான் கோவில் இருக்கு"--ஏட்டய்யா சொல்லி முடிக்க,

"என்னடா இப்படி வந்து மாட்டுறே.கோவிலுக்கு சாமி கும்பிடத்தான் போவாய்ங்க. நீ டாவ் அடிக்கிறதுக்குன்னு போவியா? யார்ட்ட வம்பு பண்ணுனே?"

கன்னத்தில் விழுந்தது.... பளார் அறை!

"பராசக்தி படத்தில கருணாநிதி எழுதுன வசனத்த நெஜமாக்கிடுவாய்ங்க போலிருக்கே!அசந்தா கோவில்லேயே படுக்கைய போட்டு பர்ஸ்ட் நைட்  நடத்திருவிங்க .இல்லடா ?" --இன்னொரு அறை!

வெள்ளிங்கிரி வாயை திறக்கவில்லை. அடி வாங்கிக் கொண்டு  நிற்கிறான்.

"செனப்பன்னி மாதிரி இருக்கேல்ல..அதான் தெனவெடுத்து எவ சிக்குவான்னு  அலையிறே? அதான் உங்கள மாதிரி திமிர் பிடிச்சவய்ங்களுக்காக சில சிறுக்கிக திரியிறாளுகளே...அவள்கல்ல எவள்ட்டாயாவது   போயி திமிரை காட்டவேண்டியதுதானே? சீக்கு வந்திரும்னு பயம்!"

அவன் பதிலேதும் சொல்லாமல் அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டான்.

ராம்குமார் அடித்து துவைத்து விட்டார். வெள்ளிங்கிரியை இழுத்துக் கொண்டு போய் லாக் அப்பில்  தள்ளினார்கள்.அந்த அளவுக்கு போலீஸ் அடி!

 உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு புனையப்படும் கற்பனை தொடர்.

  


Friday 12 May 2017

காதல்..காமம்.( 36,) "அக்கா தங்கச்சி மார புடிச்சு பாரேன்"

"அன்னம்..கொஞ்சம் நில்லேன். சாவி கொடுத்த பொம்மை மாதிரி விசுக்.. விசுக்னு போயிட்டியே இருக்கியே..?"

மேல ஆடி வீதி பிரகாரத்தில் போய்க்கொண்டிருந்தவளை  தடுத்து நிறுத்துகிறான் வெள்ளிங்கிரி. போலீஸ் ஸ்டேஷனுக்கு தங்கராசுவை  கூட்டிக்கொண்டு போன அடுத்த அரை மணி நேரத்தில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டான். அன்னமயிலு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்  கோவிலுக்கு வருவாள் என்பது அவனுக்கு தெரியும். அவளை அவன் விரும்புகிறான் .

" நீ என்ன பாலோ பண்ணிட்டு வர்றது எனக்கும் தெரியும்.நீ எந்த மாதிரி ஆளுங்கிறதும் தெரியும். என் பின்னாடி அலையிறத நிப்பாட்டிக்கோ. வீணா வெட்டி வெவகாரத்த இழுக்காத.! அதுக்கேத்த ஆளு நான் இல்ல."

"என்ன பத்தி என்ன தெரியும்?"

"பொம்பள பொறுக்கி!"

"பொறுக்கி எடுத்ததால்தான்டி  உன் பின்னாடி வரேன்!"

"கோயில் பிரகாரம். அதான் என் கால்ல செருப்பு இல்ல!மரியாதைய கெடுத்துக்காத.!"

"பிரகாரம்கிறதாலதான் உன்ன கட்டி பிடிச்சி முத்தம் கொடுக்கல!"

"பெரிய வீட்டுப்புள்ளன்றதால அசிங்கப் படுத்த விரும்பல. போயிரு!"

"போகலன்னே என்னடி பண்ணுவே!?"

"எச்சக்கல நாய கோவிலுக்குள்ள விட்டதே தப்புன்றத  இங்க இருக்கிறவங்க  எல்லோரும் தெரிஞ்சிக்குவாங்க.உங்கூட  இம்புட்டு நேரம் பேசுனதே தப்பு.டா ..தட்டுக்கெட்ட நாயே!" என்று சத்தம் போட்டு சொன்னதுடன் அவனின் சட்டையை  இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். "எடுபட்ட பயலே "என்றபடியே  பளார் பளார் என அறை விட்டாள். ஆடி வீதியில் காற்று வாங்கியபடி உட்கார்ந்திருந்தவர்களும் ,பிரகாரம் சுற்றி வந்தவர்களும் சேர்ந்து கொண்டு சாத்துபடி நடத்தினார்கள். யாரும் காரணம் கேட்கவில்லை.அவர்களாகவே  சொல்லிக்கொண்டார்கள்.

"இடிக்கிறதுக்குன்னே வந்திருப்பான். மார புடிச்சிருப்பான்.சேட்டை பண்ணிருப்பான்" இப்படி இன்னும் என்னன்னவோ!

"ஏண்டா ..காவாலிப்பயல. உன் அக்கா..தங்கச்சி மார பிடிச்சுப்பாரேன். எப்படி  இருக்குன்னு வீட்டுலேயே தெரிஞ்சிருக்கலாமேடா " என்று  ஒருத்தன் மூக்கில் குத்து விட்டான்.இவ்வளவு நடக்கிறது. அதை பார்க்க அங்கு  அன்னம் இல்லை. கூட்டம் சேர்ந்ததும் கிளம்பி போய் விட்டாள்.   . 

அடி.... அவமானம் ..! அப்படியே உட்கார்ந்து விட்டான் வெள்ளிங்கிரி. இப்படி  நடக்கும் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. பொம்பள பொறுக்கி என்று அன்னம் சொன்னதும் அவனுக்கு ஆத்திரம் வந்து விட்டது.அவனும் வார்த்தையை விட்டுவிட்டான்..

தலையை குனிந்தபடி உட்கார்ந்து விட்டவனை  அதுவரை மொத்தியவர்களும்   விட்டு விட்டார்கள்.ஆனால் ஆலயத்தில் இருக்கிற போலீஸ்காரர்கள் விட்டு  விடுவார்களா?

கூட்டிக்கொண்டுபோய் விட்டார்கள்.

உண்மை  நிகழ்வு. புனைய பட்ட கதை. தொடர்.  

Tuesday 9 May 2017

காதல்...காமம்.( 35.) நண்பனா துரோகியா?

"ஏப்பா ராசு...இம்புட்டு நாளாகியும் குத்தவாளியை கண்டுபிடிக்க முடியலியா? நல்லா தூங்கியே மாசக் கணக்காச்சுப்பா.! செல்லத்தாயியை   வச்சுக்கிட்ட நாள்லயும் நிம்மதி இல்ல. செத்து தொலஞ்ச பெறகும் நிம்மதி இல்ல! உனக்காவது  நல்லது நடக்கட்டுமேன்னு நெனச்சா அந்த புள்ள  நாண்டு  கிட்டு செத்திருச்சி.என்ன பாவம் செஞ்சேனோ அது உன்னையும்  சேத்து அலக்கழிக்கிது!"

மகன் தங்கராசுவின் கைகளை பிடித்துக்கொண்டு கலங்குகிறார் வடிவேலு.

 தூணில் சாய்ந்திருந்தாள் மாயக்காள் .வெத்திலை போட்டு வாரக்கணக்காகி  இருக்கலாம்.உதடுகள் வரண்டு போயிருந்தன.வெடிப்புகள் தெரிந்தது.

மகனை அருகில் வருமாறு கையால் ஜாடை காட்டினாள்!

"அய்யா ராசு..போன புள்ளைய நெனச்சிக்கிட்டு மருகிட்டு நிக்கிறதில எந்த பிரயோசனமும் இல்ல.தாய பிரிஞ்ச கோழிக் குஞ்சுக மாதிரி தெருவில நாங்க  அலைஞ்சுகிட்டு இருக்கோம்.கள்ளப்பிராந்து மாதிரி எமன்  எப்ப தூக்கிட்டுப் போவானோ....  தெரியலய்யா. நாங்க  நல்லது கெட்டத பாத்தாச்சு. நீ வம்சத்து ஒத்த  வாரிசு.பல்கி பெருகனும்யா! அவ நெனப்பிலேயே கரிகிடாதே சாமி!"

"ஆத்தா ...என்னத்த பேசுறே? "

"அந்த பொன்னியையே நெனச்சிக்கிட்டு கிடக்காதே சாமின்னு சொல்றன்யா.! வாழ கொடுத்து  வைக்கல அவளுக்குன்னு தண்ணிய குடிச்சிட்டு தாகத்த தீர்த்துக்கய்யா.!"

"ராசு...ஆத்தா சொல்றதில என்னய்யா தப்பு? உனக்குன்னு எவளோ பொறந்து  காத்திருக்கா.அதனாலதான் பொன்னிக்கு வாழ கொடுத்து வைக்கலன்கிறேன் . பொன்னிய கட்டி வைக்கனும்கிறதுக்குத்தானே வீடு தேடி போய் பேசினோம். என்னாச்சு?லட்சுமி  வீடு மாறி போயிட்டா.இவ மேல போய் சேர்ந்துட்டா.வீடு  மாறிப்போன லட்சுமி உன்னைத்தேடி கட்டாயம்  வருவா."

மகனின் தலையை பாசமுடன் தடவிக் கொடுத்தாள்.

"அப்பா ..ஆத்தா நல்லாருக்கிங்களா " என்று கேட்டபடியே வந்தான் வெள்ளிங்கிரி.

இவனை பார்க்க விரும்பாத தங்கராசு அம்மாவின் கைகளிலிருந்து  விடுவித்துக்கொண்டு  வீட்டுக்குள் போய் விட்டான்.

தங்கராசுக்கும் வெள்ளிங்கிரிக்கும் பேச்சு வார்த்தை இல்லை என்பது அந்த  கிழ தம்பதிக்கு தெரியாது.

"நல்லாருக்கம்பா! உன் சிநேகிதனுக்கு நல்லதா நாலு வார்த்தை சொல்லி  மனச மாத்தப் பாருப்பா! பொன்னிய நினைச்சு மருகிட்டு திரியிறான். "

"விடுங்கப்பா..கஞ்சி போட்ட சட்டை எத்தனை நேரத்துக்கு வெறப்பா இருக்கமுடியும்? அவன நான் பார்த்துக்கிறேன். செத்துப்போன செல்லத்தாயின் புருசன் அடைக்கன் இன்னொரு கல்யாணம் கட்டிக்கிட்டு ஆந்திராவ்ல இருக்கானாம் .நம்ம ஊர் போலீஸ் போயிருக்கு. எப்படியும் பிடிச்சாந்திருவோம்னு  இன்ஸ்பெக்டர் உங்ககிட்ட சொல்லச்சொன்னாரு. அதான்  வந்தேன். பயப்படாம இருங்கப்பான்னு சொல்லலாம்னு!"

"நல்ல சேதி சொன்னப்பா கிரி!தலையில இருந்த பாறைய எறக்கி வச்ச மாதிரி இருக்கு!" என்ற வடிவேலு எழுந்து வந்து மாயக்காளின் பக்கமாக உட்கார்ந்தார்.

"ஏ புள்ள.! சந்தோஷமா இருக்குளா..! வண்டியூர் மாரியம்மன் கோவிலுக்கு  போய் சாமிய கும்பிட்டு வந்திரலாம். எந்திரிச்சி குளிச்சிட்டு வா.  ஒரு எட்டு  போயிட்டு வந்துருவோம்."என்று சொன்னதும் மாயக்காளுக்கு கண்ணீரை  அடக்க முடியவில்லை.

அவரும் அவளும் ஒன்றாக எழுந்தார்கள்.

அதே நேரம் இன்ஸ்பெக்டர் ராம்குமார், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜதுரை  இருவரும் ஒன்றாக உள்ளே நுழைந்தார்கள்.

இவர்கள் எதற்காக இப்போது இங்கு வரவேண்டும்?

கும்பிட்டபடி வரவேற்கிறார் வடிவேலு. மாயக்காளுக்கு நெஞ்சு படபடக்கிறது.

"என்னங்கய்யா ..புதுசா ஏதாவது சொல்ல வந்திருக்கிங்களா?" என்று கேட்டார்  வடிவேலு.

"தங்கராசு வீட்லதானே இருக்காரு? அவரை ஸ்டேஷன் வரை கூட்டிட்டு போகவேண்டியது இருக்கு? அவரை  கூப்பிடுறீங்களா?" என்று சொல்லி  முடிக்க  "நானே வரேன் சார்!" என்று அறைக்குள் இருந்து வந்தான் தங்கராசு.

எதையும் கண்டு கொள்ளாமல் நின்றிருந்தான் வெள்ளிங்கிரி.

ஆனால் இன்ஸ்பெக்டர் ராம்குமார்  அவனிடம் " தேங்க்ஸ்பா!" என்று சொன்னது தங்கராசுவின் காதில்  விழாமல் இல்லை.!

உண்மை  சம்பவத்தின்  அடிப்படையில்  புனையப்படுகிற  தொடர்.