Sunday 23 April 2017

காதல்....காமம்.( 34.) நிரோத் பாக்கெட்!

ஸ்டேசனையே அதிர வைத்து விட்டான் தங்கராசு. அவனை அடித்துக் கொல்லப் பார்க்கிறார்கள் என்று நினைக்கும் அளவுக்கு கத்தல் இருந்தது. இன்ஸ்பெக்டர் அந்த நிமிடம் ஆடிப்போய்விட்டார் என்றே சொல்லலாம்.

"ஏ....ய்.! என்னப்பா நீ இந்த கத்து  கத்துறே! தெருவில போறவய்ங்க காதில கீதில விழுந்தா பொல்லாப்பு ஆயிடும்பா! ஸ்டேசன்ல யாரையோ அடிச்சு நொறுக்குராய்ங்கன்னு கட்சிக்காரப் பயலுக கொடிய தூக்கிட்டு வந்திருவாய்ங்க! இப்ப என்ன சொல்லிட்டேன்னு இந்த கத்து கத்துனே? அந்த புள்ள தற்கொலை பண்ணிக்கல.யாரோ கொன்னு தொங்க விட்டிருக்காய்ங்க. அது விசயமா கேட்கிறதுக்குத்தான் உன்னை கூட்டிட்டு வந்தேன். இப்ப சொல்லு ! உனக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?" இன்ஸ்பெக்டர் ராஜதுரை அவனை ஆசுவாசப்படித்தியபடி கேட்டார்.

குழம்பிய மன நிலையில் இருந்தான் ராஜதுரை. அவனுக்கு தெரிந்தவரை அவர்களுடைய காதலுக்கு யாருமே எதிரி இல்லை.பொன்னியின் அப்பாவுக்கு  பிடிக்கவில்லை.அதனால் மகளுடன் சண்டை போட்டார்.அருவாமனை வெட்டு விழுந்தது.ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு போய் விட்டார்கள். மகளை கொல்லுகிற அளவுக்கு மோசமானவர் இல்லை.பொன்னியை  யார்  கொலை செய்திருக்க முடியும்? சம்பவம் நடந்த போது அந்த இடத்தில்வேறு  யாருமே இல்லை என்பது அவனுக்கு தெரியும்.

இருட்டுக்குகையில் அவனை கட்டிப்போட்டது மாதிரி இருந்தது.

"எனக்கு எதுவும் புலப்படலையா! அப்படி யாராவது எதிரி இருந்திருந்தா பொன்னி கண்டிப்பா என்னிடம் சொல்லிருக்கும். அது எங்கிட்ட எதையுமே  மறைச்சதில்ல!"

"போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி அந்த புள்ளைய வாயைப் பொத்தி மூச்சு  திணற வச்சு கொன்னுருக்காய்ங்க. செத்த பிறகு தூக்கில தொங்க விட்டிருக்காய்ங்க.நிச்சயமா யாரோ ஒரு ஆம்பளைதான் செஞ்சிருக்க முடியும்.அந்த புள்ளையும் போராடி பார்த்திருக்கு.அந்த ரூம் கிடந்த நிலையை பார்த்தபோதே எனக்கு சந்தேகம்தான்! பீரோ வேற நகர்ந்து கெடந்துச்சு.யாரோ  ஒளிஞ்சிருந்து இந்த காரியத்தை பண்ணிருக்கான். பொன்னிய கொல்றதுதான் அவனது நோக்கமா இருந்திருக்கும்!"

"அய்யா ...நீங்க சொல்றத பார்த்தா ரொம்ப நாளா யாரோ ஒருத்தன் எங்களை நோட்டம் பார்த்திருக்கான்னு தெரியிது."

"உங்களுக்கு தெரிஞ்ச பயலுகள்ல யாரோ ஒருத்தன்தான் இத செஞ்சிருப்பான். யார் மேலயாவது உனக்கு சந்தேகம் இருக்கா? இப்ப யோசிச்சு பாரு?"

யார் மீதும் தங்கராசுக்கு சந்தேகம் வரவில்லை.யாரை சொல்வது, யாரை  நோவது?பொன்னியும் அவனிடம் எதுவும் சொன்னதில்லை.

"எனக்கு தெரியலய்யா!பொன்னியின்அய்யாஅம்மாகிட்டகேட்டுப் பாருங்க ..அவங்க சைடுல யாராவது பொண்ணு கேட்டு வந்து பிரச்னை எதுவும் நடந்ததான்னு தெரியல.!"

"இந்த எழவத்தாண்டா இன்னமும் கட்டிக்கிட்டு திரியிறிங்க. பொண்ணு கொடுக்கலேன்னா பொத்திக்கிட்டு போறதில்ல.அவளத்தான் கட்டுவேன்.  இல்லேன்னா கொல்வேன்னு அலையிறிங்க. அவ கிட்ட இருக்கிறதுதானே  மத்தவ கிட்டேயும் இருக்கு.அங்கென்ன தங்கத்திலையா கிடக்கு?"

தங்கராசுக்கு அவர் பேசியது பிடிக்கவில்லை. அவனால் அதை எதிர்த்துப் பேசவும் முடியாது.அவருக்கு எதுவும் துப்பு கிடைக்கவில்லை என்கிற  கடுப்பில் பேசுகிறார்.தலை குனிந்தபடி கேட்டுக்கொண்டான்.

"யோவ்.! அவ அப்பன் ஆத்தாவாவது உண்மைய சொல்லுவாங்களா...போன புள்ள திரும்பி உசிரோடு வரவா போகுதுன்னு குத்தவாளிய மறச்சிருவாய்ங்களா...ஆம்பள பொம்பளன்னு பார்க்க மாட்டேன்.லத்திக்கம்ப  எடுத்தேன்னா ஒன்னு எலும்பு முறியும்.இல்லீன்னா கம்பு உடையும்.போய்யா... சொல்லி வை அந்தாளுகிட்ட!"

எரிச்சலுடன் தங்கராசுவை அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர் ராஜதுரை.


ங்கராசு கிளம்பி சென்றபிறகு ஃபாரன்சிக் அதிகாரி வந்தார். "முக்கியமான  எவிடென்ஸ் ஒன்னு பொன்னியின் ரூமை செர்ச் பண்ணினபோது கிடைச்சது  மிஸ்டர் ராஜதுரை" என்று சொன்னவர் ஒரு பொட்டலத்தை கொடுத்தார்.

பிரித்துப் பார்த்தார் ராஜதுரை.முகம் அதிர்ச்சியை காட்டியது.

"என்ன சார் இது? அந்த பொன்னி ரொம்பவும் நல்ல பொண்ணுன்னுதான்  எல்லா பயலும் சொல்றாய்ங்க.இது எப்படி அந்த பொண்ணு ரூம்ல ?"

"கொலை பண்ண வந்த பய வச்சிருந்திருக்கலாம்ல?"

அந்த பொட்டலத்தில் அப்படி என்னதான் இருந்தது.நிரோத் பாக்கெட் !

உண்மை  நிகழ்வை  அடிப்படையாக  வைத்து  புனையப்படுகிற  தொடர்.

Thursday 13 April 2017

காதல்...காமம்.( 33.) 'பொன்னி தற்கொலை பண்ணிக்கல"

மதுரை பெரிய ஆஸ்பத்திரியை அந்த காலத்தில் .எர்ஸ்கின் ஆஸ்பத்திரி என்று சொல்வார்கள்.தற்போது அது ராஜாஜி மருத்துவமனை.ஆனாலும் ஜனங்களுக்கு இன்றும் பெரிய ஆஸ்பத்திரிதான்!

.சிவனாண்டியின் கையில் எட்டு தையல் .வெட்டு ஆழமாக இருந்ததால் புண் இன்னும் ஆறவில்லை.

"ஒத்தப்புள்ளன்னு ஊட்டி ஊட்டி வளத்தில்ல. அதாண்டி! என்னயும் வெட்டிட்டு  நாண்டுக்கிட்டு செத்துருக்கா !.இந்நேரம் பொணத்த அறுத்து கூறு போட்டு பாத்திருப்பாய்ங்கள்ல!புருசன் பாக்க வேண்டிய ஒடம்புடி ! கண்ட பயலும் பாத்திருப்பாய்ங்க !நெனச்சு பாக்கிறதுக்கே கூசுதுடி! தாலி கட்டுனவனையே முழுசா பாக்க விடமாட்டாளுங்க. நான் பெத்த மவளை டாக்டரு பயலுக எங்கங்க தொட்டாய்ங்களோ!என்னன்ன நெனச்சாய்ங்களோ!"

சிவனாண்டி குமுறி குமுறி அழுகிறார். படுக்கையின் ஓரமாக உட்கார்ந்திருந்த  ராசம்மாவுக்கு தாங்க முடியவில்லை.

"சும்மா இருக்கமாட்டிங்களா?  நானே நொம்பலப்பட்டு கெடக்கிறேன்..நம்ம புள்ளைய பத்தி நாமே அசிங்கமா பேசலாமா? நாய் திங்க போவுதோ..நரி தின்னப் போவுதோ!மண்ணு தின்னப்போற ஒடம்புதானே.! அத விடுங்க! புள்ளைய பறி கொடுத்துட்டு நாம்ப நாதியத்து கெடக்கிறோம். சொந்தம்னு  சொல்லிட்டு கறிச்சோறுக்கு வந்து நிக்கப்போறாய்ங்க.ஒத்த பொம்பள  நான் என்ன பண்ணப்போறோம்னு புரியல சாமி!"

"என்ன சொல்ல வரேன்னு புரியிது ராசு. பொண்ண நாம்ப  வாழத்தான் விடல. செத்தவ காரியத்த அவ வாழ ஆசைப்பட்ட தங்கராசுவே செய்யட்டும்.! பொட்டச்சிக நம்ம சாதியில சுடுகாட்டுக்கு போறதில்ல.நீ போகவேணாம். ரெண்டாம் நாள் சாத்திரத்தை நம்ம வீட்ல பண்ணிட்டு. கருமாதின்னு நாளை  இழுத்திக்கிட்டு போகவேணாம்.மூணாம் நாளே மொத்த சோலியையும் செஞ்சிரு!"

சொல்லி முடிப்பதற்கும் வார்டு பாய் வந்ததற்கும் சரியாக இருந்தது.

"ஆத்தா! போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சிருச்சி.பாடியை எடுத்திட்டு போகச்சொல்லிட்டாய்ங்க. கை நாட்டு வச்சிட்டு எடுத்திட்டு பொணத்த கொண்டு போயிடலாம். ஏத்தா..வீட்டுக்கா..இல்ல தத்தநேரிக்கா?"

"அந்த தம்பி அங்க இருக்காப்பூ?"

"எந்த தம்பி ஆத்தா?"

பொண்ணு கேட்டு வந்த அந்த வீட்டுத் தம்பியத்தான் சொல்றனப்பூ!"

"அங்க இல்லாத்தா.! டேசன்ல இருக்காராம். அந்த வடிவேலு அய்யாதான் பொணம் அறுக்குற எடத்தில இருந்தாரு,.அவருதான் காசெல்லாம் கொடுத்து சரி கட்டுனாரு.தாராள மனசு தாயி! நம்ம பொண்ணுக்குத்தான் வாழக் கொடுத்து வைக்கல!"

"வெட்டியா இங்க என்னடி பேச்சு. அவனோடு போயி கை நாட்ட வச்சிட்டு பொன்னிய கொண்டு போற வேலைய பாரு!"---சத்தம் போட்டார் சிவனாண்டி. கடைசியாக கூட மகளின் முகத்தை பார்க்க முடியலியே என்கிற வேசாடு!

"சூதானமா இருந்துக்குங்க! அவசரத்துக்கு  பக்கத்தில இருக்கிறவங்களை  கூப்புட்டுக்குங்க." ---வார்டு பையனை கூட்டிக்கொண்டு கிளம்பினாள் பொன்னியின் அம்மா ராசம்மா!
--------------------------
ஸ்டேசனில்..

தங்கராசுவை விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர் ராஜதுரை. வெளிப்படையான கேள்வியாக இல்லை.அவனும் அதை புரியாமல்தான் பதில் சொல்கிறான்.

"எத்தன வருசமா பொன்னியோட பழக்கம்.?"

"காலேஜில் இருந்துதான் சார் !"

"உன்னை முழுசா நம்புச்சா?"

"எதுக்கு  இப்படி கேக்கிறிங்கன்னு புரியல சார்!"

"தனியா எங்கெல்லாம் போவிங்க,...... லாட்ஜ்?"

"கோவிலுக்குப் போவோம்.சிலைமான் ஆத்துக்குப் போவோம்.மத்தபடி வேறெங்கும் போறதில்ல.எதுக்கு சார் இப்படியெல்லாம் கேக்கிறீங்க?'

"இப்படியெல்லாம் கேப்பம்பா! உனக்கும் அந்த புள்ளைக்கும் சண்டை சச்சரவுன்னு வந்துருக்கா?"

"இல்ல.!"

"ம்ம்ம்! பொன்னி தற்கொலை பண்ணிக்கல!" என்று இன்ஸ்பெக்டர் சொல்ல  "என்ன சார் சொல்றீங்க.?"என்று அந்த அறையே எதிரொலிக்கிறது!

இது  உண்மை நிகழ்வு .புனை கதையாக தொடர்கிறது..


Saturday 8 April 2017

காதல்..காமம்..(32.)

ராஜதுரை. கிருதா மீசை.தடித்த குரல்.பாடியான ஆள்.தல்லாகுளம் குற்றப்பிரிவு  இன்ஸ்பெக்டர்.

பொன்னி தூக்கில் தொங்கிய அறையை நோட்டமிட்டார். சுவரை ஒட்டி
கிடந்தது கட்டில்.  ஜன்னல்கள்  மூடப்பட்டிருந்தன.அந்த அறையை விட்டு வெளியேறுவதற்கு இன்னொரு கதவும் இருந்தது.அது திறந்துதான் கிடந்தது, அதன் வழியாக காற்று சிலு சிலுவென பாய்கிறது. பின்னம் பக்கம் பூத்தொட்டிகள்.எல்லாவற்றிலும் ரோஜாதான்! சிவப்பு ,மஞ்சள் என மலர்ந்திருந்தன.வாசலை தவிர்த்து அறைக்குள் வருவதற்கு ஏதுவாக சின்ன சந்து. துப்புரவு தொழிலாளர்கள் வந்து போவதற்காக!

அறையில்  பிளாஸ்டிக் சேர் சாய்ந்தே கிடந்தது. அதில் ஏறி நின்றுதான் பொன்னி தூக்குப்போட்டு கொண்டிருக்கவேண்டும்.தடயவியல் அதிகாரி  ரேகை எதுவும் கிடைக்கிறதா என்று வெள்ளைப்பவுடரை தெளித்து பிரஷினால்  நோகாமல் தடவி பூதக்கண்ணாடியால் தேடிக்கொண்டிருந்தார்.அறையில் இருந்த மர அலமாரி சற்று இடம் பெயர்ந்த மாதிரி இருந்தது. சேலைகள் தரையில் அலங்கோலமாக கிடந்தன. 

"என்னங்கிறேன்...உன் ஆளு தூக்குப்போட்டு தொங்குற அளவுக்கு தைரியசாலியா?" அறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்த தங்கராசுவை பார்த்து கேட்டார் ராஜதுரை.

"இல்லிங்க சார்!"

கூடவே ராசம்மாவும் "பச்ச புள்ள சாமி!ஆசப்பட்டவனோடு  வாழணும்னு ரொம்பவும் ஆசைப்பட்டுச்சு"

"அப்புறம் எதுக்கு நாண்டுக்கிட்டு சாகணும்?"

"ஆத்திரத்தில புத்தி கெட்டுப்போயி தொங்கிட்டா!"

"ஆத்திரத்தில அப்பனை வெட்டுனவளுக்கு சாகுறதுக்கு எப்படிம்மா மனசு  வந்திருக்கும்?  யோசிச்சு பாரு!"

"ஆசைப்பட்டவன் கெடைக்கலேன்கிற வருத்தம் இருக்கும்ல சாமி!"

"ஒத்தப் பொம்பள புள்ளைய வச்சிருக்கிற உங்களுக்கு மக ஆசைப்பட்டவனை  கட்டி வைக்கிறதில அப்படி என்ன சங்கடம்? இந்தாளு உங்க சாதிதானே?" அருகில் நிற்கிற தங்கராசுவை  காட்டி கேட்டார்.

"நான் சாதி கீதி பார்க்கலிங்க. என் ஊட்டுக்காரருக்கு இந்த சம்பந்தம் புடிக்கல.!"

''பையன் கள்ளு சாராயம் குடிக்கிறவனா...இல்ல கூத்தியா  வச்சிருக்கிறவனா. பயலுக்கு தப்பான பழக்கம் இருக்கிறதா எவனாவது வந்து சொல்லி இருப்பாய்ங்களா?"

"எதையும் என் ஊட்டுக்காரர் என்கிட்டே மறச்சதில்லிங்க.  வாக்கப்பட்டு முப்பது வருசம் ஆச்சு.என்னை கேட்காம எதையும் செஞ்சதில்லை. மக கல்யாண விசயத்திலே மட்டும் அந்த மனுசன் ஏன் பிடிவாதமா இருந்தார்ங்கிறது இன்னிக்கி வரை,இந்த பொழுது வரை புடிபடல சாமி!" ராசம்மா கண்ணீர் விட்டபடி புலம்புகிற அந்த சமயத்தில் தடயவியல் அதிகாரி இன்ஸ்பெக்டர் அருகில் வந்தார்.

காதுக்குள் ஏதோ சொல்ல  ராஜதுரையும் " எனக்கும் அந்த டவுட் இருக்கு மிஸ்டர் ஜேம்ஸ்! கண்டினியூ பண்ணுங்க." என்று அவரை  அனுப்பி வைத்தார்.

அங்கிருந்தவர்களுக்கு எதுவும் புரியவில்லை.

கான்ஸ்டபிளை கூப்பிட்டு அந்த அறைக்கு சீல் வைக்க சொன்னார். கொல்லைப்புற வழியையும் சீல் வைத்து விட்டனர்.

"இப்ப உன் புருசனுக்கு எப்படி இருக்கு...மக செத்தது அந்தாளுக்கு தெரியும்ல.?" என்று ராசம்மாவிடம் கேட்டவர் அதற்கான பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை."யாரும் எங்க அனுமதி இல்லாம அந்த அறைக்கோ கொல்லைப்புறம் பக்கமாகவோ போகக்கூடாது" என்று அவளிடம் எச்சரித்து விட்டு புறப்பட்டார்.

"தங்கராசு ! நீ மட்டும் என் கூட வாய்யா !"

அவனுடன் ஜீப் கிளம்பிச்சென்றது.

{ உண்மை நிகழ்வு. புனையப்பட்ட தொடர்,)


Saturday 1 April 2017

காதல்....காமம்.(31.)

எல்லாம் சொடக்குப் போடும் நேரத்தில்....!

பொன்னிக்கு   பளார்  என அறை விழுகிறது ! தங்கராசு இப்படி அடிப்பான் என்று    அவள்   எதிர்பார்க்கவில்லை !  பொறி கலங்கிவிட்டது. அறைந்த வேகத்தில் கையில்  இருந்த அருவாமனை  சுவரில் மோதி விழுகிறது. பொன்னியை அணைத்தவன் வேகமுடன்  அவளை அறைக்குள் தள்ளினான்.  கதவை சாத்தி வெளியில் தாழ் போட்டான் .

"சார்.! பொன்னிய ஸ்டேசனுக்கு கூட்டிட்டு வர்றது என் பொறுப்பு. என்னை நம்பி நீங்க போகலாம்.!" என்று கெஞ்சினான் !   தங்கராசுவை ஏளனமாக
பார்த்தார்   எஸ்.ஐ.!

" ஏப்பு! எங்களை பார்த்தா அள்ளி முடிஞ்சு கோடாங்கி அடிக்கிறவன் மாதிரி தெரியிதா? எங்களை அனுப்பிட்டு அவள நீ அள்ளிட்டு எங்கேயாவது போயி  குடும்பம் நடத்தலாம்னு திட்டமா? அவளோடு இப்ப நீயும் என்னோடு ஸ்டேஷனுக்கு வர்றே! உன்ன மாதிரி எத்தன பயலுகள பார்த்திருப்பேன்." என்ற எஸ்.ஐ. வாசலில் இருந்த கான்ஸ்டபிளை பார்த்து  "எயிட் நாட் த்ரி....இந்த சாரை ஜீப்பில் ஏத்துய்யா."என்று தங்கராசுவை தள்ளி விட்டார்.

என்னதான் கத்தி கதறினாலும் அவனை போலீஸ் விடுவதாக இல்லை.

தாழை நீக்கிவிட்டு  கதவை ஓங்கி மிதித்தார் எஸ்.ஐ.!.

நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே!

மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்ட பொன்னி ஆவி அடங்கி  பிணமாக  தொங்குகிறாள்.! இதை அவர் எதிர்பார்க்கவில்லை .அப்படியே நாற்காலியில் சாய்ந்தவர்  முகத்தை துடைத்துக் கொண்டார் "இன்னிக்கி முழிச்ச முகத்துலதான்யா  தேடித்தேடி முழிக்கணும்."

"ஐயோ..ஐயோ ! என் ராசாத்தி!" என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு  ராசம்மா.தரையில் விழுந்து புரள்கிறாள்.

ஜீப்பிலிருந்த தங்கராசு கதறியபடி   வீட்டுக்குள் பாய்ந்தான். நிமிட நேரத்தில் எல்லாமே தலை கீழாக மாறி விட்டது.காவல் துறைக்கு இப்போது இரட்டை தலைவலி.!

"விசாரிக்கிறேன்னு வந்து என் பொண்ணு உசிரை வாங்கிட்டேயடா பாவி! ஒனக்கெல்லாம் கஞ்சி போட்ட உடுப்பு ஒரு கேடாடா ..நாசமாப் போறவனே! எம்பொண்ணு உசிர திருப்பி தருவியாடா...பூவும் பொட்டும் மஞ்சளும் குங்குமத்தோடு தாலி கட்டி அனுப்பவேண்டிய பொன் அரசிய இப்ப பச்ச தென்ன ஓலையில பாடை கட்டி அனுப்ப வச்சிட்டியேடா..ஒங்குடும்பம் வெளங்குமா?"

இப்படி துக்கமும் துயரும் கொப்பளிக்க ராசம்மா  ஒப்பாரி வைக்க ,அறைக்குள்  சென்ற தங்கராசு கதறி அழுகிறான். "பாவி! இப்படி சாவுறதுக்கா மாஞ்சு மாஞ்சு  காதலிச்சே!.காலரா..காச்சல்ல போயிருந்தாலும் மனச ஆத்திக்கலாம். இத சாகுற வரை எப்படிடி மறக்கிறது."இப்படியே பழைய நினைவுகளை எல்லாம்  நினைத்துக் கொண்டு  குமுறுகிறான் .

முன்னை விடமொத்த  தெருவும் அந்த வீட்டுக்கு முன்பாக கூடி விட்டது.

உண்மை நிகழ்வை  அடிப்படையாக கொண்டு புனையப்படும் தொடர், படம் .இணையத்தில் சுட்டது.

.