Saturday 31 December 2016

காதல்..காமம். ( 18.)

"தம்பி..யாரு?"

உள்ளே வந்த வெள்ளிங்கிரியைப் பார்த்து கேட்டார் எஸ்.ஐ.

''நான் இவனோட பிரண்டு சார்"---தங்கராசுவை  கை காட்டினான்.

"நீ எதுக்கு வந்தே? ஒன்னை நாங்க கூப்பிடலியே?" - ஆசனத்தை விட்டு எழுந்து வந்தார்.

"எனக்கு இவங்க மேட்டரு தெரியும் சார். செல்லத்தாயி நல்ல பொம்பள இல்ல  சார்."

"இத சொல்லத்தான் வந்தியா? அந்த பொம்பள கொடுத்திருக்கிற கேசு  கொலை முயற்சி கேசு ! "

"தெரியும் சார்.! என்னிக்கு எங்கய்யா அப்படி செஞ்சார்னு அந்த  பொம்பள ய
சொல்லச்சொல்லுங்க ....?"

ஹெட்கான்ஸ்டபிளை பார்த்தார்   எஸ்.ஐ.. " எந்த தேதியில அக்கரன்ஸ்  நடந்ததா சொல்லிருக்கா? தம்பி கேக்கிறார்ல..சொல்லுங்க ஏட்டய்யா?"

"பிராதுல சொல்லல சார்! சும்மா மொட்டையாத்தான்  எழுதிருக்கு!"

எஸ்.ஐ.யின் கோபம் ஏட்டு மேல திரும்புகிறது.. "என்னய்யா ...கேசு பாக்கிறிங்க. கட்ட பஞ்சாயத்தா ?பிராத புல்லா படிக்கமாட்டிங்களா? உங்கள கவனிக்கிறதா சொல்லிட்டாளா? வடிவேலு சொல்றத வச்சு பாத்தா அவ அப்படிப்பட்ட ஆளு மாதிரிதான் தெரியிது" என்றவரின் ஆத்திரம் இப்போது  செல்லத்தாயி மீது  திரும்பியது.

"என்னடி...வெளையாடப் பாக்கிறியா? பொய்யா புகார் பண்ணி  அந்தாள் கிட்ட என்னத்த எதிர்பாக்கிறே? அதான் வீட்டை எழுதி வச்சிருக்காரே அந்த ஏமாளி!அப்பறம் என்ன..பேசாம ஒன் புருசனோடு  சேந்து வாழவேண்டியதுதானே?"

அதுவரை  வாயில் முந்தானையை வைத்து அமுக்கிக்கொண்டிருந்த செல்லத்தாயின் கண்களில் கண்ணீர் பொங்க ஆரம்பித்தது.

"என் புருஷன் மானஸ்தன். அந்தாளு என்ன ஏத்துக்க மாட்டாரு..இந்தாளும் நிரந்தரமா  இருக்கப்போறதில்ல. பொண்டாட்டி புள்ளன்னு போயிருவாரு. நான் சாகுறவரை எனக்கு என்ன ஆதரவு ? யாரு கொடுப்பா?  ஆதரவு கெடைக்கனும்னா இந்தாளு மூலமா எனக்கு ஒரு பிள்ள வேணும்னுதான்  எஜமான்.  இப்படி  புகார் கொடுத்தேனுங்க!"

"தப்பா நெனச்சிருக்கே..அந்தாள  ஜெயிலுக்கு அனுப்பிட்டா கடேசிவரை ஒனக்கு எப்படி சப்போர்ட் இருக்கும்.?பொய்யா கொடுத்திட்ட. "என்ற  எஸ்.ஐ. ஓரமாக நின்றிருந்த வடிவேலுவை பார்த்தார்.

''உண்மையில ஒரு குடும்பத்தை கெடுத்திருக்கேய்யா!.சாதி திமிரு!,களை எடுக்கிறவதானேன்னுஎளக்காரமா நெனச்சு  கையை வச்சிட்டே! உன்னோட பொம்பள பசிக்கு இவள தின்னிருக்கே! இவளும் எதோ ஆசையில சபலபட்டிருக்கா! தப்புதான். வீட்டை எழுதிகொடுத்திருக்கிறவன்செல்லத்தாயி கடேசிவரை  கண்கலங்காம இருக்கணுங்கிறதுக்கு ஏதாவது பண்ணித்தான் ஆகணும்.! என்ன பண்ண போறே? முடியாது..மாட்ன்னுடே சொன்னா நான் சும்மா விடமாட்டேன்..!"

"ஐயா...வீட்டில கலந்து பேசணும்!" ---வடிவேலுவின் குரலில் பயம் இருந்தது.

"வீட்டை எழுதி கொடுத்தபோது  யாரைய்யா  கன்சல்ட் பண்ணினே? குடும்பத்துக்கு தெரியுமா அது?"

"தெரியாதுங்க!"

"அப்ப எதுக்குய்யா வீட்டில கேட்கணும். இங்கதான் உன் மகன் இருக்கான். சாட்சிக்கு அவனோட பிரண்டு இருக்கான். முடிவ சொல்லிடும்!"

தன்னுடைய மானம் போனதில் ரொம்பவே உடைந்தபோயிருந்த வடிவேலு தனது முடிவை சொன்னார்." மாசம் ஒரு மூட்டை நெல்லு  கொடுத்திர்றேன்."

செல்லத்தாயிக்கும் அது சரி எனப்பட்டது. ஆனாலும் குமுறி அழுகிறாள்.

காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முன்னிலையில் எழுத்து மூலமாக  அந்த சிக்கல் முடித்து வைக்கப்பட்டது.

வெளியில் வந்த தங்கராசு  " நீ வெளங்கமாட்டே" என்று அப்பனுக்கு   சாபம் கொடுத்துவிட்டு நண்பனுடன் புறப்பட்டுப் போய்விட்டான்.

இது உண்மை  நிகழ்வை  அடிப்படையாக வைத்து  புனையப்பட்டது.

Sunday 25 December 2016

காதல்..காமம்.( 17.)

வானம் குமுறிக் கொண்டிருந்தது. பலத்த மழை வருவதற்கான  அறிகுறி.

செல்லத்தாயி போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தாள்.

"ஐயா ,வடிவேலு அவர் பையனுடன் வந்திட்டிருக்காருங்க." கான்ஸ்டபிள் ஸல்யூட் அடித்துவிட்டு அவரின் வேலையைப் பார்க்க போய்விட்டார்.

"வீட்டுல போயி பேயாட்டம் போட்டியா.?" சப்- இன்ஸ்பெக்டர் கேட்டார்.

பதறிப்போனாள் செல்லத்தாயி.

"ஐயோ சாமி...நான் கம்முன்னுதான் இருந்தேன்.அவரு பொண்டாட்டிதான் .மண் அள்ளி தூத்தாத குறையாக வஞ்சு  சாபம் கொடுத்துச்சு!"

"பின்ன... ஆலாத்தி எடுத்து உள்ள வாடின்னா....உன்ன கூப்புடுவாங்க...?" என்று  சப்இன்ஸ்பெக்டர் நக்கலாக சொல்ல ,  அதே சமயத்தில்வடிவேலு  ஸ்டேஷனுக்குள் நுழைந்தார். பின்னாடியே  தங்கராசுவும் வந்தான்.

குமுறிக்கொண்டிருந்த வானம் இடி மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.

"வாங்க..வடிவேலு..." என்ற எஸ்.ஐ. சற்று  கடுமையாகவே விசாரணையை  தொடங்கினார்.

"இந்த பொம்பளை யாருன்னு தெரியிதா?"

"எங்க  வயக்காட்டுல வேலை பார்க்கிற செல்லத்தாயிங்க!"

சிரிக்கிறார் எஸ்.ஐ.

"வேலை பாக்கிறவளா? என்னய்யா சொல்றே. அவ ஒன்னோட  வைப்புன்னு  சொல்றா! வைப்பா? ஒய்பா? சொல்லுமய்யா?"

"..............................!"

"வாயை தொறந்து சொல்லும். அவளும் நீயும் ஒண்ணா படுத்திருந்தப்ப  கொரவளையை நெரிச்சு கொல்ல பாத்ததாக கம்ப்ளெய்ன்ட் கொடுத்திருக்கா. அவ ஒம்மோட வப்பாட்டியாம்.நத்தத்தில இருக்கிற வீட்டை அவ பேருக்கு  எழுதி கொடுத்திருக்கிறீர்.ஆனா வயக்காட்டில வேல பாக்கிறவளா சொல்றீர்?ஒனக்கு இருக்கிற  வசதிக்கு எத்தனை வப்பாட்டியும் வச்சுக்கலாம். ஆனா  அவள ஏன்யா கொலை செய்ய பாத்தே?"

"சத்தியமா  அவள கொல்ல பாக்கலைங்க. பொய் சொல்றா தேவடியா முண்டே!"

"ஏங்கானும்...அந்த பொம்பளைய எந்த உரிமைய்ல அப்படி வய்யிரே? ஒங்கூட  படுத்தவங்கிற திமிர்லதானே ? களை எடுக்க வந்தவ அவ புருசன  விட்டுட்டு  ஒங்கூட வந்திட்டான்னா ....நீ ஆசை காட்டாம அவ்வளவு பெரிய தப்பை  பண்ணிருப்பாளா? சொல்லுய்யா? ஒண்ணை மாதிரி வசதியானவனுங்க ஏழை பாளைகளதான்யா குறி வக்கிறிங்க. களை எடுக்க வந்தவ வசதி இல்லாதவ  அவ புருசனும் அடக்கப்பட்ட சாதிங்கிறதால....காசு பணம் இல்லாதவங்கங்கிற  காரணத்தால ஒண்ணும் பண்ண முடியாதுங்கிற ஒங்க சாதி திமிரை காட்டுறிங்க.அவள கொலை பண்ணிட்டா  பணம் செல்வாக்க பயன் படுத்தி  தப்பிச்சிக்கலாம்கிற எண்ணம்,அவள அனுபவிச்சிதுமில்லாம கொல்லவும் பாத்திருக்கிறே? ஒம்மகன் வளந்து கல்யாணம் பண்றதுக்கு காத்திருக்கான். இந்த வயசில எதுக்குயா எழவெடுத்த காரியத்தை பண்ணிருக்கே?"

"அய்யா...அவ என் தொடுப்புதான். ஒத்துக்கிறேன்.மனசோடு வீட்டை எழுதிக் கொடுத்தவன் எப்படியா கொல்ல மனசு வரும்? அவ வீட்டுக்குப் போயி ரொம்ப நாளாச்சு...பொய்யி சொல்றா. மொட்ட கோபுரத்தான் சாமி மேல சத்தியம் பண்ண சொல்லுங்க..பாண்டி முனி மேல சூடம் அணச்சு சத்தியம் பண்ணுவாளா? கேளுங்க."  ---தலை கவிழ்ந்தபடியே கேட்கிறார் .

"செல்லத்தாயி...சத்தியம் பண்ணச்சொல்றாரு...பண்ணுறியா?" எஸ்.ஐ. அவளிடம் கேட்டார்.

"இனிக்க இனிக்க பேசி என்ன அனுபவிச்சிட்டு இப்ப சத்தியம் பண்ண சொல்றியா?"--செல்லத்தாயி இப்ப வடிவேலுவை பார்த்து நேரடியாக பேச ஆரம்பித்து விட்டாள்." கோழி அடிச்சு போடு...ஒன் கை ருசி அவளுக்கு வராதுன்னு சொல்லி மத்தியானமே வந்து படுத்தியே...அன்னிக்கி ராத்திரி வீட்டுக்குப்  போகாம என் காலடியே கதின்னு அனுபவிச்சியே...அதெல்லாம் பொய்யா? சத்தியம் பண்ணுவியா? நிரோத்து இல்லாம படுக்கிறதுக்கு என்னய்யா  காரணம் சொன்னே? ஞாபகம் இருக்கா? பிச்சிப்பூ வாங்கிட்டு வந்து கொண்டைய்ல வச்சு விட்டுட்டு ....வெக்கத்த விட்டு சொல்றேன்....என் மாருக்கு நடுவுல மொகத்தை வச்சு கொஞ்சுனியே.." என்று அவள் சொல்லியதை கேட்க முடியாமல்  தங்கராசு வெளியே செல்கிறான்.

மழை விட்டபாடில்லை. உள்ளே செல்லத்தாயி வெளிப்படையாக பேச முடியாததை எல்லாம் வெட்கத்தை விட்டு சொல்லிக்கொண்டிருக்கிறாள். வடிவேலுவின் தலை கவிழ்ந்து கிடக்கிறது. மானமோ  ஏலம் போய்க்கொண்டிருக்கிறது.

"செல்லம்...என்ன இருந்தாலும் நீதாண்டி எனக்கு எல்லாமேன்னு ஆயிப்போச்சு.இனி என்னடி தொடுப்பு வைப்புன்னு? என் ராசாத்தி நீதான்னு கண்ணிர் வடிச்சியே இல்லேன்னு சத்யம் செய்வியா...செத்த பெறகு உரிமையோடு வந்து நில்லுடின்னு இந்த மஞ்ச கயிரை கட்டுனியே..பொய்யா?" தாலியை எடுத்துக் காட்டுகிறாள். "இத்தனை மாசம் கழிச்சு  இந்த கயிரை கட்டுறியேன்னு கேட்டதுக்கு 'தப்புத்தாண்டி செல்லம்'னு கொஞ்சுனது மறந்து  போச்சா?" என்று தொடர்ந்து அவள் சொல்லிக்கொண்டே போக எஸ்.ஐ.இடை மறித்தார்.

"ஒங்க ராத்திரி அனுபவத்த சொன்னதெல்லாம் போதும்.சத்தியம் யாரும் பண்ண தேவை இல்ல.கம்ப்ளெயிண்ட் மேட்டருக்கு வாங்க! வடிவேலு ! என்னய்யா சொல்றே? கொரவளையை நெரிச்சியா...ஏன் கொல்ல பாத்தே..சொன்னா மரியாதை ..இல்லன்னா...?"

"சத்தியமா அவள கொல்ல பாக்கல..நெனைக்கவும் இல்ல. அவ பொய் சொல்றா! என் வழியா அவளுக்கு ஒரு பிள்ளை வேணும்னு கேக்கிறா..அதான்  உண்மை. இந்த உண்மை என் வீட்டுக்கும் தெரியும். நான் முடியாதுன்னு சொன்னதுக்குத்தான் என்ன இப்படி சந்தி சிரிக்க வைக்கிறா! அவ கிட்டய கேளுங்க" என்று வடிவேலு சொல்லியபோதுதான் அங்கு வெள்ளிங்கிரி  வருகிறான்.

"ஏண்டா..வெளில நிக்கிற?" என்று தங்கராசுவையும் கூட்டிக்கொண்டு உள்ளே சென்றான்.

மற்றது  அடுத்த வாரம். உண்மை  சம்பவம் இங்கு புனைவுக் கதையாக  தொடர்கிறது.

Sunday 18 December 2016

சசிகலா---சினிமா படத்தின் பெயர்.

இந்தி,தெலுங்கு சினிமாப்பட உலகில் தெளிவான ஆளு ராம் கோபால் வர்மா! காரியவாதி! எது டிரண்டில் இருக்கோ அதை வச்சு பின்னி எடுத்திடுவார். அதனால அவர மத்தவங்களும் பின்னி எடுத்திருக்காங்க. ஆனா  எதை பத்தியும் கவலைப்பட மாட்டார்.பாறை மேல மழை பேஞ்சாலும் இடி  விழுந்தாலும்  யாருக்கு நோகப்போகுது!

இப்ப டிரண்டில் இருப்பது சசிகலாதான். ஜெயலலிதா இல்லாத எடத்தை  இந்த அம்மாதான் பில் அப் பண்ணப்போறாங்கன்னு ஊரு உலகமே பேசிக்கிட்டு இருக்கு.! அதனால சசிகலா பேரை தனது அடுத்த படத்துக்கு வைக்கப்
போறாராம்.

"இது சுத்தமான காதல் படம்"னு சொன்னதுடன் விட்டிருந்தால் கவலைப்பட்டிருக்க மாட்டோம். 'தமிழனின் காதல் கதைன்னு " சொல்லி இருப்பதுதான் கவலையா இருக்கு! உண்மையை சொல்றோம்னு வீரப்பனை கந்தல் கந்தலாக காட்டுன பெரிய மனுசந்தான் இவரு!

தனக்கு ஜெயலலிதாஜி மேல மதிப்பு மரியாதை இருந்தாலும் அதை விட மிக  உயர்வான மதிப்பு மரியாதை சசிகலாஜி மேல இருப்பதாக சொல்லி இருக்கிறார். நல்ல காலம் ஜெயலலிதா மேல பக்தியா இருந்த விசுவாசிகள் இப்ப  தோழி பக்கம் மாறி விட்டதால் யாரும் கண்டிக்கப் போறதில்ல.
சசிகலாவின் கண்கள் வழியாக ஜெயலலிதாவை பார்க்கப்போகிறாராம்.

சிங்கம் இருந்த காட்டில் சிறுநரி ஊளை இடுவதால்  காடு அதிரவா போகுது. ராம்கோபால் ஜி உங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைச்சாலும் அதிசயமில்ல. ஆடுங்க!

Saturday 17 December 2016

காதல்...காமம்.( 16.)

செல்லத்தாயியை பார்த்ததும் மாயக்காளுக்கு எங்கிட்டு இருந்து வந்ததோ  தெரியவில்லை. மூலையில் கிடந்த விளக்குமாரை எடுத்துக்கொண்டு  ''வாடி  என் சக்களாத்தி" என்றபடியே பாய, பதிலுக்கு செல்லத்தாயியும் " அதான்  வந்திருக்கேன்டி கெழட்டு சிறுக்கி " என்று எகிற ,கூட வந்திருந்த போலீஸ்காரர் ஒரு நொடி ஆடிப் போய்விட்டார்.

இப்படி ஒரு சிக்கல் வரும் என அங்கிருந்த மற்றவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.வடிவேலுவினால் பெண்டாட்டியை  மட்டும்தான்  சத்தம் போட முடிந்தது.

"இந்தாளா...சும்மா கெடக்கிறியா...? நீயும் அவளுக்கு சமமா கூத்தடிக்கிறியா? சாதிமான் வீட்டுக்காரி மாதிரியா நடந்துக்கிறே? ரெண்டு சிறுக்கியும் அடிச்சிக்கிட்டு  நாறுங்கடி! ஊரு சிரிக்கட்டும்." என்ற வடிவேலு மகனை பார்த்து சத்தம் போடுகிறார்.

"டேய்..தங்கராசு...உன் ஆத்தாக்காரி ஆடுற ஆட்டத்த பார்த்தில்ல. செத்த நேரத்துக்கு முன்னாடி என்ன பார்த்து என்னென்னமோ கத்துனியே  ..இப்ப  இதுக்கு என்னடா சொல்றே?" என்று ஆத்திரப்பட்டதும் வந்திருந்த போலீஸ்காரருக்கு கோபம் வந்துவிட்டது.

"நிறுத்துங்கய்யா..." என்று சத்தம் போட்டவர்  செல்லத்தாயியை பார்த்தார்.

"ஏம்மா....ஸ்டேஷன்ல வந்து என்ன சொல்லி கம்ப்ளெய்ன்ட் கொடுத்தே?  இங்க வந்து ரகளை பண்றே..சும்மா கெட." என்றவர் வடிவேலுவை பார்த்தார்.

"அய்யா உங்க மேல இந்தம்மா புகார் கொடுத்திருக்கு. இன்ஸ்பெக்டர் ஐயா உங்களை கூட்டிட்டு வர  சொன்னாரு.வந்திங்கன்னா..." என்கிறபோதே குறுக்கிட்டான் தங்கராசு.

"இந்த தட்டுக்கெட்டவ சொன்னான்னு நம்பி ஒரு பெரிய மனுசனை ஸ்டேஷனுக்கு  கூப்பிடுவிங்களா....?"

"தம்பி வார்த்தையை விடாதிங்க. ஒங்க அய்யாவை பத்தி எங்களுக்கும் தெரியும். ஊருல பெரியமனுசன்.ஆனா இந்த பொம்பள கொடுத்திருக்கிற புகாரு சும்மா அடிதடி மாதிரி இல்ல.வெவகாரம் வேற மாதிரி தம்பி! இந்த பொம்பளைய பார்த்ததும் ஒங்கம்மா குதிச்ச குதியை பாத்திங்கல்ல.ஆனா  அந்த பெரிய மனுசனுக்கு இந்த பொம்பளைய பார்த்ததும் ஒரு மாதிரியா போனதையும் பார்த்தேன் தம்பி...நீங்களும் வேணும்னா ஸ்டேசனுக்கு  வாங்க" என்றவர் வடிவேலுவை பார்த்து "அய்யா போகலாமா?" என்றார்.

"அந்த சிறுக்கியோடு வரமுடியாது. அவளை கூட்டிட்டு போங்க. நான் வந்து சேர்றேன்"

ஒரு சிலுப்பு சிலிப்பிவிட்டு " வாரும்   அங்க வச்சுக்கிறேன் கச்சேரிய" என்றபடி செல்லத்தாயி கிளம்பினாள்.

அங்கம்மா கிழவியின்  வாய் இப்பத்தான் திறக்குது. மகனை பார்த்து " யப்பா ..ஊருக்கு பெரியவன! அந்த சிறுக்கி பேசுனத பார்த்தா அவளுக்கு கைய கால  அமுக்கி விட்ருப்பே போலிருக்கு! இல்ல அதுக்கும் மேல தொண்டூழியம்  பண்ணிருக்கியா? அதான்  நத்தம் வீட்டை அவ பேருக்கு மாத்திருக்கே! ஒம் பொண்டாட்டி ஒனக்கு என்ன கொறை வச்சான்னு அந்த கூத்தியா கிட்ட அடங்கி கெடந்தியோ....வயசான காலத்தில இந்த கண்றாவியை எல்லாம் பாக்கணும்னு எனக்கு தலைல எழுதியிருக்கு!" என்று தனது இயலாமையை  சொல்லி புலம்புகிறாள்..

அதுவரை சும்மா இருந்த மாயக்காள் மறுபடியும் பொங்கினாள். " யத்தே...ஒம் பிள்ளைய அவ முந்தாணியில முடிச்சு வைக்கல.கொசுவத்தில சொருகி வச்சுக்கிட்டா.அதான் சொக்கிப் போயிருக்காரு. வயசான காலத்தில கூத்தியா கேட்டிருக்கு. அனுபவிக்கட்டும்"

எல்லாத்தையும் காதில் வாங்கிக் கொண்ட பெரிசு  துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டது.உள்ளுக்குள் நடுக்கம்.செல்லத்தாயி எதை சொல்லி புகார் கொடுத்திருக்காளோ என்கிற பயம்.அதை வெளிக்காட்டாமல் .......

''ராசு ...வாடா.!" மகனை கூப்பிட்டார் .

ஸ்டேஷனில்  செல்லத்தாயி போட்ட நாடகம் அப்பனையும் மகனையும் வெறி கொள்ள வைத்தது. நல்ல சமயத்தில் வெள்ளிங்கிரி வந்து சேர்ந்தான்!

அதை அடுத்த வாரம் பார்க்கலாம்.  இது உண்மை  சம்பவத்தின்  கற்பனை  கலந்த பதிவு, 


Friday 9 December 2016

காதல்...காமம்...( 15. )

முந்தானையினால் கண்ணை துடைத்துக் கொண்டு மூக்கை சிந்தி வழக்கம் போல சுவரில் தடவினாள்.அது அவளது பழக்கம்.தை மாதம் பொங்கலுக்கு  வெள்ளை அடிக்கும்போது அந்த தடயங்கள் அழிந்துவிடும்.

வடிவேலுவுக்கு சற்றுத் தள்ளியே அமர்ந்தாள்.என்னதான் கோபத்தில் பேசினாலும் புருசனுக்கு மரியாதை கொடுக்கத் தவறுவதில்லை.

"மாயி..." சற்று அச்சமுடன் மனைவியை பார்த்தார்.

"ம்ம்"

"ஒங்களுக்கு  தெரியாம ஒரு காரியத்தை பண்ணிட்டேன். செல்லத்தாயிக்கி நத்தத்தில் உள்ள காரை வீட்டை எழுதி வச்சிட்டேன். அது எங்க ஆத்தாளுக்கு  சொந்தமானது. சும்மாதானே கெடக்கிதுன்னு விக்கிறதா சொல்லி  ஆத்தா கிட்ட பொய் சொல்லி பத்திரம்  மாத்தி கொடுத்திட்டேன். அத எங்க ஆத்தா முன்னாடி சொல்லி ....அதுக்கு என்ன தண்டனையோ கொடுங்க. ஏத்துகிறேன்."

"என்ன மனுசன்யா ....அந்த தட்டுவாணி என்னய்யா மருந்து வச்சா? இப்படி  கேடு கேட்ட காரியத்தை பண்ண எப்படிய்யா தைரியம்  வந்தது? ஆத்தாளும்  பேரனும் இப்ப வருவாங்க. அவங்களுக்கு சொல்லும்!"

"தப்புத்தான் மாயி!  கிறுக்குத்தனமா தப்பு பண்ணிட்டேன். என்னை பித்து  பிடிக்க வச்சிட்டாடி! இப்ப பிள்ளைய கொடுக்க வாய்யான்னு  வம்பு பண்றா!
என்ன பண்றதுன்னு தெரியல. தீர்த்துக் கட்டிடலாம்னு .......! ஆத்தாகிட்ட  சொல்லிட்டு  ஆக வேண்டியதை பார்க்கலாம்னுதான்....."

சொல்லி முடிப்பதற்குள் ஆத்தா அங்கம்மாவும் மகன் தங்கராசுவும் வந்து விட்டார்கள்.

"என்னப்பு  எதுக்கு ஆத்தாளை கூட்டிட்டு வரச்சொன்னே? பதறிப்போயி வந்திருக்கேனப்பு!" தூண் ஓரமாக உட்கார்ந்தாள்  "மகமாயி!" என்றபடி!

"இப்பத்தான் ஒன் மருமக கிட்ட சொன்னேன். அவ கிட்டயே கேட்டுக்க. மறுபடியும் சொல்றதுக்கு எனக்கு தைரியம் இல்ல!"

மறுபடியும் தோமுத்ரா கட்டிலில் ஏறி படுத்துவிட்டார்.

மாமியார்,மகனிடம் சொன்னதும் ஏகப்பட்ட  சண்டை! எதையும்  வடிவேலு காதில் வாங்கியதாக இல்லை. அவரை அறியாமலேயே  கண்ணீர் வடிகிறது.

''என்ன பாவம் பண்ணினேனோ இந்தாளுக்கு வந்து பிள்ளையா பெறந்திருக்கேன். கொன்னுட்டு ஜெயிலுக்கு போனாலும் தப்பில்ல. மனுசனா.? மாடுதான் எந்த பசுன்னு பாக்கிறதில்ல. இந்தாளும் அந்த ஜென்மம்தான்! கண்ட எடத்தில வாயை வச்சிருக்காரே! அப்பத்தா ஒன்னையும் ஏமாத்தி ஒன் சொத்தை  கூத்தியாளுக்கு எழுதி வச்சிருக்காரு..என்ன பண்ணலாம்னு சொல்றே?" எரிச்சலில் கத்துகிறான் தங்கராசு.

வந்து சேருகிறான் வெள்ளிங்கிரி!

"என்னடா...தெரு வரைக்கும் சத்தம் கேக்கிது. அப்படி ஏன்னடா குடி முழுகிப் போச்சு. கூத்தியா... சொத்துன்னு  கத்துறே? ஒங்க அய்யா  செல்லத்தாயியை வச்சிருக்காருங்கிறது ஊருக்கே தெரியுமே..அதை இப்ப ஏன் தலையில சொமக்கப்பார்க்கிரே? அவருக்கும் வயசாகிப்போச்சு.விடு கழுதைய! வெளையாடிட்டுப் போகட்டும்!" என்கிறான்.

"வெவரம் தெரியாம பேசாதடா! வீடே தீ பத்தி எரியிது. ஒன்னு இந்தாளு சாவனும். இல்லேன்னா அந்த பன்னாடை சிறுக்கி சாவனும். அதான் எங்க வீட்டு வெவகாரத்துக்கு தீர்வு" கொதிக்கிறான் தங்கராசு.

மற்றவர்கள் என்ன சொல்வது என்பது தெரியாமல்  தங்கராசுவை பார்க்கிறபோதுதான் வாசலில் வந்து நிற்கிறாள் தொடுப்பு செல்லத்தாயி! கூடவே போலீஸ்!

ஏடாகூடமாக ஏதோ நடக்கப்போகிறது என்பது மட்டும் தெரிந்தது!

உண்மைச்சம்பவத்தை  அடிப்படையாகக் கொண்டு  புனையப்படும்  தொடர். இனி அடுத்த வாரம்,



Sunday 4 December 2016

காதல்...காமம். ( 14.)

அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் அப்படி ஒரு சண்டை நடக்கும் என்பதை தங்கராசு எதிர்பார்க்கவில்லை.

 பொன்னியை அவளது வீடு அருகில் விட்டுவிட்டு ஒரு முடிவுடன்தான் வீட்டுக்கு  வந்து கொண்டிருந்தான் .காலடி வைத்ததும் அவனின் காதில்  விழுந்ததது.......

"நாண்டுக்கிட்டு போகவாய்யா!"

அம்மா மாயக்காள் அதிர்ந்து பேசாதவள். இன்னும் சொல்லப்போனால்  புருசனின் முகம் பார்த்துக்கூட பேசமாட்டாள். பொதுவாக அந்தக்காலத்து மனுஷிகள் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.

மகன் வந்தபிறகும் அவர்களது சண்டை தீரவில்லை.

"வயக்காட்டுக்கு போன ஆளு களை புடுங்க வந்தவ மேல ஆசைப்பட்டு கையை வச்சுப்பிட்டே...ஊர்ல நடக்காததா நடந்து போச்சுன்னு நானும்  சும்மா விட்டுட்டேன். சிறுக்கி மவ ஒன்னை சேலைக்குள்ள  சிக்க வச்சுருக்காங்கிறது  இப்பல்ல தெரியிது.! மூணு செண்டு நிலத்த வீடு கட்டிக்கன்னு கொடுத்த பாரு  அப்பவே ஒமரு கெரன்ட காலு  நரம்ப அறுத்து விட்டிருந்தா சவாரி கேட்டிருக்குமா? என்னத்தையா அவகிட்ட காணாதத கண்டுபிட்டே?"

மழையும் இடியும் ஒரு சேர தாக்கியதைப்போல்  கண்ணீரும் வார்த்தைகளும் கொட்டுகிறது.

தங்கராசுக்கு இப்பதான் கோபம் வந்தது.

'' சின்னாத்தா கொரங்கு பாடி போட்டு லவுக்கை போட்டிருக்கு. நீயும் போட்டிருந்தா வேலி தாண்டிருக்கமாட்டார்.இல்லையா அப்பு?"என்றான் அப்பனை பார்த்து.!

"மானங்கெட்ட பயலே..எவடா சின்னாத்தா? மானங்கெட்ட  அந்த மல்லாரியா ஒனக்கு சின்னாத்தா..வெளக்குமாறு பிஞ்சிரும்."

"பின்னே எப்படி சொல்லனும்ரே? இத்தனை நாளும் விட்டுத்தானே வச்சிருந்தே? அப்ப அவளை மொறை வச்சு நான் கூப்பிட்டதில என்ன தப்பு? தெரு நாயி நடு வீடு வரை வந்து நார வச்சிட்டு போயிடுச்சே!"

இப்பத்தான் திருவாயை திறக்கிறார் வடிவேலு. விட்டத்தையும் பார்க்க தைரியம் இல்லை. முகம் பார்த்து பேசவும் ஆண்மை இல்லை. சுவர்தான் அவரது பார்வையை தாங்கியது. ஆங்காங்கே காரை பெயர்ந்திருந்தது  அப்போதுதான் தெரிகிறது.

மெதுவான குரலில் "வச்சுக்கிட்டவன்னாலும் என் ரத்தமும் சேர்ந்திருக்குள்ள?
அவ்வளவு சீக்கிரமா அத்துவிட்ர முடியுமா?" என்றார்.

தங்கராசு அப்பனுக்கு எதிராக சேரை இழுத்துப்போட்டுக்கொண்டான்.

"உன்னால முடியாதுப்பு! ஒங்க ரெண்டு பேரையும் கொன்னு போட்டுட்டு ஆனை விழுந்தான் பள்ளத்தில போட்டுரவா? என்னால முடியும்.!" என்று கால் மேல் காலை போட்டுக்கொண்டவன் ஆத்தாளைப் பார்த்தான்.

"இந்தாத்தா..இந்த மனுஷன் இந்த அளவுக்கு எறங்கி இருக்கார்னா  பெருசா ஏதோ நடந்திருக்கு.கதவை தாப்பா போடு. சங்கருத்திடுறேன்." என்றபடி கோபமுடன் எழுந்தான்.

ஆத்தாளும் அப்பனும் இப்போது ரொம்பவே  பயப்பட்டனர். அதுவரை ஆவேசமாக இருந்தவள் அடங்கிப்போனாள். நிஜமாகவே  செய்து விடுவானோ?

வடிவேலு  ''வாடா வா. வந்து கொல்லுடா! பெத்த ஆத்தாளை  முண்டச்சி ஆக்கிட்டு ஜெயிலுக்கு போயிடு! செல்லத்தாயி வந்து சொத்தை அமுக்கிட்டு போகட்டும்!" என்று சுவரிடமே பேசுகிறார்.

"அப்ப ஒனக்கும் அவளுக்கும் என்ன பிரச்னை? அத சொல்லு. தீர்த்து வைக்கிறோம்." என்கிறான் மகன்.

"அவளோடு வந்து ஒரு மாசம் குடும்பம் நடத்த சொல்றா...வவுத்தில வாரிசு  வளரனுமாம்.அதுக்குத்தான் அம்புட்டு சண்டை போட்டா!"

ஆத்தாளுக்கு முகம் சிவந்து போச்சு.

"பெத்த பிள்ள வளந்து மீசை முளைச்ச ஆம்பளையா நிக்கிறான். அவனை அந்த தட்டுவாணி கிட்ட அனுப்பி வைக்கவா. அவன் தருவான்யா பிள்ளையை! வெக்கமா இல்ல.இத சொல்ல ? அவ புருசன் கிட்ட படுத்து பிள்ள பெத்துக்க முடியாத பொட்டச்சிக்கு நீ பிள்ள வரம் கொடுக்க போறியாக்கும்! மொண்ணை  அருவாமனையில ...." என்றவளுக்கு  அதற்கு மேல் சொல்ல வார்த்தை வரவில்லை. பெத்த பிள்ளை பக்கத்தில நிக்கிறான்.

இப்போது ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாக  " நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ அந்த கேடு கெட்ட எடுபட்டவளை  வெளக்கி விட்டு பஞ்சாயத்து பண்ணிவிட்டுட்டு வீட்டுக்குள்ள காலை வையி. இல்லையா நிரந்தரமா அவ புருசன்கூட நீயும் ஒரு புருசனா  அவ கூடவே இரு.நானும் தாலிய அறுத்திட்டு நிம்மதியா என் பிள்ளைக்கு ஒருத்தியை தேடி கல்யாணம் பண்ணி வச்சிடுறேன்!" என்கிறாள்.

அதுநாள் வரை அவள் ஒருமையில் புருஷனை பேசியதில்லை.

தங்கராசுவுக்கு அம்மாவின் கோபம் புரிந்தது. ஆனால் அதுவே தீர்வாகிவிடுமா? குடும்பத்தின்  மானம் மரியாதை என்ன ஆவது? செல்லத்தாயியை வைத்துக் கொண்டிருப்பது ஊருக்கே தெரியும்.ஆனால்  அது பெருந்தனக்கார வீடுகளில் சகஜம்தான் என அன்றைய கால கட்டத்தில்  அறியப்பட்டிருப்பதால் அது கவுரவமாகவும் கருதப்பட்டது.

வடிவேலு  வேர் இழந்த மரம் மாதிரி பட்டென தரையில் உட்கார்ந்துவிட்டார்.
முழங்கால் மீது கையை வைத்தபடி !

"மாயி...பக்கத்தில வாடி! " என்று மனைவியை பக்கமாக வந்து அமர ஜாடை  காட்டிவிட்டு  மகனை பார்க்கிறார்.

"அப்பத்தாளை கூட்டிட்டு வா!" என்கிறார்.

அங்கம்மா வருங்கால சம்பந்தி செவனம்மாவின்  வீட்டுக்கு போயிருந்தாள்.

இன்னும்  வரும். ஒரு  உண்மை  நிகழ்வை  அடிப்படையாகக்கொண்டு புனையப்படும்  கற்பனை  கதை. 

கருத்துகள்  சொல்லலாமே!