Saturday, 17 December 2016

காதல்...காமம்.( 16.)

செல்லத்தாயியை பார்த்ததும் மாயக்காளுக்கு எங்கிட்டு இருந்து வந்ததோ  தெரியவில்லை. மூலையில் கிடந்த விளக்குமாரை எடுத்துக்கொண்டு  ''வாடி  என் சக்களாத்தி" என்றபடியே பாய, பதிலுக்கு செல்லத்தாயியும் " அதான்  வந்திருக்கேன்டி கெழட்டு சிறுக்கி " என்று எகிற ,கூட வந்திருந்த போலீஸ்காரர் ஒரு நொடி ஆடிப் போய்விட்டார்.

இப்படி ஒரு சிக்கல் வரும் என அங்கிருந்த மற்றவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.வடிவேலுவினால் பெண்டாட்டியை  மட்டும்தான்  சத்தம் போட முடிந்தது.

"இந்தாளா...சும்மா கெடக்கிறியா...? நீயும் அவளுக்கு சமமா கூத்தடிக்கிறியா? சாதிமான் வீட்டுக்காரி மாதிரியா நடந்துக்கிறே? ரெண்டு சிறுக்கியும் அடிச்சிக்கிட்டு  நாறுங்கடி! ஊரு சிரிக்கட்டும்." என்ற வடிவேலு மகனை பார்த்து சத்தம் போடுகிறார்.

"டேய்..தங்கராசு...உன் ஆத்தாக்காரி ஆடுற ஆட்டத்த பார்த்தில்ல. செத்த நேரத்துக்கு முன்னாடி என்ன பார்த்து என்னென்னமோ கத்துனியே  ..இப்ப  இதுக்கு என்னடா சொல்றே?" என்று ஆத்திரப்பட்டதும் வந்திருந்த போலீஸ்காரருக்கு கோபம் வந்துவிட்டது.

"நிறுத்துங்கய்யா..." என்று சத்தம் போட்டவர்  செல்லத்தாயியை பார்த்தார்.

"ஏம்மா....ஸ்டேஷன்ல வந்து என்ன சொல்லி கம்ப்ளெய்ன்ட் கொடுத்தே?  இங்க வந்து ரகளை பண்றே..சும்மா கெட." என்றவர் வடிவேலுவை பார்த்தார்.

"அய்யா உங்க மேல இந்தம்மா புகார் கொடுத்திருக்கு. இன்ஸ்பெக்டர் ஐயா உங்களை கூட்டிட்டு வர  சொன்னாரு.வந்திங்கன்னா..." என்கிறபோதே குறுக்கிட்டான் தங்கராசு.

"இந்த தட்டுக்கெட்டவ சொன்னான்னு நம்பி ஒரு பெரிய மனுசனை ஸ்டேஷனுக்கு  கூப்பிடுவிங்களா....?"

"தம்பி வார்த்தையை விடாதிங்க. ஒங்க அய்யாவை பத்தி எங்களுக்கும் தெரியும். ஊருல பெரியமனுசன்.ஆனா இந்த பொம்பள கொடுத்திருக்கிற புகாரு சும்மா அடிதடி மாதிரி இல்ல.வெவகாரம் வேற மாதிரி தம்பி! இந்த பொம்பளைய பார்த்ததும் ஒங்கம்மா குதிச்ச குதியை பாத்திங்கல்ல.ஆனா  அந்த பெரிய மனுசனுக்கு இந்த பொம்பளைய பார்த்ததும் ஒரு மாதிரியா போனதையும் பார்த்தேன் தம்பி...நீங்களும் வேணும்னா ஸ்டேசனுக்கு  வாங்க" என்றவர் வடிவேலுவை பார்த்து "அய்யா போகலாமா?" என்றார்.

"அந்த சிறுக்கியோடு வரமுடியாது. அவளை கூட்டிட்டு போங்க. நான் வந்து சேர்றேன்"

ஒரு சிலுப்பு சிலிப்பிவிட்டு " வாரும்   அங்க வச்சுக்கிறேன் கச்சேரிய" என்றபடி செல்லத்தாயி கிளம்பினாள்.

அங்கம்மா கிழவியின்  வாய் இப்பத்தான் திறக்குது. மகனை பார்த்து " யப்பா ..ஊருக்கு பெரியவன! அந்த சிறுக்கி பேசுனத பார்த்தா அவளுக்கு கைய கால  அமுக்கி விட்ருப்பே போலிருக்கு! இல்ல அதுக்கும் மேல தொண்டூழியம்  பண்ணிருக்கியா? அதான்  நத்தம் வீட்டை அவ பேருக்கு மாத்திருக்கே! ஒம் பொண்டாட்டி ஒனக்கு என்ன கொறை வச்சான்னு அந்த கூத்தியா கிட்ட அடங்கி கெடந்தியோ....வயசான காலத்தில இந்த கண்றாவியை எல்லாம் பாக்கணும்னு எனக்கு தலைல எழுதியிருக்கு!" என்று தனது இயலாமையை  சொல்லி புலம்புகிறாள்..

அதுவரை சும்மா இருந்த மாயக்காள் மறுபடியும் பொங்கினாள். " யத்தே...ஒம் பிள்ளைய அவ முந்தாணியில முடிச்சு வைக்கல.கொசுவத்தில சொருகி வச்சுக்கிட்டா.அதான் சொக்கிப் போயிருக்காரு. வயசான காலத்தில கூத்தியா கேட்டிருக்கு. அனுபவிக்கட்டும்"

எல்லாத்தையும் காதில் வாங்கிக் கொண்ட பெரிசு  துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டது.உள்ளுக்குள் நடுக்கம்.செல்லத்தாயி எதை சொல்லி புகார் கொடுத்திருக்காளோ என்கிற பயம்.அதை வெளிக்காட்டாமல் .......

''ராசு ...வாடா.!" மகனை கூப்பிட்டார் .

ஸ்டேஷனில்  செல்லத்தாயி போட்ட நாடகம் அப்பனையும் மகனையும் வெறி கொள்ள வைத்தது. நல்ல சமயத்தில் வெள்ளிங்கிரி வந்து சேர்ந்தான்!

அதை அடுத்த வாரம் பார்க்கலாம்.  இது உண்மை  சம்பவத்தின்  கற்பனை  கலந்த பதிவு, 


No comments:

Post a Comment