Saturday, 31 December 2016

காதல்..காமம். ( 18.)

"தம்பி..யாரு?"

உள்ளே வந்த வெள்ளிங்கிரியைப் பார்த்து கேட்டார் எஸ்.ஐ.

''நான் இவனோட பிரண்டு சார்"---தங்கராசுவை  கை காட்டினான்.

"நீ எதுக்கு வந்தே? ஒன்னை நாங்க கூப்பிடலியே?" - ஆசனத்தை விட்டு எழுந்து வந்தார்.

"எனக்கு இவங்க மேட்டரு தெரியும் சார். செல்லத்தாயி நல்ல பொம்பள இல்ல  சார்."

"இத சொல்லத்தான் வந்தியா? அந்த பொம்பள கொடுத்திருக்கிற கேசு  கொலை முயற்சி கேசு ! "

"தெரியும் சார்.! என்னிக்கு எங்கய்யா அப்படி செஞ்சார்னு அந்த  பொம்பள ய
சொல்லச்சொல்லுங்க ....?"

ஹெட்கான்ஸ்டபிளை பார்த்தார்   எஸ்.ஐ.. " எந்த தேதியில அக்கரன்ஸ்  நடந்ததா சொல்லிருக்கா? தம்பி கேக்கிறார்ல..சொல்லுங்க ஏட்டய்யா?"

"பிராதுல சொல்லல சார்! சும்மா மொட்டையாத்தான்  எழுதிருக்கு!"

எஸ்.ஐ.யின் கோபம் ஏட்டு மேல திரும்புகிறது.. "என்னய்யா ...கேசு பாக்கிறிங்க. கட்ட பஞ்சாயத்தா ?பிராத புல்லா படிக்கமாட்டிங்களா? உங்கள கவனிக்கிறதா சொல்லிட்டாளா? வடிவேலு சொல்றத வச்சு பாத்தா அவ அப்படிப்பட்ட ஆளு மாதிரிதான் தெரியிது" என்றவரின் ஆத்திரம் இப்போது  செல்லத்தாயி மீது  திரும்பியது.

"என்னடி...வெளையாடப் பாக்கிறியா? பொய்யா புகார் பண்ணி  அந்தாள் கிட்ட என்னத்த எதிர்பாக்கிறே? அதான் வீட்டை எழுதி வச்சிருக்காரே அந்த ஏமாளி!அப்பறம் என்ன..பேசாம ஒன் புருசனோடு  சேந்து வாழவேண்டியதுதானே?"

அதுவரை  வாயில் முந்தானையை வைத்து அமுக்கிக்கொண்டிருந்த செல்லத்தாயின் கண்களில் கண்ணீர் பொங்க ஆரம்பித்தது.

"என் புருஷன் மானஸ்தன். அந்தாளு என்ன ஏத்துக்க மாட்டாரு..இந்தாளும் நிரந்தரமா  இருக்கப்போறதில்ல. பொண்டாட்டி புள்ளன்னு போயிருவாரு. நான் சாகுறவரை எனக்கு என்ன ஆதரவு ? யாரு கொடுப்பா?  ஆதரவு கெடைக்கனும்னா இந்தாளு மூலமா எனக்கு ஒரு பிள்ள வேணும்னுதான்  எஜமான்.  இப்படி  புகார் கொடுத்தேனுங்க!"

"தப்பா நெனச்சிருக்கே..அந்தாள  ஜெயிலுக்கு அனுப்பிட்டா கடேசிவரை ஒனக்கு எப்படி சப்போர்ட் இருக்கும்.?பொய்யா கொடுத்திட்ட. "என்ற  எஸ்.ஐ. ஓரமாக நின்றிருந்த வடிவேலுவை பார்த்தார்.

''உண்மையில ஒரு குடும்பத்தை கெடுத்திருக்கேய்யா!.சாதி திமிரு!,களை எடுக்கிறவதானேன்னுஎளக்காரமா நெனச்சு  கையை வச்சிட்டே! உன்னோட பொம்பள பசிக்கு இவள தின்னிருக்கே! இவளும் எதோ ஆசையில சபலபட்டிருக்கா! தப்புதான். வீட்டை எழுதிகொடுத்திருக்கிறவன்செல்லத்தாயி கடேசிவரை  கண்கலங்காம இருக்கணுங்கிறதுக்கு ஏதாவது பண்ணித்தான் ஆகணும்.! என்ன பண்ண போறே? முடியாது..மாட்ன்னுடே சொன்னா நான் சும்மா விடமாட்டேன்..!"

"ஐயா...வீட்டில கலந்து பேசணும்!" ---வடிவேலுவின் குரலில் பயம் இருந்தது.

"வீட்டை எழுதி கொடுத்தபோது  யாரைய்யா  கன்சல்ட் பண்ணினே? குடும்பத்துக்கு தெரியுமா அது?"

"தெரியாதுங்க!"

"அப்ப எதுக்குய்யா வீட்டில கேட்கணும். இங்கதான் உன் மகன் இருக்கான். சாட்சிக்கு அவனோட பிரண்டு இருக்கான். முடிவ சொல்லிடும்!"

தன்னுடைய மானம் போனதில் ரொம்பவே உடைந்தபோயிருந்த வடிவேலு தனது முடிவை சொன்னார்." மாசம் ஒரு மூட்டை நெல்லு  கொடுத்திர்றேன்."

செல்லத்தாயிக்கும் அது சரி எனப்பட்டது. ஆனாலும் குமுறி அழுகிறாள்.

காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முன்னிலையில் எழுத்து மூலமாக  அந்த சிக்கல் முடித்து வைக்கப்பட்டது.

வெளியில் வந்த தங்கராசு  " நீ வெளங்கமாட்டே" என்று அப்பனுக்கு   சாபம் கொடுத்துவிட்டு நண்பனுடன் புறப்பட்டுப் போய்விட்டான்.

இது உண்மை  நிகழ்வை  அடிப்படையாக வைத்து  புனையப்பட்டது.

No comments:

Post a Comment