Sunday 30 October 2016

தீப ஆவலி முடிஞ்சு போச்சு....

"என்னங்க.....அதான் தீவாளி முடிஞ்சிருச்சுள்ள...என்னிக்கி ஊருக்கு?"

"என்னடி ..நீயே இப்படி கேக்கிறே? நாம்ப என்ன டேரா போடுறதுக்கா வந்திருக்கோம்..உங்க அம்மா இப்படி கேக்க சொன்னாங்களா? இருக்காதே  என்  மாமியா ரொம்பவும் நல்லவங்களாச்சே? உனக்கு என்னடி பிரச்னை? வீட்டுக்கு கெளம்புறதிலேயே இருக்கே?"

"என் தம்பி காலம்பர இருந்தே தீவாளி தமிழர் பண்டிகை இல்ல.திருமலை நாயக்கர் காலத்திலேயே எறக்குமதி பண்ணுன பண்டிகை.இதை சாக்கா வச்சுக்கிட்டு என்னென்னமோ பண்றாங்க.புது டிரஸ்,தலை தீவாளி,வகை வகையா ஸ்வீட்ஸ்னு வெட்டி செலவுன்னு போன்ல பேசிட்டிருந்தான். எனக்கு  ஒரு மாதிரியா இருக்கு.தலைமுறை தலைமுறையா தலை தீவாளிக்கு புது மாப்பிள்ளை பொண்ணை  கூட்டி வந்து மாமியார் வீட்டுல விருந்து உபசாரமெல்லாம் நடக்கிறதுதானே?"

"உன் தம்பி தமிழ் படிச்சவன்.அதான் நெஜத்த சொல்றான். ஆனா  காலம் காலமா இருக்கிற இதை மாத்த முடியாது. நாளைக்கு கல்யாணம் நடந்து அவன் தலை தீவாளிக்கு மாமனார் வீட்டுக்கு  போவான் பாரு. அப்ப தெரியும்.அவன் வேணாம்னு சொன்னாலும் பெண்டாட்டி சும்மா இருக்க மாட்டா.சண்டைய  இழுத்திடுவா?"

"என்ன தீவாளி நம்ம பண்டிகை இல்லையா?"

"நெஜம்தான்! மதுரையை  ஆண்ட நாயக்கர் நெறைய மாறுதலை செஞ்சிட்டு போயிட்டார்.திருமலை நாயக்கருக்கு முன்பு மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் தேரோட்டம் மாசி மாதம்தான் நடந்திருக்கு.இதை சித்திரை  மாதத்துக்கு மாத்தி நடத்தினார்.மன்னர் சொல்லை யாராவது மீற முடியுமா? நரகாசுரன் கதைக்கும் தீவாளிக்கும் சம்பந்தமே இல்லை.மதுரை நாயக்கர்களாலும்,செஞ்சி,தஞ்சை நாயக்கர்களாலும் புகுத்தப்படதுதான் தீவாளி. தீபம்னா விளக்கு, ஆவலின்னா தொடர்ச்சி, ஒழுங்குன்னு அர்த்தம். தொடர்ச்சியா விளக்கு ஏத்தி வழிபாடு நடத்துறது..இதான் தீபாவலி. இதுதான் தீபாவளின்னு புழக்கத்துக்கு வந்திருக்கு. நியாயமா பாத்தா இது சமணர்கள் கொண்டாடிவந்த விழான்னு பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் எழுதிய 'மதுரை நாயக்கர் வரலாறு' என்கிற ஆராய்ச்சி புத்தகத்தில் தெளிவா சொல்லிருக்கார்.. அதனால உன் தம்பி சொன்னதில் தப்பே இல்லை. அதுக்காக நாம்ப உடனே  ஊருக்கு கெளம்பனும்கிறது அவசியமில்ல."

"என் தம்பி என்ன அர்த்தத்தில சொன்னானோ ....அதெல்லாம் தெரியாது. நான் சொல்றேன் இன்னிக்கி கெளம்பியாகனும்" என்று சொல்லி முடிக்க அடுப்பங்கரையில் இருந்து அம்மாவின் அழைப்பு.

"மாப்ள கிட்ட என்னடி வம்படிக்கிறே....வா மிளகா அரைச்சு கொடு! வெரா மீனுக்கு மிளகாயை அரச்சு
ப் போட்டாதான் ருசியா இருக்கும். வா"

இதை கேட்ட பின்னரும் அவன் ஊருக்கு கிளம்புவானா?

Saturday 22 October 2016

மு.க. அழகிரி பலவீனமா , பலமா?

தென் தமிழகத்தில் தனக்குத்தான் செல்வாக்கு என்கிற  ஒரு தோற்றத்தை  மு.க. அழகிரி உருவாக்கி இருந்தது உண்மைதான்!

அது உரு சிதைந்து போய்விட்டதும் உண்மைதான்!

சலனமற்ற குளத்தில் கல் எறிந்தால் அது எழுப்பும் அலைகள் கரையைத் தாண்டாது என்பதைப் போல ஒரு வட்டத்துக்குள் அடங்கி விட்டார் அழகிரி! குளம் நிரம்பி கரை உடைப்பது என்பது இனி நிகழாது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

மு.க.ஸ்டாலின்தான் எதிர்கால திமுக என்பதைப்போல நாட்டு நிகழ்வுகளும்  இருக்கின்றன. 

கடந்த தேர்தலில் கணிசமான இடங்களைப் பெற்று வலிமையான எதிர்க்கட்சி என்கிற  தகுதியைப் பெறுவதற்கு ஸ்டாலினின் ஓய்வறியாத உழைப்பு  உதவியது என்பதை அனைத்துக் கட்சிகளுமே அறியும்.

கடந்த காலங்களில் கூட்டணியாக இணைந்திருந்த விடுதலை சிறுத்தைகள், பாமக போன்ற கட்சிகளின் ஆதரவு இல்லாத நிலையிலும்  அவர்களையும்  வீழ்த்தியதற்கு  ஸ்டாலினின் வியூகம்தான் காரணம்.

மதிமுக,சிறுத்தைகள்,பொதுவுடமை கட்சிகள் இணைந்து  ஓரணியாக நின்றும் ஒற்றை இலக்கத்தில் கூட  வெற்றி பெற வில்லை.

எதிர்கட்சி என்கிற தகுதியை இழந்ததுடன்  விஜயகாந்தின் தே.மு.தி.க. பல இடங்களில் பொறுப்புத்தொகையை இழந்தது.

அழகிரியின் துணை இல்லாமலேயே  நிகழ்ந்தவைதான் இவையெல்லாம்!

கட்சிப் பணி அழகிரிக்கு வழங்கப்படவில்லை. அவருக்கு பொறுப்புகள்  கொடுக்கப்பட்டிருந்தால் தி.மு.க வை ஆட்சி பீடத்தில் அமர்த்தி இருப்பார் என்பதெல்லாம் காற்றில் வரைந்த சித்திரம் மாதிரிதான்!

திமுக படுதோல்வி அடையும் என்று ஜோதிடம் சொன்னவர் அழகிரி. அவரின் மன நிலை  ஸ்டாலினுக்கு எதிராக இருந்ததே தவிர கழகத்தின் வெற்றியை  குறி வைத்து இருக்கவில்லை. அவருக்கு எப்படி கலைஞர் பொறுப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கமுடியும்?

கழகத்தில் இப்போது அழகிரி இல்லை. அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களும்  கழகம் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்தால்தான் தங்களின் எதிர்காலம் என்பதை உணர்ந்து காத்திருக்கிறார்கள்.

இப்படித்தான் நினைக்கத்தோன்றுகிறது!  

Sunday 16 October 2016

லாரன்ஸ் மாஸ்டருடன் நடிகை மோதினாரா?

பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஊருதான் கோலிவுட்.

இங்கே இடுப்பு வேட்டி அதுவா அவுந்து விழுந்திட்டாலே 'ஐயோ  என்னை கெடுத்துப்பிட்டான்" னு சவுண்டு விடுவாங்க.

எல்லாம் முன் எச்சரிக்கையாம்! அதான் அலர்ட்டா இருக்காங்களாம்.!

இப்படி முன் எச்சரிக்கை முனிம்மாக்கள் நிறைஞ்ச ஊர்ல  நம்ம ஊரு  லாரன்ஸ்  மாஸ்டரை பத்தி  கலவரமான  செய்தி.

பிழைக்கப்போன ஆந்திராவ்ல இவருக்கும் நடிகை கேத்தரின் தெரசாவுக்கும்  விவகாரம். அந்த பெண்ணை டிஸ்மிஸ் பண்ணிட்டார்னு ஒரே பேச்சு!

விவரம் என்ன..விரிவா பார்ப்போம்.

தெலுங்கு மேக ஸ்டார் சிரஞ்சீவியின் 150 வைத்து படம்தான் கைதி நம்பர் 150. இதில ஒரு அயிட்டம் டான்ஸ். பெரிய நடிகை குத்தாட்டம் போட்டால்  படத்துக்கு சிறப்பா இருக்கும்னு படத்தின் தயாரிப்பாளர்  ராம் சரண் நினைக்க சிரஞ்சீவி ஓகே சொல்லிவிட்டார்.

பிரமாண்டமான படம் என்பதால் மகள் சுஷ்மிதாவை  காஸ்ட்யூம் டிசைனர் ஆக நியமித்திருந்தார்கள். . இவர்  வடிவமைத்த  காஸ்டியூம் சரியா இல்லேன்னு கேத்தரின் கேவலமாக  பேச  பிரச்னை வெடிச்சிருக்கு. இதுக்கும் லாரன்ஸ் மாஸ்டருக்கும்  எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. கேத்தரின்  சும்மாவே  சுஷ்மிதாவை  வேலைக்காரி மாதிரிதான் பேசுவாராம். தயாரிப்பாளர் ராம்சரணின் தங்கச்சி, ஹீரோ சிரஞ்சீவியின் மகள் என்கிற  மரியாதை கூட இல்லாமல் கேத்தரின் பேசினால் சகோதரனுக்கு கோபம் வருமா வராதா?

"மாஸ்டர்...வேற ஆளை வச்சு அயிட்டம் டான்சை எடுங்க" என்பது  மேலிடத்து  உத்தரவு.

லாரன்ஸ் மாஸ்டருக்கு வேண்டிய நடிகை  ராய் லட்சுமி!

கவர்ச்சி களைகட்டி கம்பீரமாக நிக்கிது.

இதுதான் உண்மையில் நடந்தது  என்றாலும் கோலிவுட்டில் மாஸ்டர்தான் காரணம் என்று  சொல்லி பார்ட்டி கொடுக்கிறார்கள்.

எதுக்காக பார்ட்டி என்கிற விவஸ்தை வேணாமா சாரு?

Saturday 15 October 2016

காதல்...காமம். ( பகுதி பத்து.)

பதினாறாவது  நாள் விஷேசம் நடந்து முடிந்து வீடு பளிச்சென இருந்தது.

பட்டாசலையில் கிழக்கு பார்த்த சுவரில் படமாக தொங்கிக்கொண்டிருந்தான்  தங்கராசு.பிரேமை சுற்றி சின்ன சைசில் சீரியல் பல்புகள்.

அவனுக்கு அவ்வளவுதான் மரியாதை. இனி வருஷா வருஷம் திதிதான். அமாவாசைக்கு ஏழை எளியவர்களுக்கு சாப்பாடு. ஒரு பத்து பேருக்கு ராமவிலாசில் சாப்பிட சீட்டுகள் கொடுக்கப்பட்டுவிடும்.

வடிவேலு  அந்த காலத்து தோமுத்ரா கட்டிலில் படுத்திருந்தார்.கணவன் மனைவி படுத்துக்கொள்ளலாம்.உருண்டு விழுந்து விடாதபடி பக்கவாட்டுகளில் சன்னல் மாதிரி வேலைப்பாடு. பர்மா தேக்கில் செய்தது. பரம்பரையாக இருந்து வருகிறது. வடிவேலுவின் அய்யா வாங்கிப் போட்டிருந்தார் மகனுக்காக. அவர் அதை தனது மகன் தங்கராசுக்காக.! ஆனால் பாவி மகன் அல்பாயுசில் போய் சேர்ந்து விட்டான்.

அதுநாள் வரை போலீஸ் விசாரணையும் இல்லாமல் இருந்தது.

அவளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் கட்டிலில் தலையணைகளை  அடுக்கிவைத்து சாய்ந்தபடி படுத்திருக்கிறாள் அன்ன மயிலு. கையில் எதோ பழைய புத்தகம்

அத்தைக்காரி அங்கம்மா கிழவி பாசமாக " ஆத்தா அன்னம் ..சித்தே அந்த வெத்தில செல்லபொட்டிய கொண்டாந்து தாரியாத்தா?" என்று கேட்கிறாள்.

சாவி கொடுத்த பொம்மை மாதிரி வந்து போனவள்..மெதுவான குரலில்  ''குடிக்க தண்ணி  கொடுக்கவாத்தே?"

"வேண்டான்டி...மவராசி...ரூம்ல போயி இரு தாயி!"

அன்னத்தின் செவந்த மேனிக்கு கட்டியிருந்த ரோசாப்பூ கலர் சேலை எடுப்பாக இருந்தது.வெள்ளை நிற ரவிக்கைக்குள்  இளமை ஒடுங்கிப் போயிருந்தது. பெருமூச்சு  விடுகிறாள் இப்போது அடிக்கடி! அதற்கு  ஆயிரம் அர்த்தம்.!

"அடி  அங்கு!" வடிவேலுதான் படுத்தபடியே கிழவியிடம் பேச்சு கொடுத்தார்.

''அன்னத்த எத்தன நாளைக்குத்தாண்டி ரூமுக்குள்ளேயே அடச்சு வைக்கிறது. வெளியே, தெருன்னு கூட்டிட்டு போவக்கூடாதா?  கூட்டம் இல்லாத நாளா பாத்து  கோவிலுக்கு கூட்டிட்டு போவலாம்ல? அந்த புள்ளைக்கும் ஒரு மாறுதலா இருக்கட்டுமே?"

"நல்லாத்தான் இருக்கும். அவள யாரு கூட்டிட்டு போவா? நானே  ஆத்தமாட்டாம கெடக்கிறேன்.முனங்காலு முட்டி செத்துப் போயி கெடக்கு!செங்கமலம் வந்த பெறவு அவளோடு  அனுப்பி வைக்கலாம். அவளும் சின்னவதான்.மனசு விட்டு பேசிக்குவாளுக! என்ன சொல்றிக?"

''சரியாத்தான் இருக்கும்.அந்த புள்ளைய கூட்டியாரச்சொல்லு! புலுவனை அனுப்பு.!"

புலுவன் பண்ணையாள். செங்கமலத்தை கட்டிக்க போகிறவன்.

வடிவேலு சொல்லி முடித்ததும் அறைக்குள்ளிருந்த அன்ன மயிலு அங்கு
 வந்தாள்.

'' கோயிலுக்கு வேணாம்தே! வேணும்னா சினிமாவுக்கு போறேன். பாரம் எறங்கின மாதிரி இருக்கும்?"

மாமனாரும் மாமியாரும் ஒரே குரலில்..... ''என்னாத்தா சொல்றே?"

"சினிமாவுக்கு போறேன்னு சொன்னேன்!"

அதுநாள் வரை இல்லாத அழுத்தம் அன்று அவள் குரலில் இருந்தது.

அந்த நேரம் பார்த்துத்தானா இன்ஸ்பெக்டர் ராம்குமார் அங்கு வர வேண்டும்?

சட்டென்று அறைக்குள் போய் கதவை சாத்திக் கொண்டாள் அன்ன மயிலு!

இன்னும் இருக்கிறது. அடுத்த வாரம் சந்திக்கலாம். உண்மை சம்பவத்தை  அடிப்படையாக கொண்டு புனையப்படுகிற தொடர் இது.




Thursday 6 October 2016

காதல்...காமம்..(பகுதி.9.)

செத்தவனை நினைத்து எத்தனை நாட்கள்  அழுது  கொண்டிருக்க முடியும்?
மனதில் வலி இருந்தாலும் அது நாளடைவில் பழகி போய் விடுகிறது.தங்கராசுவும் பெயிலில் வந்து விட்டான்!

 மகளை  பார்ப்பதற்காக சம்பந்தி வீட்டுக்கு வந்திருந்தாள் மாயக்காள்.

அன்னமயிலு இப்போது ஓரளவுக்கு நார்மல்.தனியாக அவளை உட்கார வைத்திருந்தார்கள்.கலைந்த கூந்தல்.பொட்டில்லாத நெற்றி. விபூதி கீற்று சிறிதாக,

அங்கம்மாளை அவள் கண்டு கொள்ளவில்லை.யாரையோ நாலாவது மனுஷியை பார்ப்பது போல் பார்க்க அங்கம்மாள் நொறுங்கிப் போனாள். வந்ததும் சம்பந்தியை கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்தாள். அது ஒரு வழக்கமாக  இருக்கிறது. இன்றும் மதுரையில் பார்க்கலாம். அழுது விட்டுதான்  துக்கம் விசாரிப்பார்கள்.

"அன்னம் எப்படிடி இருக்கே?"-துக்கம் தாங்காமல்தான் கேட்டாள் மாயக்காள்!

"இன்னமும் செத்துப் போகலியான்னு பாக்கிறதுக்கு வந்தியா? பாத்திட்டில்ல! கெளம்பு! மொட்ட மரத்தில எல மொளைக்கப் போறதில்ல.நானும் பூவும் பொட்டுமா  வாழப்போறதில்ல! போ... ! ஒரு நா கூத்தோடு என் வாழ்க்கை  முடிஞ்சிருச்சு. அத நெனச்சால காளி கூத்து ஆடணும்னு வெறியா வருது!"

"எதுக்கும்மா  ஆத்தாள  வய்யிரே! அதுவே வெசனப்பட்டு துக்கத்த எங்க எறக்கிவைக்கிறதுன்னு தெரியாம தெசை தெரியாம இருக்கு! " என்று சம்பந்திக்கு  சாதகமா பேசினாள்.

எகிறுகிறாள் அன்னம்.!

''என் ஆத்தாளுக்கா ஒன்னும்  தெரியாது,? விட்டா இந்த மீனாட்சி பட்டணத்தையே வித்திட்டு வந்திரும்." என்று கத்தியவள் அம்மாவை கண் சிவக்க பார்த்து கேட்கிறாள்.

''பொருத்தம் பாத்துதான் இந்த கலியாணத்த நடத்துனிங்களா? இல்ல நா  ஆம்பள சொகத்துக்கு அலையிறேன்னு நெனச்சு ஓட்டி விட்டுட்டிங்களா? குத்த வச்சு அஞ்சு வருசமா கெடந்தேனே..எவனையாவது  ஏறிட்டிருப்பேனா? அவன் மேல ஆசை இவன் மேல ஆசைன்னு சொல்லிருப்பேனா? எனக்கு  அரிப்பெடுக்குதுன்னு உங்கிட்ட சொன்னேனா? எதுக்கு கல்யாணத்த பண்ணி வச்சு தாலிய  அறுத்து தீயில போட்டிங்க? வெளங்கவே மாட்டிங்க!"

ஆத்திரத்தில் எப்படியெல்லாம் பேசுகிறோம் என்கிற நினைப்பே இல்லாமல்  பேசினாள் அன்னம்.

இரண்டு கிழவிகளும் வாயடைத்து போய்விட்டார்கள். அப்பாவியாக இருந்தவளுக்கு இவ்வளவு ஆங்காரம் எங்கிருந்து வந்தது?

"வாயில வந்தத பேசாதே அன்னம்! பெத்த பொண்ணுக்கு யாராவது அரளி வெதைய அரைச்சு கொடுப்பாங்களாம்மா! பேரன் பேத்திகள பாக்கிற ஆசையில பத்துப் பொருத்தமும் பாத்துத்தான்மா கலியாணத்த பண்ணி வெச்சோம்.வெளாம்பட்டி சோசியன்ல இருந்து  திருச்சி சோசியன் வரை  பார்த்தோம். ஒருத்தன் கூட கொறை சொல்லல.நல்லாத்தான் சொன்னாய்ங்க
எவன் வச்ச கொள்ளியோ என் வீட்டு கூரையில விழுந்திருக்கு. விதிடி, அன்னம்  விதி! எங்களை கொறை சொல்லாதே!" என்று குரலெடுத்து ஒப்பாரி  வைக்கிறாள்  மாயக்காள்!

இன்னும் இருக்கிறது. உண்மைச்சம்பவத்தை  அடிப்படையாக வைத்து புனையப்படும் சிறு தொடர்.

தவறு இருந்தால் சொல்லுங்கள் அய்யாமாரே!

அடுத்தவாரம் சந்திப்போம். . 

Sunday 2 October 2016

காதல்...காமம் !( பகுதி எட்டு )

செங்கமலம்  அங்கு வந்த போது எழவு வீட்டின்  அட்மாஸ்பியர் சற்று  மாறி இருந்தது. மாயக்காளின் சோகம் சற்று குறைந்திருந்தது. குளித்து முழுகி  சேலை மாற்றியிருந்தாள்.

"ஆத்தா...அழுது பொலம்பி இனி ஆகப்போறது எதுவுமில்ல.இனி நடக்கப் போறததான் பாக்கணும்! அன்னமயிலு  என்னென்ன  நெனச்சிட்டிருந்தாளோ
பாவி மகன் இப்படி போயி சேந்துட்டானே...என்ன கொறைய கண்டானாம் அந்த  சொரண கெட்ட பய! .விடுத்தா..அவன் கொடுத்து வச்சது அவ்வளவுதான்
.நம்ம பொண்ணோட வாழறதுக்கு அவனுக்கு கொடுத்து வைக்கல." என்றபடி  மாயக்காளை நெருங்குகிறாள் செங்கமலம்.!

இவளின் நோக்கம் அவளுக்கு தெரியாமல்  வெகுளியாக பேசுகிறாள் மாயக்காள்.

"அன்னத்தை பாத்தியா...அவ எப்படி இருக்கா.? பெத்த மக அத்துப் போட்டுட்டு  அங்க கெடக்கிறா ...சாந்தி கழிச்ச சந்தோசத்தை  பெத்த சிறுக்கி  அனுபவிக்க முடியலையேடி! செக்குல சிக்குன கை மாதிரி ஆகிப் போச்சே எங்க பொழப்பு.!அவ மொகத்த பாக்கிற  தைரியம் இல்ல. சந்தோசமா என் கிட்டவந்து  வெக்கப்படவேண்டிய மகளை    விதி எந்த கோலத்தில விட்ருக்கு! பாத்தியாடி பய மகளே!" என்று செங்கமலத்தை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

"சரித்தா...அழுது பொறண்டாலும் மாண்டார் திரும்பி வருவாரோன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. நடக்கப் போறத நல்லபடியா பாத்துக்கணும் அதான் பெரியவங்க .கடமை .! "

பேசிக்கொண்டே வந்த செங்கமலம் இப்போது நைசாக கொக்கி போடுகிறாள்.

"அந்த ராத்திரியே நீ  இந்த வீட்டுக்கு வந்திருக்கக்கூடாது . அங்கேயே இருந்திருக்கணும் .நீ அங்கே இருந்திருந்தா  அந்த பயல வெளியே விட்ருக்கமாட்டியே!"

மாயக்காள் பெருமூச்சு விட்டபடியே "எந்த சிறுக்கிடி அப்படி  சொன்னா  நான் இங்கே வந்துட்டேன்னு? மச்சுப்படி ஓரமாதான் படுத்துக் கெடந்தேன்.என் மாமியா கோவமா வந்து மிதிச்சபெறகுதானே கண்ணே  முழிச்சேன்.அப்புறமாதான்  மாப்ளைய காணோம்கிறது  தெரிஞ்சிது. மனுசங்களை பாக்கிறத்துக்கு  வெக்கப்பட்டுக்கிட்டு எங்கேயாவது  இருப்பான்னு  வெள்ளந்தியா நெனச்சிட்டோம். இப்படி விட்டுட்டு போவான் பாவிப்பயன்னு யாருடி  நெனச்சா? எங்கேயோ  விழுக வேண்டிய இடி என் வீட்டு விட்டத்திலேயே  விழுந்திருச்சு!"என்றாள் விம்மலை விழுங்கியபடி!

இப்போது மெதுவான குரலில்  செங்கமலம்.."ஏத்தா..அது நல்லபடியா முடிஞ்சிருச்சுன்னு சந்தோஷப்படுறதா துக்கப்படுறதான்னு தெரியலியே ! நீங்கல்லாம் என்ன நெனக்கிறிங்கன்னும் தெரியல."

முதலிரவு பற்றி அவள் கேட்கிறாள் என்பது  அம்மாக்காரிக்கு  தெரியாமல்  போகுமா?

அவள் சாதாரணமாக 'அந்த எழவெல்லாம் நல்லாத்தான் நடந்திருக்கு.ஆனா  அன்னம்தான் சந்தோஷமா இல்ல."என்கிறாள் வெகுளியாக!

"செத்துப்போன பயலுக்கு எதுக்குடி பொண்டாட்டி சொகம்! போறபோக்குல  ஏறிட்டு போகலாம் காசா பணமான்னு நெனச்சிட்டான் காவாலிப் பய"! என கோபத்தை கொட்டினாள் மாயக்காள்! .

செங்கமலத்துக்கு  தெரியவேண்டியது  தெரிந்து விட்டது.

சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு கிளம்பிவிட்டாள் .

மற்றவை  அடுத்தவாரம்.