Saturday 27 January 2018

ஞானப்பார்வை. ஆர்.கே.நகர்.2

பாபு என்றால் யாருக்கும் தெரியாது. சிங்காரவேலன் காம்பவுண்டு ஆட்களும்  தடுமாறித்தான் போவார்கள். வாஷிங் மெஷின் என்று சொன்னால்போதும்  பச்சா வாண்டுகளும் கைப்பிடித்து கரெக்டாக வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டு விடுவார்கள். ஆர்.கே.நகரில் குக்கரை விட வாஷிங் மெஷின்தான்  பேமஸ். பாபு  சிறிய அளவில் சலவைக் கம்பெனி நடத்துகிறான்.

மெயின் தொழில் சலவை செய்வது கிளைத் தொழில் ரசிகர் மன்றம்.ராஜேஷ் காந்தின் தீவிர ரசிகன்.அவரது படம் வெளிவரும் நாளன்று எல்லோருக்கும்  இலவசமாக சட்டை மட்டும் அயர்ன் பண்ணித் தருவான். அப்படி ஒரு நாளில்தான் ஷீலா அவனுக்கு அறிமுகமாகிறாள்.

" இந்த பிளவுசை அயர்ன் பண்ணிக் கொடுங்க!" என்று காட்டன் பிளவுசை கடைப்பையனிடம்  ஷீலா கொடுக்க கடைக்குள் பாபு வேறு வேலைகளில் இருந்தான்.அவளைக் கவனிக்கவில்லை.

"இருபது ரூபா கொடுங்க!" கடைப்பையன் கேட்டான்.

" இன்னிக்கி தலைவர் படம் ரிலிஸ் பா! சர்ட் , பிளவுஸ்க்கு பிரீ அயர்னு சொன்னாங்களே?"

"அது ஜென்ட்ஸ்க்கு மட்டும்தான்.லேடீஸ்க்கு இல்ல?"

"ஏன் நாங்க பேன்ஸ்சா இருக்கமாட்டமா..மகளிர் அணிதான்பா தலைவர்க்கு சக்சஸ் கொடுக்கிற அணி.!நாங்களும் விசில் அடிப்போம்.குத்தாட்டம் போடுவோம்.போட்டா  பசங்களே மெர்சல் ஆகிடுவானுங்க.தெரியும்ல."

"என்னத்த போடுவீங்க பீரா பிராந்தியா?"

"என்ன நெக்கலா...? மவனே நாறிடுவே!"என்ற ஷீலா கடையில் இருந்த விளம்பர போர்டை ஆத்திரமுடன் தள்ளிவிட,கடைப்பையனுக்கு கோபம்!

 "இந்த வெட்டி வெவகாரம்லாம் இங்க வேணாம்.வேறெங்கேயாவது போயி வெச்சுக்க"என்றபடியே பிளவுசை வீசி ஏறிய அது கடைக்கு  வந்த ரசிகனின் முகத்தில் போய் விழுந்தது.அவனும் கலாய்ப்பதில் கில்லாடி. ரசிகர் மன்றத்தலைவரின் கடையில் ஒருத்தி ரகளை செய்கிறாள் என்றால் அவன் எப்படி சும்மா இருப்பான்?

"என்னடா இப்படி கப்படிக்கிது. பாடி ஸ்பிரே, பெர்ப்யூம்லாம்  அடிக்க மாட்டா ளுக  போலிருக்கே? " என்று அவனும் தூக்கி வீச தரையில் விழுகிறது பிளவுஸ்.

ஷீலாவுக்கு செம கோபம். மொத்த தொண்டையையும் திறந்து கத்துகிறாள்.

"காட்டுப்பயல்களே!கம்மினாட்டிகளா...ப்ரீயா அயர்ன் பண்ணுவோம்னு சொல்லி ஏமாத்துறாய்ங்க.தலைவர் பேரை சொல்லி டிக்கெட் வாங்கி வித்து காசு சேக்கிற பிராடு பயலுக."என்கிறபோதே கூட்டம் சேர்ந்து விட்டது. பதட்டமுடன் கடையை விட்டு வெளியில் வந்த பாபு "என்னம்மா என்ன பிரச்னை பண்ற?"என்றான். டி சர்ட்டில்  தலைவர் ராஜேஷ் காந்த்  படம்.

"யார்யா பிரச்னை பண்றது? ஆம்பளன்னா ப்ரீ  பொம்பளன்னா காசுன்னு கேக்கிற கசமாலம்லாம் தலைவருக்கு விழா கொண்டாடுனா வெளங்குமா? முடியாதுன்னா மரியாதையா பிளவுஸ கைல கொடுக்க வேண்டியதுதானே ..அந்த நாதாரி ஏன்யா தரைய்ல தூக்கி வீசுனான்? இன்னொருத்தனுக்கு 'கப்' அடிக்கிதாம்.மழை பேஞ்சாதான் குளிப்பான் போலிருக்கு!அந்த வெங்காயம் சொல்றான் பெர்ப்யும் அடிக்கலியாம்! சாணிப்பய!"

"தா...தா.  நிறுத்தும்மா ..அடிக்கிட்டே போறே?   லேடீஸ்க்கு பிளவுஸ் தேச்சுக்கொடுக்கிறதில எங்களுக்கு நஷ்டம் வந்திறப்போறதில்ல. ஆனா  அவங்க வீட்டுல அத விரும்ப மாட்டாங்க.அதுலயும் இப்ப யாரும்மா பிளவுஸ் போடுரா? "

"யோவ்?"

"சுடிதார்னு சொல்ல வந்தேன்மா!ஒரு சுடிதார் அயர்ன் பண்றதுக்குள்ள நாலு சட்டை அயர்ன் பண்ணிடுவோம்.இப்ப புரியிதா?"

''இந்த ஈர வெங்காயத்த அப்பவே சொல்லிருக்கலாம்ல?"

"தப்புத்தான்.அந்த பையனை அடக்கி வைக்கிறேன்.அவனைத்தான் அடக்க முடியும்!"

"அப்ப என்னை அடக்க என் புருசன் வருவான்னு இன்டைரக்டா சொல்றியா?"

"அப்படி சொல்லலம்மா..வம்பு இழுக்காதே ..மன்னிச்சிடு"

"அது!" என்றபடியே அங்கிருந்து கிளம்பினாள் ஷீலா,

-----இன்னும் வரும்.



Saturday 20 January 2018

ஞானப் பார்வை. ஆர்.கே.நகர்.1

ராதாகிருஷ்ணன் நகர்.சென்னையின் அடர்த்தியான பகுதி. பஞ்சை பராரியில்  இருந்து கோடிகளில் கொழிக்கும் கோமான்கள் வரை இங்கு  வாழ்கிறார்கள். கோபம் வந்தால் கொலைதான் தீர்வு என்கிற நம்பிக்கையுடன் வாழ்கிற 'குடிமகன்'கள் கோலோச்சும் அரசியலுக்கும் பஞ்சம் இல்லை.. மாநகரத்தின் மரியாதையான 'காதலர்கள், பக்தர்கள்,ஓடிவந்தவர்கள்,ஓடிப்போக காத்திருப்பவர்கள்,என பலப் பல அடையாளங்கள்.

" என்ன இன்னிக்கி 'ப்ரீ'யா?"

"இன்னாய்யா,நெக்கலா? காசு இருந்தா எப்பவுமே உள்ளாற வா. இல்லேன்னா  பீச்சாண்ட போ.பிரியாமே ..ப் ரீ.?"

"என்ன ஜக்கு இப்படி கோச்சுக்கிரே...சும்மா இர்ந்தேன்னா மாபலிபுரம்  போலாமேன்னுதான் கேட்டேன்.நீ என்ன பொடவையா, ஆடித் தள்ளுபடிலே  வாங்கறதுக்கு.!ஒந்தொளிலுக்கு இவ்ளோ  கோவம் வேணாம் புள்ளே!"

"சாரிய்யா! குஜாலா பேசிட்டு வர்றவனுக செல பேமானிங்க அவுத்ததும்  கத்திய காட்டிடறானுங்க.என்னோட வலி எனக்குத்தான்யா   தெரியும்! விக்ஸ்  தேச்சு போற நோவில்ல சாரு!"

இப்படி சில உரையாடல்.

இன்னும் சில வீட்டுக்குள்...

"இன்னிக்கி வெளில போலாமா? அஞ்சு நாள் கிச்சன்.ஒருநாள் வெள்ளி மட்டும்  அத்தை கிச்சனுக்குள் விட மாட்டாங்க! சென்னை எப்படி இருக்குன்றத இந்த ஞாயித்துக்கெழமையாவது காட்டுங்களேன்?"

"பாவம்தான் சரசு! பூட்டிக்கெடக்கிற கடைய பாத்து என்ன தெரிஞ்சிக்கப் போற? எனக்கும் ஒன்னோட சுத்தனும்கிற ஆசை இருக்காதா? கோவிலுக்கு போகணும்.காம்ப்ளக்ஸ்  தியேட்டர் போகணும்.பீச் போகணும்னு எவ்வளவோ  இருக்கு சரசு.( பெருமூச்சு.) துணிக்கடையில் கிளார்க் வேல.!என்னால என்னம்மா பண்ணமுடியும்? ஞாயித்துக்கெழமை ராத்திரி சந்தோசம் மட்டும் வாழ்க்கைன்னு நெனைக்கிற ஆம்பள நானில்ல?"

"என்னங்க .. ? நா அப்டி நெனக்கிறவளா? அருப்புக்கோட்டைய்ல பெறந்தவ இன்னிக்கி பட்டணத்து மருமக.விடுங்க.இன்னொரு நாளைக்கு சினிமாவுக்கே  போலாம். இன்னிக்கி டி.வி.போதும்!"

மற்றொரு குடும்பம். அல்ட்ரா மாடல்.கணவன் ஒரு ஆபிசில்.மனைவி மற்றொரு ஆபிசில். லஞ்ச் டைமில் போனில் உரையாடல்!

"என்னடி ரம்யா! இன்னிக்கி மாம்யா மருமக 'பைட்'டா? லஞ்ச் படு சொதப்பல். காரம் தூக்கல்! அம்மாவ அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயேன்?"

"இத உங்க ஆத்தா கிட்ட நீ சொல்லேன்? இன்னிக்கி காலம்பர என நடந்தது தெரியுமா? உங்கிட்ட சொல்லலாம்னுதான் நெனச்சேன் ! பட் ஆபீஸ் கெளம்பற நேரத்தில கரச்சல் வேணாமேன்னுதான் விட்டுட்டேன் .நைட் ஒரு மணி வரை  ஏன் கூத்தடிக்கிறிங்க,அப்டி  அடிச்சும் என்ன கெயின்னு கேட்கிறாங்க.?என்ன டைப் டா உங்கம்மா?"

"என்ன ரம்யா சொல்ற? இப்ப பக்கத்தில யாரும் இல்லியே?"

"நா  தனியா வந்துதான் பேசறேன்?  படுக்கிறத பத்தி உங்கம்மா என்னடா கொஸ்டின்  பண்றது ? இங்க கிள்ளுனான் அங்க கிஸ் பண்ணுனான்னு சொல்லனுமா ?ஏன் கூத்தடிக்கிறேன்னு கெழவி கேக்கிறா......பிள்ள எப்ப பெத்துக்கறதுன்னு எனக்கு தெரியாதா?.

"பொங்காதே ரம்யா...கூல்! அம்மாட்ட நான் பேசறேன்."

இப்படியும் சில..மேலும் பல.ஆனாலும் நம் கதை இது அல்ல.

அதோ தெரிகிறதே ஒரு காம்பவுண்டு..அந்த காம்பவுண்டுக்கு பொதுப் பெயர் உண்டு.சிங்காரவேலன் காம்பவுண்டு. அந்த காம்பவுண்டில்தான் கதை தொடங்குகிறது.
-------இன்னும் வரும்.


Monday 15 January 2018

ரஜினியை வளைக்கிறது பாஜக.!

சட்டசபை தேர்தல்  வரும்போது கட்சியை ஆரம்பிப்பேன்  என உத்தேசமாக  சொன்னதற்கே தமிழ்நாட்டில் பலர் தலைகீழாக நடக்க ஆரம்பித்து விட்டார்கள். அடுத்த சி.எம். தலைவர்தான் என்கிற அளவுக்கு ரசிகர்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடிவிட்டார்கள்.ஆனால்
பஸ்கள் ஓடாமல் தமிழ்நாட்டு மக்கள் மூச்சு முட்டிக்கிடந்தபோது ரஜினி வாயை திறக்கவில்லை. விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதல்வர் சொல்லிவிட்டார்.இதற்கும் வாயைத் திறக்கவில்லை. இப்படி தமிழ்நாட்டு பிரச்னை பற்றி எதுவுமே சொல்லாமல்  மன்றத்தை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால்
அவருடைய இரண்டு படங்களையும்  ஓட வைப்பதற்குத்தான் அரசியல் பிரவேசம் என சிலர் சொல்லி வருவதை  குருமூர்த்தியின் கூற்று பொய்யாக்குகிறது.ரஜினியின் பிரவேசம் உறுதியாக நடக்கும் என நம்பலாம்.
      ரஜினியின் அரசியல் பிரவேச ஐடியாவுக்கு மூளையே மோடி தான் என்பது  தற்போது வெட்ட வெளிச்சம் ஆகிஇருக்கிறது .பிஜேபியின் மதவாத அரசியலுக்கு  கவுரவ தூதராக இருக்கப்போகிறார் ரஜினி என்பது உண்மையாகிவிடும் போலிருக்கிறது.
வரப்போகிற தேர்தலில் ரஜினியுடன் பிஜேபி கூட்டு சேரவேண்டும் என்று குருமூர்த்தி சொல்லியிருக்கிறார்.
அப்படியானால் அதிமுக மேலும் பிளவு அடையப்போகிறது.அவர்களுக்கு எதிரான வழக்குகள் வலு பெறப்போகிறது என்றுயூகிக்கலாம்இப்படி பாஜக தங்களை பலவீனப்படுத்தினால் பிளவுண்ட அதிமுக ஓரணியில் நிற்க வேண்டிய நிலைவரும் என்பதாகவும்  கருதலாம்
.

Thursday 4 January 2018

ரஜினி யார் ?தோழரா, உ.பி .யா,ர.ர.வா, ஜி யா ?

நடிகர் ரஜினி அரசியல்வாதியாகி விட்டார்.அதுவும் ஆன்மீக அரசியல்வாதி.! உலகத்திலே  இப்படிப்பட்ட அரசியலும்  இருக்குய்யான்னு யாரும்சொல்லி இருக்காங்களான்னும்தெரியல.விவரமான ஆளு யாராவது சொன்னாத்தான்  இந்த வெங்கனத்திப் பயலுக்கு புரியும்?

காலத்தை ஆள்கிற அறிவுதான்டா ஆன்மீகம்னு ஒரு பெரிசு சொல்லுச்சு. "அட..முண்டம்,  அறிவும் ஆன்மீகமும் மனுசனுக்குத் தேவை."ன்னு  இன்னொரு பெரிசு சொன்னுச்சு.

"வெளங்கல அய்யா..வெவரமா சொல்லுங்க"ன்னேன். "ஆத்து வெள்ளம்   கரையத் தாண்டாம இருக்கிறதுக்கு சொவரு கட்டுனா அது அறிவு. அந்த வெள்ளத்தில மாட்டிக்கிட்டா நீந்த கத்துக்கிறது ஆன்மிகம்"னு சொன்னாரு.
புரிஞ்சது. ஆனா ஆன்மீக அரசியல்னா?

"டே..வெட்டிப்பயலே! ஆர்.கே.நகர்ல லம்ப்பா ஆறாயிரம் கொடுத்து ஓட்டு  வாங்குனாஅது கெட்ட அரசியல். ஜெயிச்சதும் பத்தாயிரம் தரேன். அதுக்கு இந்த இருபது ரூபாய் தாளை டோக்கனா வெச்சுக்கன்னு நம்பர் எழுதிக் கொடுத்தா அது ஏமாத்துற கேடு கெட்ட அரசியல். இது ரெண்டும் இல்லாம உன்கிட்டய காசு வாங்கிட்டு உனக்கு நாமம் போட்டா ஆன்மீக அரசியல்."

"சுத்தமா புரியலிங்க?"

"ரஜினி படத்துக்கு நூத்தியிருபது ரூபா டிக்கட்னா நீ ஆயிரம் ரூபா வரை  கொடுத்து சிரிச்சிட்டு வரேல்ல.அதான் ஆன்மிக அரசியல்.இப்ப புரியிதா?"

"புரியுதுங்க. ரசிகர்கள்லாம் காவலர்கள்னு சொன்னாரே அப்படின்னா வாட்ச்மேன் மாதிரியா? இப்ப செங்கொடி கட்சிக்காரங்க தோழர்னு சொல்றாங்க. திமுகவில உடன்பிறப்பே, அதிமுகவில ரத்தத்தின் ரத்தமே. காங்கிரஸ்ல தொண்டரே.பிஜேபியில ஜி. ரஜினி கட்சியிலே என்ன சொல்வாங்க?"

"இவங்களும் ஜி தான்.பிஜேபியின் பிராஞ்ச் ஆபீஸ்தானே. ஜி போட்டுக் கூப்பிட்டா வித்தியாசமா இருக்குல்ல?"

"நல்லது ஜி!"