Saturday, 15 October 2016

காதல்...காமம். ( பகுதி பத்து.)

பதினாறாவது  நாள் விஷேசம் நடந்து முடிந்து வீடு பளிச்சென இருந்தது.

பட்டாசலையில் கிழக்கு பார்த்த சுவரில் படமாக தொங்கிக்கொண்டிருந்தான்  தங்கராசு.பிரேமை சுற்றி சின்ன சைசில் சீரியல் பல்புகள்.

அவனுக்கு அவ்வளவுதான் மரியாதை. இனி வருஷா வருஷம் திதிதான். அமாவாசைக்கு ஏழை எளியவர்களுக்கு சாப்பாடு. ஒரு பத்து பேருக்கு ராமவிலாசில் சாப்பிட சீட்டுகள் கொடுக்கப்பட்டுவிடும்.

வடிவேலு  அந்த காலத்து தோமுத்ரா கட்டிலில் படுத்திருந்தார்.கணவன் மனைவி படுத்துக்கொள்ளலாம்.உருண்டு விழுந்து விடாதபடி பக்கவாட்டுகளில் சன்னல் மாதிரி வேலைப்பாடு. பர்மா தேக்கில் செய்தது. பரம்பரையாக இருந்து வருகிறது. வடிவேலுவின் அய்யா வாங்கிப் போட்டிருந்தார் மகனுக்காக. அவர் அதை தனது மகன் தங்கராசுக்காக.! ஆனால் பாவி மகன் அல்பாயுசில் போய் சேர்ந்து விட்டான்.

அதுநாள் வரை போலீஸ் விசாரணையும் இல்லாமல் இருந்தது.

அவளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் கட்டிலில் தலையணைகளை  அடுக்கிவைத்து சாய்ந்தபடி படுத்திருக்கிறாள் அன்ன மயிலு. கையில் எதோ பழைய புத்தகம்

அத்தைக்காரி அங்கம்மா கிழவி பாசமாக " ஆத்தா அன்னம் ..சித்தே அந்த வெத்தில செல்லபொட்டிய கொண்டாந்து தாரியாத்தா?" என்று கேட்கிறாள்.

சாவி கொடுத்த பொம்மை மாதிரி வந்து போனவள்..மெதுவான குரலில்  ''குடிக்க தண்ணி  கொடுக்கவாத்தே?"

"வேண்டான்டி...மவராசி...ரூம்ல போயி இரு தாயி!"

அன்னத்தின் செவந்த மேனிக்கு கட்டியிருந்த ரோசாப்பூ கலர் சேலை எடுப்பாக இருந்தது.வெள்ளை நிற ரவிக்கைக்குள்  இளமை ஒடுங்கிப் போயிருந்தது. பெருமூச்சு  விடுகிறாள் இப்போது அடிக்கடி! அதற்கு  ஆயிரம் அர்த்தம்.!

"அடி  அங்கு!" வடிவேலுதான் படுத்தபடியே கிழவியிடம் பேச்சு கொடுத்தார்.

''அன்னத்த எத்தன நாளைக்குத்தாண்டி ரூமுக்குள்ளேயே அடச்சு வைக்கிறது. வெளியே, தெருன்னு கூட்டிட்டு போவக்கூடாதா?  கூட்டம் இல்லாத நாளா பாத்து  கோவிலுக்கு கூட்டிட்டு போவலாம்ல? அந்த புள்ளைக்கும் ஒரு மாறுதலா இருக்கட்டுமே?"

"நல்லாத்தான் இருக்கும். அவள யாரு கூட்டிட்டு போவா? நானே  ஆத்தமாட்டாம கெடக்கிறேன்.முனங்காலு முட்டி செத்துப் போயி கெடக்கு!செங்கமலம் வந்த பெறவு அவளோடு  அனுப்பி வைக்கலாம். அவளும் சின்னவதான்.மனசு விட்டு பேசிக்குவாளுக! என்ன சொல்றிக?"

''சரியாத்தான் இருக்கும்.அந்த புள்ளைய கூட்டியாரச்சொல்லு! புலுவனை அனுப்பு.!"

புலுவன் பண்ணையாள். செங்கமலத்தை கட்டிக்க போகிறவன்.

வடிவேலு சொல்லி முடித்ததும் அறைக்குள்ளிருந்த அன்ன மயிலு அங்கு
 வந்தாள்.

'' கோயிலுக்கு வேணாம்தே! வேணும்னா சினிமாவுக்கு போறேன். பாரம் எறங்கின மாதிரி இருக்கும்?"

மாமனாரும் மாமியாரும் ஒரே குரலில்..... ''என்னாத்தா சொல்றே?"

"சினிமாவுக்கு போறேன்னு சொன்னேன்!"

அதுநாள் வரை இல்லாத அழுத்தம் அன்று அவள் குரலில் இருந்தது.

அந்த நேரம் பார்த்துத்தானா இன்ஸ்பெக்டர் ராம்குமார் அங்கு வர வேண்டும்?

சட்டென்று அறைக்குள் போய் கதவை சாத்திக் கொண்டாள் அன்ன மயிலு!

இன்னும் இருக்கிறது. அடுத்த வாரம் சந்திக்கலாம். உண்மை சம்பவத்தை  அடிப்படையாக கொண்டு புனையப்படுகிற தொடர் இது.




No comments:

Post a Comment