Saturday, 22 October 2016

மு.க. அழகிரி பலவீனமா , பலமா?

தென் தமிழகத்தில் தனக்குத்தான் செல்வாக்கு என்கிற  ஒரு தோற்றத்தை  மு.க. அழகிரி உருவாக்கி இருந்தது உண்மைதான்!

அது உரு சிதைந்து போய்விட்டதும் உண்மைதான்!

சலனமற்ற குளத்தில் கல் எறிந்தால் அது எழுப்பும் அலைகள் கரையைத் தாண்டாது என்பதைப் போல ஒரு வட்டத்துக்குள் அடங்கி விட்டார் அழகிரி! குளம் நிரம்பி கரை உடைப்பது என்பது இனி நிகழாது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

மு.க.ஸ்டாலின்தான் எதிர்கால திமுக என்பதைப்போல நாட்டு நிகழ்வுகளும்  இருக்கின்றன. 

கடந்த தேர்தலில் கணிசமான இடங்களைப் பெற்று வலிமையான எதிர்க்கட்சி என்கிற  தகுதியைப் பெறுவதற்கு ஸ்டாலினின் ஓய்வறியாத உழைப்பு  உதவியது என்பதை அனைத்துக் கட்சிகளுமே அறியும்.

கடந்த காலங்களில் கூட்டணியாக இணைந்திருந்த விடுதலை சிறுத்தைகள், பாமக போன்ற கட்சிகளின் ஆதரவு இல்லாத நிலையிலும்  அவர்களையும்  வீழ்த்தியதற்கு  ஸ்டாலினின் வியூகம்தான் காரணம்.

மதிமுக,சிறுத்தைகள்,பொதுவுடமை கட்சிகள் இணைந்து  ஓரணியாக நின்றும் ஒற்றை இலக்கத்தில் கூட  வெற்றி பெற வில்லை.

எதிர்கட்சி என்கிற தகுதியை இழந்ததுடன்  விஜயகாந்தின் தே.மு.தி.க. பல இடங்களில் பொறுப்புத்தொகையை இழந்தது.

அழகிரியின் துணை இல்லாமலேயே  நிகழ்ந்தவைதான் இவையெல்லாம்!

கட்சிப் பணி அழகிரிக்கு வழங்கப்படவில்லை. அவருக்கு பொறுப்புகள்  கொடுக்கப்பட்டிருந்தால் தி.மு.க வை ஆட்சி பீடத்தில் அமர்த்தி இருப்பார் என்பதெல்லாம் காற்றில் வரைந்த சித்திரம் மாதிரிதான்!

திமுக படுதோல்வி அடையும் என்று ஜோதிடம் சொன்னவர் அழகிரி. அவரின் மன நிலை  ஸ்டாலினுக்கு எதிராக இருந்ததே தவிர கழகத்தின் வெற்றியை  குறி வைத்து இருக்கவில்லை. அவருக்கு எப்படி கலைஞர் பொறுப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கமுடியும்?

கழகத்தில் இப்போது அழகிரி இல்லை. அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களும்  கழகம் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்தால்தான் தங்களின் எதிர்காலம் என்பதை உணர்ந்து காத்திருக்கிறார்கள்.

இப்படித்தான் நினைக்கத்தோன்றுகிறது!  

No comments:

Post a Comment