Thursday, 6 October 2016

காதல்...காமம்..(பகுதி.9.)

செத்தவனை நினைத்து எத்தனை நாட்கள்  அழுது  கொண்டிருக்க முடியும்?
மனதில் வலி இருந்தாலும் அது நாளடைவில் பழகி போய் விடுகிறது.தங்கராசுவும் பெயிலில் வந்து விட்டான்!

 மகளை  பார்ப்பதற்காக சம்பந்தி வீட்டுக்கு வந்திருந்தாள் மாயக்காள்.

அன்னமயிலு இப்போது ஓரளவுக்கு நார்மல்.தனியாக அவளை உட்கார வைத்திருந்தார்கள்.கலைந்த கூந்தல்.பொட்டில்லாத நெற்றி. விபூதி கீற்று சிறிதாக,

அங்கம்மாளை அவள் கண்டு கொள்ளவில்லை.யாரையோ நாலாவது மனுஷியை பார்ப்பது போல் பார்க்க அங்கம்மாள் நொறுங்கிப் போனாள். வந்ததும் சம்பந்தியை கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்தாள். அது ஒரு வழக்கமாக  இருக்கிறது. இன்றும் மதுரையில் பார்க்கலாம். அழுது விட்டுதான்  துக்கம் விசாரிப்பார்கள்.

"அன்னம் எப்படிடி இருக்கே?"-துக்கம் தாங்காமல்தான் கேட்டாள் மாயக்காள்!

"இன்னமும் செத்துப் போகலியான்னு பாக்கிறதுக்கு வந்தியா? பாத்திட்டில்ல! கெளம்பு! மொட்ட மரத்தில எல மொளைக்கப் போறதில்ல.நானும் பூவும் பொட்டுமா  வாழப்போறதில்ல! போ... ! ஒரு நா கூத்தோடு என் வாழ்க்கை  முடிஞ்சிருச்சு. அத நெனச்சால காளி கூத்து ஆடணும்னு வெறியா வருது!"

"எதுக்கும்மா  ஆத்தாள  வய்யிரே! அதுவே வெசனப்பட்டு துக்கத்த எங்க எறக்கிவைக்கிறதுன்னு தெரியாம தெசை தெரியாம இருக்கு! " என்று சம்பந்திக்கு  சாதகமா பேசினாள்.

எகிறுகிறாள் அன்னம்.!

''என் ஆத்தாளுக்கா ஒன்னும்  தெரியாது,? விட்டா இந்த மீனாட்சி பட்டணத்தையே வித்திட்டு வந்திரும்." என்று கத்தியவள் அம்மாவை கண் சிவக்க பார்த்து கேட்கிறாள்.

''பொருத்தம் பாத்துதான் இந்த கலியாணத்த நடத்துனிங்களா? இல்ல நா  ஆம்பள சொகத்துக்கு அலையிறேன்னு நெனச்சு ஓட்டி விட்டுட்டிங்களா? குத்த வச்சு அஞ்சு வருசமா கெடந்தேனே..எவனையாவது  ஏறிட்டிருப்பேனா? அவன் மேல ஆசை இவன் மேல ஆசைன்னு சொல்லிருப்பேனா? எனக்கு  அரிப்பெடுக்குதுன்னு உங்கிட்ட சொன்னேனா? எதுக்கு கல்யாணத்த பண்ணி வச்சு தாலிய  அறுத்து தீயில போட்டிங்க? வெளங்கவே மாட்டிங்க!"

ஆத்திரத்தில் எப்படியெல்லாம் பேசுகிறோம் என்கிற நினைப்பே இல்லாமல்  பேசினாள் அன்னம்.

இரண்டு கிழவிகளும் வாயடைத்து போய்விட்டார்கள். அப்பாவியாக இருந்தவளுக்கு இவ்வளவு ஆங்காரம் எங்கிருந்து வந்தது?

"வாயில வந்தத பேசாதே அன்னம்! பெத்த பொண்ணுக்கு யாராவது அரளி வெதைய அரைச்சு கொடுப்பாங்களாம்மா! பேரன் பேத்திகள பாக்கிற ஆசையில பத்துப் பொருத்தமும் பாத்துத்தான்மா கலியாணத்த பண்ணி வெச்சோம்.வெளாம்பட்டி சோசியன்ல இருந்து  திருச்சி சோசியன் வரை  பார்த்தோம். ஒருத்தன் கூட கொறை சொல்லல.நல்லாத்தான் சொன்னாய்ங்க
எவன் வச்ச கொள்ளியோ என் வீட்டு கூரையில விழுந்திருக்கு. விதிடி, அன்னம்  விதி! எங்களை கொறை சொல்லாதே!" என்று குரலெடுத்து ஒப்பாரி  வைக்கிறாள்  மாயக்காள்!

இன்னும் இருக்கிறது. உண்மைச்சம்பவத்தை  அடிப்படையாக வைத்து புனையப்படும் சிறு தொடர்.

தவறு இருந்தால் சொல்லுங்கள் அய்யாமாரே!

அடுத்தவாரம் சந்திப்போம். . 

No comments:

Post a Comment