Friday, 9 December 2016

காதல்...காமம்...( 15. )

முந்தானையினால் கண்ணை துடைத்துக் கொண்டு மூக்கை சிந்தி வழக்கம் போல சுவரில் தடவினாள்.அது அவளது பழக்கம்.தை மாதம் பொங்கலுக்கு  வெள்ளை அடிக்கும்போது அந்த தடயங்கள் அழிந்துவிடும்.

வடிவேலுவுக்கு சற்றுத் தள்ளியே அமர்ந்தாள்.என்னதான் கோபத்தில் பேசினாலும் புருசனுக்கு மரியாதை கொடுக்கத் தவறுவதில்லை.

"மாயி..." சற்று அச்சமுடன் மனைவியை பார்த்தார்.

"ம்ம்"

"ஒங்களுக்கு  தெரியாம ஒரு காரியத்தை பண்ணிட்டேன். செல்லத்தாயிக்கி நத்தத்தில் உள்ள காரை வீட்டை எழுதி வச்சிட்டேன். அது எங்க ஆத்தாளுக்கு  சொந்தமானது. சும்மாதானே கெடக்கிதுன்னு விக்கிறதா சொல்லி  ஆத்தா கிட்ட பொய் சொல்லி பத்திரம்  மாத்தி கொடுத்திட்டேன். அத எங்க ஆத்தா முன்னாடி சொல்லி ....அதுக்கு என்ன தண்டனையோ கொடுங்க. ஏத்துகிறேன்."

"என்ன மனுசன்யா ....அந்த தட்டுவாணி என்னய்யா மருந்து வச்சா? இப்படி  கேடு கேட்ட காரியத்தை பண்ண எப்படிய்யா தைரியம்  வந்தது? ஆத்தாளும்  பேரனும் இப்ப வருவாங்க. அவங்களுக்கு சொல்லும்!"

"தப்புத்தான் மாயி!  கிறுக்குத்தனமா தப்பு பண்ணிட்டேன். என்னை பித்து  பிடிக்க வச்சிட்டாடி! இப்ப பிள்ளைய கொடுக்க வாய்யான்னு  வம்பு பண்றா!
என்ன பண்றதுன்னு தெரியல. தீர்த்துக் கட்டிடலாம்னு .......! ஆத்தாகிட்ட  சொல்லிட்டு  ஆக வேண்டியதை பார்க்கலாம்னுதான்....."

சொல்லி முடிப்பதற்குள் ஆத்தா அங்கம்மாவும் மகன் தங்கராசுவும் வந்து விட்டார்கள்.

"என்னப்பு  எதுக்கு ஆத்தாளை கூட்டிட்டு வரச்சொன்னே? பதறிப்போயி வந்திருக்கேனப்பு!" தூண் ஓரமாக உட்கார்ந்தாள்  "மகமாயி!" என்றபடி!

"இப்பத்தான் ஒன் மருமக கிட்ட சொன்னேன். அவ கிட்டயே கேட்டுக்க. மறுபடியும் சொல்றதுக்கு எனக்கு தைரியம் இல்ல!"

மறுபடியும் தோமுத்ரா கட்டிலில் ஏறி படுத்துவிட்டார்.

மாமியார்,மகனிடம் சொன்னதும் ஏகப்பட்ட  சண்டை! எதையும்  வடிவேலு காதில் வாங்கியதாக இல்லை. அவரை அறியாமலேயே  கண்ணீர் வடிகிறது.

''என்ன பாவம் பண்ணினேனோ இந்தாளுக்கு வந்து பிள்ளையா பெறந்திருக்கேன். கொன்னுட்டு ஜெயிலுக்கு போனாலும் தப்பில்ல. மனுசனா.? மாடுதான் எந்த பசுன்னு பாக்கிறதில்ல. இந்தாளும் அந்த ஜென்மம்தான்! கண்ட எடத்தில வாயை வச்சிருக்காரே! அப்பத்தா ஒன்னையும் ஏமாத்தி ஒன் சொத்தை  கூத்தியாளுக்கு எழுதி வச்சிருக்காரு..என்ன பண்ணலாம்னு சொல்றே?" எரிச்சலில் கத்துகிறான் தங்கராசு.

வந்து சேருகிறான் வெள்ளிங்கிரி!

"என்னடா...தெரு வரைக்கும் சத்தம் கேக்கிது. அப்படி ஏன்னடா குடி முழுகிப் போச்சு. கூத்தியா... சொத்துன்னு  கத்துறே? ஒங்க அய்யா  செல்லத்தாயியை வச்சிருக்காருங்கிறது ஊருக்கே தெரியுமே..அதை இப்ப ஏன் தலையில சொமக்கப்பார்க்கிரே? அவருக்கும் வயசாகிப்போச்சு.விடு கழுதைய! வெளையாடிட்டுப் போகட்டும்!" என்கிறான்.

"வெவரம் தெரியாம பேசாதடா! வீடே தீ பத்தி எரியிது. ஒன்னு இந்தாளு சாவனும். இல்லேன்னா அந்த பன்னாடை சிறுக்கி சாவனும். அதான் எங்க வீட்டு வெவகாரத்துக்கு தீர்வு" கொதிக்கிறான் தங்கராசு.

மற்றவர்கள் என்ன சொல்வது என்பது தெரியாமல்  தங்கராசுவை பார்க்கிறபோதுதான் வாசலில் வந்து நிற்கிறாள் தொடுப்பு செல்லத்தாயி! கூடவே போலீஸ்!

ஏடாகூடமாக ஏதோ நடக்கப்போகிறது என்பது மட்டும் தெரிந்தது!

உண்மைச்சம்பவத்தை  அடிப்படையாகக் கொண்டு  புனையப்படும்  தொடர். இனி அடுத்த வாரம்,No comments:

Post a Comment