Sunday, 4 December 2016

காதல்...காமம். ( 14.)

அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் அப்படி ஒரு சண்டை நடக்கும் என்பதை தங்கராசு எதிர்பார்க்கவில்லை.

 பொன்னியை அவளது வீடு அருகில் விட்டுவிட்டு ஒரு முடிவுடன்தான் வீட்டுக்கு  வந்து கொண்டிருந்தான் .காலடி வைத்ததும் அவனின் காதில்  விழுந்ததது.......

"நாண்டுக்கிட்டு போகவாய்யா!"

அம்மா மாயக்காள் அதிர்ந்து பேசாதவள். இன்னும் சொல்லப்போனால்  புருசனின் முகம் பார்த்துக்கூட பேசமாட்டாள். பொதுவாக அந்தக்காலத்து மனுஷிகள் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.

மகன் வந்தபிறகும் அவர்களது சண்டை தீரவில்லை.

"வயக்காட்டுக்கு போன ஆளு களை புடுங்க வந்தவ மேல ஆசைப்பட்டு கையை வச்சுப்பிட்டே...ஊர்ல நடக்காததா நடந்து போச்சுன்னு நானும்  சும்மா விட்டுட்டேன். சிறுக்கி மவ ஒன்னை சேலைக்குள்ள  சிக்க வச்சுருக்காங்கிறது  இப்பல்ல தெரியிது.! மூணு செண்டு நிலத்த வீடு கட்டிக்கன்னு கொடுத்த பாரு  அப்பவே ஒமரு கெரன்ட காலு  நரம்ப அறுத்து விட்டிருந்தா சவாரி கேட்டிருக்குமா? என்னத்தையா அவகிட்ட காணாதத கண்டுபிட்டே?"

மழையும் இடியும் ஒரு சேர தாக்கியதைப்போல்  கண்ணீரும் வார்த்தைகளும் கொட்டுகிறது.

தங்கராசுக்கு இப்பதான் கோபம் வந்தது.

'' சின்னாத்தா கொரங்கு பாடி போட்டு லவுக்கை போட்டிருக்கு. நீயும் போட்டிருந்தா வேலி தாண்டிருக்கமாட்டார்.இல்லையா அப்பு?"என்றான் அப்பனை பார்த்து.!

"மானங்கெட்ட பயலே..எவடா சின்னாத்தா? மானங்கெட்ட  அந்த மல்லாரியா ஒனக்கு சின்னாத்தா..வெளக்குமாறு பிஞ்சிரும்."

"பின்னே எப்படி சொல்லனும்ரே? இத்தனை நாளும் விட்டுத்தானே வச்சிருந்தே? அப்ப அவளை மொறை வச்சு நான் கூப்பிட்டதில என்ன தப்பு? தெரு நாயி நடு வீடு வரை வந்து நார வச்சிட்டு போயிடுச்சே!"

இப்பத்தான் திருவாயை திறக்கிறார் வடிவேலு. விட்டத்தையும் பார்க்க தைரியம் இல்லை. முகம் பார்த்து பேசவும் ஆண்மை இல்லை. சுவர்தான் அவரது பார்வையை தாங்கியது. ஆங்காங்கே காரை பெயர்ந்திருந்தது  அப்போதுதான் தெரிகிறது.

மெதுவான குரலில் "வச்சுக்கிட்டவன்னாலும் என் ரத்தமும் சேர்ந்திருக்குள்ள?
அவ்வளவு சீக்கிரமா அத்துவிட்ர முடியுமா?" என்றார்.

தங்கராசு அப்பனுக்கு எதிராக சேரை இழுத்துப்போட்டுக்கொண்டான்.

"உன்னால முடியாதுப்பு! ஒங்க ரெண்டு பேரையும் கொன்னு போட்டுட்டு ஆனை விழுந்தான் பள்ளத்தில போட்டுரவா? என்னால முடியும்.!" என்று கால் மேல் காலை போட்டுக்கொண்டவன் ஆத்தாளைப் பார்த்தான்.

"இந்தாத்தா..இந்த மனுஷன் இந்த அளவுக்கு எறங்கி இருக்கார்னா  பெருசா ஏதோ நடந்திருக்கு.கதவை தாப்பா போடு. சங்கருத்திடுறேன்." என்றபடி கோபமுடன் எழுந்தான்.

ஆத்தாளும் அப்பனும் இப்போது ரொம்பவே  பயப்பட்டனர். அதுவரை ஆவேசமாக இருந்தவள் அடங்கிப்போனாள். நிஜமாகவே  செய்து விடுவானோ?

வடிவேலு  ''வாடா வா. வந்து கொல்லுடா! பெத்த ஆத்தாளை  முண்டச்சி ஆக்கிட்டு ஜெயிலுக்கு போயிடு! செல்லத்தாயி வந்து சொத்தை அமுக்கிட்டு போகட்டும்!" என்று சுவரிடமே பேசுகிறார்.

"அப்ப ஒனக்கும் அவளுக்கும் என்ன பிரச்னை? அத சொல்லு. தீர்த்து வைக்கிறோம்." என்கிறான் மகன்.

"அவளோடு வந்து ஒரு மாசம் குடும்பம் நடத்த சொல்றா...வவுத்தில வாரிசு  வளரனுமாம்.அதுக்குத்தான் அம்புட்டு சண்டை போட்டா!"

ஆத்தாளுக்கு முகம் சிவந்து போச்சு.

"பெத்த பிள்ள வளந்து மீசை முளைச்ச ஆம்பளையா நிக்கிறான். அவனை அந்த தட்டுவாணி கிட்ட அனுப்பி வைக்கவா. அவன் தருவான்யா பிள்ளையை! வெக்கமா இல்ல.இத சொல்ல ? அவ புருசன் கிட்ட படுத்து பிள்ள பெத்துக்க முடியாத பொட்டச்சிக்கு நீ பிள்ள வரம் கொடுக்க போறியாக்கும்! மொண்ணை  அருவாமனையில ...." என்றவளுக்கு  அதற்கு மேல் சொல்ல வார்த்தை வரவில்லை. பெத்த பிள்ளை பக்கத்தில நிக்கிறான்.

இப்போது ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாக  " நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ அந்த கேடு கெட்ட எடுபட்டவளை  வெளக்கி விட்டு பஞ்சாயத்து பண்ணிவிட்டுட்டு வீட்டுக்குள்ள காலை வையி. இல்லையா நிரந்தரமா அவ புருசன்கூட நீயும் ஒரு புருசனா  அவ கூடவே இரு.நானும் தாலிய அறுத்திட்டு நிம்மதியா என் பிள்ளைக்கு ஒருத்தியை தேடி கல்யாணம் பண்ணி வச்சிடுறேன்!" என்கிறாள்.

அதுநாள் வரை அவள் ஒருமையில் புருஷனை பேசியதில்லை.

தங்கராசுவுக்கு அம்மாவின் கோபம் புரிந்தது. ஆனால் அதுவே தீர்வாகிவிடுமா? குடும்பத்தின்  மானம் மரியாதை என்ன ஆவது? செல்லத்தாயியை வைத்துக் கொண்டிருப்பது ஊருக்கே தெரியும்.ஆனால்  அது பெருந்தனக்கார வீடுகளில் சகஜம்தான் என அன்றைய கால கட்டத்தில்  அறியப்பட்டிருப்பதால் அது கவுரவமாகவும் கருதப்பட்டது.

வடிவேலு  வேர் இழந்த மரம் மாதிரி பட்டென தரையில் உட்கார்ந்துவிட்டார்.
முழங்கால் மீது கையை வைத்தபடி !

"மாயி...பக்கத்தில வாடி! " என்று மனைவியை பக்கமாக வந்து அமர ஜாடை  காட்டிவிட்டு  மகனை பார்க்கிறார்.

"அப்பத்தாளை கூட்டிட்டு வா!" என்கிறார்.

அங்கம்மா வருங்கால சம்பந்தி செவனம்மாவின்  வீட்டுக்கு போயிருந்தாள்.

இன்னும்  வரும். ஒரு  உண்மை  நிகழ்வை  அடிப்படையாகக்கொண்டு புனையப்படும்  கற்பனை  கதை. 

கருத்துகள்  சொல்லலாமே! 

No comments:

Post a Comment