Saturday 8 April 2017

காதல்..காமம்..(32.)

ராஜதுரை. கிருதா மீசை.தடித்த குரல்.பாடியான ஆள்.தல்லாகுளம் குற்றப்பிரிவு  இன்ஸ்பெக்டர்.

பொன்னி தூக்கில் தொங்கிய அறையை நோட்டமிட்டார். சுவரை ஒட்டி
கிடந்தது கட்டில்.  ஜன்னல்கள்  மூடப்பட்டிருந்தன.அந்த அறையை விட்டு வெளியேறுவதற்கு இன்னொரு கதவும் இருந்தது.அது திறந்துதான் கிடந்தது, அதன் வழியாக காற்று சிலு சிலுவென பாய்கிறது. பின்னம் பக்கம் பூத்தொட்டிகள்.எல்லாவற்றிலும் ரோஜாதான்! சிவப்பு ,மஞ்சள் என மலர்ந்திருந்தன.வாசலை தவிர்த்து அறைக்குள் வருவதற்கு ஏதுவாக சின்ன சந்து. துப்புரவு தொழிலாளர்கள் வந்து போவதற்காக!

அறையில்  பிளாஸ்டிக் சேர் சாய்ந்தே கிடந்தது. அதில் ஏறி நின்றுதான் பொன்னி தூக்குப்போட்டு கொண்டிருக்கவேண்டும்.தடயவியல் அதிகாரி  ரேகை எதுவும் கிடைக்கிறதா என்று வெள்ளைப்பவுடரை தெளித்து பிரஷினால்  நோகாமல் தடவி பூதக்கண்ணாடியால் தேடிக்கொண்டிருந்தார்.அறையில் இருந்த மர அலமாரி சற்று இடம் பெயர்ந்த மாதிரி இருந்தது. சேலைகள் தரையில் அலங்கோலமாக கிடந்தன. 

"என்னங்கிறேன்...உன் ஆளு தூக்குப்போட்டு தொங்குற அளவுக்கு தைரியசாலியா?" அறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்த தங்கராசுவை பார்த்து கேட்டார் ராஜதுரை.

"இல்லிங்க சார்!"

கூடவே ராசம்மாவும் "பச்ச புள்ள சாமி!ஆசப்பட்டவனோடு  வாழணும்னு ரொம்பவும் ஆசைப்பட்டுச்சு"

"அப்புறம் எதுக்கு நாண்டுக்கிட்டு சாகணும்?"

"ஆத்திரத்தில புத்தி கெட்டுப்போயி தொங்கிட்டா!"

"ஆத்திரத்தில அப்பனை வெட்டுனவளுக்கு சாகுறதுக்கு எப்படிம்மா மனசு  வந்திருக்கும்?  யோசிச்சு பாரு!"

"ஆசைப்பட்டவன் கெடைக்கலேன்கிற வருத்தம் இருக்கும்ல சாமி!"

"ஒத்தப் பொம்பள புள்ளைய வச்சிருக்கிற உங்களுக்கு மக ஆசைப்பட்டவனை  கட்டி வைக்கிறதில அப்படி என்ன சங்கடம்? இந்தாளு உங்க சாதிதானே?" அருகில் நிற்கிற தங்கராசுவை  காட்டி கேட்டார்.

"நான் சாதி கீதி பார்க்கலிங்க. என் ஊட்டுக்காரருக்கு இந்த சம்பந்தம் புடிக்கல.!"

''பையன் கள்ளு சாராயம் குடிக்கிறவனா...இல்ல கூத்தியா  வச்சிருக்கிறவனா. பயலுக்கு தப்பான பழக்கம் இருக்கிறதா எவனாவது வந்து சொல்லி இருப்பாய்ங்களா?"

"எதையும் என் ஊட்டுக்காரர் என்கிட்டே மறச்சதில்லிங்க.  வாக்கப்பட்டு முப்பது வருசம் ஆச்சு.என்னை கேட்காம எதையும் செஞ்சதில்லை. மக கல்யாண விசயத்திலே மட்டும் அந்த மனுசன் ஏன் பிடிவாதமா இருந்தார்ங்கிறது இன்னிக்கி வரை,இந்த பொழுது வரை புடிபடல சாமி!" ராசம்மா கண்ணீர் விட்டபடி புலம்புகிற அந்த சமயத்தில் தடயவியல் அதிகாரி இன்ஸ்பெக்டர் அருகில் வந்தார்.

காதுக்குள் ஏதோ சொல்ல  ராஜதுரையும் " எனக்கும் அந்த டவுட் இருக்கு மிஸ்டர் ஜேம்ஸ்! கண்டினியூ பண்ணுங்க." என்று அவரை  அனுப்பி வைத்தார்.

அங்கிருந்தவர்களுக்கு எதுவும் புரியவில்லை.

கான்ஸ்டபிளை கூப்பிட்டு அந்த அறைக்கு சீல் வைக்க சொன்னார். கொல்லைப்புற வழியையும் சீல் வைத்து விட்டனர்.

"இப்ப உன் புருசனுக்கு எப்படி இருக்கு...மக செத்தது அந்தாளுக்கு தெரியும்ல.?" என்று ராசம்மாவிடம் கேட்டவர் அதற்கான பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை."யாரும் எங்க அனுமதி இல்லாம அந்த அறைக்கோ கொல்லைப்புறம் பக்கமாகவோ போகக்கூடாது" என்று அவளிடம் எச்சரித்து விட்டு புறப்பட்டார்.

"தங்கராசு ! நீ மட்டும் என் கூட வாய்யா !"

அவனுடன் ஜீப் கிளம்பிச்சென்றது.

{ உண்மை நிகழ்வு. புனையப்பட்ட தொடர்,)


No comments:

Post a Comment