Tuesday, 22 March 2016

இதுக்குத்தானா கோயில்?

''பிரதோஷம்  ! கோயிலுக்கு போகணும்..நீங்களும் வர்றிங்களா? ஆபிஸ்  முடிஞ்சிதான் வந்தாச்சே! ஒரு குளியல போட்டுட்டு கெளம்புங்களேன்! சும்மா உக்காந்து கெடக்கிறதுக்கு  சாமியையாவது கும்பிட்டு வரலாம்!"

           இது கட்டளையா, வேண்டுகோளா, தெரியாது! வந்தால் வா, வராட்டி போ  என்கிற தொனியும் வந்துதான் ஆகவேண்டும் என்கிற கண்டிப்பும் கலந்திருந்தது, எனது திருவாட்டியிடம்!

           அவள் சொன்னதைப் போல குளித்துவிட்டு எட்டு முழ வேட்டி, வெள்ளை  ஜிப்பாவுமாக  நிலைப்படி கடந்தேன். வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை  அவளது இடுப்பில் வழக்கம்போல சொருகிக் கொண்டாள்.

          அம்மன் சன்னதி தெரு வழியாக  நகரா மண்டபம் கடந்ததும் ,கோயில்  வாசலில் உட்கார்ந்திருந்த பூக்காரியிடம்  பேரம் நடந்தது.

                   "ங்க....!மல்லிப்பூ வாங்கவா? பிச்சிப்பூ  வாங்கவா?"

                    "எதாச்சும் வாங்கு! இல்லேன்னா  ரெண்டையுமே வாங்க்கிக்க! வச்சுக்க போறவ நீதானே?"-----வாங்கிக்க என்பதில் சற்று அழுத்தம் கொடுத்தது தப்பாகிப் போச்சு!

                "கூறு கெட்ட மனுஷன்.உங்க கிட்ட கேட்டன் பாருங்க.என்னை சொல்லணும்."என்ற முணுமுணுப்புடன் "மல்லி இருநூறும் பிச்சி   முன்னூறும் கொடும்மா"என்று  வாங்கிக்கொள்ள  வழக்கம் போல  பணத்தை நான் கொடுத்தேன்! ரவுண்டு  கொண்டையில்  பிறை வட்டமாக பிச்சி மட்டும் அமர்ந்து கொண்டது.

                  "ம்ம்ம். நடங்க!"

             அர்ச்சனை தட்டு வாங்கியது நான்தான்! அவளிடம் அர்ச்சனை  பெறுவதும் அடியேன்தான்! விநாயகர், சுப்பிரமணியர் சிலைகளை  வணங்கிவிட்டு  அம்மன் கோவிலில் கால் வைத்தோம். எல்லா சிவாலயங்களிலும்  சுவாமியை கும்பிட்ட பிறகுதான்  அம்மனை கும்பிடுவார்கள். மதுரையில் மட்டும்தான் முதலில்  அம்மன்.பிறகுதான்  சுந்தரேஸ்வரர்.

                       பொற்றாமரையில் கால் கழுவிக்கொண்டு ,அதே தண்ணீரை  தலையிலும் தெளித்துக்கொண்டு அம்மனை வணங்க புறப்பட்டால்...
எதிரில் அன்னபூரணி. எதிர் வீட்டு எஜமானி!

                  "என்ன மங்களம் சாமி கும்பிட வந்திகளா?"

                  "ஆமாக்கா! இன்னிக்கி பிரதோஷம் ஆச்சே! அதான் அந்த சொக்கனிடம் குறைகளை சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்." .உடன் வந்திருக்கிற புருஷனையே  மறந்து விட்டாள்!

                    ''என்னத்த சொல்லி அழுதாலும் நம்ம கவலை நம்மை விட்டு போகுதா? எம் புள்ள ...அதான் பெரியவன் பொண்டாட்டியே கதின்னு கெடக்கிறான். ராப்பகல்னு பாக்கிறதில்லை. ரூமே கதின்னு  கெடந்தா வீட்டுக்கு ஆகுமா? நீயே சொல்லு மங்களம்?"

               "அக்கா... நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதே. கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை.தனிக்குடித்தனம் வச்சிரு! சின்னஞ்சிறிசுக  அப்படியும் இப்படியும் இருக்கத்தான் செய்யும்.நாமதான் பொறுத்து போகணும்!" அடிப் பாவி! கோவிலில் பேசுகிற பேச்சா இது? மனசுக்குள்  பொருமல்.!

          ''நல்லாருக்குடி..நீ நியாயம் பொளந்தது. உன்கிட்ட வந்து சொன்னேனே  எனக்குதான்டி கிறுக்கு பிடிக்கும். போடி பொசகெட்ட சிறுக்கி!" என்றபடியே  எங்களை ஒரு பார்வை பார்த்து விட்டு அம்மன் சந்நிதியை நோக்கி நடந்தாள்!

          ''பாத்திங்களா அந்த சிறுக்கியின் வாயை! கோவிலா போச்சு. இல்லேன்னா கிழிச்சு தொங்கவிட்டிருப்பேன். சரி சரி வாங்க " என என்னை அழைத்துக் கொண்டு நேராக சுவாமி கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

         எதிர்த்த விட்டுக்காரியை  அம்மன் கோவிலில் பார்த்து விடக்கூடாதாம்!

          அடி பாவிகளா? இதுக்குதான் கோவிலா?

    

No comments:

Post a Comment