Sunday 27 March 2016

திமுக .கூட்டணிக்கு மெஜாரிட்டியா?

இன்னமும் கூட்டணி பற்றிய முடிவுகள் எந்த அணியிலும் முடிவு பெறவில்லை.பேச்சு வார்த்தை நடப்பதாகவே சொல்லிவருகிறார்கள். ஆனால்  ஊடகங்களின் பெயரால் 'வாட்ஸ் அப்களில்'கருத்துக் கணிப்பு என்கிற பெயரில் தவறான செய்திகள் பரவி வருகின்றன.பெரும்பாலும் அத்தகைய  கணிப்புகளை கட்சிகளை சார்ந்த கணினி வித்தகர்களே உருவாக்குகிறார்கள்.இது வெளிநாடுகளில் வாழ்கிற தமிழர்களை மட்டுமில்லாது தாயகத் தமிழர்களையும்  குழப்பும் செய்திகளாகவே தோணுகிறது.

பெரும்பான்மையான ஊடகங்களில் ஆளுகிற அதிமுகவுக்கு ஆதரவாகவே  செய்திகளும் கணிப்புகளும் வெளியாகின்றன.இது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் அச்சமும் இருக்கவே செய்கின்றன.ஒருவேளை கணிப்பு பிழையாக இருந்துவிட்டால் ஆட்சிக்கு வரக்கூடிய  கட்சியின் வெறுப்புக்கு உள்ளாகநேரிடுமோ என்கிற பயம்தான் அது.  வெறுப்புக்கு ஆளாகிவிட்டதால் சில நாளேடுகள் அரசின்  விளம்பரங்களை பெறவில்லை என்பதற்கு  முன்னுதாரணம்  இருக்கிறது.அரசு விளம்பரங்கள் ஒரு பத்திரிகையின் சுவாசம் .. கணிசமான வருமானமுமாகும். ஆகவே அரசின் கோபத்திற்கு  அஞ்சி,அத்தகைய பாதிப்புக்கு உள்ளாக கூடாது என்பதால் செய்திகளை அப்படியும் இப்படியுமாக போட்டுவருகிறார்கள்.பத்திரிக்கை சுதந்திரம் என்பது தமிழகத்தை பொருத்தவரை கண்காட்சி பொருளாகிவிட்டது.

மக்களை குழப்பி இதுதான் உண்மை போலும் என அவர்களை நினைக்கவைப்பதற்கே இத்தகைய கருத்துக் கணிப்புகள் என்பதை மறந்து விடக்கூடாது.ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் பத்திரிகைகள் தங்களின் கடமையை மறந்து செயல்படுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.இதற்கு அரசியல் கட்சிகளின் அச்சுறுத்தலும் ஒரு காரணம்.

தமிழகத்தை பொருத்தவரை ஆளும் கட்சிக்கும் முக்கியமான எதிர்க்கட்சியான திமுகவுக்கும் 'நெக் டு நெக் பைட் 'என்பது சொல்லாமலேயே  தெரியும் விஷயம்தான் கூட்டணி உறுதியாகி ,தொகுதிகள் இறுதியாகி வேட்பாளர்கள் தேர்வில் குழப்பம் இல்லாமல் வெளிவரும்போதுதான் கணிக்க முடியும்.ஆளும் கட்சிக்கு அதிகார பலம் பண பலம் பக்க துணை என்றாலும்  மக்கள் முடிவெடுத்துவிட்டால் அதை ஆண்டவனாலும் மாற்ற இயலாது.
திமுக கூட்டணிக்கு நூற்றி அறுபது இடங்கள் கிடைக்கலாம் என வருகிற கருத்துக் கணிப்புக்கு நாளை இன்னொரு கணிப்பு அதிமுகவுக்கு நூற்றி எழுபது என்பதாக வெளியாகலாம்.

ஆகவே ஊடகங்களின் வலிமையை அரசியல் கட்சியினர் மோசடிக்காக பயன்படுத்தக்கூடாது  என்பதே குரங்காரின் கருத்தாகும். ஆனால் இது எடுபடாது என்பதும் குரங்காருக்கு தெரியும்.




No comments:

Post a Comment