Tuesday, 12 September 2017

காதல்..காமம்..(46.) ஊர் மெச்ச கல்யாணம்.

வெள்ளிங்கிரி மீது பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு இன்னும் முடியவில்லை. வக்கீல்களின் சாமர்த்தியத்தினால் வெவ்வேறு வடிவம் எடுத்தது என்றுதான் சொல்லலாம்.

"எப்படியும் ஆயுள் தண்டனையாவது வாங்கிக் கொடுத்துவிடவேண்டும் " என்று பிராசிகியூசன் தரப்பு  தீவிரம் காட்டியதைப் போல வெள்ளிங்கிரி தரப்பு அவனுக்கு விடுதலை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பதில்  முனைப்புக் காட்டியது.

பட்டணம் போயாவது மகனை மீட்க வேண்டும் என்கிற உறுதியுடன் வெள்ளிங்கிரியின் பெற்றோர்  இருந்தனர் .

இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம்  ......

பொன்னியின் அப்பா சிவனாண்டி முழுமையாக  குணம் அடைந்து வீடு  திரும்பி விட்டார். கட்டிலில் முதுகுக்கு வாகாக தலகாணியை அண்டக் கொடுத்து சாய்ந்திருந்தார்.

மகள் இல்லாத வீடு வெறிச்சோடி கிடக்கிது.

"என்ன பண்ணலாம்னு ரோசனை?"---சுவரில் சாய்ந்தபடி கேட்கிறாள் ராசம்மா.

"என்னத்தலா பண்ணச்சொல்றே?.ஒத்தப் புள்ளைய தூக்கிக்கொடுத்தாச்சு. ஆசைப்பட்டவனுக்கு புள்ளைய  புடிச்சு கொடுத்திருந்தா நானும் கவுரதையா  தோள்ல துண்ட போட்டுக்கிட்டு நடமாடியிருப்பேன்.அஞ்சு வயசில போயிருந்தாலும்  அற்ப வயசுன்னு மனச தேத்திக்கலாம்.வளந்து ஆளாகி  வம்சம் தளைக்கப்போற காலத்தில போயி சேர்ந்திட்டாளே பாவி மக. எனக்கு  இன்னும் ஆறலடி ராசு."

புருசனும் பொண்டாட்டியும் தினமும் இப்படித்தான் பேசிக்கொண்டு நாட்களை  தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்..கேட்டுக்கேட்டு சுவர்களும் அழுக்கடைந்து விட்டது.
**************************************************

 தங்கராசுவின் அப்பா வடிவேலு, அம்மா மாயக்காள் இருவரும் கல்யாண வேலைகளில்...!

"பொண்ணுக்கு வேண்டிய நகை நட்டு எல்லாம் வாங்கியாச்சு. பொண்ணு வீட்டுக்காரங்க அத செய்வாங்க  இத செய்வாங்கன்னு நாம்ப எதிர்பாக்கக்கூடாதுல்ல. நம்ம மருமகளுக்கு நாம்ப செய்றோம். தங்கராசுக்கு வேண்டியதையும் நானே வாங்கிட்டேன்.சம்பந்தகாரக வீட்லேர்ந்து எதையும்  எதிர்பாக்கக்கூடாதுடி மாயி.!"

"நான் ஏதும் சொல்லலிங்க.நடக்கப்போறது மொத விசேசம்.தல கல்யாணம். ஊரே மெச்சனும்.மூணு நாள் நடக்கணும். என்னோட ஆசை இம்பிட்டுதான்!"

"மாட்டேன்னு சொல்லல.நடத்திடுறேன். நீ ஒரு எட்டு போயி சம்பந்தி வீட்டுப்பக்கம் போயி மருமகளை பாத்து பேசிட்டு வாயேன் ?"

"என்னத்த பேசறது?"

"உனக்கு வெவரம் பத்தலியா..இல்லே எப்படி கேக்கிரதுன்னு தயங்கிரியா?"

"இப்படி பூடகமா சொன்னா எப்பிடிங்க.என்னத்த கேக்க சொல்றீங்க?"

"அடி போடி கேனசிறுக்கி! வயசில வைக்கப் படப்பு பக்கமா நாம்ப ஒதுங்கிப் பேசுனத மறந்திட்டியா? அந்த மாதிரியெல்லாம் பயப்படாம நம்ம மகனோடு தைரியமா பேசிப்பழக சொல்லு.வீட்டில போனு சும்மாதானே கெடக்கு.  இவனுக்கு ஒரு ஆறுதலா இருக்கும்ல?"

"அதுவும் சரிதான்!அந்த பொண்ணு தப்பா நெனச்சிட்டா ?"

"அப்படியெல்லாம் நெனைக்காது.நம்ம வயசுக்கு படப்பு துணையா இருந்துச்சி . இந்த காலத்துக்கு போனு."

தங்கராசு தன் மனைவியிடம் இப்படி சொல்லி அனுப்பினால் ...

நடந்ததோ வேறு!

( உண்மை நிகழ்வு. ஆனால் புனைவுத் தொடர்.கற்பனை கலந்து.)


Friday, 1 September 2017

காதல்..காமம். ( 45.) முதலிரவில் என்ன நடக்கும்?

                                   (உடம்பு ரொம்பவும் பாடாய் படுத்திருச்சி. அப்பப்ப தொந்தரவு ...காசு கரைஞ்சாலும்  மவன் சொகமானால் சரின்னு  குலதெய்வத்துக்கு நேத்திக்கடன். யார் செஞ்ச புண்ணியமோ  உடம்பு  வசத்துக்கு வந்திருச்சி. காதலை கவனமா செய்வோம். காமத்துக்கு  அப்பப்ப எடம் கொடுப்போம். அது இல்லேன்னா...தொட்டுக்க எதுவும் இல்லாம கஞ்சிய குடிக்க முடியாதே.)

"வெள்ளிங்கிரி...ஒத்துக்கறத தவிர வேற வழியே இல்லடா. பொன்னி வீட்டுல  பீரோவுக்கு பின்னாடி ஒளிஞ்சிருந்த களவாணிப்பய நீதான். கைரேகை அப்பறம் நீ விட்டுட்டு வந்த நிரோத்து பாக்கெட்..எல்லாமே உன் ரேகைதான்டா. இல்லேன்னு பொய்ய சொல்லிப்புட்டு தப்பிச்சிக்கலாம்னு மட்டும் நெனைக்காதே.!அம்புட்டையும் சொல்லிரு.! தண்டனை குறைய மார்க்கம் இருக்கு.!"

குற்றப்பிரிவு இன்ஸ். ராஜதுரை கிட்டத்தட்ட மணிக்கணக்கில் வெள்ளிங்கிரியை உருவாத குறையாக மந்திரித்து ஒரு வழியாக அவனை  இணங்க வைத்து விட்டார்.

"சார். அந்த புள்ள பொன்னியும் செத்துப்போச்சு .இனிமே ஒளிச்சு மறச்சி  வச்சு  எதுவும் ஆகப்போறதில்ல.அவ மேல எனக்கு ஆச.அவளோட குடும்பம் நடத்தனும்னு ஆசைப்பட்டேன்.நான் வேற சாதி. பொன்னி வேற சாதி. ஊரும் ஒத்துக்காது. உறவும் கை கொடுக்காது. அதனால அவள கெடுத்திட்டா நான்ஆசப்பட்டது நடந்திரும்னு நெனச்சேன். வெலமெடுத்த சிறுக்கி தங்கராசு மேல ஒரே கிறுக்கா இருந்தா.அவளோடு மல்லுக்கட்டியும்  சொகம் அனுபவிக்க முடியல.மென்னிய பிடிச்சு கொன்னு தொங்க விட்டுட்டேன். சத்தியமா இதான் நடந்துச்சி சார்."

நெடுஞ்சான் கிடையாக ராஜதுரையின்  காலில் விழுந்தான். தப்பிக்க முடியாது  என்பதை உணர்ந்தவனுக்கு வேறு வழி தெரியவில்லை. ஊரில்  ஒரு பய மதிப்பதில்லை. இனிமேல் அவனை தங்கராசு குடும்பம்  ஆதரித்தால்தான் ஓரளவுக்காவது தோள் மேல் துண்டு போட்டு நடக்கலாம்..பொன்னி இல்லாத சோகம் தங்கராசுவுக்கு  சில மாதம் இருக்கலாம் .போகப்போக அவனுக்கு ஆறுதல் சொல்ல ஒரு ஆள் தேவைப்படும். அது அவனது நண்பனான நானாக இருக்கட்டுமே..எத்தனை நாளைக்கு  என் மீது கோவமாக இருக்க முடியும்?என்ன இருந்தாலும் அவனது  சின்ன வயசு சிநேகிதன் நான்தானே!

இப்படி பல வகையிலும் யோசித்தபின்னர்தான் போலீசில்  உண்மையை ஒப்புக்கொண்டான்.

அன்ன மயிலுவை சினேகிதிகள் சுற்றிக்கொண்டார்கள். அவளவளின் அந்தரங்க அனுபவங்கள் அங்கே பந்தியில்..!

பிரிமணை கொண்டை போட்டு பிச்சிப்பூவை வளையம் மாதிரி  வைத்துக் கொண்டிருந்த பவளம் கிசுகிசுத்த குரலில் " எந்த பயமும் வேணான்டி..பயந்தா ஆம்பளைகளுக்கு வெலம்தான் வரும்.கண்டமேனிக்கு மேஞ்சிருவாங்க. அதுவும் ஒரு சொகம்தான்னு வெச்சுக்க. தாலிய கட்டிக்கிட்டு  படுக்கமாட்டேன் வெலகிப் படுய்யான்னு   மொரண்டு புடிச்சம்னு வையி. நட்டம் நமக்குத்தான். மொரண்டு புடிச்ச நாளல்லாம் நமக்கு சந்தோசம் போச்சேன்னு அப்புறம் குத்த வெச்சு கண்ணீர் வடிச்சா கிடைச்சிருமா? அடியேய்...வாய்க்கால்ல தண்ணி ஓடுற போதே குளிச்சிரு!" என்று அட்வைஸ் பண்ணினாள்.

" மொத ராத்திரில  எத்தனை வாட்டிடி இருந்தே ?" ஆசையாசையாய் கேட்டாள் ஒருத்தி.

"ஆமா இதுக்கெல்லாம் பேரேடு போட்டு கணக்கா எழுதுவாங்க?.வெளக்க  அமத்துனமா கட்டிப்பிடிச்சி படுத்தமான்னு காரியத்தில எறங்கிடுவாங்க"-- சொன்னவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. ஆனால் ஏக்க சக்க கனவில் மிதப்பவள் மாதிரி தெரிந்தது. 

"புருசன் பொண்டாட்டின்னு ஆயிட்ட பெறகு ஒன்னா  சுத்துறதும் சினிமாவுக்கு சேந்து  உரசிட்டு நடந்து போறதும் பாய்ல ஒன்னுமண்ணா பொரல்றதும் கடவுள் கொடுத்த வரம்டி!"

இப்படி எவ்வித கூச்சமும் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.

அவ்வளவையும் கவனமாக கேட்கிறாள் அன்னம்.

தங்கராசு அவளை இறுக்கி அணைத்து உதடுகளை நனைப்பது போல இருந்தது.

------உண்மை நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு புனையப்படுகிற தொடர்.