Sunday 26 November 2017

காதல்..காமம்.( 48.) அடைக்கன் சரண்டர்.

                                     "யாருங்க.? யாருன்னு சொல்லாம சும்மா இருந்தா என்னங்க அர்த்தம்? வேல, வெட்டி இல்லேன்னா மீனாச்சி கோவில் வாசல்ல உக்காந்து  திருவோடு தூக்கவேண்டியதானே?"
                                   மறுமுனையில் எந்த அரவமும் இல்லாததால் அன்னத்துக்கு கடுப்பாகிவிட்டது. அன்னத்தின் ஆத்திரம் பார்த்த செவனம்மாவுக்கும் மாயக்காளுக்கும் பயம் .
                                   "என்னத்தா மயிலு? யார்த்தா போன்ல? ஆம்பளையா ,பொம்பளையா ..நம்ம சொந்தக்காரகளா இருந்துறப் போறாய்ங்கடி .வம்புக்கு  அலைய்ற சாதிடி! கொழம்புல ஒரு எலும்புத்துண்டு கொறஞ்சாலும்  பூமிக்கும் ஆகாசத்துக்கும் குதிப்பாய்ங்க கொணம் கெட்ட பயலுக.! " என்று சிரிக்கிறாள்  செவனம்மா.
                              "யார்னே தெரியலம்மா!" என்றபடி ரிசிவரை வைத்து விட்டு அத்தை மாயக்காள் பக்கமாக வந்தமர்ந்தாள். எலி அழுதா பூனை விட்டுருமா என்பது மாதிரி மறுபடியும் போன் கத்தியது.
                              "சனியன்..... கொரவளையை பிடிச்சி கொல்லுடி! எந்த நாயா இருந்தா என்ன? பேசாம உக்காரு.கத்திட்டு ஓயட்டும்!"
                                 "இல்ல செவனு! கல்யாண வீடுன்னா நாலு பேரு கூப்புடத்தான் செய்வாய்ங்க.மொதவாட்டி என்ன ரிப்பேரோ..பேச முடியாம இருந்திருக்கும். இப்ப போய் பாரு. " மருமகளை எழுப்பி விட்டாள் மாயக்காள். சலித்துக் கொண்டு எழுந்தாள் அன்னம்.
                                   "அலோ" என சொல்லுவதற்குள் "அன்னமா பேசறது?" என்று கேட்டது எதிர்முனை.  
                                    "ஆமா...யாரு நீங்க? என்ன வேணும்?"
                                    "தாயி...போனை வெச்சிராதேம்மா! நானு அடக்கன் பேசுறன் மா!செத்துப்போனாலே செல்லத்தாயி.! அவ புருசன். நாந்தாம்மா அவள கொன்னேன்.போலீஸ்ல உண்மைய சொல்லி என்ன ஒப்படைக்க  வந்திருக்கன் தாயி! இப்ப வக்கீல்சாமி ஆபீஸ்லேர்ந்து பேசுறன்.  ஒரு நெசத்த சொல்லணும்.சின்ன அய்யாவும்  அய்யாவும் வந்தா சொல்லிருவன் தாயி! " என்று  சொன்னவன் வக்கீல் பெயரையும் சொன்னான். வக்கீல் புதுத் தெருவில் இருக்கிறது அவன் சொன்ன வக்கீல் ஆபீஸ்.
                                  அன்னத்தின் மனசு இப்பத்தான் டிக் டிக் அடிக்கிறது.! இருவரிடமும் சங்கதியை சொன்னாள்.மாயக்காளுக்கு பதட்டம். "அடி ஆத்தி! ஊருக்கு போன சனியன் தோமாலை போட்டுக்கிட்டுல வந்திருக்கு. என்ன செய்வேன். அடி ஆத்தி!" என்று கண்ணை கசக்கினாள்.அதுவரை ஊமைச்சாமி மாதிரிபத்திரிக்கை படித்துக்கொண்டிருந்த  இருந்த தங்கராசுக்கு அவள் சொன்னதை கேட்டதும் புது ரத்தம் பாய்ந்தது மாதிரி இருக்கிறது.
                               வருங்கால மாமியாருக்கு ஆறுதல் சொல்கிறாள் மருமகள்!
                              "அத்தே..எதுக்கு வெசனம்?அவன் வந்தது நல்லதுக்குத்தான்! மாமன் மேல உள்ள சந்தேகம் போயிரும்.போலீஸ்ல அவன்  நெஜத்த சொல்லிட்டா  மாமன் தப்பு பண்ணலேங்கிறது தெரிஞ்சிரும்ல அவங்களும் .நிம்மதியா கல்யாண வேலைகள பாப்பாக.அத்தான கூட்டிட்டு மாமன போக சொல்லுங்க.எல்லாம் நல்லதுக்குத்தான்!" என்றாள் அன்னம்.
                          வேகமாக எழுந்த
மாயக்காள் முந்தானையை வேகத்துடன்  ஒரு உதறு உதறி இடுப்பில் சொருகிக்கொண்டாள்..
                           அவர்களிடம் சொல்லிவிட்டு மகனுடன் வெளியேறினாள்.
                           "எந்த எடுபட்டபய வெச்ச சூனியமோ இன்னியோடு தொலையட்டும்.நான் வாக்கப்பட்ட நாள்லேர்ந்து ஒருநா கூட என் ராசா கண்ல  தண்ணி வந்ததில்ல.அர்ச்சுனன் மாதிரில்ல திரிஞ்சாக,அவுகள மொடக்கிப்  போட்ட விதிக்கும் ஒரு முடிவ ஆத்தா மீனாச்சி காட்டிட்டாளே......!" வழி நெடுகிலும் இதே மாதிரியாக  புலம்பல்தான்.!
                    
                  உண்மை  நிகழ்வை  வைத்து  புனையப்படுகிற  தொடர்.

No comments:

Post a Comment