Sunday, 27 November 2016

வாழ நினைத்தால் வாழவா முடியாது?

கவர்ச்சிக்காக  இந்த பெண்ணின் படத்தை  இங்கு  பதிவு செய்யவில்லை.

அல்லது...

பார்,,பார் ,,இவ்வளவு அழகற்ற பெண்ணுக்கு  அழகு ராணி பட்டம்  சூட்டி  கிரீடம் அணிவித்திருக்கிற  அநீதியைப் பார் என்பதற்காகவும்  இந்த கர்ப்பிணிப் பெண்ணின் படத்தை காட்டவில்லை.

கவர்ச்சியோ, அழகு ராணி விருதோ  எதற்கும் இங்கு  இடம் இல்லை. இங்கு வலியுறுத்தப்படுவது  திண்மை.

சிங்கமே எதிர்வந்தாலும் மன வலிமையும்,சாதுர்யமும் இருந்தால் தப்பிக்கவும்  வழி கிடைக்கும் என்பதை சொல்வதற்கும்தான் இந்த பெண்மணியின் படத்தை வெளியிட்டிருக்கிறேன்.

ஆண்ட்ரியா கிராண்ட்ஸ் .இவளின் பெயர்.ப்ளோரிடா வை சேர்ந்தவள்.

2001-ல் இவளும் சகோதரன் கெண்டலும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பினர், அம்மா அலுவலகம் சென்றுவிட்டதால் கையில் இருந்த சாவியினால்  வீட்டை திறந்து தம்பியுடன் சென்றுவிட்டாள்.

வீட்டுக்குள் ஒருவித வாசம்.மணம்.அது இன்னதென அறியவில்லை அந்த எட்டு வயது சிறுமி.

கிச்சனில் இருந்து வந்த அந்த வாசம் சமையல் கியாசிலிருந்து லீக் ஆகியதால் நுகரப்பட்ட மணம். சிறுவனும் சிறுமியும் அதை அறிந்திருக்கவில்லை.

அறைக்குள் சென்றதும் ஆண்ட்ரியா மின்சார சுவிட்சை போட்டாள்!

மறுநொடியே குண்டு வெடித்தைதைப்போன்ற பயங்கர சத்தம்!

இருவரும் தூக்கி வீசப்பட்டனர், ஆண்ட்ரியாவுக்கு மூன்றாவது டிகிரி தீக்காயம். அதாவது உடலில் எண்பத்திஐந்து சதவிகிதம் வெந்து போய்விட்டது.உயிர் பிழைக்க முடியாது என டாக்டர்கள் கை விரித்து விட்டனர். மாதக்கணக்கில் போராடினர். மரணவலியில் அனுதினமும்  அழுது கதறினாள். ஆனால் தாங்கிகொண்டாள். உயிர் பிழைப்போம் என நம்பினாள். அதுதான் அவளது தினசரி பிரேயராக இருந்தது.

கல்யாணம் செய்யக்கூடாது. செய்து கொண்டாலும் கர்ப்பம் தரிக்கக்கூடாது. அது உயிரை கொன்று விடும் என கடுமையாக எச்சரித்து அனுப்பினார்கள்  டாக்டர்கள்.

உயிர் மீது படுத்திருந்த யானையையே புரட்டிப்போட்டுவிட்ட ஆண்ட்ரியாவுக்கு முன்னை விட மன வலிமை அதிகமாகி இருந்தது. தன்னைப் போன்ற தீக்காயம் பெற்றவர்களுக்காக ஒரு காப்பகத்தை ஆரம்பித்தாள். கல்யாணமும் செய்துகொண்டு கரு தரித்தாள். தானும் தனது  கருவறையில் இருக்கும் குழந்தையும் நலமே என்பதை உணர்த்த இத்தகைய புகைப்படங்களை எடுத்து வெளியிட்டாள். விதம் விதமாக!

மருத்துவ உலகம் அவளை வியப்புடன் பார்க்கிறது!

வாழ நினைத்தால் வாழவா முடியாது?

அன்புடன்,
உங்களது,
குரங்கு.

Saturday, 26 November 2016

காதல்....காமம்..( 13.)

தங்கராசுவும் பொன்னியும் பஸ்ஸில் பக்கம் பக்கமாக அமர்ந்திருந்தனர்.

சிலைமான் செல்லும் பஸ். சிலைமானில் இறங்கி அப்படியே காலாற வைகை கரை ஓரமாக நடந்து ,,,கரையோரம் ஓடும் ஆற்று நீரில் கால் நனைத்து பிறகு மணலில் நடந்தால் குருமணலில் நடப்பது  சுகமாக இருக்கும்.!

இருவரும் ஆற்றின் நடுப்பகுதியில் அப்படியே படுத்து விட்டனர்.

"ராசு...ஆயுசு முழுசும் இப்படி சொகமாக இருக்க முடியுமா?"

"ம்..."

"சாயங்கால வெயில்..மணல் சூடு...ஒடம்புக்கு ஒத்தடம் கொடுக்கிற மாதிரி இருக்குல்ல?"

"ம்ம்"

" ஒன் நெஞ்சு மேல சாஞ்சு படுக்கணும் போல இருக்கு.,,! சுருட்ட முடியை  கோதணும்..மெல்ல ஒதட்டை கடிக்கணும்....இப்படி எவ்வளவோ  மனசில  இருக்கு...கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியெல்லாம் ....தப்பா ராசு?"

இது வரை ம்ம் கொட்டிவந்த தங்கராசுக்கு இப்போதுதான் சுருக்கென இருந்தது.

"பொன்னி..இம்பிட்டு நேரம் என்ன சொன்னே?"--உண்மையிலேயே அவனது நினைப்பு எல்லாம் அங்கு இல்லை. வீட்டை சுற்றியே இருந்தது. பொன்னி 'தப்பா ராசு?' என்று கேட்டதும்தான்  சூழலை உணர்கிறான்.

பொன்னி கோபப்பட்டதிலும் தப்பில்லை.

"நாசமா போறவனே....இம்பிட்டு நேரமும் என் ஆசைகளை மனசு விட்டு சொல்லிருக்கேன்.அதெல்லாம் காதுல ஏறலியா...எந்த நெனப்புலடா...இங்க  என்ன கூட்டிட்டு வந்தே? கல்யாணத்துக்கு பெறகும் இப்படித்தான் இருப்பியா..உனக்கு என் நெனப்பே இல்லியா...? ஒன் வயசுக்கு இப்படி ஒருத்தி  தனியா வந்தா என்னன்ன தோணனும்? எனக்கே என்னவோ..எவ்வளவோ  தோணுது..ஒனக்கு அந்த ஆசையே வரலியா? மரக்கட்டையாடா நீ?"

இப்படியெல்லாம் பேசுகிறாள். அவனோ முதுகில் ஒட்டியிருந்த  மணலை தட்டிக்கொண்டு அமர்கிறான்.

"நெறைய இருக்கு பொன்னி! சத்தியமா சொல்றேன்.நான் நல்லா தூங்கி ரொம்ப நாளாச்சு." என்றதும் அவளும் எழுந்து உட்கார்ந்தாள்!அவன் எதையோ  நினைத்து மனதை குழப்பியபடி படுத்திருந்திருக்கிறான் என்பது புரிகிறது.

பாசமுடன் கன்னங்களை கைகளால் தாங்கிக்கொண்டு அவனை உற்றுப் பார்க்கிறாள்.''என்ன ஆச்சு ராசு? பிரச்னையா?"

"ப்சு...!"

அவனுடைய உதடுகளில் அழுத்தி முத்தமிட்டாள்.  அப்படியே மணலில் சாய்ந்துவிட்டனர். முதன் முதலாக அவளது மார்பின் மென்மையின் சுகம்!

அவளது மூச்சுக்காற்றின் வெப்பம். யாரும் பார்க்கவில்லை என்கிற தைரியம். அவள் வெகு நேரம் உதடுகளை விடவில்லை.

விருப்பமில்லாமல் அவளது பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட தங்கராசு தயங்கியபடியே பேசுகிறான்.

"பொன்னி..உன்னை இங்கே கூட்டியாந்ததுக்கு காரணம் இருக்கு....ஆனா சொல்றதுக்கு தைரியம் வரல! அதான் ஊமைச்சாமியாரா கெடக்கிறேன்!"

"நம்ம கல்யாணத்துக்கு எதிர்ப்பு சொல்றாங்களா?"

"இல்ல. எங்கப்பனின் தொடுப்பு  செல்லத்தாயி நேத்து வீட்டுக்கு வந்து எங்கத்தாளை அடிச்சுப்போட்டு போயிட்டா...எங்கப்பன் பேச்சு மூச்சு காட்டல. எதுக்காக அவ வந்தா..என் ஆத்தாள அடிச்சா...ஒண்ணுமே புரியல பொன்னி!"

"கூத்தியாளுக்கு அம்புட்டு தைரியம்னா ....பெருசா ஏதோ ஒன்னு இருக்கு ராசு.
கண்டுபிடிக்கலாம்...! கவலைப்படாதே...நானும் தொணையா இருக்கேன்.
எந்திரி.."

தங்கராசுவும் பொன்னியும் கரையை நோக்கி நடந்தனர்.!

இன்னும் வரும். உண்மைச்சம்பவத்தின்  புனைவு.

Thursday, 10 November 2016

காதல்...காமம்.( 12.)

"என்னத்த சொன்னாரு...எல்லாம் பழைய குப்பைதான்" என்றபடியே திருப்பி  படுத்துவிட்டார்  வடிவேலு.

"என்னமோ பண்ணுங்க. என் வாழ்க்கை இப்படித்தான் சிரிப்பா சிரிச்சி  சீரழியனும்னு எழுதி வெச்சிருக்கு. அத மனுசப்பயலால மாத்த முடியுமா? என் நெஞ்சுக்குள்ள கிடக்கிற தீயை அவ்வளவு சீக்கிரமா  அணைச்சிரமுடியுமா ..அதுக்கு நான்தான் தண்ணிய ஊத்தணும்!"

வெடுக்கென்று சொல்லிவிட்டு அவளின் ரூமுக்குள் சென்று கதவை தாழ் போட்டுக் கொண்டாள்.

"பாத்தியாடி ...மாயி. அந்த குட்டி எப்படி சிலுப்பிட்டு போகுதுன்னு! மட்டு மரியாதை தேஞ்சுக் கிட்டே போகுதுடி!" என்று அங்கு வந்த மாயக்காளிடம் சொல்ல , அவளது குறையை சொல்ல ஆரம்பிக்கிறாள் மெதுவான குரலில்!

"இன்னிக்கி வெள்ளென எந்திரிச்சதும்  அந்த சிறுக்கி பச்ச மெளகாயை அப்படியே கடிச்சி தின்னுட்டு தண்ணிய குடிக்கிறா! கண்ணுல இருந்து அம்புட்டு தண்ணி கொட்டுது. பதறிப்போயி பாவி மகளே ஏண்டி இப்படி பண்றேன்னா  பதிலுக்கு வாயாடுரா! நீ ஆண்டு அனுபவிச்சிட்டவ.போயி  அடுப்படியிலே கெடன்னு சொல்றா! இந்த கொடுமைய எங்கே போயி சொல்வேன்?"

"சரி..அந்த புள்ள காதுல விழுந்துரபோகுது.. போயி .சொம்பு நெறய தண்ணி  கொண்டு வா! வயிறாவது குளிரட்டும்!" எழுந்து உட்கார்ந்து கொண்டார்.

தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில்.....

அழகிரி என்கிற வெள்ளிங்கிரி  கையை கட்டிக் கொண்டு நிற்கிறான்.

"சொல்லு ..உனக்கும் தங்கராசுக்கும் எப்படி பழக்கம்? அப்படியே  சினிமா கதை  மாதிரி சொல்லணும். அதுக்காக உண்மையை மறச்சி பொய்யை சொல்லக்கூடாது. ஆரம்பி?"

"பொய் சொல்லி  என்ன சார் ஆகப்போகுது? " என்று சொல்ல ஆரம்பித்தான்.

"பக்கத்துபக்க வீடு ! காலேஜ் வரை ஒன்னாதான் படிச்சோம். அமெரிக்கன் காலேஜ்ல படிக்கிறப்ப அடிக்கடி குமுளிக்கு போவோம்.     எனக்கு இழுவை  பழக்கம்......"

இடை மறித்த இன்ஸ்பெக்டர் ராம்குமார் " கஞ்சான்னு தெளிவா சொல்லு" என்று திருத்தினார். " சரி  ...அது மட்டும்தானா?  அப்ப   பொம்பள பழக்கம் இருக்கணுமே...உன் நண்பனுக்கும் அனுபவம் உண்டா?"

"அவனுக்கு எந்த பழக்கமும் இல்ல சார். நான்தான் ......"

"வேற?''

"நான் காதலிச்ச பொண்ணு மேல அவனுக்கும் ஆசை இருந்தது எனக்கு தெரியாது. தங்கராசுவை அவளும் காதலிச்சா!"

"என்னடா  குழப்புற...?"

"நான்தான் அவள லவ் பண்ணுனேன். அவ ஜாடை கூட காட்டல! ஒரு நாள் சாமி கும்பிட மீனாட்சியம்மன் கோவிலுக்கு போனேன்! பொற்றாமரை குளம் படியில் ரெண்டு பேரும் உக்காந்திருந்தாங்க.பேசுனதை கேட்டேன்.

பிளாஷ்பேக்....
-------------------

"வீட்டில சொல்லிட்டியா பொன்னி? எங்க வீட்டில யாரும் எதிர்ப்பு சொல்லமாட்டாங்க!"

"எங்க வீட்டில பச்சை விளக்கு காட்டியாச்சு. நோ அப்ஜெக்சன்  ."

"அப்பறம் என்ன  சினிமாவுக்கு  வெளியூருக்குன்னு  கெளம்பவேண்டியதுதான்"

"பெறகு  நேரா 'அதுக்கும்' போகலாம்னு கேப்பியே? அதெல்லாம் வேணாம்பா! சந்திச்சமா பேசுனமான்னு  இருப்போம்.வேணும்னா சினிமாவுக்கு போகலாம். இங்கிலீஷ் படம் மட்டும் வேணாம். கையை வெச்சிட்டு சும்மா இருக்க மாட்டே?"

"என்ன பொன்னி இப்படி வாருறே...பிக்காளிப்பயன்னு நெனச்சிட்டியா? எங்கப்பா அம்மா என்னை பொறுக்கியா வளக்கல!"

தலை கவிழ்ந்தபடி சொன்னான்.

"ராஜ்... கழுத்து நெரிச்ச கோழி மாதிரி தொங்கிட்ட. ஆம்பள  தலை கவுரக் கூடாது. சரியா? வா கெளம்பலாம்." இருவரும்  எழுந்து புறப்பட்டார்கள்.

இனி அடுத்தவாரம். இது உண்மை நிகழ்வின் சிறு தொகுப்பு.
--------------------------------------------------------------------                                                                                                                                                             

Sunday, 6 November 2016

காதல்...காமம்..(பகுதி 11.)

தயை கூர்ந்து இந்த குரங்கை மன்னித்து விடுங்கள். இது நாள் வரை தட்டச்சு செய்தவரின் பிழையினால் கேரக்டர்களின் பெயர்கள் மாறி விட்டன.அதை தவிர்க்க நானே தட்டச்சு செய்ய தொடங்கி இருக்கிறேன்.
தங்கராசு.;வடிவேலு,மாயக்காளின் மகன்.
அன்ன மயிலு :தங்கராசுவின் மனைவி.
அங்கம்மா:வடிவேலுவின் அம்மா,
செவனம்மா:அன்னமயிலுவின் அம்மா.
அழகிரி என்கிற வெள்ளியங்கிரி: தங்கராசுவின் நண்பன்.
ராம்குமார்: இன்ஸ்பெக்டர்.சிதம்பரம் :சப்-இன்ஸ்பெக்டர்
செங்கமலம்:போலீஸ் ஆள்.
----------------------------------------------------------------------------------------------------------------------
 மதுரை  வண்டியூர் தெப்பக்குளத்தில் புது மாப்பிள்ளை தங்கராசு தற்கொலை செய்து கொள்கிறான்.ஏன் செய்துகொண்டான் என்பதுதான் முன்கதை சுருக்கம்
---------------------------------------------------------------------------------------------------------------
இன்ஸ்பெக்டர் ராம்குமார் வந்ததும் வடிவேலு மெதுவாக எழுந்து வரவேற்றார்.மாயக்காள் முந்தானையை இழுத்துப் போர்த்திக்கொண்டு உள்ளே சென்று விட்டாள். கிழவி அங்கம்மா மட்டும் காலை நீட்டி வெத்திலைய  இடித்தபடி...."போனதுதான் போனான் போக்கத்த பய. இப்படி  வம்பு தும்புலையா இழுத்து விட்டிருக்கணும். சென்ம சனி"என்று சத்தமாகவே சொன்னாள்.

"எதுக்கு இப்படி சலிச்சு புளிச்சிக்கிரே ! சும்மா கெட ஆத்தா!"

அம்மாவை வைதபடி  அதிகாரியை தனி அறைக்கு கூட்டிப்போனார்
வ டிவேலு. அறைக்கதவை  சாத்திக்கொண்டார்..

அன்னமயிலு  இருந்த அறைக்கதவு திறக்கிறது. அங்கம்மாளின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். உள்ளே பேசுவது ஏதாவது காதில் விழாதா?

"என்னத்தா..உம் புருசனை சனின்னு வஞ்சதுக்கு கோபமா?" கன்னத்தை தடவிவிட்டபடி கேட்கிறது கிழவி.

"கோவப்பட்டு என்ன ஆகப் போகுது?களைன்னு அறுக்கப்போனா பாம்பு வந்து கொத்துது. நானும் நாலு பேரைப்போல சோடி போட்டுக்கிட்டு புருசனோட  போகணும்னுதான் ஆசைப்பட்டேன். பாதகத்திக்கு அமையலியே ஆத்தா ,அமையலியே! என்ன பாவம் செஞ்சேனோ தாலி அறுத்து முண்டச்சியா  நிக்கிறேன்! தனி மரமா நிக்கிற வயசா எனக்கு? சொல்லுத்தா! மாரு சொறக்காம ...மடிப்பிள்ளை இல்லாம மலடியா வாழணும்கிறது விதியா?"

கண்ணீர் பொலபொலவென வடிகிறது அன்னத்துக்கு.

கிழவிக்கு நெஞ்சு படபடக்கிறது. அன்னத்தை அப்படியே தன் மடியில் சாய்த்துக் கொள்கிறாள்.

''மருத மீனாச்சி...உன்னோட சீமையில இப்படி ஒரு அக்கிரமம் நடக்கலாமா?கட்டுன மறுநாளே தாலியை அறுத்து விட்டுட்டியே...நீயெல்லாம் ஒரு சாமின்னு இத்தனை நாளா கும்பிட்டதுக்கு இதான் பலனா?"

கிழவியினால் இப்படித்தான் ஆறுதல் சொல்ல முடியும்!

அறைக்குள் சென்ற இன்ஸ்பெக்டர் ராம்குமாரும் வடிவேலுவும் அரைமணி நேரத்துக்குப் பின் கதவைத் திறந்தார்கள்.

வடிவேலு முகத்தில் இனம் புரியாத சோகம். கை குவித்து அதிகாரியை அனுப்பிவைத்தார். எதுவும் பேசாமல் தோமுத்ரா கட்டிலில் ஏறி சாய்ந்து படுத்துவிட்டார்.

''என்னங்க மாமா சொன்னாரு...இன்ஸ்பெக்டரு?"

கிழவியின் மடியில் படுத்திருந்த அன்னம் விட்டத்தை பார்த்தபடியே கேட்டாள்.
இனி அடுத்தவாரம். உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்படும் சிறு தொடர்.