Saturday 26 November 2016

காதல்....காமம்..( 13.)

தங்கராசுவும் பொன்னியும் பஸ்ஸில் பக்கம் பக்கமாக அமர்ந்திருந்தனர்.

சிலைமான் செல்லும் பஸ். சிலைமானில் இறங்கி அப்படியே காலாற வைகை கரை ஓரமாக நடந்து ,,,கரையோரம் ஓடும் ஆற்று நீரில் கால் நனைத்து பிறகு மணலில் நடந்தால் குருமணலில் நடப்பது  சுகமாக இருக்கும்.!

இருவரும் ஆற்றின் நடுப்பகுதியில் அப்படியே படுத்து விட்டனர்.

"ராசு...ஆயுசு முழுசும் இப்படி சொகமாக இருக்க முடியுமா?"

"ம்..."

"சாயங்கால வெயில்..மணல் சூடு...ஒடம்புக்கு ஒத்தடம் கொடுக்கிற மாதிரி இருக்குல்ல?"

"ம்ம்"

" ஒன் நெஞ்சு மேல சாஞ்சு படுக்கணும் போல இருக்கு.,,! சுருட்ட முடியை  கோதணும்..மெல்ல ஒதட்டை கடிக்கணும்....இப்படி எவ்வளவோ  மனசில  இருக்கு...கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியெல்லாம் ....தப்பா ராசு?"

இது வரை ம்ம் கொட்டிவந்த தங்கராசுக்கு இப்போதுதான் சுருக்கென இருந்தது.

"பொன்னி..இம்பிட்டு நேரம் என்ன சொன்னே?"--உண்மையிலேயே அவனது நினைப்பு எல்லாம் அங்கு இல்லை. வீட்டை சுற்றியே இருந்தது. பொன்னி 'தப்பா ராசு?' என்று கேட்டதும்தான்  சூழலை உணர்கிறான்.

பொன்னி கோபப்பட்டதிலும் தப்பில்லை.

"நாசமா போறவனே....இம்பிட்டு நேரமும் என் ஆசைகளை மனசு விட்டு சொல்லிருக்கேன்.அதெல்லாம் காதுல ஏறலியா...எந்த நெனப்புலடா...இங்க  என்ன கூட்டிட்டு வந்தே? கல்யாணத்துக்கு பெறகும் இப்படித்தான் இருப்பியா..உனக்கு என் நெனப்பே இல்லியா...? ஒன் வயசுக்கு இப்படி ஒருத்தி  தனியா வந்தா என்னன்ன தோணனும்? எனக்கே என்னவோ..எவ்வளவோ  தோணுது..ஒனக்கு அந்த ஆசையே வரலியா? மரக்கட்டையாடா நீ?"

இப்படியெல்லாம் பேசுகிறாள். அவனோ முதுகில் ஒட்டியிருந்த  மணலை தட்டிக்கொண்டு அமர்கிறான்.

"நெறைய இருக்கு பொன்னி! சத்தியமா சொல்றேன்.நான் நல்லா தூங்கி ரொம்ப நாளாச்சு." என்றதும் அவளும் எழுந்து உட்கார்ந்தாள்!அவன் எதையோ  நினைத்து மனதை குழப்பியபடி படுத்திருந்திருக்கிறான் என்பது புரிகிறது.

பாசமுடன் கன்னங்களை கைகளால் தாங்கிக்கொண்டு அவனை உற்றுப் பார்க்கிறாள்.''என்ன ஆச்சு ராசு? பிரச்னையா?"

"ப்சு...!"

அவனுடைய உதடுகளில் அழுத்தி முத்தமிட்டாள்.  அப்படியே மணலில் சாய்ந்துவிட்டனர். முதன் முதலாக அவளது மார்பின் மென்மையின் சுகம்!

அவளது மூச்சுக்காற்றின் வெப்பம். யாரும் பார்க்கவில்லை என்கிற தைரியம். அவள் வெகு நேரம் உதடுகளை விடவில்லை.

விருப்பமில்லாமல் அவளது பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட தங்கராசு தயங்கியபடியே பேசுகிறான்.

"பொன்னி..உன்னை இங்கே கூட்டியாந்ததுக்கு காரணம் இருக்கு....ஆனா சொல்றதுக்கு தைரியம் வரல! அதான் ஊமைச்சாமியாரா கெடக்கிறேன்!"

"நம்ம கல்யாணத்துக்கு எதிர்ப்பு சொல்றாங்களா?"

"இல்ல. எங்கப்பனின் தொடுப்பு  செல்லத்தாயி நேத்து வீட்டுக்கு வந்து எங்கத்தாளை அடிச்சுப்போட்டு போயிட்டா...எங்கப்பன் பேச்சு மூச்சு காட்டல. எதுக்காக அவ வந்தா..என் ஆத்தாள அடிச்சா...ஒண்ணுமே புரியல பொன்னி!"

"கூத்தியாளுக்கு அம்புட்டு தைரியம்னா ....பெருசா ஏதோ ஒன்னு இருக்கு ராசு.
கண்டுபிடிக்கலாம்...! கவலைப்படாதே...நானும் தொணையா இருக்கேன்.
எந்திரி.."

தங்கராசுவும் பொன்னியும் கரையை நோக்கி நடந்தனர்.!

இன்னும் வரும். உண்மைச்சம்பவத்தின்  புனைவு.

No comments:

Post a Comment