Tuesday, 17 May 2016

குற்றப் பரம்பரை. (பகுதி.4,)

சிகப்பி  என்று சொன்னாலும்  அவள் மாநிறம்தான். திருச்சுழி சொந்த ஊர் .பெரிய படிப்பு  இல்லேன்னாலும் கணக்கு  வழக்கு, எழுதப் படிக்கத் தெரிஞ்சவ. சடங்கானதும் அப்பனும் ஆத்தாளும் ஊர் வழக்கப்படி  படிப்பை  நிறுத்திட்டாங்க. வயசுக்கு  வந்தப்பிறகு  அவ வாழ்க்கை  வீட்டுக்குள்ளேயே  முடங்கிப் போச்சு.முறைப்பயலுக,வயசு ஆம்பளைக யார் வந்தாலும் கதவுக்கு பின்னாடி நின்னு முகம் காட்டாமதான் சேதி கேட்டுக்குவா!

அவளை மாதிரி வயசுக்கு வந்த பொண்ணுக வெள்ளென வெடுக்குன்னு சூரியன் வருவதற்கு முன்னாடியே கம்மாய்க்கு போயிட்டு காலைக்கடனை  முடிச்சுக்கிட்டு  திரும்பிடுவாங்க.மந்தை ஆடுகள் மாதிரிதான் கூட்டமாக போவாங்க,வருவாங்க.தனியா விட மாட்டாங்க.  தனியா போகிற  மாதிரி இருந்தால் ஆத்தா, மதினின்னு உறவுல யாராவது வருவதும் உண்டு.

'செவப்பி!அன்னியத்துல கண்ணாலமா, இல்ல அத்த, மாமான்னு  உறவுல யாரையாவது பெத்து வச்சிருக்காங்களா? வயசு ஏறிக்கிட்டே போகுதடி! '

'உனக்கு அவசரம்னா உன் ஆத்தாக்கிட்ட சொல்லு? இல்லேன்னா  செந்தட்டிய  எடுத்து தடவிக்கிடி!"

மொத்த எளவட்ட சிறுக்கிகளும்  சிரிக்கிறாளுக.!.இப்படி சிலுப்பட்டத்தனமாக  பேசுவதில்  அவளுகளுக்கு  ஒரு சந்தோசம்.

'எனக்கெதுக்கிடி செந்தட்டி! அத்த மவன் ரெடியா இருக்கான். சாடை காட்டுனேன்னு வையி, மருதவீரசாமி தூக்கிட்டு போன மாதிரி  என்னைய  தூக்கிட்டு போயிடமாட்டான்?"

'அப்படி சொல்லுடி சிலுப்பட்ட சிறுக்கி!எப்படா கதவு  திறப்பான்னு  காத்திட்டு தான்  கெடக்கிறியா?"

"அடியேய்...நான் சொல்றத  சுருக்குன்னு கேட்டுக்குங்க.குமரு இல்லாம கண்ணாலம் பண்ணிக்கிட்டு மலடு இல்லாம பெத்துறனும். இதான் பொண்ணா  பெறந்தவளுக்கு மருவாதி. எங்காத்தாளுக்கு பத்து வயசிலேயே  கண்ணாலம்  நடந்திருச்சாம்.".

"உங்காத்தாளுக்கு  பத்து வயசிலேயே கண்ணாலம்னா அவளுக்கும் உன்ன  மாதிரியே அவசரம்னு சொல்லு"- செவப்பி சொன்னதும் எல்லோரும் மறு படியும் சிரிக்கிறாளுக. '' த ... பாருங்கடி எனக்கு மாப்ள எந்த சீமையில,நாட்ல
 இருக்கான்றது  தெரியாது.ஆனா ஏர பிடிச்சிக்கிட்டு இந்த கருசக்காட்டை  உழுகிறவனா  மட்டும் இருக்கக்கூடாது.அரை காசுன்னாலும் அது  சர்க்கார் கொடுக்கிறதா இருக்கணும்.'என்கிறாள்  சிகப்பி.

''எழுத படிக்கத் தெரிஞ்சவங்ற  கொழுப்புடி! அதான் பேசுறா. கலெக்டரே  வருவான்டி!கவுரு பாடியும் கவுனும் போட்டுக்கிட்டு உன் திமிர காட்டு. திம்சு  கட்ட மாதிரி இருக்கில்ல நல்லா மிதிப்பான்."

''என்னோட ஆசய சொன்னா  இவளுக்கேன்டி எங்கங்கேயோ  எரியிது.!"

'பின்னே...வேசையா போறதுக்கும்  ஒரு மொகம் வேனும்டி" என்கிறாள்  இன்னொருத்தி.

இப்படி வம்படித்தபடியே  வந்தவர்கள்  பொதுச்சாவடி வந்ததும்  தனித்தனியாக  பிரிந்து அவரவர் வீடுகளுக்கு நடையை கட்டினார்கள். ஆனால் சிகப்பியை  மட்டும் காணவில்லை. மினுக் மினுக் என எரிந்த கல்தூண் எண்ணை விளக்கு வெளிச்சத்தில் நிழல் கூட மங்கலாகத்தான்  இருந்தது.

சிகப்பிக்கு என்ன ஆனது என்பதை அடுத்த புதன் பார்க்கலாம்.


.

No comments:

Post a Comment