Friday, 13 January 2017

காதல்....காமம்.( 20. )

இன்னும் அவனின் வெறி அடங்கல. கண்கள் செம்மண் நிறத்தில  சிவப்பேறிக் கெடக்கு. வரப்பையே விட்டுக்கொடுக்காத  ஊரில்  கட்டின பொண்டாட்டியை  அடுத்தவன்  தட்டிட்டுப் போனா  சும்மா  கெடப்பானா..அத்தன நாளும்  அவன்  அடங்கிக் கெடந்ததே அவ எப்படியும்  அத்துக்கிட்டுதான்  வருவா, அன்னிக்கி  போட்டுத்தள்ளலாம்னுதான்  அடைக்கண்  காத்திட்டிருந்தான்,

காரியத்தை முடிச்சிட்டான் ! அருவாளுடன்  போயிட்டிருக்கான்  போலிஸ் டேசனுக்கு.

 திடீர்னு குறுக்கால வெள்ள நெர அம்பாசடர் கார் வந்து நிக்கிது.. அவன்எதிர்பார்க்கல, சட்டுன்னு  அருவாளை  ஓங்கிட்டான். செல்லத்தாயின் சொந்தக்காரன் எவனோ  வந்து மறிக்கிறான்னு  நெனச்சிட்டான்.எல்லாமே கண் சிமிட்டிற நேரம்தான்!

"அடைக்கா! காருக்குள்ள ஏறு!"

முக்காடு போட்ட நாலுபேரு  அவனை மடக்கி  காருக்குள்ள தள்ளிட்டானுக. வானவெடி வேகத்தில அழகர்கோயில் கோயில்  மலையை நோக்கிப்  பறக்குது!

"வெட்டி தள்ளிட்டு வேலய முடிச்சவன் எதுக்குடா  டேசனுக்கு போறே? நீதான்  அவள போட்டுத்தள்ளினேங்கிறதுக்கு  என்னடா சாட்சி? பஸ்ல போறவன்  வந்து சாட்சி சொல்லப் போறானா? அவள போட்டுத் தள்ளனும்கிறதுக்காகதான் நாங்களே பஸ்சு  பின்னாடி வெரட்டிக்கிட்டு வந்தோம். ஆனா காரியத்த நீ கச்சிதமா  முடிச்சிட்டேடா !"

முக்காடை  எடுக்காம  பேசுறான். அடைக்கன் கொஞ்சம் நிதானத்துக்கு  வந்தான் .

"நீங்கள்லாம் யாரு?"

"ஒன்ன காப்பாத்த வந்தவங்கன்னு  நெனச்சுக்க." என்று எல்லோருமே முக்காடை  எடுத்துட்டு மொகத்தைக் காட்டுறானுங்க. யாரையும் அவனுக்கு  தெரியல.

அடைக்கன் தெளிவாயிட்டான்.

"என்ன காப்பாத்துறதுக்கு நீங்க யாரு? "

"அதான் சொன்னம்ல! அழகர்மலைய்ல ஒனக்கு பாதுகாப்பான எடம் இருக்கு. நேரா நேரத்துக்கு சோறாக்கிப் போடவும் ஆளு இருக்கு. வசதியா இரு. எங்கள  அனுப்பினவரு வருவாரு.அவர் சொல்வாரு. சந்தேகப்பட்டு போலீஸ் ஒன்ன தேடலாம்.அவங்க கிட்ட மாட்டாம இருக்கிறதுக்கு அவரு யோசனசொல்வாரு.
கேட்டு நடந்துக்க.அதுவர அங்கிட்டு இங்கிட்டு போகாம கெட.!"

"நம்மள காப்பாத்துறதால யாருக்கு லாபம்னு" யோசிக்க ஆரம்பிச்சிட்டான். பிடிபடல. சரி வர்றது வரட்டும்னு சும்மா இருந்துட்டான்.

அழகர்மலை அடிவாரம் வந்திருச்சு. இப்ப யாருக்கும் பயமில்ல. அவனை கூட்டிக்கிட்டு அத்தன பேரும் மலை மேல ஏற ஆரம்பிச்சிட்டாங்க. ஆள் அண்டாத எடம். நரி வரும். காட்டுப்பன்னி வரும். சமயங்களில் சிறுத்தையும்  வரும்.அதனால மூலிகை பறிக்க வர்றவங்க கூட அங்க வரமாட்டாங்க. பொதுவா சங்கிலி அறுக்கிறவன்ல இருந்து கொலை பண்றவன் வரை  பதுங்கிறதுக்கு அது  வசதியா இருந்துச்சு. போலீஸ் தேடி வந்தா மேல இருந்து பார்த்தா கீழே வர்றவனுங்களை நல்லா பாக்கமுடியும்.ராத்திரி வந்தாலும்  டார்ச்சு லைட் அடிக்காம மலை ஏறமுடியாது..அதனால பதுங்குறவனுகளுக்கு  அத விட  பாதுகாப்பு  எதுவும் இல்ல,

குனிஞ்சி போற அளவுக்கு ஒரு குடிசை.ஒசரமான புதர்களுக்கு நடுவில்  இருக்கு. அங்க நின்னிட்டாங்க.

"இதான் ஒன்  எடம்.ராத்திரிக்கு ஒதவிக்கு ஒருத்தன் சோறு கொண்டாருவான்  அவன்தான் ஒங்கூட இருக்கப்போறவன். ராத்திரி ஆனா பீடி சிகரெட்டு பிடிக்காதே..குடிசைக்குள்ளய பிடி."

'' மிருகம் ஏதாவது  வருமா?"

"பயப்படாதே. அத மத்தவன் பாத்துக்குவான், ஆயுதம்லாம் இருக்கு"

கடத்திக்கொண்டு வந்தவர்கள் மலையை விட்டு எறங்க ஆரம்பிச்சிட்டாங்க.

அடைக்கனுக்கு இன்னும் எதுவும் புடிபடல. நம்மள காப்பாத்தி அடை காக்கிற  அவசியம் யாருக்கு இருக்க முடியும்? அருவாளை கழுவனும். ஒடம்பில இருக்கிற ரத்தக்கறையை போக்கனும். பக்கத்தில ஓடை எதுவும் ஓடுமா?

அடைக்கனை  கடத்தியது  யாராக  இருக்க முடியும்? உண்மை நிகழ்வை  அடிப்படையாக  வைத்து  புனைகிற  தொடர் இது. அடுத்த வாரம்  மற்றவை  !

No comments:

Post a Comment