Saturday, 21 January 2017

காதல்...காமம். ( 21.)

அழகர் மலை அருகே இருக்கிற சத்திரப்பட்டியில்  வெள்ளிங்கிரிக்கு சொந்தமாக ஒரு காரை வீடு.! கொல்லைப்புறத்தில் மாடுகளை கட்டிப் போட்டிருக்கிறார்கள். பின்கொசுவம் கட்டிய வேலைக்காரப் பொண்ணுகள் அங்கும் இங்குமாக திரிகிறார்கள். அந்த வீடு வெள்ளிங்கிரிக்கு பரம்பரையாக  இருக்கிற வீடு.

"அடைக்கன் எப்படி இருக்கான்.பத்திரமா இருக்கானா..சூதானமா இருக்கனும்டா! நாயிங்க மோப்பம் பிடிச்சிக்கிட்டு திரியிதுக. கொஞ்சம் அசந்தம்னாலும் அள்ளிட்டு போயிருவாய்ங்க" என்று எதிரில் கையைக்கட்டிக்கொண்டு நின்றவர்களை பார்த்து சொல்கிறான் வெள்ளிங்கிரி.. அவன்  நாய்கள் என்றது போலீஸ்காரர்களை.! மதுரைக்காரர்களின் சங்கேத வார்த்தை.அவன்தான் அடைக்கனை கடத்திக்கொண்டு  போயிருக்கிறான்,

செல்லத்தாயி கொலை செய்யப்பட்டு ஒரு வாரமாகிப் போச்சு. வடிவேலுவுக்கு  சந்தோசம்தான் என்றாலும் அவர் மீதும் போலீசுக்கு ஒரு கண்.! அப்பப்ப வந்து  விசாரிச்சிட்டுத்தான் இருக்காங்க..அடைக்கனையும் தேடிட்டுத்தான் இருந்தாங்க.

மகன் தங்கராசுவை பத்தி சம்சாரத்திடம் விசாரிக்கிறார் வடிவேலு..

"ஒம்மவன் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பேசாமத் திரிவான்?.வாய தெறந்து பேசுனாத்தானே மனசுல உள்ளது தெரியும்? பயபிள்ளை அன்னாந்துபாத்துக்கிட்டே திரியிது. அந்த சிறுக்கிதான் செத்துப்
போயிட்டாள்ல.சனியன் தொலஞ்சதுன்னு எண்ணய தேச்சு தல முழுகிட்டுப்
போயிற வேண்டியதுதானே.?"

வடிவேலுவின் அம்மா அங்கம்மா இப்ப  வாய தொறக்கிறாள்..

"பண்றதையும் பண்ணிட்டு பேசுறான் பாரு தட்டுக்கெட்ட பய.! வீட்டுல  ஒரு  குந்தாணிய வச்சுக்கிட்டு தீனி போட முடியாம கண்ட சிறுக்கிட்ட படுத்திட்டு....  சனியனை தோள்ல தூக்கிட்டு வந்திட்டு...."

வடிவேலுக்குசொல்லமுடியாத ஆத்திரம். எந்த இடத்தில் எதை சொல்றதுங்கிற வெவஸ்தை இல்லாம போச்சா?

. " ஆத்தா! வாய மூடிட்டு இரு.!"

" சல்லிக்கட்டு மாடு மாதிரி  பய .வளந்து  நிக்கிறான். அவனுக்கு ஒரு பொட்டச்சிய பிடிச்சு கட்டி வைக்கனும்கிற  நெனப்பு அத்துப் போயி வப்பாட்டி சொகம் தேடுன ஒனக்கு என்னடா ரோசம் ?அதான் ஊரே சிரிச்சுப் போச்சே!"

"அத்தே...?" வடிவேலுவின் மனைவி மாயக்காளுக்கு  கோபம்.." ஏர்க்கால் ஏறி  ரணமாகி போயி கெடக்கிற ஆளுக்கிட்ட போயி எப்படி ஏர் பிடிக்கிறதுன்னு  சொன்ன கத மாதிரி ...புத்தி சொல்ற நேரமா இது? செத்த நேரம்  சும்மா கெடங்களேன்?"

"ஆமாடி...! ஊர்ல போற காளியாத்தா எம்மேல வந்து ஏறுடியாத்தான்னு எம்மேல பாயி! கெழட்டுபயதானேனு வெலகி படுத்தே!..வயசானா ஆசைக்கும்  வயசாகாதுடி.அவன் பாஞ்சிட்டு போயிட்டான். அதது அறிஞ்சு ஆம்பள பயலுகளை கைக்குள்ள  போட்டுக்காதவளுக கத இப்படித்தான் முடியும்! இப்ப  என்ன குத்தம் சொல்றதுல ஒரு எழவும் நடக்கப்போறதில்ல!"

"ஏத்தா ...இதுக்கும் மேல வாய தொறந்தேன்னு வச்சுக்க பெத்தவனு கூட பாக்க மாட்டேன். கொரவளையை  கடிச்சு துப்பிருவேன்."கத்தியது வடிவேலுதான்!

"ஆமாடா இப்படித்தானே வப்பாட்டி கொரவளையை நெரிக்கிறதா சொன்னே?  அதத்தான் டேசன்ல அவளே சொன்னாலாம்ல.?" என்று ஆத்தா அங்கம்மா சொன்னதும் அடங்கிப் போயிட்டார் வடிவேலு.

சொந்த வீட்டிலேயே அவருக்கு ஆதரவு இல்ல.

"மாயி...ஒங்கத்தகிட்ட சொல்லு. இப்படியே பேசிட்டிருந்தா கொடம் ஒடச்சு கொள்ளி வைக்கிறதுக்கு பிள்ள இருக்கமாட்டான்னு சொல்லிடு.!" இப்போது வடிவேலுவின் ஆத்திரம் சென்டிமென்டாக திரும்புது.

"ஆமாடி...செத்தபெறகு இவன்தான் கொள்ளி வைக்கப்போறான்னு விழிச்சு விழிச்சு பாக்கப்போறன் பாரு! எந்த நாயி எனக்கு தீயை வச்சா என்ன? எரியாம போவுமா?"

அங்கம்மா பேசிட்டிருக்கிறபோதே வெள்ளிங்கிரியும் தங்கராசுவும்  வீட்டுக்குள்  நுழைந்தார்கள்.

இன்னும்  வரும் அடுத்தவாரம். உண்மை நிகழ்வை வைத்து புனையப்படும் தொடர்.

No comments:

Post a Comment