Thursday, 27 July 2017

காதல்...காமம். ( 43. )


டந்தவை எல்லாம் வடிவேலுவுக்கு தெரியும். தெரிந்ததாக  காட்டிக் கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டார். தங்கராசுக்கு பெருங்கோபம். அதைக் காட்ட இது இடம் இல்லை என்பதால் அவனும் அமைதியாகிவிட்டான்.

காலில் விழுந்தவனின் முடியைப் பிடித்து கொத்தாக  தூக்கினார்  ராசாங்கம். பெண்ணைப் பெற்றவருக்கு இருக்க வேண்டிய நியாயமான கோபம்.நல்லது  நடக்கப்போகிற நேரத்தில் நாடு வீட்டில் அசிங்கம் கிடக்கலாமா?

"தப்பிலி பயலே..போலீஸ்ல வாங்கினது பத்தாம இங்கிட்டு வந்திட்டியா. சிறுக்கி மவனே..உன்னை வெட்டிட்டு ஜெயிலுக்கு போறேன்டா.! ....டியே  செவனு எடுத்தாடி ...அருவாள!"

பாண்டி கோவிலில் சாமியாடுவது மாதிரி ஆகி விட்டார் ராசாங்கம்.

அன்னமயிலு தோழிகள் சகிதம் அறைக்குள் சென்று விட்டாள். சம்பந்தம் பேச வந்தவர்களுக்கு என்ன செய்வதென்பது தெரியவில்லை.தலையிடலாமா? வெள்ளிங்கிரியை அவர்களுக்கு நல்லாவே தெரியும்.அவன் பண்ணியிருக்கும்  காரியத்துக்கு மன்னிக்க வேண்டியவர்கள் அவர்கள் அல்லர். பெண் வீட்டார்   சம்பந்தப்பட்டது.அவர்கள்தான் அவனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் பாடு என்று அப்படியே விட்டு விடலாமா?

"என்னய்யா பெரிய மனுஷன் நீ! அவனை அடி வாங்க வச்சிட்டு மரம் மாதிரி நின்னிருக்கியே.! ஞாயம் பேசி இருக்க வேணாமா..?எதுக்காக அவன் வந்திருக்கான்னு தெரியாம அடிச்சு துவச்சு போடவிட்டுருக்கியே..? நீயெல்லாம் தோள்ல துண்ட போட்டுக்கிட்டு வரலாமா"ன்னு நாலு பெரிய  மனுஷன் கடை வீதியில பார்த்தா கேக்கமாட்டாய்ங்களா.."---மனசாட்சி உறுத்தவே வடிவேலு ராசாங்கத்தின் கையைப் பிடித்து வெள்ளிங்கிரியை விடுவித்தார்.

"விடுங்க ...அவன் கெடக்கிறான் பிக்காளிப் பய. தூந்து போன கெணத்தில  தூர் எடுத்து என்ன ஆகப் போகுது? எதுக்கு வந்திருக்கான்னு கேப்போம்.விடுங்க .அவனை !"

"பெரியய்யா...என்னை எல்லாரும் மன்னிச்சிருங்க!" என்று வடிவேலுவின்  காலிலும் விழுந்தான்.

"நான் பண்ணுன காரியத்துக்கு சித்ரவதை செஞ்சாலும் தகும். தங்கச்சியா நெனைக்க வேண்டிய அன்னத்து மேல ஆசை வெச்சது குத்தம்தான்.ஊர்ல எல்லோரும்  என்னை கேவலமா பாக்கிறாய்ங்க .சேக்காளிங்கல்லாம் வெலகிப் போய்ட்டாய்ங்க .. தவிச்ச வாய்க்கு தண்ணி கூட கிடைக்காதுன்னு  ஆகிப் போச்சு .இனி உசிரோடு இருந்து என்ன ஆகப்போகுது? அதான்  சாகிறதுக்கு முன்னாடி உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுரலாம்னு  வந்தேன். காரியம் முடிஞ்சிருச்சு.நான் போறேன் சாமிகளா!" என்று கிளம்பியவனை  "நில்லு" என்கிற குரல் தடுத்தது.

 அறையை விட்டு வெளியில் வந்த அன்னம்தான் குரல் கொடுத்தாள்.

" நெசமாவே  நீ திருந்தியிருந்தா சந்தோஷம்தான். எங்களால ஒரு உசிரு போகவேணாம்.அந்த பாவம் எங்களுக்கு எதுக்கு.? நீ பண்ணுன காரியத்துக்கு  கடவுள்தான் கூலிய கொடுக்கணும். பிடிக்கலேன்னு சொன்ன பிறகும்  எம்பின்னாடியே வந்து தொல்லை பண்ணுன அன்னைக்கே நான் போலீசுக்கு  போயிருந்தா இம்பிட்டு சிக்கல் வந்திருக்காது. அதுனால தப்புல எனக்கும் பங்கு இருக்கு.வர்ற வெள்ளிக்கிழமை வண்டியூர் மாரியம்மன் கோவிலுக்கு  வந்து ஜனங்க முன்னாடி மன்னிப்பு கேட்டா போதும். நீ எதுக்கு சாகனும்! " என்ற  அன்னம் அப்பன் ஆத்தாளையும் சம்பந்தம் பேச வந்தவர்களையும் பார்த்து "நான் சொன்னது சரிதானே?" என்பதைப்போல  பார்த்தாள்.

தங்கராசு குடும்பத்துக்கு பெருமையாக இருந்தது.

"ஆத்தா ...சரியாத்தான் சொன்னே. ஊர் ஜனங்க மத்தியில மாப்பு கேக்கிறது நாட்டு வழக்கம்தானே!" என்று வடிவேலு பெருமையுடன் சொல்ல ராசாங்கத்துக்கும் அது சரியாகவே பட்டது. "சம்பந்தி சொல்றதும்ஞாயம்தான் " என்று அவருடன் சேர்ந்து கொண்டார்.

தலை குனிந்தபடியே வெளியேறிய வெள்ளிங்கிரியை சோகமுடன் பார்த்தான்  தங்கராசு. என்ன இருந்தாலும் அவன் நண்பன் ஆயிற்றே...தனக்காக அவன் எப்படியெல்லாம் இருந்திருக்கிறான் என்கிற பழைய நினைவுகள் எல்லாம் சட்டென மனதில் தோன்றி மறைகிறது.

அய்யா ராசாங்கத்தை தன்னுடைய அறைக்கு அழைத்துச்சென்ற அன்னம் ''நான் அவரோடு தனியாப் பேசனும்யா...இதெல்லாம் நம்ம சாதி சனக்கூட்டத்தில இல்லாத பழக்கமா இருக்கலாம்.உங்களுக்கு பிடிக்காம இருக்கலாம். ஆனா வாழப்போறவ நாந்தான்! அந்த மனுஷன் மனசில  என்ன  இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டா தைரியமா கழுத்தைக் காட்டுவேன்ல?"என்று மகள் சொன்னதை மறுக்கும் நிலையில் அவர் இல்லை.

அவளும் அவனும் அறைக்குள் சென்றனர். கதவை தாளிட்டுக் கொண்டாள்  அன்னம்.!

அங்கிருந்தவர்களுக்கு அது தப்பாகவே தெரியவில்லை.!அவர்கள் இருவர் மீதும் நிறைய நம்பிக்கை !

உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டு புனையப்படுகிற தொடர் .

Friday, 14 July 2017

காதல்..காமம்..( 42.) அய்யா மன்னிச்சிருங்க!

அன்னம் தன்னை வெகுவாக சிங்காரித்துக்கொண்டாள். நடுவகிடு எடுத்து சீவி  இருந்தாள்.அளவாக பிச்சிப்பூ. இன்னும் சற்று நேரத்தில் மலர்ந்து விடும்.வேறு சென்ட்  எதுவும் தேவை இருக்காது. பிள்ளை வீட்டுக்காரர்கள் அசந்து போய் விடுவார்கள். கிளிப்பச்சை நிறத்தில் பாவாடை. வெளிர் மஞ்சள் நிறத்தில்  பட்டுத் தாவணி. இரண்டுக்கும் பொருந்துகிற இளம் நீல வண்ணத்தில் ரவிக்கை.இரண்டு புருவங்களும் கூடும் இடத்தில் கருப்பு சாந்து. முகத்தில்  லேசாக குட்டிக்குரா பவுடர்.

செவனம்மாவுக்கு மகளை பார்க்க பார்க்க பெருமையாக  இருந்தது. "என் வயத்தில இப்படி ஒரு ரதி வந்து பிறந்திருக்காளே...எந்த சாமி புண்ணியமோ...! ராசாத்தி..போற எடத்தில பூ மாதிரி இருக்கணும்.அழுந்தாம கிடக்கணும். ஒரு  பொட்டு கண்ணீர் சிந்திரக்கூடாது.!" ததும்பிய கண்ணீரை  முந்தானையினால்  துடைத்துக் கொண்டாள்.பெத்தவளுக்குத்தானே இருக்கும் பிள்ளையை  வளர்த்த வலி.! துணைக்கு வந்திருந்த தோழிகளிடம் அன்னம்  மகிழ்ச்சியுடன்  பேசிக்கொண்டிருந்தாள்.

"ஏத்தா ..பலகாரமெல்லாம் செஞ்சிட்டில்ல? வேணும்னா ஒரு எட்டு  போயி  அய்யர்  கடையில சிலேபி வாங்கியாந்திரட்டுமா?" செவனம்மாவிடம் ராசாங்கம்  மெதுவாக கேட்டார்.

"நானே வாங்கியாந்திட்டேன் . வர்றவகளுக்கு சீனி  காப்பி பிடிக்குமோ கருப்பட்டி காப்பி  பிடிக்குமோ தெரியல.எதுன்னாலும் கலந்து கொடுத்திருவேன்.ராகு காலத்துக்கு முந்தி வந்திருவாகல்ல?"

"ராகு காலம் இன்னைக்கு பத்து பன்னன்டரை. காலம்பரவே முடிஞ்சிருச்சு. வெளக்கு வைக்கிறதுக்கு முன்னாடியே சாயங்காலமாக வர்றதாக சொன்னாங்க.வந்திருவாங்க.பிளசர்ல வர்றாங்களா ஜட்காவ்ல வர்றாங்களான்னு தெரியல. எதுல வந்தா என்ன நல்லதனமா எல்லாம் நடந்து முடியனும்.!"

"நாலு தெரு தள்ளி இருக்கிற வீட்ல இருந்து எதுல வந்தா என்னங்க.. சாதகப் பொருத்தம்லாம் சரியாத்தானே இருக்கு?'

"செவனு...உங்கிட்ட சொல்லனும்னு நினைச்சிருந்தேன். மறந்திட்டன்டி "

"என்னங்க..பொருத்தம் சரியாத்தானே இருக்கு?" -செவனம்மாளுக்கு  சந்தேகம்.

"மாப்ளை சாதகம் தொலைஞ்சிருச்சாம்.அதான் பேர் பொருத்தம் பார்த்தோம். பூ போட்டும் பார்த்தாச்சு.ரெண்டும் மீனாச்சி கிருபையால் நல்லாத்தான்  இருந்துச்சு செவனு. நீ மனச போட்டு குழப்பிக்காதே!"

அப்பன் சொன்னது அன்னத்தின் காதுகளிலும் விழுகிறது.

"ஆத்தா?" -அம்மாவை பார்த்து பேச ஆரம்பித்தாள்.

"வர்றவருக்கு என்னைப் புடிச்சிருந்தா போதும்.! நீ பாட்டுக்கு சாதகம் கீதகம்னு குழப்பி வச்சிராதே?ஆத்துக்கு போயும் வேர்த்து வடிஞ்ச கதையாகிடப்போகுது.
அய்யா சொல்றத கம்முன்னு கேட்டுக்க."

வாசலுக்கு வந்து விட்டார்கள் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள்!

பிச்சிப்பூவின் மணம் அவர்களை வரவேற்றது.

உறவு சொல்லி அழைத்துக் கொண்டார்கள் இரு வீட்டாரும்!

பட்டாசாலையில் விரிக்கப்பட்ட சமுக்காளத்தில் கொண்டு வந்திருந்த  பூ பழத் தட்டுகளை வைத்தனர். பையனின் அம்மா மாயக்காள் கொண்டு வந்திருந்த மல்லிகையை பெண்ணுக்கு வைத்து விட்டாள். தங்கராசுக்கு மட்டும்நாற்காலி.   தங்கராசுவின் அப்பன் வடிவேலு மற்றும் உறவுகளுடன் சமுக்காளத்தில்  உட்கார்ந்து கொண்டார்.

பேச்சுவார்த்தை தொடங்கியது..

"அய்யா மன்னிச்சிருங்க." என்று பெருங்குரல் எடுத்து  கூட்டத்தின் மத்தியில் சாஷ்டாங்கமாக விழுந்தான் வெள்ளிங்கிரி!

அவன் அப்படி வந்து விழுவான் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

அன்னத்துக்கு மயக்கம் வராத குறை. எந்த மாதிரியான திட்டத்துடன்  வந்திருப்பானோ ?

அவனை பின்னந்தலை முடியை பிடித்து தூக்கினார் ராசாங்கம்.

"தட்டுவாணி பெத்த தறுதலையே! யார் குடிய கெடுக்கடா வந்தே  நாயே?" இன்னும் என்னென்ன வசவுகள் உண்டோ அத்தனையும் அங்கு அரங்கேறியது. வெள்ளிங்கிரி எதையும் சட்டை செய்யாமல் அழுதபடியே அவரின் கால்களை  பிடித்துக் கொண்டான்.


Saturday, 8 July 2017

காதல்....காமம்.( 41.) விபசாரிகளிடம் ஓசியில்...!

டீ யை குடித்து விட்டு  தம் பற்ற வைத்தார் விளக்குத்தூண் குற்றப் பிரிவு  இன்ஸ்.ராசதுரை.

லாக் அப்பில் நாலைந்து பேர்  கிடந்தார்கள். இரவு நேர  களவாணிகள்

.சுடுதண்ணீர் பாய்லர், அண்டா, குண்டா, குடம் என செம்பு பித்தளை பாத்திர வகையறாக்களை  களவாடுவதில்  கில்லாடிகள். லாக் அப்புக்கு வெளியில் எஸ்.ஐ.டி.கேஸ்பெண்கள். இருளில் மறைந்து  கொண்டு  ஆண்களை விபசாரத்துக்கு அழைத்தார்கள் என்று சொல்லி  அவர்களை பற்றி கேஸ்  எழுதுவார்கள்.மாஜிஸ்திரேட்டிடம் ஒப்புக்கொண்டு தண்டிக்கப்பட்டாலும்  அவர்களை ஜாமீனில் கொண்டு வருவதற்கு ஆட்கள் தயாராக இருப்பதால்  அந்த மாதிரியான  பெண்கள் போலீசுக்கு அவ்வளவாக பயப்படுவதில்லை. பிரியாணி, வெத்திலை, பாக்கு, புகையிலை என தாராளமாக  ஸ்டேஷனின் புழங்கும். ஒரு வகையில் கவுரவ விருந்தாளிகள்தான்!

' ஏண்டி நாகு...ஒரு ராத்திரியில் எத்தனை கிராக்கிய சமாளிப்ப?"--பக்கத்தில் இருந்த கோடாலி  கொண்டைக்காரியிடம் ஒருத்திகேட்டாள்.

"அத ஏன் கேக்கிற. மூணு பேரை தாங்குறதே எம்பாடு உம்பாடுன்னு ஆயிரும். கஞ்சாவை இழுத்துட்டு வர்ற சண்டியர்கள சமாளிக்கிறதுக்குத் தான் மூச்சு  வாங்கும்.  நாசமா போவாய்ங்க குறுக்க ஓடிச்சிருவாய்ங்க.அசந்திட்டம்னு  வையி.சுருக்குப் பை காசையும் லாவிட்டு போயிருவாய்ங்க. நாய் பொழப்புதான்.இதில இவிய்ங்களுக்கு காசும் கொடுக்கணும்.கேசும் கொடுக்கணும்."என்று பதில் சொன்னவள்  போலீஸ் புள்ளிகளையும் விட்டு வைக்க வில்லை.

"கேஸ் போடுறதோடு விட்டா பரவாயில்லையே..புதுசா வர்றவளுகளையும்  இவிய்ங்கதான் போணி பண்ணுவாய்ங்களாம். ஒருத்தன் ரெண்டு பேர்னா சகிச்சுக்கலாம்.மொத்த டேசனும் வந்திருவாய்ங்கடி....குடிக்கி!" -அவள் அசிங்கமாக சொல்வதையும்   காதில் விழாததுபோல போலீஸ்காரர்கள்  கேட்டுக் கொள்வதுதான் ராஜதந்திரம்..அவளுகளை விட கேவலமான  பிறவிகள் அவர்கள்தான்.விபசாரிகளுக்கு அதுதான் பிழைப்பு.சர்க்காரிடம்  சம்பளம் வாங்கிக்கொண்டு சவடாலாக திரிகிற போலீஸ்காரர்களுக்கு என்ன கேடு.உடம்பை விற்பவள்களிடம் ஓசியில்....ச்சே!

எதையுமே கண்டு கொள்ளவில்லை  ராசதுரை! அன்னம் கேசை எப்படி முடிப்பது என்பது அவரது கவலை..   

"ஐய்யா...?" கைகளை கட்டிக்கொண்டு குனிந்து கும்பிட்டான்  வெள்ளிங்கிரி.

"என்னலே?"-எகத்தாளமாக பார்த்தார் இன்ஸ்.

"குத்தத்தை ஒத்துக்கறன்யா.!"

" நெசமாத்தான் சொல்றியா? கோர்ட்டுல போயி  அடிக்குப் பயந்து சொன்னதா  மாத்திடமாட்டியே? காசுக்காரப் பயடா நீ. எப்படி வேணும்னாலும் பல்டி  அடிப்பே! வெளியே போயிட்டா அப்பறம் நாங்கள்லடி  நாக்க தொங்க விட்டுக்கிட்டு உன் பின்னாடி திரியனும்.?"

"எங்காத்தா மேல சத்யம் ஐய்யா.!மாற மாட்டேன்.மாறுனா கொன்னே போட்டுருங்க.அந்த அன்னம் புள்ள மேல எனக்கு ஒரு நோக்கம் இருந்துச்சு . அதான் அது பின்னாலேயே திரிஞ்சேன். மடியிற மாதிரி தெரியல. கோயில்ல  வச்சு சத்யம் பண்ண வச்சிரலாம்னுதான் அப்படி நடந்துக்கிட்டேன். மத்தபடி  நான் அந்த புள்ளைய பத்தி சொன்னதெல்லாம் பொய்தான்.அந்த புள்ள என்ன  விரும்பலே."

"இத முதல்லையே சொல்லிருந்தா இவ்வளவு அடி தின்னுருக்க மாட்டேல்ல.!" என்ற ராசதுரை ரைட்டரை கூப்பிட்டு அவன் சொன்னதை அப்படியே  வாக்குமூலமாக எழுதிக்கொள்ள சொன்னார். அவரும் எழுதி முடித்தார்.

"ஜாமீனுக்கு ஆள் இருக்கா?"

"போன் பண்ணினா வந்திருவாங்க.!"

"சரி..எட்டய்யாகிட்ட சொல்லு. அவர் பேசுவாரு!"

அடிபட்ட வன்மம் நெஞ்சுக்குள் நெருப்புத் துண்டுகளாக கிடக்க வெள்ளிங்கிரி  வெளியேறுகிறான்.

"இனிமே உங்க கையில நான் மாட்டமாட்டேண்டா!"


Saturday, 1 July 2017

காதல்...காமம்.( 40.) சமஞ்ச புள்ளய எத்தன நாள் சொமக்க முடியும்?

உடம்பெல்லாம் வலி. போலீஸ் அடி . வீக்கம் தெரியாமல் அடிக்கிற வித்தைய
எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ!இருந்தாலும் அங்கங்கு தோல் கிழிந்து   ரத்தம்  உறைந்து  இருந்தது.வெள்ளிங்கிரி முதன் முதலாக பயப்படுகிறான். இனி என்னென்ன  செய்வார்களோ...! அன்னம் மீது வைத்த ஆசை இந்த அளவுக்கு நம்மை  கேவலப் படுத்தி விட்டது.. ஊரில் ஒருத்தனும் மதிக்கப் போவதில்லை. பேசாமல் காலில் விழுந்து விடவேண்டியதுதான் பகையாளியை  உறவாடிக்  கெடுன்னு  மூதாதையர்கள் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்.?

" அன்னத்துக்கு  அடுத்த ஜென்மத்திலும் என் ஞாபகம் இருக்கணும்.அதுக்கு என்ன செய்யணுமோ அத நான் செஞ்சாகனும்.அதுக்காக குத்தத்தை ஒத்துக்கிட்டு பணிஞ்சு போவோம்.அதனால நம்ம கிரீடம் இறங்கிடாது .காரியம்தான் பெரிசு.வீரியம் வேணாம்.முதலில் வெளியில் போகவேண்டும்.இந்த கேசிலிருந்து விடுபட வேண்டும்."

வெள்ளிங்கிரியின் மனதில் பயங்கரமான திட்டம் உருவாகியது.
*************************************************

ராசாங்கம்தலையை துவட்டியபடியே குளியல் அறையை  விட்டு வெளியில் வந்தார்.

'செவனு.?" மனைவியை அழைத்தார். வெட்கத்துடன் வந்து நின்றாள். வயதுக்கு வந்த மகள் இருந்தாலும் கணவன் மீது கொண்ட காமம்  குறைவதில்லை.அத்தனை நாள் கழித்து வந்திருக்கிற புருசனுக்கு  எவ்வளவு  ஆசை இருந்திருக்கும்.? கூப்பிட்டால் இணங்காமல் இருக்க முடியுமா? அன்றைய இரவு ராசாங்கத்துக்கும் அவளுக்கும் முதல் இரவு மாதிரிதான்  இருந்தது.

"சொல்லுங்க?'

முகம் பார்க்க வெட்கம் !

"வாய்க்கு ருசியா சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. வெரா,இல்லேன்னா கெளுத்தி கிடைச்சா வாங்கிட்டு வந்து கொழம்பு வையேன்! வெரா கிடைச்சா  கொழம்புக்கும்  ஆச்சு.கொஞ்சம் வறுத்து வை.தின்னுட்டு வடிவேலு வீட்டுப் பக்கமா போயி  பேசிட்டு வாரேன். உறவு முறை இருக்கு.அந்த வீட்டு சம்பந்தம்  கிடைச்சா  அன்னம் கொடுத்து வச்சதுதான்.பார்ப்பம்.அந்த மீனாச்சி நல்ல வழி காட்டமாட்டாளா?"

"சரிங்க.!நான் வெள்ளனவே எந்திரிச்சு பாய் கடைக்குப் போயி குடலு வாங்கிட்டு வந்து கொழம்பு வச்சிட்டேன்."

"இட்லிக்கு நல்லா இருக்கும்! நானே எடுத்து வச்சு  சாப்பிட்டுக்குறேன். நீ போயி  மீனு வாங்கிட்டு வந்திரு. காலாகாலத்துல போகலேன்னா வித்துரும்."என்று செவனம்மாவை கடைக்கு அனுப்பி வைத்தார்.

அவளும் கொண்டையில் சுற்றி இருந்த ஈரத்துண்டை கழற்றிவிட்டு பையை  எடுத்துக் கொண்டாள்.

அம்மா அங்கிட்டு கிளம்பியதும் அன்னமயிலு  அறையிலிருந்து  வெளியில்  வந்தாள்.

"அய்யா...நீங்க ஊஞ்சல்ல உக்காருங்க.நான் எடுத்துட்டு வாரேன்." என்று  அடுப்படிக்கு போனாள்.பெரிய தட்டில் ஆறு இட்லி .கூடவே குடல் . பெரிய அகப்பையில் எடுத்து வைத்தாள்.அய்யன் மாமிச பிரியர் என்பது அவளுக்கு  நல்லாவே தெரியும். "உழைக்கிறது எதுக்கு நல்லா சாப்பிடுறதுக்குத்தான்" என்று அவர் அடிக்கடி சொல்வார்.

இட்லியில் குழம்பை ஊற்றி நன்றாக பிசைந்துஅதனுடன்குடலையும் கலந்து வாய்க்குள் வைத்ததும் அவருக்கு எல்லாமே மறந்து விடும் .ரசித்து மென்று  சாப்பிடுவார்.அப்படி ஒரு பழக்கம்.

"ஏத்தா...நீ சாப்பிடல.?"

"அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்யா!" என்று சொன்னவள் மெதுவாக தனது  விருப்பத்தையும் சொன்னாள்.."எத்தனை நாளுதான் இங்கனயே இருக்க முடியும்? கோவில் குளம்னு போனா நாலு இளவட்ட பயலுக பார்க்கத்தான்  செய்வாய்ங்க.அவிய்ங்களை மிரட்டிக்கிட்டே இருக்க முடியுமா...?ஒரு எடுபட்டபய வம்படியா போலீஸ்ல மாட்டிக்கிட்டான்.கச்சேரிக்கும் கோர்ட்டுக்கும் நாம  அலைய முடியுமா. நாம பொழப்பு தளப்ப பார்க்க வேணாமா...? சொல்லுங்க"

"புரியிது தாயி. சமஞ்ச புள்ளைய நாங்களும் எத்தனை நாளுதான் சொமக்க முடியும்.? கடைக்கு போயிருக்கிற ஆத்தா வந்திரட்டும்.மத்தத நான் பாத்துக்கிறேன். இன்னும் நாலு இட்லி வைம்மா.!"

வயிறுக்கு வஞ்சகம் செய்யாமல் சாப்பிட்டு முடித்தார்.