Friday, 14 July 2017

காதல்..காமம்..( 42.) அய்யா மன்னிச்சிருங்க!

அன்னம் தன்னை வெகுவாக சிங்காரித்துக்கொண்டாள். நடுவகிடு எடுத்து சீவி  இருந்தாள்.அளவாக பிச்சிப்பூ. இன்னும் சற்று நேரத்தில் மலர்ந்து விடும்.வேறு சென்ட்  எதுவும் தேவை இருக்காது. பிள்ளை வீட்டுக்காரர்கள் அசந்து போய் விடுவார்கள். கிளிப்பச்சை நிறத்தில் பாவாடை. வெளிர் மஞ்சள் நிறத்தில்  பட்டுத் தாவணி. இரண்டுக்கும் பொருந்துகிற இளம் நீல வண்ணத்தில் ரவிக்கை.இரண்டு புருவங்களும் கூடும் இடத்தில் கருப்பு சாந்து. முகத்தில்  லேசாக குட்டிக்குரா பவுடர்.

செவனம்மாவுக்கு மகளை பார்க்க பார்க்க பெருமையாக  இருந்தது. "என் வயத்தில இப்படி ஒரு ரதி வந்து பிறந்திருக்காளே...எந்த சாமி புண்ணியமோ...! ராசாத்தி..போற எடத்தில பூ மாதிரி இருக்கணும்.அழுந்தாம கிடக்கணும். ஒரு  பொட்டு கண்ணீர் சிந்திரக்கூடாது.!" ததும்பிய கண்ணீரை  முந்தானையினால்  துடைத்துக் கொண்டாள்.பெத்தவளுக்குத்தானே இருக்கும் பிள்ளையை  வளர்த்த வலி.! துணைக்கு வந்திருந்த தோழிகளிடம் அன்னம்  மகிழ்ச்சியுடன்  பேசிக்கொண்டிருந்தாள்.

"ஏத்தா ..பலகாரமெல்லாம் செஞ்சிட்டில்ல? வேணும்னா ஒரு எட்டு  போயி  அய்யர்  கடையில சிலேபி வாங்கியாந்திரட்டுமா?" செவனம்மாவிடம் ராசாங்கம்  மெதுவாக கேட்டார்.

"நானே வாங்கியாந்திட்டேன் . வர்றவகளுக்கு சீனி  காப்பி பிடிக்குமோ கருப்பட்டி காப்பி  பிடிக்குமோ தெரியல.எதுன்னாலும் கலந்து கொடுத்திருவேன்.ராகு காலத்துக்கு முந்தி வந்திருவாகல்ல?"

"ராகு காலம் இன்னைக்கு பத்து பன்னன்டரை. காலம்பரவே முடிஞ்சிருச்சு. வெளக்கு வைக்கிறதுக்கு முன்னாடியே சாயங்காலமாக வர்றதாக சொன்னாங்க.வந்திருவாங்க.பிளசர்ல வர்றாங்களா ஜட்காவ்ல வர்றாங்களான்னு தெரியல. எதுல வந்தா என்ன நல்லதனமா எல்லாம் நடந்து முடியனும்.!"

"நாலு தெரு தள்ளி இருக்கிற வீட்ல இருந்து எதுல வந்தா என்னங்க.. சாதகப் பொருத்தம்லாம் சரியாத்தானே இருக்கு?'

"செவனு...உங்கிட்ட சொல்லனும்னு நினைச்சிருந்தேன். மறந்திட்டன்டி "

"என்னங்க..பொருத்தம் சரியாத்தானே இருக்கு?" -செவனம்மாளுக்கு  சந்தேகம்.

"மாப்ளை சாதகம் தொலைஞ்சிருச்சாம்.அதான் பேர் பொருத்தம் பார்த்தோம். பூ போட்டும் பார்த்தாச்சு.ரெண்டும் மீனாச்சி கிருபையால் நல்லாத்தான்  இருந்துச்சு செவனு. நீ மனச போட்டு குழப்பிக்காதே!"

அப்பன் சொன்னது அன்னத்தின் காதுகளிலும் விழுகிறது.

"ஆத்தா?" -அம்மாவை பார்த்து பேச ஆரம்பித்தாள்.

"வர்றவருக்கு என்னைப் புடிச்சிருந்தா போதும்.! நீ பாட்டுக்கு சாதகம் கீதகம்னு குழப்பி வச்சிராதே?ஆத்துக்கு போயும் வேர்த்து வடிஞ்ச கதையாகிடப்போகுது.
அய்யா சொல்றத கம்முன்னு கேட்டுக்க."

வாசலுக்கு வந்து விட்டார்கள் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள்!

பிச்சிப்பூவின் மணம் அவர்களை வரவேற்றது.

உறவு சொல்லி அழைத்துக் கொண்டார்கள் இரு வீட்டாரும்!

பட்டாசாலையில் விரிக்கப்பட்ட சமுக்காளத்தில் கொண்டு வந்திருந்த  பூ பழத் தட்டுகளை வைத்தனர். பையனின் அம்மா மாயக்காள் கொண்டு வந்திருந்த மல்லிகையை பெண்ணுக்கு வைத்து விட்டாள். தங்கராசுக்கு மட்டும்நாற்காலி.   தங்கராசுவின் அப்பன் வடிவேலு மற்றும் உறவுகளுடன் சமுக்காளத்தில்  உட்கார்ந்து கொண்டார்.

பேச்சுவார்த்தை தொடங்கியது..

"அய்யா மன்னிச்சிருங்க." என்று பெருங்குரல் எடுத்து  கூட்டத்தின் மத்தியில் சாஷ்டாங்கமாக விழுந்தான் வெள்ளிங்கிரி!

அவன் அப்படி வந்து விழுவான் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

அன்னத்துக்கு மயக்கம் வராத குறை. எந்த மாதிரியான திட்டத்துடன்  வந்திருப்பானோ ?

அவனை பின்னந்தலை முடியை பிடித்து தூக்கினார் ராசாங்கம்.

"தட்டுவாணி பெத்த தறுதலையே! யார் குடிய கெடுக்கடா வந்தே  நாயே?" இன்னும் என்னென்ன வசவுகள் உண்டோ அத்தனையும் அங்கு அரங்கேறியது. வெள்ளிங்கிரி எதையும் சட்டை செய்யாமல் அழுதபடியே அவரின் கால்களை  பிடித்துக் கொண்டான்.


No comments:

Post a Comment