நடந்தவை எல்லாம் வடிவேலுவுக்கு தெரியும். தெரிந்ததாக காட்டிக் கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டார். தங்கராசுக்கு பெருங்கோபம். அதைக் காட்ட இது இடம் இல்லை என்பதால் அவனும் அமைதியாகிவிட்டான்.
காலில் விழுந்தவனின் முடியைப் பிடித்து கொத்தாக தூக்கினார் ராசாங்கம். பெண்ணைப் பெற்றவருக்கு இருக்க வேண்டிய நியாயமான கோபம்.நல்லது நடக்கப்போகிற நேரத்தில் நாடு வீட்டில் அசிங்கம் கிடக்கலாமா?
"தப்பிலி பயலே..போலீஸ்ல வாங்கினது பத்தாம இங்கிட்டு வந்திட்டியா. சிறுக்கி மவனே..உன்னை வெட்டிட்டு ஜெயிலுக்கு போறேன்டா.! ....டியே செவனு எடுத்தாடி ...அருவாள!"
பாண்டி கோவிலில் சாமியாடுவது மாதிரி ஆகி விட்டார் ராசாங்கம்.
அன்னமயிலு தோழிகள் சகிதம் அறைக்குள் சென்று விட்டாள். சம்பந்தம் பேச வந்தவர்களுக்கு என்ன செய்வதென்பது தெரியவில்லை.தலையிடலாமா? வெள்ளிங்கிரியை அவர்களுக்கு நல்லாவே தெரியும்.அவன் பண்ணியிருக்கும் காரியத்துக்கு மன்னிக்க வேண்டியவர்கள் அவர்கள் அல்லர். பெண் வீட்டார் சம்பந்தப்பட்டது.அவர்கள்தான் அவனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் பாடு என்று அப்படியே விட்டு விடலாமா?
"என்னய்யா பெரிய மனுஷன் நீ! அவனை அடி வாங்க வச்சிட்டு மரம் மாதிரி நின்னிருக்கியே.! ஞாயம் பேசி இருக்க வேணாமா..?எதுக்காக அவன் வந்திருக்கான்னு தெரியாம அடிச்சு துவச்சு போடவிட்டுருக்கியே..? நீயெல்லாம் தோள்ல துண்ட போட்டுக்கிட்டு வரலாமா"ன்னு நாலு பெரிய மனுஷன் கடை வீதியில பார்த்தா கேக்கமாட்டாய்ங்களா.."---மனசாட்சி உறுத்தவே வடிவேலு ராசாங்கத்தின் கையைப் பிடித்து வெள்ளிங்கிரியை விடுவித்தார்.
"விடுங்க ...அவன் கெடக்கிறான் பிக்காளிப் பய. தூந்து போன கெணத்தில தூர் எடுத்து என்ன ஆகப் போகுது? எதுக்கு வந்திருக்கான்னு கேப்போம்.விடுங்க .அவனை !"
"பெரியய்யா...என்னை எல்லாரும் மன்னிச்சிருங்க!" என்று வடிவேலுவின் காலிலும் விழுந்தான்.
"நான் பண்ணுன காரியத்துக்கு சித்ரவதை செஞ்சாலும் தகும். தங்கச்சியா நெனைக்க வேண்டிய அன்னத்து மேல ஆசை வெச்சது குத்தம்தான்.ஊர்ல எல்லோரும் என்னை கேவலமா பாக்கிறாய்ங்க .சேக்காளிங்கல்லாம் வெலகிப் போய்ட்டாய்ங்க .. தவிச்ச வாய்க்கு தண்ணி கூட கிடைக்காதுன்னு ஆகிப் போச்சு .இனி உசிரோடு இருந்து என்ன ஆகப்போகுது? அதான் சாகிறதுக்கு முன்னாடி உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுரலாம்னு வந்தேன். காரியம் முடிஞ்சிருச்சு.நான் போறேன் சாமிகளா!" என்று கிளம்பியவனை "நில்லு" என்கிற குரல் தடுத்தது.
அறையை விட்டு வெளியில் வந்த அன்னம்தான் குரல் கொடுத்தாள்.
" நெசமாவே நீ திருந்தியிருந்தா சந்தோஷம்தான். எங்களால ஒரு உசிரு போகவேணாம்.அந்த பாவம் எங்களுக்கு எதுக்கு.? நீ பண்ணுன காரியத்துக்கு கடவுள்தான் கூலிய கொடுக்கணும். பிடிக்கலேன்னு சொன்ன பிறகும் எம்பின்னாடியே வந்து தொல்லை பண்ணுன அன்னைக்கே நான் போலீசுக்கு போயிருந்தா இம்பிட்டு சிக்கல் வந்திருக்காது. அதுனால தப்புல எனக்கும் பங்கு இருக்கு.வர்ற வெள்ளிக்கிழமை வண்டியூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்து ஜனங்க முன்னாடி மன்னிப்பு கேட்டா போதும். நீ எதுக்கு சாகனும்! " என்ற அன்னம் அப்பன் ஆத்தாளையும் சம்பந்தம் பேச வந்தவர்களையும் பார்த்து "நான் சொன்னது சரிதானே?" என்பதைப்போல பார்த்தாள்.
தங்கராசு குடும்பத்துக்கு பெருமையாக இருந்தது.
"ஆத்தா ...சரியாத்தான் சொன்னே. ஊர் ஜனங்க மத்தியில மாப்பு கேக்கிறது நாட்டு வழக்கம்தானே!" என்று வடிவேலு பெருமையுடன் சொல்ல ராசாங்கத்துக்கும் அது சரியாகவே பட்டது. "சம்பந்தி சொல்றதும்ஞாயம்தான் " என்று அவருடன் சேர்ந்து கொண்டார்.
தலை குனிந்தபடியே வெளியேறிய வெள்ளிங்கிரியை சோகமுடன் பார்த்தான் தங்கராசு. என்ன இருந்தாலும் அவன் நண்பன் ஆயிற்றே...தனக்காக அவன் எப்படியெல்லாம் இருந்திருக்கிறான் என்கிற பழைய நினைவுகள் எல்லாம் சட்டென மனதில் தோன்றி மறைகிறது.
அய்யா ராசாங்கத்தை தன்னுடைய அறைக்கு அழைத்துச்சென்ற அன்னம் ''நான் அவரோடு தனியாப் பேசனும்யா...இதெல்லாம் நம்ம சாதி சனக்கூட்டத்தில இல்லாத பழக்கமா இருக்கலாம்.உங்களுக்கு பிடிக்காம இருக்கலாம். ஆனா வாழப்போறவ நாந்தான்! அந்த மனுஷன் மனசில என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டா தைரியமா கழுத்தைக் காட்டுவேன்ல?"என்று மகள் சொன்னதை மறுக்கும் நிலையில் அவர் இல்லை.
அவளும் அவனும் அறைக்குள் சென்றனர். கதவை தாளிட்டுக் கொண்டாள் அன்னம்.!
அங்கிருந்தவர்களுக்கு அது தப்பாகவே தெரியவில்லை.!அவர்கள் இருவர் மீதும் நிறைய நம்பிக்கை !
உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டு புனையப்படுகிற தொடர் .
No comments:
Post a Comment