Saturday, 30 April 2016

ஓம்....புல்லட் பாபா நமஹ!!!

 அது உண்மையா,புருடாவா என்பது கூட தெரியாது. ஆனால் சிலருக்கு  கும்பி  கொதித்து குடல் கருகிய வாசம் மட்டும் வந்தது. அதாவது  குஷ்புவுக்கு  கோவில் கட்டப்போவதாக  யாரோ கொளுத்திப் போட்டது  பட்டிமன்ற தலைப்பாகி  ஒவ்வொருத்தர்  வாயிலும் அரை  பட்டதே,. நடிகைக்கு  கோவிலா  என  கேட்டு  பகுத்தறிவு  பொங்கி  ஓடியதே...ஞாபகம் இருக்கா?.

ஆனால் வடக்கே  ஒரு மோட்டார் பைக்குக்கு கோவில் கட்டி நமஹா பாட்டு  கூட போட்டிருக்கிறார்கள் சாமி!. இதையெல்லாம்  பார்க்கிற போது  முட்டாள்த் தனத்தை நாம் மட்டும்  முதலீடாக  வைத்திருக்கவில்லை  என்று   ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்..!

ஜோத்பூர் மாவட்டம். பாலி என்பது ஊரின் பெயர் . இந்த  ஊரின் வழியாக ஒருவர் மோட்டார்  பைக்கில் சென்று இருக்கிறார்.திடீரென ஒரு இடத்தில்  கட்டுப்பாட்டை  இழந்து அங்கிருந்த மரத்தில் மோதிவிட்டது. பயணம் செய்தவர்  ஆன்  த ஸ்பாட்  அவுட். லோக்கல் போலீசார் வந்து  மோட்டார் பைக்கை  ஸ்டேசனுக்கு கொண்டு போய்விட்டார்கள்.முறைப்படி  என்னவெல்லாம்  செய்யணுமோ  செய்து முடித்துவிட்டார்கள்.

 ஆனால் மறுநாள் பைக்கை காணவில்லை. எவனோ ஸ்டேசனுக்கு வந்து கைவரிசையை காட்டிவிட்டானே என்கிற கோபம் போலிசுக்கு!.

ஆனால் தகவல் வேற விதமாக வந்தது. எந்த இடத்தில் ஆக்சிடென்ட்  நடந்ததோ  அந்த  இடத்தில் பைக் கிடப்பதாக சொன்னார்கள்..என்னடா இது  மாய வேலையாக இருக்கிறது  என்று குழம்பியவர்கள்  பைக்கிலிருந்த பெட்ரோலை காலியாக்கிவிட்டு மறுபடியும்  ஸ்டேசனில் பைக்கை  ஒரு சங்கிலியால் கட்டி வைத்தார்கள்.

மறுநாள்  பைக் மறுபடியும்  ஆக்சிடென்ட் ஸ்பாட்டுக்கே  போய்விட்டது.எப்படி போனது எவன் கொண்டுபோய்  அங்கே போட்டிருப்பான் என்பது  தெரியாமல்  கடவுளின் விளையாட்டுதான் என முடிவு கட்டிவிட்டனர்.

  பைக்கை அந்த  இடத்திலேயே வைத்து பூஜை பண்ணிவிட்டார்கள் .அதை புனித இடமாக்கி  திருவிழாவும்  கொண்டாடி வருகிறார்கள். பஜனை பாட்டும் ரெடி.விபத்தில் செத்தவரின் படத்தையும் மாட்டி வைத்திருக்கிறார்கள்.

இந்து புராணப்படி முப்பத்தி மூணு  மில்லியன் கடவுள்கள்  இருக்கிறார்கள். இதெல்லாம்  அடிசனல் தான். நம்ம சச்சின் டெண்டுல்கருக்கும் பிகார் மாநிலம் கைமூரில் ஒரு கோவில் இருக்குப்பு.!

இன்னும் அலசினால் இப்படி நிறைய பகுத்தறிவு  சமாச்சாரங்கள் கிட்டும்னு  நம்புறேன்.அலசுறேன்.
      

Wednesday, 27 April 2016

குற்றப்பரம்பரை.( பகுதி.2.)

'சொத்' என சுள்ளிக்கட்டுவை கரம்பை  மண் பூமியில் போட்ட மாயக்காள்தான் அவனை முதலில் பார்த்தாள். இந்த பயபிள்ளை எதுக்கு  இந்நேரம் இந்த பக்கம்  அலையிது என்று  மனதுக்குள்  நினைத்தபடி ' ஏலே....ஊலமூக்கா ...இந்த  பொட்ட வெயில்ல சேவ கூட  கேறாது.நீ  எங்கடா  இங்கிட்டு...? எந்த  சிறுக்கி மகளுக்கு சுருக்கு போட்டிருக்கே?"-சாதாரணமாக கேட்டவள்  'புழுச்'சென புகையிலை சாற்றை துப்பினாள்.

அவன் அந்த பகுதியிலேயே  ஜெகஜால கில்லாடி.வாழ்வாதாரங்கள்  அற்றுப் போய் விட்ட அந்த கரம்பக் காட்டில் வயசுப்பயல்கள்  பெரும் பாலும் பட்டணம் பக்கத்தில் இருந்த நகரங்கள் என புலம் பெயர்ந்து போய்விட்டனர்.அப்படி  கள்ள ரெயில் ஏற முடியாதவர்கள்தான்  கிராமம் ,கிராமமாக போய்  கைவரிசையை காட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன்தான் ஊளமூக்கன்  என்கிற மூக்கன். சின்ன வயதில் மூக்கிலிருந்து  எப்பவுமே  சளி  வழிந்தபடி இருக்கும்.அதனால் எல்லோருக்கும் அவன் ஊளமூக்கன்தான். எளந்தாரி.பயம் அறியாதவன்.அவனை பெத்தவர்கள் வசதியானவர்கள்தான். பங்காளிகளின் பிள்ளைகள் பட்டணம் போய் படித்து கவர்மெண்டு  உத்தியோகத்தில்  இருக்கிறார்கள்.பங்காளிகளின் துரோகத்தினால்  மூக்கனின் அய்யா தவசி சொத்தை பறி  கொடுத்துவிட்டு அதே ஏக்கத்தில் சிவலோகம் சேர்ந்துவிட்டார். ஆத்தா  பேச்சியக்கா மட்டும்தான் இப்போது  மூக்கனுக்கு ஆதரவு.பேச்சிக்கு  அவன் ஆதரவு என்று வாழ்கிறார்கள்.

'என்னத்தா..இந்த  சிறுக்கியோடு எங்கிட்டு போயிட்டிருக்கே? கெட்ட சிறுக்கியாச்சே இவ.! ஈர முந்தானையில்  சண்டை சாவலையே  ஊமையாக்கி  கொண்டு போயிருவாளே..இவளோட சகவாசத்தை  அத்துப்போட்ரு. இல்லேன்னா உன்னையே வித்துருவா!' என கேலி பேசினான் மூக்கன்..

செவனம்மா  சும்மா இருப்பாளா?  கல்லூரணியே இவளைக் கண்டால் பம்மிக்கொள்ளும். கெட்ட வாயாடிச்சிறுக்கி. கருத்த மேனி என்றாலும்  மதர்த்த மார்புகள். உள்பாடி அணிவதில்லை.அவள் மட்டுமல்ல அந்த பகுதி பெண்கள் அதை பெரிதாக நினைப்பதில்லை. சீலையை  இழுத்து இறுக்கமாக  சுற்றிக்கொண்டுதான் வயக்காட்டிலேயே கால் வைப்பார்கள். வயசுப்பயல்கள் கண்கள்தான் யாருடைய சீலை முந்தாணி  ஒதுங்கிகிடக்கு என்று கண்களை  மேயவிடுவார்கள். கருத்த மேனியில் வெயில்படாத மார்பகங்களை பார்க்கிறபோது வளைக்குள் இருந்து  முயல் எட்டிப்பார்ப்பது போலிருக்கும்,
இவளைத்தான்  சீண்டினான்.

"ஆமா.. சீமைத்தொரை  செவப்புக் குதிரையேறி சில்லாவை  சுத்தி வர்ற வேலை  பாக்கிறாரு.களவாணிப்பயலெல்லாம் கதியத்துப் போயிக் கெடக்கானுகளாம்
.முடிச்சவிக்கி, மொள்ளமாரி ,கூட்டிக்கொடுக்கிரவய்ங்க,கூத்தியா  வச்சிருக்கிறவய்ங்கல்லாம் தொரை  வந்திட்டார்னு  எறும்புக் குழிகுள்ள  பதுங்கி இருக்காய்ங்களாம்.வக்கத்தவனுக்கு வாயைப்பாரு!"என்று  பதிலடி  கொடுத்தாள் ,

மாயக்காளுக்கு  ஒரு வகையான அச்சம். இந்த சிறுக்கி  இப்படி வாயடிக்கிறாலே  நாளைக்கு ஒத்த செத்தையில பயகிட்ட  மாட்டிக்கிட்டால்  அவன் சும்மா விட்ருவானா? வாயைப் பொத்தி  வரப்பு மேலேயே  வாழ்ந்திருவானே என்கிற பயம்..

அவள் அப்படி நினைத்ததிலும்  ஒரு உண்மை இல்லாமல் இல்லை.

அது  என்ன அடுத்த புதன் வரை பொறுத்துக்கொள்க. உங்கள் கருத்துகளை  பதிவிடக் கூடாதா? எனக்கு  உற்சாகமாக இருக்கும்.

Saturday, 23 April 2016

குற்றப்பரம்பரை....பகுதி 1.

மொட்ட வெயில்.. காய்ந்த சுள்ளியோடு  இன்னொரு  சுள்ளி  உரசினாலே  பற்றிக்கொண்டு விடும்.அந்த அளவுக்கு சூரியன் சுட்டெரிக்கிறான்.
.காலில் குத்திய  கருவேல முள் செவனம்மாவை எதுவுமே  செய்யாததைப் போல ஆடுகளை பத்திக் கொண்டுபோகிறாள்.கரடுமுரடான பாதையிலும் பாறைகளிலும் நடந்து நடந்து பாதங்கள் காய்த்துப் போயிருந்தனவோ என்னவோ!.காய்ந்து வரண்டு போய்க் கிடக்கும் பூமியில் ஆடுகளுக்கு  வாயில் பற்றி  இழுக்ககூட  புல்,பூண்டு இல்லை.கருவேலங்காய்களை  தேடின. கிடைக்க வில்லை.  சிறுக்கி மகள் ஒதுங்குவதற்குக் கூட பெரிய மரங்கள் இல்லை. பொட்டக்காடு.அனல் காற்று வீசுகிறது.கழுத்தை அறுத்துப் போட்டாலும் ஒரு பயல் கேட்கமாட்டான்.  எது நடந்தாலும் யாரும் கேள்வி கேட்பார் கிடையாது. அழுக்கேறிய சேலையின் முந்தானையால்  முக்காடு போட்டுக்கொண்டு ஆடுகளின் பின்னாலேயே போகிறாள்.

''த்தே....த்தே "என்றபடி கையிலிருந்த குச்சியால் வலப்புறமும் இடப்புறமுமாய் தரையை தட்டியபடியே சென்றவளை காற்றில் மிதந்து  வந்த குரல் பிடித்து நிறுத்தியது.

''அடியே...ய்  செவனு....!''

திரும்பி பார்க்கிறாள். அது மாயக்காள். தலையில்  சுள்ளிகட்டு.வேகு வேகு என்று வருகிறாள். இவளுக்கு துணையுமாச்சு.ஊருக்குப்   போய் சேரும்வரை அலுப்பு தெரியாமல் இருக்குமே!

'செத்தெ  நில்லுடி. வந்திர்றேன் !"என்கிறாள் மாயக்காள் .

அருகில் வந்தவள்  மடியில் வைத்திருந்த வெள்ளரிப்பிஞ்சுகளை  எடுத்துக் கொடுத்தாள். இருவருக்கும் சம வயதுதான் என்றாலும் மாயக்காளுக்கு கல்யாணம் நடந்துவிட்டது..

"மாமென்  என்ன பண்றாரு?"என்றாள் செவனு.

"திருந்துற  சென்மமா தெரியலடி...முந்தானைய  விரிச்சுப்போட்டு  ஆம்பள  வாசம் அறிஞ்சதோடு  சரிடி செவனு! அந்த மனுசன் என்ன பண்றான் எங்கே போறான் எவகிட்ட  படுத்தான்கிறதல்லாம் அந்த மந்தவெளி  காளியாத்தாளுக்குதான்  தெரியும்.எந்தலையில  ஏரை  வெச்சு  எழுதிட்டான் ஈசன்!"-கண்களில் பொல பொல வென கொட்டுது கண்ணீர். முந்தானையினால்  துடைத்துக் கொண்டு அப்படியே  மூக்கையும் துடைத்துக் கொள்கிறாள்.

"அடியாத்தி...இம்புட்டு வெசனத்தை நெஞ்சில சொமந்துக்கிட்டுதான்  நடமாடிட்டி திரியிறியா? ஊட்டை விட்டு கெளம்புற மாமென் எப்பதான்  திரும்பும்?"

"செவப்பு தொப்பிக்காரன்  வந்து  என்னை டேசனுக்கு கூப்பிடுவான் பாரு.  அப்ப தெரியும்!"

"களவாணியா?''

"இல்லடி  அப்படியிருந்தா கொஞ்சம்  கவுரதையா இருந்திருக்குமே. கட்சிக்கார பயலுக பண்றத என் மாமெனும் பண்ணுதுன்னு  மனசுக்குள்ள  அழுது தீர்த்துக்கலாம்,எவனவனோடவோ  கூட்டு சேர்ந்துகிட்டு   மயானத்துல  சாராயம்  காச்சி வித்துக்கிட்டு திரியிதுடி! இதுல டேசன்காரய்ங்களுக்கும் பங்கு இருக்கு. இருந்தாலும்  மாமெனை மட்டும்  பிடிச்சிட்டு வந்திராய்ங்க. ஆனா எப்படியோ  தண்டம் கட்டிட்டு  வீட்டுக்கு வந்துருது! காசு எங்கேர்ந்து  வருதுங்கிறதும் தெரியலடி!அந்த தூமச்சீல மட்டும் யாருன்னு தெரியட்டும்.வெலக்குமாறால வெஞ்சாமரம்  வீசிற மாட்டேன்."-மாயக்காளின்  பேச்சில் வெலம் இருந்தது.

''நொம்பலப்படனும்னு விதி.பொட்டச்சிக  விதிய கருகமணி  தாலிக்கயித்தில  தொங்க விட்டிருக்கு.என்ன பண்றது? "என்று வருத்தப்பட்டவள் ஒத்த பூவரச  மரத்தைப் பார்த்ததும் ''சரி..சரி...முச்சூடும் உக்காந்து  பேசிட்டா ...உச்சந்தலையில உக்காந்திருக்கிற சனியன் எறங்கி போயிருமா? சுள்ளிக்கட்டை எறக்கி போடு" என்றபடியே  நிழல் தேட.....

ஆம்பள  நிழல்  தெரியிது.
         -------  வருகிற புதன் கிழமை  அது  யார்னு  தெரியும். அதுக்குள்ளே உங்க  கருத்து என்னங்கிறத எனக்கு சொல்லலாமே!































Tuesday, 12 April 2016

எப்படியிருந்த கட்சி இப்படி தேஞ்சு தெருவுக்கு வந்திருச்சே...

1967-க்கு பிறகு  தேசிய கட்சியான காங்.கட்சி எத்தனையோ  அவமானங்களை தமிழ்நாட்டில்  சந்தித்தாலும்  உயிருடன் இருப்பதே அதிசயம்தான்! மக்களை  கமாண்ட் பண்ற அளவுக்கு அகில இந்திய அளவில் ஒரு  தலைமை  இல்லாததே இதற்கு காரணம்.இந்திராகாந்திக்கு இருந்த  செல்வாக்கு  சோனியாவுக்கு இல்லாததும் ஒரு காரணம்தான்.!இந்திராகாந்தியின் விரலசைவில் கட்டுப்பட்டிருந்த தமிழக தலைவர்களில் சிலர் சோனியாவின் சொல்லுக்கு கட்டுப்படுவதாக இல்லை. உதாரணமாக  ப.சிதம்பரம் ,ஜி.கே.வாசன் இன்னும் பலரை சொல்லலாம்.வாசன் வெளியேறிவிட்டார். ப.சி.உள்ளிருந்தபடியே தனக்கான கோஷ்டியை பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்.மேலிடம்  கெழுத்திமீனை  விழுங்கிய நாரை  மாதிரி திணறிக்கொண்டிருக்கிறது..

அண்மையில் காங்.கட்சிக்காரர் ஒருவரிடம் கட்சியின் தேர்தல் சின்னம் எதுவென கேட்டேன்.

'என்ன குரங்கு? என்னை பத்தி என்ன நினைச்சிருக்கே? நான் பெரியவர் ( காமராஜர்.) காலத்து காங்.தொண்டன். எங்கள் சின்னம் கை சின்னம்" என்றார்  வேகத்துடன்!

'கோச்சுக்காதிங்க! அந்த சின்னம் எப்படி வந்ததுங்கிற  கதை தெரியுமா?"

மவுனம்.

'பரவாயில்ல. தமிழ்நாட்டிலுள்ள  உங்கள் தலைவர்களுக்கு தெரியுமாங்கிறதே  டவுட்டுதான்! காங்,பிளவு பட்டு இண்டிகேட்-சிண்டிகேட்னு ரெண்டு பிரிவாக ஆகியதும் எதிர்கட்சிகளல்லாம்  பசுவும் கன்று சின்னத்தை  நக்கல் பண்ணினாங்க ! பசு இந்திராகாந்தி.கன்று சஞ்சய்காந்தின்னு ஏளனம்  பண்ணினாங்க. இதை மாத்தணும்னு  ஆந்திராவில் இருந்த பி.வி.நரசிம்மராவ்,பூட்டாசிங் ஆகியோருக்கு  இந்திராகாந்தி போன் பண்ணி  சொன்னதும் அங்கே  முகாமிட்டிருந்த தேர்தல் கமிஷனர் யாகியிடம் போனார் பூட்டா.நாளைக்குள் முடிவேடுத்தாகவேண்டும்.என்கிற நெருக்கடி. யானை,சைக்கிள் ,கை, இந்த மூன்றில் ஒன்னை செலக்ட் பண்ணும்படி  யாகி  சொல்லிட்டார்.

இந்திராவிடம் பேசினார் பூட்டா.அவருக்கு இந்தி உச்சரிப்பு அவ்வளவாக  சரியாக இருக்காது. 'ஹாத் தீக் ரேஹா?' என்று  போனில் கேட்கிறார்  பூட்டா. அதாவது  'கை சின்னம் சரியாக இருக்குமா? என்பதை இந்திராகாந்தி ஹாத்தி  என்பதாக அதாவது யானை என நினைத்துக்கொண்டு  வேணாம்  ஹாத் ( கை.) தான் வேணும் என்று சொல்ல இருவருக்கும் பேச்சு முடிவதாக இல்லை. உடனே நரசிம்மராவ் குறுக்கிட்டு போனை வாங்கி 'கை 'என்பதை முடிவு  செய்தார். இல்லையென்றால் எலக்சன் கமிஷன் முடிவு செய்த சிங்கம் சின்னம்தான் கிடைத்திருக்கும்.இந்த கதை தெரியுமா?"

' சத்தியமாக  எனக்குத் தெரியாது."என்றார் அந்த தொண்டர்.

இவருக்கு மட்டுமல்ல  தமிழகத்திலுள்ள  அரசியல் கட்சிகளின்  கொடி, சின்னம் இவைகளைப் பற்றிய  அறிவு இருக்காது.

Saturday, 9 April 2016

வெட்கக்கேடு...வேறென்ன சொல்ல?

அன்புள்ள  வலைப்பூ  வாசிப்பாளர்களே..
                                             நானும்  மாங்கு மாங்குன்னு  எழுதித்தான் பார்க்கிறேன்.
அதற்கு உங்களின்  ரீ-ஆக்ஸன் என்னங்கிறது தெரியல. மடத்தனமா  இருக்கா, இல்ல  அரை லூசுத்தனமா  இருக்கா ,அல்லது  வெறுப்பாக  இருக்கான்னு  யாரும் சொல்லல. எனக்கு  ஆதரவு தெரிவிச்சு  எனக்கு பக்க பலமா  இருக்கிங்களான்னும் தெரியல. அதாங்க. பாலோ பண்றதுன்னு  சொல்றது. என்ன பண்றது  குரங்கை பாலோ பண்றதுன்னு  சொன்னால் கேலி பண்ணுவாங்களே... ஆனா என்னை விட மட்டமான  அரசியல்வாதிகளுக்கு  வாழ்த்து பாடுறதை விட  நான் ஒன்னும் கேவலமாகி விடல.!

இப்ப கூட பாருங்க.ஆட்சியில இருக்கிறவரைக்கும் மதுவிலக்கு பத்தி சி.எம். ஜெயலலிதா ஒரு வார்த்தை சொல்லல. ஆனா இனிமேல் மீண்டும்  சி.எம்.மாக  வந்தால் மதுவிலக்கு பத்தி முடிவு  எடுப்பாங்களாம். அதாவது  கோபமாக  இருக்கிற மக்களை கூல் பண்றதுக்காக  இப்படி  தூண்டில்  போட்டுப் பார்க்கிறாங்க.மக்கள் ஏமாறுவாங்களா? மண்ணள்ளி  போட்டுக்க மாட்டங்கன்னுதான்  நினைக்கிறேன்.அப்படி  போட்டுக்கிட்டா என்ன செய்ய முடியும்?பேப்பர்காரங்க எல்லோரும்  அந்த அம்மாளுக்குத்தான்  ஆதரவா இருக்காங்க. என்னமோ ஒரு பயம் அவங்களுக்கு  இருக்கு!

எலக்சன்  நேர்மையாக  நடக்குமான்னு தெரியல. அதிகாரம்  ஆளும்கட்சி  கையில் இருக்கு. எலக்சன் கமிசனும்  அப்படி இப்படிதான் நடக்கிது.ஒன்பதாம் தேதி  அதிமுக வேட்பாளர்கள்  எப்படி ஜெக ஜோதியா வாகனங்களை  திரட்டிக்கொண்டு ஊர்வலமாக போனாங்க. பார்த்திங்கள்ல.

வாசன் நிலைமைதான்  இந்தளவு  மோசமாகப் போகும்னு எதிர்பார்க்கல. எப்படிப்பட்ட  குடும்பத்து ஆளு. அதாவது  பாரம்பரிய  கட்சிக்காரர்னு சொல்லவந்தேன். அவரை கேப்டன்சார்தான்  சி.எம்.முன்னு  விதி சொல்ல வச்சிருக்கே!  அய்யா காமராஜர் பெயரை சொல்லி  அவருடைய  ஆட்சியை  தருவோம்னு  சொல்லி வந்தவர் இப்ப .....தடம்  மாறிப் போயிட்டாரே!  இன்னும் என்னன்ன நடக்கப்போகுதோ?

அதாவது  அரசியல்னா  அசிங்கம்னு அர்த்தமோ.... என்னமோ  போங்கோ!. கேப்டனை  எதிர்பார்த்து  ஏமாந்த  திமுக. அந்த தேமுதிகவையே  பொளந்திருச்சே! ஒரு பக்கம் அந்தம்மா  வெடி வைக்கிது.இந்த பக்கம் அய்யா  வேட்டு வெடிக்கிறார்.இவங்க ரெண்டு பேருக்கும்  யாரு வெடி  வைக்கப் போறாங்களோ! ஆனா அது இந்த தேர்தலில்  நடக்கிற மாதிரி தெரியல.இந்த ரெண்டு  கட்சியையும் பிடிக்காதவங்க  பல  கூறாக  பிரிஞ்சி  நிக்கிறாங்க.அவங்கவங்களுக்கு  ஆப்பு  அவங்களே  தீட்டி  வச்சிருக்காங்க. இவங்களே இப்படி இருக்காங்களே  அந்த அன்புமணி சார், சீமான் சார் இவங்கள்லாம் என்ன  ஆவாங்க.

ஆளும் கட்சி சார்பில சரத்குமார்,கருணாஸ்  இவங்களுக்கெல்லாம்  இலவச கோட்டாவில இடம் கிடைக்கும்னு  சத்தியமா யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அந்தளவுக்கு  அம்மா கட்சி பலவினப்பட்டு கிடக்கிறதா என்ன? இப்படியும் ஒரு சந்தேகம் இருக்கு! இன்னும் எத்தனை தடவை வேட்பாளர்களை  அந்தம்மா மாத்தியடிக்குமோ? திமுக வேட்பாளர்களை  அறிவித்தபிறகு  அதுக்கு சரியான  போட்டியை கொடுக்கணுமே என்பதற்காக  அம்மா ஆளை மாத்த வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க.

என்ன இருந்தாலும் அம்மாவுக்கும் அய்யாவுக்கும்தான் சரியான போட்டி! ஸ்டாலினின் வேகத்துக்கு இறங்கியடிக்க அம்மா கட்சியில  சரியான ஆள் இல்லைங்கிறது  உண்மை! சென்னையில் வெள்ள சேதம் பார்க்க வந்த மந்திரிகள் எவ்வளவு வேகமா திரும்பி ஓடினாங்கன்னுதான் பார்த்தமே..அந்த கோபத்தை சென்னையில் உள்ளவங்க காட்டுன அளவுக்கு மத்த மாவட்டங்களில் காட்டமாட்டாங்கன்னு அம்மா கட்சி  நினைக்கிது.அரசு  ஊழியர்கள் அரசு மேல கோபமா இருக்கிறதா  சொல்றாங்க.

இன்னும் தேர்தல் வேலைகள்  முழு வீச்சுக்கு  இறங்கலே..யாரு அடுத்த முதல்வர் என்கிற போட்டி திமுக--அதிமுக  இரண்டு கட்சிக்கு இடையேதான்  இருக்குங்கிறதுதான் உண்மை. இதையும்  தாண்டி..

வேற  நடக்கலாம்னு  சொன்னா  வெட்கக்கேடு..வேறென்ன  சொல்ல?

 

Saturday, 2 April 2016

அடுத்த ஜனாதிபதி அமிதாப் பச்சனா?

குடுகுடுப்பைக்காரன்களில்  அரசியல்  ஜோசியம் சொல்கிறவன்தான்  குடல் அந்து போகிற மாதிரி அர்த்த ராத்திரியில் வந்து கழுத்தறுப்பான். அறிவிக்கப்பட்ட  மாநிலங்களில் தேர்தல் முடிவுக்கு வராத நிலையில் சிலர் கைரேகை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.யாருடைய  கைரேகை ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமாக  இருக்கும் என்று  பெரிய மனிதர்களின்  கைகளை கழுவிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். பொதுவாக  இந்தியாவின் உயர்ந்த பதவியை  முடிவு  செய்கிற சக்தி  மத்தியில் ஆளுகிற கட்சியின் வசமே இருந்திருக்கிறது. தொங்கலாக  இருக்கிறபோதுதான் தமிழக கட்சிகளிடம் பேரம் பேசுவார்கள். தற்போதைய நிலையில் ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்கிற  அதிகாரம் பா.ஜ.க.விடம்தான் இருக்கிறது. மாநிலங்களில் நடக்கிற தேர்தலின் முடிவுகள் நிலை குத்தி நிற்குமானால் அப்போதுதான் எதிர்க் கட்சிகளுக்கும் ஒரு மரியாதை வந்து சேரும்.


ஆனால் பிரதமர் மோடிக்கு  அவரது நண்பரான அமிதாப் மீது ஒரு கண். அவரை போட்டியிட  வைக்கலாம் என நினைப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அமிதாப்புக்கு  அத்தகைய ஆசை  இருக்குமா?

இல்லை என்று சொல்ல முடியாது. இருக்கும் என்றும் சொல்ல முடியாது. மரியாதைக்குரிய  மனிதர்கள்  அமரவேண்டிய பதவி அது. அவரை உலகம் நன்கறியும்.நாடும் நன்கறியும். ஒரு தடவை காங்.கட்சியின்  சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக  மூன்று ஆண்டுகள்  பணி புரிந்திருக்கிறார்.அவரது மனைவி ஜெயபாதுரியும் தற்போதைய  உறுப்பினராக  இருக்கிறார்.

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அமர்சிங்  சொல்லியிருக்கும் தகவல்  பொய்யாவதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை. அவர்தான் சொல்லியிருக்கிறார்  மோடிக்கு அப்படி ஒரு எண்ணம் இருப்பதாக. அது  சரியான  ஆலோசனைதான்! யாருக்கும் தலை வணங்காத  குணம்  அமிதாப்புக்கு இருக்கிறது. நடிகர்களுக்கு  மாநிலங்களை ஆளுகிற  தகுதி இருப்பதாக மக்கள் வாக்களிக்கிற போது  அமிதாப்  ஜனாதிபதியாக  இருந்தால் என்ன?

ஆனால் 'தனக்கு அத்தகைய பதவி மீது ஆசை இல்லை" என்பதாக அமிதாப் சொல்லியிருப்பது  நாளை  மாறவும் வாய்ப்பு இருக்கிறது. இவரை விட்டால் எல்.கே .அத்வானியை  ஜனாதிபதியாக்கும்  வாய்ப்பு  இருக்கிறது. ஆனால்  மோடி ஒப்புக்கொள்ளவேண்டுமே?

அன்னா ஹசாரேக்கு வாய்ப்பு உண்டா?

குடுகுடுப்பைக்காரன்தான் பதில் சொல்லவேண்டும்!