Saturday 2 April 2016

அடுத்த ஜனாதிபதி அமிதாப் பச்சனா?

குடுகுடுப்பைக்காரன்களில்  அரசியல்  ஜோசியம் சொல்கிறவன்தான்  குடல் அந்து போகிற மாதிரி அர்த்த ராத்திரியில் வந்து கழுத்தறுப்பான். அறிவிக்கப்பட்ட  மாநிலங்களில் தேர்தல் முடிவுக்கு வராத நிலையில் சிலர் கைரேகை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.யாருடைய  கைரேகை ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமாக  இருக்கும் என்று  பெரிய மனிதர்களின்  கைகளை கழுவிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். பொதுவாக  இந்தியாவின் உயர்ந்த பதவியை  முடிவு  செய்கிற சக்தி  மத்தியில் ஆளுகிற கட்சியின் வசமே இருந்திருக்கிறது. தொங்கலாக  இருக்கிறபோதுதான் தமிழக கட்சிகளிடம் பேரம் பேசுவார்கள். தற்போதைய நிலையில் ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்கிற  அதிகாரம் பா.ஜ.க.விடம்தான் இருக்கிறது. மாநிலங்களில் நடக்கிற தேர்தலின் முடிவுகள் நிலை குத்தி நிற்குமானால் அப்போதுதான் எதிர்க் கட்சிகளுக்கும் ஒரு மரியாதை வந்து சேரும்.


ஆனால் பிரதமர் மோடிக்கு  அவரது நண்பரான அமிதாப் மீது ஒரு கண். அவரை போட்டியிட  வைக்கலாம் என நினைப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அமிதாப்புக்கு  அத்தகைய ஆசை  இருக்குமா?

இல்லை என்று சொல்ல முடியாது. இருக்கும் என்றும் சொல்ல முடியாது. மரியாதைக்குரிய  மனிதர்கள்  அமரவேண்டிய பதவி அது. அவரை உலகம் நன்கறியும்.நாடும் நன்கறியும். ஒரு தடவை காங்.கட்சியின்  சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக  மூன்று ஆண்டுகள்  பணி புரிந்திருக்கிறார்.அவரது மனைவி ஜெயபாதுரியும் தற்போதைய  உறுப்பினராக  இருக்கிறார்.

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அமர்சிங்  சொல்லியிருக்கும் தகவல்  பொய்யாவதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை. அவர்தான் சொல்லியிருக்கிறார்  மோடிக்கு அப்படி ஒரு எண்ணம் இருப்பதாக. அது  சரியான  ஆலோசனைதான்! யாருக்கும் தலை வணங்காத  குணம்  அமிதாப்புக்கு இருக்கிறது. நடிகர்களுக்கு  மாநிலங்களை ஆளுகிற  தகுதி இருப்பதாக மக்கள் வாக்களிக்கிற போது  அமிதாப்  ஜனாதிபதியாக  இருந்தால் என்ன?

ஆனால் 'தனக்கு அத்தகைய பதவி மீது ஆசை இல்லை" என்பதாக அமிதாப் சொல்லியிருப்பது  நாளை  மாறவும் வாய்ப்பு இருக்கிறது. இவரை விட்டால் எல்.கே .அத்வானியை  ஜனாதிபதியாக்கும்  வாய்ப்பு  இருக்கிறது. ஆனால்  மோடி ஒப்புக்கொள்ளவேண்டுமே?

அன்னா ஹசாரேக்கு வாய்ப்பு உண்டா?

குடுகுடுப்பைக்காரன்தான் பதில் சொல்லவேண்டும்!



     

No comments:

Post a Comment