Saturday, 23 April 2016

குற்றப்பரம்பரை....பகுதி 1.

மொட்ட வெயில்.. காய்ந்த சுள்ளியோடு  இன்னொரு  சுள்ளி  உரசினாலே  பற்றிக்கொண்டு விடும்.அந்த அளவுக்கு சூரியன் சுட்டெரிக்கிறான்.
.காலில் குத்திய  கருவேல முள் செவனம்மாவை எதுவுமே  செய்யாததைப் போல ஆடுகளை பத்திக் கொண்டுபோகிறாள்.கரடுமுரடான பாதையிலும் பாறைகளிலும் நடந்து நடந்து பாதங்கள் காய்த்துப் போயிருந்தனவோ என்னவோ!.காய்ந்து வரண்டு போய்க் கிடக்கும் பூமியில் ஆடுகளுக்கு  வாயில் பற்றி  இழுக்ககூட  புல்,பூண்டு இல்லை.கருவேலங்காய்களை  தேடின. கிடைக்க வில்லை.  சிறுக்கி மகள் ஒதுங்குவதற்குக் கூட பெரிய மரங்கள் இல்லை. பொட்டக்காடு.அனல் காற்று வீசுகிறது.கழுத்தை அறுத்துப் போட்டாலும் ஒரு பயல் கேட்கமாட்டான்.  எது நடந்தாலும் யாரும் கேள்வி கேட்பார் கிடையாது. அழுக்கேறிய சேலையின் முந்தானையால்  முக்காடு போட்டுக்கொண்டு ஆடுகளின் பின்னாலேயே போகிறாள்.

''த்தே....த்தே "என்றபடி கையிலிருந்த குச்சியால் வலப்புறமும் இடப்புறமுமாய் தரையை தட்டியபடியே சென்றவளை காற்றில் மிதந்து  வந்த குரல் பிடித்து நிறுத்தியது.

''அடியே...ய்  செவனு....!''

திரும்பி பார்க்கிறாள். அது மாயக்காள். தலையில்  சுள்ளிகட்டு.வேகு வேகு என்று வருகிறாள். இவளுக்கு துணையுமாச்சு.ஊருக்குப்   போய் சேரும்வரை அலுப்பு தெரியாமல் இருக்குமே!

'செத்தெ  நில்லுடி. வந்திர்றேன் !"என்கிறாள் மாயக்காள் .

அருகில் வந்தவள்  மடியில் வைத்திருந்த வெள்ளரிப்பிஞ்சுகளை  எடுத்துக் கொடுத்தாள். இருவருக்கும் சம வயதுதான் என்றாலும் மாயக்காளுக்கு கல்யாணம் நடந்துவிட்டது..

"மாமென்  என்ன பண்றாரு?"என்றாள் செவனு.

"திருந்துற  சென்மமா தெரியலடி...முந்தானைய  விரிச்சுப்போட்டு  ஆம்பள  வாசம் அறிஞ்சதோடு  சரிடி செவனு! அந்த மனுசன் என்ன பண்றான் எங்கே போறான் எவகிட்ட  படுத்தான்கிறதல்லாம் அந்த மந்தவெளி  காளியாத்தாளுக்குதான்  தெரியும்.எந்தலையில  ஏரை  வெச்சு  எழுதிட்டான் ஈசன்!"-கண்களில் பொல பொல வென கொட்டுது கண்ணீர். முந்தானையினால்  துடைத்துக் கொண்டு அப்படியே  மூக்கையும் துடைத்துக் கொள்கிறாள்.

"அடியாத்தி...இம்புட்டு வெசனத்தை நெஞ்சில சொமந்துக்கிட்டுதான்  நடமாடிட்டி திரியிறியா? ஊட்டை விட்டு கெளம்புற மாமென் எப்பதான்  திரும்பும்?"

"செவப்பு தொப்பிக்காரன்  வந்து  என்னை டேசனுக்கு கூப்பிடுவான் பாரு.  அப்ப தெரியும்!"

"களவாணியா?''

"இல்லடி  அப்படியிருந்தா கொஞ்சம்  கவுரதையா இருந்திருக்குமே. கட்சிக்கார பயலுக பண்றத என் மாமெனும் பண்ணுதுன்னு  மனசுக்குள்ள  அழுது தீர்த்துக்கலாம்,எவனவனோடவோ  கூட்டு சேர்ந்துகிட்டு   மயானத்துல  சாராயம்  காச்சி வித்துக்கிட்டு திரியிதுடி! இதுல டேசன்காரய்ங்களுக்கும் பங்கு இருக்கு. இருந்தாலும்  மாமெனை மட்டும்  பிடிச்சிட்டு வந்திராய்ங்க. ஆனா எப்படியோ  தண்டம் கட்டிட்டு  வீட்டுக்கு வந்துருது! காசு எங்கேர்ந்து  வருதுங்கிறதும் தெரியலடி!அந்த தூமச்சீல மட்டும் யாருன்னு தெரியட்டும்.வெலக்குமாறால வெஞ்சாமரம்  வீசிற மாட்டேன்."-மாயக்காளின்  பேச்சில் வெலம் இருந்தது.

''நொம்பலப்படனும்னு விதி.பொட்டச்சிக  விதிய கருகமணி  தாலிக்கயித்தில  தொங்க விட்டிருக்கு.என்ன பண்றது? "என்று வருத்தப்பட்டவள் ஒத்த பூவரச  மரத்தைப் பார்த்ததும் ''சரி..சரி...முச்சூடும் உக்காந்து  பேசிட்டா ...உச்சந்தலையில உக்காந்திருக்கிற சனியன் எறங்கி போயிருமா? சுள்ளிக்கட்டை எறக்கி போடு" என்றபடியே  நிழல் தேட.....

ஆம்பள  நிழல்  தெரியிது.
         -------  வருகிற புதன் கிழமை  அது  யார்னு  தெரியும். அதுக்குள்ளே உங்க  கருத்து என்னங்கிறத எனக்கு சொல்லலாமே!































No comments:

Post a Comment