Saturday, 11 March 2017

காதல்..காமம். ( 28.)

'நா என்னத்த சொல்ல கெடக்கு? வீட்டுக்குப் பெரியவக  ஒங்க சொல்லுக்கு மறு  சொல்லு நா என்னிக்கி சொல்லிருக்கேன். எங்கண்ணனுக்கு என்ன சொல்றதங்கிரத நா பாத்துக்கிறேன். ஒங்க முடிவ நீங்க சொல்லிருங்க?' என்று  நைசாக நழுவிக் கொண்டாள் ராசம்மா.

இதைத்தான் பொன்னியும் எதிர்பார்த்திருந்தாள். பெத்தவ பெருமை மகளுக்கு  தெரியாதா என்ன? அப்பனை இப்படி எத்தனை நெருக்கடிகளில் மாட்டி  விட்டிருக்கிறாள்.?

எதுவும் தெரியாதவளைப்போல அங்கு வந்தாள் !


" இல்லாத சாமானை இருட்டில ரெண்டு பேரும் தேடிக்கிட்டிருக்கிங்க.அப்படி என்னத்த தேடுறிங்க" என்று அப்பனையும் ஆத்தாளையும் மறைமுகமாக நக்கல் விட்டவள் வடிவேலுவை பார்த்து    "என்ன மாமா இன்னும் இங்கனயே  இருக்கிங்க. மத்தியான விருந்துன்னு எங்க அய்யா சொன்னாரா?" என்று சின்னதாக ஒரு சேட்டை.

"அப்படியெல்லாம் இல்லத்தா!"என்ற வடிவேலு " போயிட்டு வாறேங்க..நல்ல  முடிவா சொல்லி விடுங்க"என்று சிவனாண்டிக்கும் ராசம்மாவுக்கும் ஒரு  கும்பிட்டை போட்டு வெளியேற  அவரை வாசல் வரை சென்று வழி  அனுப்பி வைத்தாள் பொன்னி.!

இனிதான் ஆரம்பமாகிறது  பொன்னியின் அதகளம்.

"என்ன பெத்தவளே! எனக்கு ஒரு மொறைமாமன் இருக்காங்கிறத இத்தனை  காலமும் எதுக்கு மறச்ச? அவன் எங்கிட்டு இருக்கான் என்னத்த பண்றாங்கிறத  சொல்லுத்தா! அய்யா சொல்லித்தான் எல்லா சங்கதியும் தெரியிது? இன்னும் என்னத்தயல்லாம் மறச்சிருக்கிங்க?"

சட்டமாக நாற்காலியை சரட்டுன்னு இழுத்துப்போட்டு உட்கார்ந்தாள்.மகா ராங்கி!

"இப்படியெல்லாம் ரெண்டு பேரும் கூத்துக்கட்டி எவன் தலயிலாவது கட்டி விடலாம்னு பார்த்திங்கன்னா மூட்டப்பூச்சி மருந்த ஊத்தி உங்க ரெண்டு பேரையும் கொன்னு போட்டுட்டு நான் சந்தோசமா தங்கராசோட வாழப் போயிருவேன்.மத்த பொண்ணுங்க மாதிரி இருப்பேன்னு மட்டும் நெனச்சிருதேங்கப்பு! நான் பத்ரகாளி!"

விரலை ஆட்டி ஆட்டி பேசுகிறாள். சிவனாண்டி ,ராசம்மா இருவருக்கும்  ஆச்சரியம். "நாம்ம பெத்த பொண்ணுதான் இப்படி பேசுறாளா?"

"அவன் உசிரோடு இல்லேன்னா எவன கட்டிப்பே? "

தோளில் கிடந்த துண்டை எடுத்து தலப்பாவாக கட்டிக் கொண்டு கேட்கிறார்  சிவனாண்டி.!அவரும் விடுவதாக இல்லை.

அப்பனுக்கும் மகளுக்கும் பெரிய சண்டை நடக்கப்போகுது என்பதுதெரிந்து விட்டது ராசம்மாவுக்கு!

"அந்த சின்ன சிறுக்கிதான் கொழுப்பெடுத்து அப்படி பேசுறான்னா நீங்களும்  சரிக்கு சரியா மல்லுக்கு நிப்பீங்களா? அவ மூட்டப்பூச்சி மருந்துங்கிறதும்  நீங்க ஊரான் வீட்டுப்பிள்ளையை கொன்னுருவேன்னு சொல்றதும் ....யார் காதுலயாவது விழுந்துச்சுன்னா நம்மள காரி துப்பிருவாய்ங்க!"

"நான் ஓடிப்போயிட்டேன்னா மட்டும் உங்கள மணத்துக்குவாய்ங்களாக்கும்?" பொன்னியும் விடுவதாக இல்லை.இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்பதில்  உறுதியாக இருக்கிறாள்.சிவனாண்டிக்கு ஆத்திரம் உச்சி மண்டையில்!

"பாத்தியாடி.பயபிள்ள என்னமாதிரி வாயடிக்கிதுன்னு?பொட்ட பிள்ளைய அடுப்பங்கரையில உக்காரவைக்காதது எந்தப்புதான்! ஓடி போயிடுவாளாம்ல?
கால வெட்டி நொண்டிக்கிட்டு கெடன்னு விட்டா என்ன பண்ணுவா?" என்று சத்தம் போட்டபடியே ஓடி வந்து ஓங்கி ஒரு அறை விட்டார்.

நாற்காலியில் உட்கார்ந்திருந்த பொன்னி மடாரென தரையில் விழ இதையெல்லாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத ராசம்மா  பதறிப்போனாள், வாயிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு கத்துகிறாள்."என்ன பெரிய மனுசன்யா! ..பொட்டப்புள்ள மேலயா கைய நீட்றது? என்ன பாவம் செஞ்சேன்னு  தெரியலிய. அப்பனும் மவளும் இப்படி மல்லுக்கட்டிக்கிட்டு இருந்தா பய மக்க சிரிச்சுப்புடமாட்டாகளா.? நாறிப்போகும் நாறி!  "என்று  புருசனை மடக்கி நிறுத்தி தள்ளி  விட்டு அப்படியேதரையில் கிடந்த  மகளையும்விட்டாள் ஒரு  எத்து!

பொன்னி எதிர்பார்க்கவில்லை.

ஆவேசமாக எழுந்தவள் அடுப்படிக்கு சென்று அருவாமனையை எடுத்துக் கொண்டு வருகிறாள்.தலை விரிந்து கிடக்கிறது.கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது.என்ன பேசுகிறோம் எதை செய்கிறோம் என்பது பொன்னிக்கு தெரியவில்லை.பாம்பாக சீறுகிறாள்,

"புருசனும் பொண்டாட்டியுமா சேர்ந்து என்ன கொல்ல பாக்கிறிங்களா..
.அந்தாளு அடிக்கிறான்.கெழட்டு சிறுக்கி நீ மிதிக்கிறே....ஒங்களை இன்னிக்கு வெட்டாம விடமாட்டேன். செயிலுக்கு போனாலும் கவலையில்ல.ரெண்டுல ஒன்னு பாத்திட வேண்டியதுதான்!" என்றபடியே அருவாமனையை ஓங்கினாள்.

சிவனாண்டியின் கையில் விழுந்தது வெட்டு!

உண்மை நிகழ்வின் அடிப்படையில்  புனையப்படும் தொடர் 


  

No comments:

Post a Comment