Friday 24 March 2017

காதல்...காமம். (30.)

"ஏய்! நீ  இன்னமும் அருவாமனையை கீழே போடலியா?"--சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் எஸ்.ஐ..

கூடவே இரண்டு போலீஸ்காரர்கள்.! ஆத்தாக்காரி ராசம்மா மட்டும் வந்திருக்கிறாள். அருவாமனை வெட்டு ஆழம் என்பதால் டாக்டர்கள் போலீசில் சொல்ல கேஸ் ஆகி விட்டது. சிவனாண்டி தற்போது  பெரிய ஆஸ்பத்திரியில்  உள் நோயாளி!.புருசன் ,பொண்டாட்டி இருவரும் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தும் போலீஸ் விடவில்லை.குற்றவாளியை கைது செய்தே தீருவோம் என்று சொல்லி வீடு வரை வந்து விட்டது.

"ஊர் சிரிக்க வச்சிட்டியேடி! வயசு புள்ள.போலீஸ் டேசனுக்கு போவலாமா?அப்படி என்னடி அந்த மனுசன் ஒன்ன சொல்லிப்புட்டாரு? மவளுக்கு அப்பன் புத்தி சொல்றது குத்தமாடி கூறு கெட்ட குந்தாணி முண்ட!"

பொன்னி எதுவும் பேசுவதாக இல்லை போலும். கையில் பிடித்த அருவாமனையை மேலும் இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.

தெளிவாக பேசுகிறாள் எஸ்.ஐ.யிடம்!

"அப்பன் மவள் சண்டை போட்டுக்கிட்டோம். ஆத்திரத்தில் வெட்டினேன். குத்தம்தான்..இல்லேங்கலே.!விசாரணையை வீட்டோடு வச்சுக்குங்க. படி தாண்டி ஸ்டேசனுக்கல்லாம் வர மாட்டேன்.!என்ன கேவலப்படுத்தாம விசாரணை  பண்ணுங்க,கேளுங்க."

"வெறி பிடிச்சு வெட்டிப்பிட்டு வியாக்கியானமா பேசுற? படிச்ச பொண்ணு! மொரண்டு பிடிக்காம வந்திட்டா மரியாதை.இல்லேன்னா பொம்பள புள்ளன்னு  கூட பாக்க மாட்டேன்.செவுலை திருப்பிடுவேன்."-என்றபடியே  எஸ்.ஐ. நெருங்கினார்.

"அப்படியே நிக்கணும்! அதுக்கும் மேல ஒரு அடி எடுத்து வச்சா நடக்கிற கதையே வேற.!கழுத்த அறுத்துக்கிட்டு செத்திருவேன்." என்று மிரட்டவே   எஸ்.ஐ.யின் காலில் விழுந்து விட்டாள்  ராசம்மா.

"ஐயா எசமான்.ரத்தம் சிந்துன வீட்டுல எழவு வேற  விழுகனுமா? கிறுக்கு புடிச்ச முண்ட! சொன்னபடி செஞ்சாலும்  செஞ்சிருவா!. ஒத்தப்புள்ளைய காவு கொடுத்துட்டு  நாங்க நாதியத்து கெடக்கனுமா? விட்ருங்க ஐயா!"

"பொட்டப்புள்ள மெரட்டுராங்கிறதுக்காக  விட்டுட்டு போறதுக்கா கவர்மெண்டுல எங்களுக்கு சம்பளம் கொடுக்கிறாங்க.? கையில இருக்கிற அருவாமனையை புடுங்குறதுக்கு எவ்வளவு நேரமாகப்போகுது? எந்திரிம்மா! ஒன் மகள் கையில இருக்கிறத நீயே வாங்கு.! மத்ததை நாங்க பாத்துக்கிறோம்!"

சப் இன்ஸ்பெக்டர் உறுதியாக  இருந்தார்.

எப்படியோ தகவல் கிடைத்து மகன் தங்கராசுவுடன் வீட்டுக்குக்குள்  நுழைகிறார்  வடிவேலு.!

"என்ன காரியத்த பண்ணிருக்கே தாயி! பெத்த அப்பனையா வெட்டுறது." என்று வடிவேலு பதறினார்.

"இந்த காரியத்த பண்றதுக்கு பதிலா நீ என் வீட்டுக்கு வந்துருக்கலாமே பொன்னி!"என்றபடியே அவளிடம் நெருங்கப் பார்த்தான். வேறு ஏதாவது தப்பு  நடந்து விடக்கூடாதே என்கிற பயத்தில்!.

"அந்த கெழவன் என்ன பேசுனாங்கிறது ஒனக்கு தெரியுமா ராசு? ஒன்னை வெட்டி கொன்னுடுவானாம்.கன்னத்தில ஓங்கி அறைஞ்சா எனக்கு ஆத்திரம்  வருமா வராதா?அதான் வெட்டுனேன். அப்பன் ஆத்தா தயவுல நான் வாழணும்கிறது அவசியம் இல்ல! அப்பன வெட்டுன பழியோடு ஒன் கூட வாழவும்  போறதில்ல."

"தப்பா பேசாத பொன்னி.! நீ ஜெயிலுக்கு போனாலும் நீதான் என் பொண்டாட்டி. நீ என் கூட வா. ஸ்டேசனுக்கு போகலாம் ."

"நீ என்னதான் சொன்னாலும் நான் ஸ்டேசனுக்கு வர மாட்டேன் ராசு!."

"துப்புக்கெட்டவளே...ஒன்ன அந்த தம்பிக்கே கட்டி கொடுக்குறோம்டி. பிடிவாதத்தை விட்டு அந்த தம்பியோடு போ! உங்கப்பன் உசிருக்கு ஒன்னும்  ஆயிடாதுன்னு பெரிய டாக்டர் சொல்லிட்டாரு.என் புருசனை நான் பாத்துக்கிறேன். வாழப்போற பொண்ணு.!.சொல்றத கேட்டு நடடி!"  ராசம்மா  கை எடுத்து மகளை கும்பிடுகிறாள்.

சப்-இன்ஸ்பெக்டருக்கு கடுப்பாகி விட்டது.கத்துகிறார்.

"என்னய்யா ..என்னை  என்ன சும்பன்னு நெனச்சிட்டு டிராமா போடுறீங்களா?  அத்தன பேரையும் அள்ளிப்போட்டுட்டு போயி நாலு சாத்து சாத்த தெரியாதுன்னு நெனச்சிட்டிங்களா? அவ என்னடான்னா அருவாமனையை வச்சுக்கிட்டு பூச்சாண்டி காட்டிட்டு இருக்கா.. நீங்க என்னடான்னா சினிமா டயலாக் பேசுறீங்க..வெலகி நில்லுங்கடா  வெண்ணைகளா?" என்று நெருங்கி செல்ல , இரண்டு போலீஸ்காரர்களும் வடிவேலு, தங்கராசுவை சுவர் ஓரமாக  தள்ளி விட்டனர். 

ஆனால் தங்கராசு அப்படி ஒரு முடிவை எடுப்பான் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது.

பொன்னியே நினைத்தும் பார்த்திருக்க மாட்டாள்.

அப்படி என்ன தான் நடந்தது?

உண்மை  நிகழ்வை  அடிப்படையாக வைத்து புனையப்படுகிற தொடர் இது.

இங்கு பிரசுரிக்கப்பட்ட படத்துக்கும் புனைவுக்கும் தொடர்பு இல்லை.

No comments:

Post a Comment