Saturday, 4 March 2017

காதல்...காமம். ( 27.)

ஜட்காவில் இருந்து இறங்கியவர் தங்கராசுவின் அய்யா வடிவேலு.

"படியில கால வச்சு மெதுவா எறங்கு, மறக்காம மல்லிப்பூவை எடுத்துக்க!" மாயக்காளின் கையை பிடித்து இறக்கிவிட்டார்.

 பின்கொசுவம் வைத்து கட்டிய  பட்டுப்புடவை ,கழுத்தில் பதக்கம், இரட்டைவட சங்கிலி,கையில் தங்க வளையல்கள் ,நெற்றியில் துண்ணூறு கீற்று, மேலாக பெரிய அளவில் குங்குமம் என மகாலட்சுமியாக இறங்கினாள்.

வாசலுக்கு வந்துவிட்டவர்களை வரவேற்காமல் இருக்க முடியுமா?

பொன்னியின் அப்பா சிவனாண்டி"வாங்க..வாங்க" என்று வாய் நிறைய வீட்டுக்குள் அழைத்துச்சென்றவர் மனைவியை கூப்பிட்டார்.

"ராசு...இங்க வாத்தா..காரை வீட்டுக்காரக வந்திருக்காக" !

அப்பனின் அழைப்பு மகள் பொன்னியின் காதிலும் விழுந்தது. அதுவரை இருந்த  மன அழுத்தம் இப்போது இல்லை.கதவை முழுவதும் சாத்தாமல் இடைவெளி விட்டு அதன் வழியே என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆசை.... ஆர்வம்,!

"வாங்க..வாங்க..நல்லாருக்கிகளா?" அடுப்படியில் இருந்து வந்த ராசம்மாவுக்கு  இப்போது புரிகிறது..சம்பந்தம் பேச வந்திருக்காக!

சமுக்காளம் எடுத்து விரிக்கிறாள். வடிவேலுவும் மாயக்காளும் உட்கார்ந்தனர்.

"பொண்ணு வீட்லதானே இருக்கு? இந்த பூவ வச்சு விடுங்களேன்?" மாயக்காள் சொன்னது பொன்னிக்கு கேட்கிறது. தனக்குள் பெருகிய மகிழ்ச்சியை முகம் முழுக்க மலர விட்டுக்கொண்டாள்.

சற்று முன் மகளை காய்ச்சி எடுத்திருந்த ராசம்மாளின் குரலில் இப்போது கருப்பட்டி பாகு!

"பொன்னி...இங்க வா. பெரியவக வீடு தேடி வந்திருக்காக, வந்து கும்பிட்டுக்க!"

கதவு திறந்து வந்த பொன்னி "வாங்க மாமா..வாங்க அத்த" என்று முறை வைத்து சொல்வாள் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.  மாயக்காள் பக்கமாகவே   உட்கார்ந்து விட்டாள்.   சிவனாண்டிக்கு   சற்று கோபம்!ஆனால்  . காட்டிக் கொள்வதற்கு அது நேரமில்லையே..  "சரி... ஒரு முடிவோடுதான் காரை வீடு வந்திருக்கு!"

"என் செல்லம். பூ வச்சுக்கத்தா " என்று மாயக்காள்   நீட்ட " நீங்களே வச்சு விடுங்கத்தே!" என்று வாகாக உட்கார்ந்து கொள்கிறாள் பொன்னி !. "அந்த மீனாச்சியை பார்த்த மாதிரி இருக்கு!"

பொன்னியின் கன்னம் தடவி திருஷ்டி கழித்ததும் பொண்ணுக்கு  பூரிப்பு பொங்குகிறது..

"நல்லது தாயி! நீ ஒன் ரூமுக்கு போ! நாங்க பெரியவக பேசிக்கிறோம்."என்று பொன்னியை அனுப்பிவிட்டு ராசம்மாவை பார்த்தாள்.

"அத்தாச்சி! இன்னிக்கி நல்ல நாளு!முன்னாடியே ஏதும் சொல்லிக்காம திடுதிப்புன்னு வந்து நிக்கிறாகலேன்னு வருத்தம் கிருத்தம் பட வேணாம்,எங்களுக்கு ஒரே புள்ளதான்.பெரிய படிப்பு படிச்சிருக்கான்.ஒங்க மவளைத்தான் கட்டிக்குவேன்னு சொல்லிட்டான். எங்களுக்கு வயலு வாய்க்காலுக்கு குறைவில்ல.பாட்டன் சொத்து அப்பன் சொத்துன்னு ஆளப்போறவன் அவன்தான்! அவனுக்குத்தான் உங்க மவளை கேட்டு வந்திருக்கோம். அண்ணனை கேட்டு நல்ல முடிவா சொல்லுங்க.!"

திடீர் என்று வந்தவர்கள் இப்படி நேரடியாகவே கேட்பார்கள் என்பது சிவனாண்டி,ராசம்மா வகையறாவுக்கு தெரிந்திருக்கவில்லை . ஒரு வேளை பொன்னி சொல்லித்தான்   வந்திருப்பார்களோ என்கிற சந்தேகமும் இருந்தது. புருசனிடம் தள்ளிவிடவேண்டியதுதான் பொறுப்பை!

"என்னங்க பொன்னியய்யா! அத்தாச்சி சொல்றதை கேட்டிகள்ல?! பொண்ணு கேக்கிறாக!"

"அது சரி! பொண்ணுன்னு இருந்தா நாலு பேரு கேட்டு வரத்தான் செய்வாக! ஆனா .மச்சு வீட்டுக்காரங்கன்னு தள்ளி விட்ற முடியாதுள்ள.! "

அப்பன் சொல்வதை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறாள் பொன்னி. முடிவாக  என்ன சொல்வார் என்பதை  தெரிந்து கொண்டு  பிறகு தைரியமாக தனது முடிவை சொல்லிவிட வேண்டியதுதான்!

"உங்கண்ணன் மவனுக்கு கட்டி வைக்கனும்னு சொன்னியே..? இப்ப இந்த சம்பந்தம் வந்திருக்கு. உன் முடிவ சொல்லு?" என்று சிவனாண்டி ஒரு வெடி குண்டை வீசுவார்  என்பதை அவரது குடும்பமே எதிர்பார்க்க வில்லை! இல்லாத முறைப்பையனை  அய்யன் இறக்குவதால் அவரின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது  பொன்னிக்கு!

"ஆத்தாளின் அண்ணனுக்கு பொம்பள புள்ளதானே இருக்கா? பச்ச பொய்யை அய்யன் சொல்றதை பார்த்தா இந்த சம்பந்தம் பிடிக்கலேன்னுதானே அர்த்தம்.நாடகம் ஆடுறார் சிவனாண்டி.இதுக்கு ஆத்தா என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்.அப்புறம் ஏறக்குவோம் அருவாளை ! "மனசுக்குள் பொன்னி சொல்லிக்கொண்டாள்.

ராசம்மாவுக்குத்தான் இப்ப சிக்கல்! என்னத்த சொல்றது?

உண்மை  நிகழ்வை  அடிப்படையாக  வைத்துப்  புனையப்படுகிற  தொடர்  இது. ராசம்மா என்ன சொல்லப்போகிறாள்  என்பதை  அடுத்துப்  பார்க்கலாம், 



  

No comments:

Post a Comment