Sunday, 26 November 2017

காதல்..காமம்.( 48.) அடைக்கன் சரண்டர்.

                                     "யாருங்க.? யாருன்னு சொல்லாம சும்மா இருந்தா என்னங்க அர்த்தம்? வேல, வெட்டி இல்லேன்னா மீனாச்சி கோவில் வாசல்ல உக்காந்து  திருவோடு தூக்கவேண்டியதானே?"
                                   மறுமுனையில் எந்த அரவமும் இல்லாததால் அன்னத்துக்கு கடுப்பாகிவிட்டது. அன்னத்தின் ஆத்திரம் பார்த்த செவனம்மாவுக்கும் மாயக்காளுக்கும் பயம் .
                                   "என்னத்தா மயிலு? யார்த்தா போன்ல? ஆம்பளையா ,பொம்பளையா ..நம்ம சொந்தக்காரகளா இருந்துறப் போறாய்ங்கடி .வம்புக்கு  அலைய்ற சாதிடி! கொழம்புல ஒரு எலும்புத்துண்டு கொறஞ்சாலும்  பூமிக்கும் ஆகாசத்துக்கும் குதிப்பாய்ங்க கொணம் கெட்ட பயலுக.! " என்று சிரிக்கிறாள்  செவனம்மா.
                              "யார்னே தெரியலம்மா!" என்றபடி ரிசிவரை வைத்து விட்டு அத்தை மாயக்காள் பக்கமாக வந்தமர்ந்தாள். எலி அழுதா பூனை விட்டுருமா என்பது மாதிரி மறுபடியும் போன் கத்தியது.
                              "சனியன்..... கொரவளையை பிடிச்சி கொல்லுடி! எந்த நாயா இருந்தா என்ன? பேசாம உக்காரு.கத்திட்டு ஓயட்டும்!"
                                 "இல்ல செவனு! கல்யாண வீடுன்னா நாலு பேரு கூப்புடத்தான் செய்வாய்ங்க.மொதவாட்டி என்ன ரிப்பேரோ..பேச முடியாம இருந்திருக்கும். இப்ப போய் பாரு. " மருமகளை எழுப்பி விட்டாள் மாயக்காள். சலித்துக் கொண்டு எழுந்தாள் அன்னம்.
                                   "அலோ" என சொல்லுவதற்குள் "அன்னமா பேசறது?" என்று கேட்டது எதிர்முனை.  
                                    "ஆமா...யாரு நீங்க? என்ன வேணும்?"
                                    "தாயி...போனை வெச்சிராதேம்மா! நானு அடக்கன் பேசுறன் மா!செத்துப்போனாலே செல்லத்தாயி.! அவ புருசன். நாந்தாம்மா அவள கொன்னேன்.போலீஸ்ல உண்மைய சொல்லி என்ன ஒப்படைக்க  வந்திருக்கன் தாயி! இப்ப வக்கீல்சாமி ஆபீஸ்லேர்ந்து பேசுறன்.  ஒரு நெசத்த சொல்லணும்.சின்ன அய்யாவும்  அய்யாவும் வந்தா சொல்லிருவன் தாயி! " என்று  சொன்னவன் வக்கீல் பெயரையும் சொன்னான். வக்கீல் புதுத் தெருவில் இருக்கிறது அவன் சொன்ன வக்கீல் ஆபீஸ்.
                                  அன்னத்தின் மனசு இப்பத்தான் டிக் டிக் அடிக்கிறது.! இருவரிடமும் சங்கதியை சொன்னாள்.மாயக்காளுக்கு பதட்டம். "அடி ஆத்தி! ஊருக்கு போன சனியன் தோமாலை போட்டுக்கிட்டுல வந்திருக்கு. என்ன செய்வேன். அடி ஆத்தி!" என்று கண்ணை கசக்கினாள்.அதுவரை ஊமைச்சாமி மாதிரிபத்திரிக்கை படித்துக்கொண்டிருந்த  இருந்த தங்கராசுக்கு அவள் சொன்னதை கேட்டதும் புது ரத்தம் பாய்ந்தது மாதிரி இருக்கிறது.
                               வருங்கால மாமியாருக்கு ஆறுதல் சொல்கிறாள் மருமகள்!
                              "அத்தே..எதுக்கு வெசனம்?அவன் வந்தது நல்லதுக்குத்தான்! மாமன் மேல உள்ள சந்தேகம் போயிரும்.போலீஸ்ல அவன்  நெஜத்த சொல்லிட்டா  மாமன் தப்பு பண்ணலேங்கிறது தெரிஞ்சிரும்ல அவங்களும் .நிம்மதியா கல்யாண வேலைகள பாப்பாக.அத்தான கூட்டிட்டு மாமன போக சொல்லுங்க.எல்லாம் நல்லதுக்குத்தான்!" என்றாள் அன்னம்.
                          வேகமாக எழுந்த
மாயக்காள் முந்தானையை வேகத்துடன்  ஒரு உதறு உதறி இடுப்பில் சொருகிக்கொண்டாள்..
                           அவர்களிடம் சொல்லிவிட்டு மகனுடன் வெளியேறினாள்.
                           "எந்த எடுபட்டபய வெச்ச சூனியமோ இன்னியோடு தொலையட்டும்.நான் வாக்கப்பட்ட நாள்லேர்ந்து ஒருநா கூட என் ராசா கண்ல  தண்ணி வந்ததில்ல.அர்ச்சுனன் மாதிரில்ல திரிஞ்சாக,அவுகள மொடக்கிப்  போட்ட விதிக்கும் ஒரு முடிவ ஆத்தா மீனாச்சி காட்டிட்டாளே......!" வழி நெடுகிலும் இதே மாதிரியாக  புலம்பல்தான்.!
                    
                  உண்மை  நிகழ்வை  வைத்து  புனையப்படுகிற  தொடர்.

Wednesday, 22 November 2017

காதல்.,காமம்.( 47.) வெத்தல போட்ட ஷோக்குல

                                        "வாங்க...வாங்க..!" வெத்திலை மணக்க செவனம்மா  வரவேற்கிறாள் மாயக்காளை! "என்ன சம்பந்தியம்மா இம்புட்டு தூரம்.? மருமகென இங்ஙன வெரசா  அனுப்பிட்டு நீங்க  சாவகாசமா வர்றிக"? எனக் கேட்டதும் மாயக்காளுக்கு  திக்கென்றாகிவிட்டது.
                          "தங்கராசு உள்ளயா இருக்கான்?"
                          " நீங்க மொதல்ல உள்ள வாங்க! " என்று சம்பந்தியம்மாவை பட்டாசலைக்கு அழைத்துச்சென்றாள் செவனு.!
                           ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கிறான் தங்கராசு.சற்று தள்ளி நிற்கிறாள் அன்னமயிலு.இருவரிடமும்  எவ்வித பதட்டமும் இல்லை.                       "என்னத்தா...அய்யா சேதி எதுவும் சொல்லி அனுப்பி இருக்காரா?"
                      "இல்லப்பே..நான் சும்மாதான் மருமவள பாக்கனும்னு வந்தேன்.நீ எப்பய்யா வந்தே?"
                       "நீங்க பேசிட்டிருங்க..நான் காப்பித்தண்ணி ஆத்தியாறேன்?" என்று  செவனம்மா அடுப்படிக்கு சென்றதும் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த அன்னமயிலு " வாங்கத்தே.." என்றபடி அருகில் வந்து உட்கார்ந்து விட்டாள்.
கொண்டுவந்திருந்த மல்லிகைச்சரம் அவளது சடையில் அமர்ந்து கொண்டது. மதுரை மல்லிகைக்கு தனி மணம். அது பிரம்மச்சாரியையும் சபலப் படுத்திவிடும். மேனகையிடம் விசுவாமித்திரன் மயங்கியதற்கு மலரின் மணம்
கூட ஒரு காரணமாக இருக்கலாம்.வனத்தில் பலவகையான மலர்கள் பூத்துக்  குலுங்குமல்லவா!
                   "அன்னம்...அத்தான் என்ன சொன்னான்? ரொம்ப நேரமா பேசின மாதிரி தெரியிதே ? பேசனும்னா வீட்லதான் போன் இருக்கே ..பேசுத்தா..அதுல பேசு.நாள் முச்சூடும்பேசுங்க.இப்படிசம்பந்தகார வீட்டுக்கு மாப்ளையா வரப்போறவன் தாலி கட்டுறதுக்கு முன்னாடியே வந்து போனா ஊர் சிறுக்கிக  நாலு பேரு நாலு விதமா பேசுவாளுக.ஊர் கண்ணு படும்தா! என்ன .அத்தக்காரி  இப்பவே இப்படி சொல்றாளேன்னு பாக்கிறியா? உங்க மாமன் நாமெல்லாம் படப்பு பக்கம் ஒதுங்கலியா..அவங்களையும் அப்படி பழகசொல்லுன்னுதான் இங்க என்ன அனுப்புனாரு.எங்க காலம் வேற அன்னம். வெலகி நின்னுதான் பேசுவோம். இப்ப அப்படியா?  இந்த சினிமா வந்துதான்  கெடுத்து வெச்சிருக்கு. 
 அந்த "ஒன்ன"தவிர எல்லாத்தயுமே காட்டுறான் கொள்ளியில போறவன்."
             இப்படி அத்த சொன்ன அறிவுரைகளை எல்லாம் அன்னத்தின் காதுகள் மட்டுமே கேட்டுவிட்டு வெளியே தள்ளிவிட்டன.அத்த அந்த காலத்து மனுஷி  அப்படித்தான் பேசுவாள். சரியாக காப்பி வந்தது. மூணு    லோட்டா.ஒரு சொம்பு நிறைய கருப்பட்டி காப்பி.தனி மணம். அதில் கருப்பட்டி வாசம் கலந்திருந்தது.
                "அத்தாச்சி!  மருமகனுக்கும் மருமகளுக்கும் உங்க கையால ஊத்திக் கொடுங்க.நீங்களும் ஊத்திக்கிங்க." என்று செவனம்மா  ஒதுங்கிவிட்டாள்.
              "ஒங்களுக்கு? நீங்க காப்பித்தண்ணி குடிக்கிறதில்லயா? இன்னொரு லோட்டாவ எடுத்தாங்களேன்?"மாயக்காள் சொன்னதை செவனம்மா கேட்கவில்லை.
               "வெத்தல போட்ருக்கன் அத்தாட்சி! வாய்க்கு ருசியா இருக்காது"
                மாயக்காளின் பார்வை மறுபடியும் அன்னம் மீது.!
               "ஏத்தா மருமவளே! நீ வெத்தல போடுவியாம்மா?"
               தலையை இடது வலமாக திருப்பி இல்லை என்பதை உணர்த்தினாள்.
               அங்கு மகனும் இருக்கிறான் என்பதை மறந்தவளாக மாயக்காள் பேசிவிட்டாள்."தப்பும்மா...புருசன் ஆசையா இருக்கானா இல்லயாங்கிறத வாய் செவப்பு காட்டிரும்தா.!ஒடம்புக்கும் நல்லதும்மா!  ஆம்பள ஆசயும் அதிகமாயிரும்."
               "க்ளுக்"கென சிரித்த அன்னம் "அத்தக்கி அனுபவம் பேசுது" என்றதும் அங்கிருந்த எல்லோருக்கும் சிரிப்பு தாங்கவில்லை.
                   அப்போது போன் மணியும் சிரிப்பில் கலந்து கொண்டது.
                   அன்னம்தான் ரிசிவரை எடுத்து ஹலோ சொன்னாள்.
( உண்மை நிகழ்வின் கற்பனை தொடர்,)


Tuesday, 12 September 2017

காதல்..காமம்..(46.) ஊர் மெச்ச கல்யாணம்.

வெள்ளிங்கிரி மீது பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு இன்னும் முடியவில்லை. வக்கீல்களின் சாமர்த்தியத்தினால் வெவ்வேறு வடிவம் எடுத்தது என்றுதான் சொல்லலாம்.

"எப்படியும் ஆயுள் தண்டனையாவது வாங்கிக் கொடுத்துவிடவேண்டும் " என்று பிராசிகியூசன் தரப்பு  தீவிரம் காட்டியதைப் போல வெள்ளிங்கிரி தரப்பு அவனுக்கு விடுதலை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பதில்  முனைப்புக் காட்டியது.

பட்டணம் போயாவது மகனை மீட்க வேண்டும் என்கிற உறுதியுடன் வெள்ளிங்கிரியின் பெற்றோர்  இருந்தனர் .

இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம்  ......

பொன்னியின் அப்பா சிவனாண்டி முழுமையாக  குணம் அடைந்து வீடு  திரும்பி விட்டார். கட்டிலில் முதுகுக்கு வாகாக தலகாணியை அண்டக் கொடுத்து சாய்ந்திருந்தார்.

மகள் இல்லாத வீடு வெறிச்சோடி கிடக்கிது.

"என்ன பண்ணலாம்னு ரோசனை?"---சுவரில் சாய்ந்தபடி கேட்கிறாள் ராசம்மா.

"என்னத்தலா பண்ணச்சொல்றே?.ஒத்தப் புள்ளைய தூக்கிக்கொடுத்தாச்சு. ஆசைப்பட்டவனுக்கு புள்ளைய  புடிச்சு கொடுத்திருந்தா நானும் கவுரதையா  தோள்ல துண்ட போட்டுக்கிட்டு நடமாடியிருப்பேன்.அஞ்சு வயசில போயிருந்தாலும்  அற்ப வயசுன்னு மனச தேத்திக்கலாம்.வளந்து ஆளாகி  வம்சம் தளைக்கப்போற காலத்தில போயி சேர்ந்திட்டாளே பாவி மக. எனக்கு  இன்னும் ஆறலடி ராசு."

புருசனும் பொண்டாட்டியும் தினமும் இப்படித்தான் பேசிக்கொண்டு நாட்களை  தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்..கேட்டுக்கேட்டு சுவர்களும் அழுக்கடைந்து விட்டது.
**************************************************

 தங்கராசுவின் அப்பா வடிவேலு, அம்மா மாயக்காள் இருவரும் கல்யாண வேலைகளில்...!

"பொண்ணுக்கு வேண்டிய நகை நட்டு எல்லாம் வாங்கியாச்சு. பொண்ணு வீட்டுக்காரங்க அத செய்வாங்க  இத செய்வாங்கன்னு நாம்ப எதிர்பாக்கக்கூடாதுல்ல. நம்ம மருமகளுக்கு நாம்ப செய்றோம். தங்கராசுக்கு வேண்டியதையும் நானே வாங்கிட்டேன்.சம்பந்தகாரக வீட்லேர்ந்து எதையும்  எதிர்பாக்கக்கூடாதுடி மாயி.!"

"நான் ஏதும் சொல்லலிங்க.நடக்கப்போறது மொத விசேசம்.தல கல்யாணம். ஊரே மெச்சனும்.மூணு நாள் நடக்கணும். என்னோட ஆசை இம்பிட்டுதான்!"

"மாட்டேன்னு சொல்லல.நடத்திடுறேன். நீ ஒரு எட்டு போயி சம்பந்தி வீட்டுப்பக்கம் போயி மருமகளை பாத்து பேசிட்டு வாயேன் ?"

"என்னத்த பேசறது?"

"உனக்கு வெவரம் பத்தலியா..இல்லே எப்படி கேக்கிரதுன்னு தயங்கிரியா?"

"இப்படி பூடகமா சொன்னா எப்பிடிங்க.என்னத்த கேக்க சொல்றீங்க?"

"அடி போடி கேனசிறுக்கி! வயசில வைக்கப் படப்பு பக்கமா நாம்ப ஒதுங்கிப் பேசுனத மறந்திட்டியா? அந்த மாதிரியெல்லாம் பயப்படாம நம்ம மகனோடு தைரியமா பேசிப்பழக சொல்லு.வீட்டில போனு சும்மாதானே கெடக்கு.  இவனுக்கு ஒரு ஆறுதலா இருக்கும்ல?"

"அதுவும் சரிதான்!அந்த பொண்ணு தப்பா நெனச்சிட்டா ?"

"அப்படியெல்லாம் நெனைக்காது.நம்ம வயசுக்கு படப்பு துணையா இருந்துச்சி . இந்த காலத்துக்கு போனு."

தங்கராசு தன் மனைவியிடம் இப்படி சொல்லி அனுப்பினால் ...

நடந்ததோ வேறு!

( உண்மை நிகழ்வு. ஆனால் புனைவுத் தொடர்.கற்பனை கலந்து.)


Friday, 1 September 2017

காதல்..காமம். ( 45.) முதலிரவில் என்ன நடக்கும்?

                                   (உடம்பு ரொம்பவும் பாடாய் படுத்திருச்சி. அப்பப்ப தொந்தரவு ...காசு கரைஞ்சாலும்  மவன் சொகமானால் சரின்னு  குலதெய்வத்துக்கு நேத்திக்கடன். யார் செஞ்ச புண்ணியமோ  உடம்பு  வசத்துக்கு வந்திருச்சி. காதலை கவனமா செய்வோம். காமத்துக்கு  அப்பப்ப எடம் கொடுப்போம். அது இல்லேன்னா...தொட்டுக்க எதுவும் இல்லாம கஞ்சிய குடிக்க முடியாதே.)

"வெள்ளிங்கிரி...ஒத்துக்கறத தவிர வேற வழியே இல்லடா. பொன்னி வீட்டுல  பீரோவுக்கு பின்னாடி ஒளிஞ்சிருந்த களவாணிப்பய நீதான். கைரேகை அப்பறம் நீ விட்டுட்டு வந்த நிரோத்து பாக்கெட்..எல்லாமே உன் ரேகைதான்டா. இல்லேன்னு பொய்ய சொல்லிப்புட்டு தப்பிச்சிக்கலாம்னு மட்டும் நெனைக்காதே.!அம்புட்டையும் சொல்லிரு.! தண்டனை குறைய மார்க்கம் இருக்கு.!"

குற்றப்பிரிவு இன்ஸ். ராஜதுரை கிட்டத்தட்ட மணிக்கணக்கில் வெள்ளிங்கிரியை உருவாத குறையாக மந்திரித்து ஒரு வழியாக அவனை  இணங்க வைத்து விட்டார்.

"சார். அந்த புள்ள பொன்னியும் செத்துப்போச்சு .இனிமே ஒளிச்சு மறச்சி  வச்சு  எதுவும் ஆகப்போறதில்ல.அவ மேல எனக்கு ஆச.அவளோட குடும்பம் நடத்தனும்னு ஆசைப்பட்டேன்.நான் வேற சாதி. பொன்னி வேற சாதி. ஊரும் ஒத்துக்காது. உறவும் கை கொடுக்காது. அதனால அவள கெடுத்திட்டா நான்ஆசப்பட்டது நடந்திரும்னு நெனச்சேன். வெலமெடுத்த சிறுக்கி தங்கராசு மேல ஒரே கிறுக்கா இருந்தா.அவளோடு மல்லுக்கட்டியும்  சொகம் அனுபவிக்க முடியல.மென்னிய பிடிச்சு கொன்னு தொங்க விட்டுட்டேன். சத்தியமா இதான் நடந்துச்சி சார்."

நெடுஞ்சான் கிடையாக ராஜதுரையின்  காலில் விழுந்தான். தப்பிக்க முடியாது  என்பதை உணர்ந்தவனுக்கு வேறு வழி தெரியவில்லை. ஊரில்  ஒரு பய மதிப்பதில்லை. இனிமேல் அவனை தங்கராசு குடும்பம்  ஆதரித்தால்தான் ஓரளவுக்காவது தோள் மேல் துண்டு போட்டு நடக்கலாம்..பொன்னி இல்லாத சோகம் தங்கராசுவுக்கு  சில மாதம் இருக்கலாம் .போகப்போக அவனுக்கு ஆறுதல் சொல்ல ஒரு ஆள் தேவைப்படும். அது அவனது நண்பனான நானாக இருக்கட்டுமே..எத்தனை நாளைக்கு  என் மீது கோவமாக இருக்க முடியும்?என்ன இருந்தாலும் அவனது  சின்ன வயசு சிநேகிதன் நான்தானே!

இப்படி பல வகையிலும் யோசித்தபின்னர்தான் போலீசில்  உண்மையை ஒப்புக்கொண்டான்.

அன்ன மயிலுவை சினேகிதிகள் சுற்றிக்கொண்டார்கள். அவளவளின் அந்தரங்க அனுபவங்கள் அங்கே பந்தியில்..!

பிரிமணை கொண்டை போட்டு பிச்சிப்பூவை வளையம் மாதிரி  வைத்துக் கொண்டிருந்த பவளம் கிசுகிசுத்த குரலில் " எந்த பயமும் வேணான்டி..பயந்தா ஆம்பளைகளுக்கு வெலம்தான் வரும்.கண்டமேனிக்கு மேஞ்சிருவாங்க. அதுவும் ஒரு சொகம்தான்னு வெச்சுக்க. தாலிய கட்டிக்கிட்டு  படுக்கமாட்டேன் வெலகிப் படுய்யான்னு   மொரண்டு புடிச்சம்னு வையி. நட்டம் நமக்குத்தான். மொரண்டு புடிச்ச நாளல்லாம் நமக்கு சந்தோசம் போச்சேன்னு அப்புறம் குத்த வெச்சு கண்ணீர் வடிச்சா கிடைச்சிருமா? அடியேய்...வாய்க்கால்ல தண்ணி ஓடுற போதே குளிச்சிரு!" என்று அட்வைஸ் பண்ணினாள்.

" மொத ராத்திரில  எத்தனை வாட்டிடி இருந்தே ?" ஆசையாசையாய் கேட்டாள் ஒருத்தி.

"ஆமா இதுக்கெல்லாம் பேரேடு போட்டு கணக்கா எழுதுவாங்க?.வெளக்க  அமத்துனமா கட்டிப்பிடிச்சி படுத்தமான்னு காரியத்தில எறங்கிடுவாங்க"-- சொன்னவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. ஆனால் ஏக்க சக்க கனவில் மிதப்பவள் மாதிரி தெரிந்தது. 

"புருசன் பொண்டாட்டின்னு ஆயிட்ட பெறகு ஒன்னா  சுத்துறதும் சினிமாவுக்கு சேந்து  உரசிட்டு நடந்து போறதும் பாய்ல ஒன்னுமண்ணா பொரல்றதும் கடவுள் கொடுத்த வரம்டி!"

இப்படி எவ்வித கூச்சமும் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.

அவ்வளவையும் கவனமாக கேட்கிறாள் அன்னம்.

தங்கராசு அவளை இறுக்கி அணைத்து உதடுகளை நனைப்பது போல இருந்தது.

------உண்மை நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு புனையப்படுகிற தொடர்.


Tuesday, 1 August 2017

காதல்..காமம். ( 44.) பரிசம் போட்டால் பாதி பொண்டாட்டி.

''என்னை எதனால பிடிச்சிருக்கு? "

என்ன சொல்றது  என்கிற தயக்கம் தங்கராசுக்கு!. பெண் பார்க்க வந்த இடத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. பெரியவர்கள்  பேசி முடிப்பார்கள் என்று நினைத்து வந்தவனை இப்படி தனி அறையில் வைத்து அன்னம் இன்டர்வியு நடத்துவாள் என்பது தெரிந்திருந்தால்  நாலு பேரிடம் ஆலோசனை கேட்டாவது  வந்திருப்பான். வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"எதனால என்னை பிடிச்சிருக்குன்னுதானே கேட்டேன்.எதுக்கு .இப்படி பிரமை பிடிச்ச மாதிரி இருக்கிங்க? பயமா?"

"அதல்லாம் இல்ல.அய்யா அம்மாவுக்கு உன்னை பிடிச்சிருக்கு ..அதான்.?"

"ஓ...அப்டியா? அவங்களுக்கு எது பிடிச்சாலும் உங்களுக்கும் பிடிச்சிருமா ? கழுதய கட்ட சொன்னாலும் கட்டுவிங்களா?"

"அப்படியெல்லாம் இல்ல..!"

"அப்ப சொல்லுங்க ..எதனால என்ன பிடிக்கும்? அழகா?"

"ம்ம்ம்!"

"உடம்பு?"

"என்ன இப்டி கேக்கிற?"

"உடம்பும் ஒரு அழகுதானே! உங்களை பார்த்தா பொம்பளையின் கண்ண பார்த்து பேசுற ஆளு மாதிரி தெரியலியே?"

"என்ன இப்டியெல்லாம் தப்புத்தப்பா பேசுறே?"

"த,,,,பார்றா! கட்டி அழும் போதும் கையும் துழாவுமாம்னு சொல்வாங்க.அந்த மாதிரி ஆளுதானே நீங்க?"

"என்ன அப்டியெல்லாம் எங்காத்தா  எங்கய்யா வளக்கல!"

" அட  உடு ராசா! உடச்சு சொல்றேன். நம்ம ரெண்டு பேருக்கும்தான்  கல்யாணம். பரிசம் போட்டா பாதிப் பொண்டாட்டி !  எதுக்கு கூச்சம். ? கல்யாணம் ஆன நைட்ல என்னை சும்மா விட்ருவியாக்கும் ? மனச விட்டுப் பேசு  மச்சான்.!"

"மொரட்டு பொம்பளையா இருக்கியே?"

"அதுவும் ஒரு சுகம்தான் மாமு !"

"என்ன மச்சான்.... மாமுன்னு மொறை வச்சு பேசுற??"

"என்னை  தாலி கட்டி பொண்டாட்டியா வச்சுக்கப் போற ஆள் கிட்டதான் பேசறேன். சரி சொல்லுங்க.நான் எதுல அழகா இருக்கேன்?"

"மஞ்ச பூசுன முகத்த பிடிக்கிம்.!"

"கோயில்ல என்னை தொரத்திட்டுவந்து வம்பு பண்ணுன அந்த பயலுக்கு  என்  முகம்தான் பிடிச்சிருக்கும்னு நெனைக்கிறிங்களா? அவன் உங்க சேக்காலி யாமே?"

"அதுக்கும் இதுக்கும் முடிச்சு போடாதே!"

"அட கோபம் வருது?சரி ரொம்ப நேரமா பேசிட்டிருந்தா வெளியில இருக்கிறவங்க வேற மாதிரி நெனச்சிருவாங்க.பட்பட்னுபதில்சொல்லுங்க. உங்களுக்கு பால் குடிக்க பிடிக்குமா காப்பி பிடிக்குமா சாயா பிடிக்குமா?"

"பால்!"

"குளிக்கிறப்ப எனக்கு முதுகு தேச்சு விடுவிங்களா?"

"எனக்கு நீ தேச்சு விடுவியா?"

"அப்பாடா இது போதும் சார்! .தைரியம் வர்றதுக்கு இம்பிட்டு நேரமாயிருக்கு! மத்ததை கல்யாணம் முடிஞ்சதும் பேசிக்கலாம். இப்ப ஒரே ஒரு முத்தம் கொடுங்களேன்?"

"ஆளை விடு" என்று அவசரமுடன் கதவைத் திறக்க அவள் சிரிக்க வெளியில்  இருந்தவர்களுக்கு சந்தோசம்.!

இருவரையும் சேர்த்து வைத்து விடவேண்டியதுதான்!

உண்மை  நிகழ்வை  அடிப்படையாகக்கொண்டு  புனையப்படுகிற தொடர்  . 

Thursday, 27 July 2017

காதல்...காமம். ( 43. )


டந்தவை எல்லாம் வடிவேலுவுக்கு தெரியும். தெரிந்ததாக  காட்டிக் கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டார். தங்கராசுக்கு பெருங்கோபம். அதைக் காட்ட இது இடம் இல்லை என்பதால் அவனும் அமைதியாகிவிட்டான்.

காலில் விழுந்தவனின் முடியைப் பிடித்து கொத்தாக  தூக்கினார்  ராசாங்கம். பெண்ணைப் பெற்றவருக்கு இருக்க வேண்டிய நியாயமான கோபம்.நல்லது  நடக்கப்போகிற நேரத்தில் நாடு வீட்டில் அசிங்கம் கிடக்கலாமா?

"தப்பிலி பயலே..போலீஸ்ல வாங்கினது பத்தாம இங்கிட்டு வந்திட்டியா. சிறுக்கி மவனே..உன்னை வெட்டிட்டு ஜெயிலுக்கு போறேன்டா.! ....டியே  செவனு எடுத்தாடி ...அருவாள!"

பாண்டி கோவிலில் சாமியாடுவது மாதிரி ஆகி விட்டார் ராசாங்கம்.

அன்னமயிலு தோழிகள் சகிதம் அறைக்குள் சென்று விட்டாள். சம்பந்தம் பேச வந்தவர்களுக்கு என்ன செய்வதென்பது தெரியவில்லை.தலையிடலாமா? வெள்ளிங்கிரியை அவர்களுக்கு நல்லாவே தெரியும்.அவன் பண்ணியிருக்கும்  காரியத்துக்கு மன்னிக்க வேண்டியவர்கள் அவர்கள் அல்லர். பெண் வீட்டார்   சம்பந்தப்பட்டது.அவர்கள்தான் அவனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் பாடு என்று அப்படியே விட்டு விடலாமா?

"என்னய்யா பெரிய மனுஷன் நீ! அவனை அடி வாங்க வச்சிட்டு மரம் மாதிரி நின்னிருக்கியே.! ஞாயம் பேசி இருக்க வேணாமா..?எதுக்காக அவன் வந்திருக்கான்னு தெரியாம அடிச்சு துவச்சு போடவிட்டுருக்கியே..? நீயெல்லாம் தோள்ல துண்ட போட்டுக்கிட்டு வரலாமா"ன்னு நாலு பெரிய  மனுஷன் கடை வீதியில பார்த்தா கேக்கமாட்டாய்ங்களா.."---மனசாட்சி உறுத்தவே வடிவேலு ராசாங்கத்தின் கையைப் பிடித்து வெள்ளிங்கிரியை விடுவித்தார்.

"விடுங்க ...அவன் கெடக்கிறான் பிக்காளிப் பய. தூந்து போன கெணத்தில  தூர் எடுத்து என்ன ஆகப் போகுது? எதுக்கு வந்திருக்கான்னு கேப்போம்.விடுங்க .அவனை !"

"பெரியய்யா...என்னை எல்லாரும் மன்னிச்சிருங்க!" என்று வடிவேலுவின்  காலிலும் விழுந்தான்.

"நான் பண்ணுன காரியத்துக்கு சித்ரவதை செஞ்சாலும் தகும். தங்கச்சியா நெனைக்க வேண்டிய அன்னத்து மேல ஆசை வெச்சது குத்தம்தான்.ஊர்ல எல்லோரும்  என்னை கேவலமா பாக்கிறாய்ங்க .சேக்காளிங்கல்லாம் வெலகிப் போய்ட்டாய்ங்க .. தவிச்ச வாய்க்கு தண்ணி கூட கிடைக்காதுன்னு  ஆகிப் போச்சு .இனி உசிரோடு இருந்து என்ன ஆகப்போகுது? அதான்  சாகிறதுக்கு முன்னாடி உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுரலாம்னு  வந்தேன். காரியம் முடிஞ்சிருச்சு.நான் போறேன் சாமிகளா!" என்று கிளம்பியவனை  "நில்லு" என்கிற குரல் தடுத்தது.

 அறையை விட்டு வெளியில் வந்த அன்னம்தான் குரல் கொடுத்தாள்.

" நெசமாவே  நீ திருந்தியிருந்தா சந்தோஷம்தான். எங்களால ஒரு உசிரு போகவேணாம்.அந்த பாவம் எங்களுக்கு எதுக்கு.? நீ பண்ணுன காரியத்துக்கு  கடவுள்தான் கூலிய கொடுக்கணும். பிடிக்கலேன்னு சொன்ன பிறகும்  எம்பின்னாடியே வந்து தொல்லை பண்ணுன அன்னைக்கே நான் போலீசுக்கு  போயிருந்தா இம்பிட்டு சிக்கல் வந்திருக்காது. அதுனால தப்புல எனக்கும் பங்கு இருக்கு.வர்ற வெள்ளிக்கிழமை வண்டியூர் மாரியம்மன் கோவிலுக்கு  வந்து ஜனங்க முன்னாடி மன்னிப்பு கேட்டா போதும். நீ எதுக்கு சாகனும்! " என்ற  அன்னம் அப்பன் ஆத்தாளையும் சம்பந்தம் பேச வந்தவர்களையும் பார்த்து "நான் சொன்னது சரிதானே?" என்பதைப்போல  பார்த்தாள்.

தங்கராசு குடும்பத்துக்கு பெருமையாக இருந்தது.

"ஆத்தா ...சரியாத்தான் சொன்னே. ஊர் ஜனங்க மத்தியில மாப்பு கேக்கிறது நாட்டு வழக்கம்தானே!" என்று வடிவேலு பெருமையுடன் சொல்ல ராசாங்கத்துக்கும் அது சரியாகவே பட்டது. "சம்பந்தி சொல்றதும்ஞாயம்தான் " என்று அவருடன் சேர்ந்து கொண்டார்.

தலை குனிந்தபடியே வெளியேறிய வெள்ளிங்கிரியை சோகமுடன் பார்த்தான்  தங்கராசு. என்ன இருந்தாலும் அவன் நண்பன் ஆயிற்றே...தனக்காக அவன் எப்படியெல்லாம் இருந்திருக்கிறான் என்கிற பழைய நினைவுகள் எல்லாம் சட்டென மனதில் தோன்றி மறைகிறது.

அய்யா ராசாங்கத்தை தன்னுடைய அறைக்கு அழைத்துச்சென்ற அன்னம் ''நான் அவரோடு தனியாப் பேசனும்யா...இதெல்லாம் நம்ம சாதி சனக்கூட்டத்தில இல்லாத பழக்கமா இருக்கலாம்.உங்களுக்கு பிடிக்காம இருக்கலாம். ஆனா வாழப்போறவ நாந்தான்! அந்த மனுஷன் மனசில  என்ன  இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டா தைரியமா கழுத்தைக் காட்டுவேன்ல?"என்று மகள் சொன்னதை மறுக்கும் நிலையில் அவர் இல்லை.

அவளும் அவனும் அறைக்குள் சென்றனர். கதவை தாளிட்டுக் கொண்டாள்  அன்னம்.!

அங்கிருந்தவர்களுக்கு அது தப்பாகவே தெரியவில்லை.!அவர்கள் இருவர் மீதும் நிறைய நம்பிக்கை !

உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டு புனையப்படுகிற தொடர் .

Friday, 14 July 2017

காதல்..காமம்..( 42.) அய்யா மன்னிச்சிருங்க!

அன்னம் தன்னை வெகுவாக சிங்காரித்துக்கொண்டாள். நடுவகிடு எடுத்து சீவி  இருந்தாள்.அளவாக பிச்சிப்பூ. இன்னும் சற்று நேரத்தில் மலர்ந்து விடும்.வேறு சென்ட்  எதுவும் தேவை இருக்காது. பிள்ளை வீட்டுக்காரர்கள் அசந்து போய் விடுவார்கள். கிளிப்பச்சை நிறத்தில் பாவாடை. வெளிர் மஞ்சள் நிறத்தில்  பட்டுத் தாவணி. இரண்டுக்கும் பொருந்துகிற இளம் நீல வண்ணத்தில் ரவிக்கை.இரண்டு புருவங்களும் கூடும் இடத்தில் கருப்பு சாந்து. முகத்தில்  லேசாக குட்டிக்குரா பவுடர்.

செவனம்மாவுக்கு மகளை பார்க்க பார்க்க பெருமையாக  இருந்தது. "என் வயத்தில இப்படி ஒரு ரதி வந்து பிறந்திருக்காளே...எந்த சாமி புண்ணியமோ...! ராசாத்தி..போற எடத்தில பூ மாதிரி இருக்கணும்.அழுந்தாம கிடக்கணும். ஒரு  பொட்டு கண்ணீர் சிந்திரக்கூடாது.!" ததும்பிய கண்ணீரை  முந்தானையினால்  துடைத்துக் கொண்டாள்.பெத்தவளுக்குத்தானே இருக்கும் பிள்ளையை  வளர்த்த வலி.! துணைக்கு வந்திருந்த தோழிகளிடம் அன்னம்  மகிழ்ச்சியுடன்  பேசிக்கொண்டிருந்தாள்.

"ஏத்தா ..பலகாரமெல்லாம் செஞ்சிட்டில்ல? வேணும்னா ஒரு எட்டு  போயி  அய்யர்  கடையில சிலேபி வாங்கியாந்திரட்டுமா?" செவனம்மாவிடம் ராசாங்கம்  மெதுவாக கேட்டார்.

"நானே வாங்கியாந்திட்டேன் . வர்றவகளுக்கு சீனி  காப்பி பிடிக்குமோ கருப்பட்டி காப்பி  பிடிக்குமோ தெரியல.எதுன்னாலும் கலந்து கொடுத்திருவேன்.ராகு காலத்துக்கு முந்தி வந்திருவாகல்ல?"

"ராகு காலம் இன்னைக்கு பத்து பன்னன்டரை. காலம்பரவே முடிஞ்சிருச்சு. வெளக்கு வைக்கிறதுக்கு முன்னாடியே சாயங்காலமாக வர்றதாக சொன்னாங்க.வந்திருவாங்க.பிளசர்ல வர்றாங்களா ஜட்காவ்ல வர்றாங்களான்னு தெரியல. எதுல வந்தா என்ன நல்லதனமா எல்லாம் நடந்து முடியனும்.!"

"நாலு தெரு தள்ளி இருக்கிற வீட்ல இருந்து எதுல வந்தா என்னங்க.. சாதகப் பொருத்தம்லாம் சரியாத்தானே இருக்கு?'

"செவனு...உங்கிட்ட சொல்லனும்னு நினைச்சிருந்தேன். மறந்திட்டன்டி "

"என்னங்க..பொருத்தம் சரியாத்தானே இருக்கு?" -செவனம்மாளுக்கு  சந்தேகம்.

"மாப்ளை சாதகம் தொலைஞ்சிருச்சாம்.அதான் பேர் பொருத்தம் பார்த்தோம். பூ போட்டும் பார்த்தாச்சு.ரெண்டும் மீனாச்சி கிருபையால் நல்லாத்தான்  இருந்துச்சு செவனு. நீ மனச போட்டு குழப்பிக்காதே!"

அப்பன் சொன்னது அன்னத்தின் காதுகளிலும் விழுகிறது.

"ஆத்தா?" -அம்மாவை பார்த்து பேச ஆரம்பித்தாள்.

"வர்றவருக்கு என்னைப் புடிச்சிருந்தா போதும்.! நீ பாட்டுக்கு சாதகம் கீதகம்னு குழப்பி வச்சிராதே?ஆத்துக்கு போயும் வேர்த்து வடிஞ்ச கதையாகிடப்போகுது.
அய்யா சொல்றத கம்முன்னு கேட்டுக்க."

வாசலுக்கு வந்து விட்டார்கள் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள்!

பிச்சிப்பூவின் மணம் அவர்களை வரவேற்றது.

உறவு சொல்லி அழைத்துக் கொண்டார்கள் இரு வீட்டாரும்!

பட்டாசாலையில் விரிக்கப்பட்ட சமுக்காளத்தில் கொண்டு வந்திருந்த  பூ பழத் தட்டுகளை வைத்தனர். பையனின் அம்மா மாயக்காள் கொண்டு வந்திருந்த மல்லிகையை பெண்ணுக்கு வைத்து விட்டாள். தங்கராசுக்கு மட்டும்நாற்காலி.   தங்கராசுவின் அப்பன் வடிவேலு மற்றும் உறவுகளுடன் சமுக்காளத்தில்  உட்கார்ந்து கொண்டார்.

பேச்சுவார்த்தை தொடங்கியது..

"அய்யா மன்னிச்சிருங்க." என்று பெருங்குரல் எடுத்து  கூட்டத்தின் மத்தியில் சாஷ்டாங்கமாக விழுந்தான் வெள்ளிங்கிரி!

அவன் அப்படி வந்து விழுவான் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

அன்னத்துக்கு மயக்கம் வராத குறை. எந்த மாதிரியான திட்டத்துடன்  வந்திருப்பானோ ?

அவனை பின்னந்தலை முடியை பிடித்து தூக்கினார் ராசாங்கம்.

"தட்டுவாணி பெத்த தறுதலையே! யார் குடிய கெடுக்கடா வந்தே  நாயே?" இன்னும் என்னென்ன வசவுகள் உண்டோ அத்தனையும் அங்கு அரங்கேறியது. வெள்ளிங்கிரி எதையும் சட்டை செய்யாமல் அழுதபடியே அவரின் கால்களை  பிடித்துக் கொண்டான்.


Saturday, 8 July 2017

காதல்....காமம்.( 41.) விபசாரிகளிடம் ஓசியில்...!

டீ யை குடித்து விட்டு  தம் பற்ற வைத்தார் விளக்குத்தூண் குற்றப் பிரிவு  இன்ஸ்.ராசதுரை.

லாக் அப்பில் நாலைந்து பேர்  கிடந்தார்கள். இரவு நேர  களவாணிகள்

.சுடுதண்ணீர் பாய்லர், அண்டா, குண்டா, குடம் என செம்பு பித்தளை பாத்திர வகையறாக்களை  களவாடுவதில்  கில்லாடிகள். லாக் அப்புக்கு வெளியில் எஸ்.ஐ.டி.கேஸ்பெண்கள். இருளில் மறைந்து  கொண்டு  ஆண்களை விபசாரத்துக்கு அழைத்தார்கள் என்று சொல்லி  அவர்களை பற்றி கேஸ்  எழுதுவார்கள்.மாஜிஸ்திரேட்டிடம் ஒப்புக்கொண்டு தண்டிக்கப்பட்டாலும்  அவர்களை ஜாமீனில் கொண்டு வருவதற்கு ஆட்கள் தயாராக இருப்பதால்  அந்த மாதிரியான  பெண்கள் போலீசுக்கு அவ்வளவாக பயப்படுவதில்லை. பிரியாணி, வெத்திலை, பாக்கு, புகையிலை என தாராளமாக  ஸ்டேஷனின் புழங்கும். ஒரு வகையில் கவுரவ விருந்தாளிகள்தான்!

' ஏண்டி நாகு...ஒரு ராத்திரியில் எத்தனை கிராக்கிய சமாளிப்ப?"--பக்கத்தில் இருந்த கோடாலி  கொண்டைக்காரியிடம் ஒருத்திகேட்டாள்.

"அத ஏன் கேக்கிற. மூணு பேரை தாங்குறதே எம்பாடு உம்பாடுன்னு ஆயிரும். கஞ்சாவை இழுத்துட்டு வர்ற சண்டியர்கள சமாளிக்கிறதுக்குத் தான் மூச்சு  வாங்கும்.  நாசமா போவாய்ங்க குறுக்க ஓடிச்சிருவாய்ங்க.அசந்திட்டம்னு  வையி.சுருக்குப் பை காசையும் லாவிட்டு போயிருவாய்ங்க. நாய் பொழப்புதான்.இதில இவிய்ங்களுக்கு காசும் கொடுக்கணும்.கேசும் கொடுக்கணும்."என்று பதில் சொன்னவள்  போலீஸ் புள்ளிகளையும் விட்டு வைக்க வில்லை.

"கேஸ் போடுறதோடு விட்டா பரவாயில்லையே..புதுசா வர்றவளுகளையும்  இவிய்ங்கதான் போணி பண்ணுவாய்ங்களாம். ஒருத்தன் ரெண்டு பேர்னா சகிச்சுக்கலாம்.மொத்த டேசனும் வந்திருவாய்ங்கடி....குடிக்கி!" -அவள் அசிங்கமாக சொல்வதையும்   காதில் விழாததுபோல போலீஸ்காரர்கள்  கேட்டுக் கொள்வதுதான் ராஜதந்திரம்..அவளுகளை விட கேவலமான  பிறவிகள் அவர்கள்தான்.விபசாரிகளுக்கு அதுதான் பிழைப்பு.சர்க்காரிடம்  சம்பளம் வாங்கிக்கொண்டு சவடாலாக திரிகிற போலீஸ்காரர்களுக்கு என்ன கேடு.உடம்பை விற்பவள்களிடம் ஓசியில்....ச்சே!

எதையுமே கண்டு கொள்ளவில்லை  ராசதுரை! அன்னம் கேசை எப்படி முடிப்பது என்பது அவரது கவலை..   

"ஐய்யா...?" கைகளை கட்டிக்கொண்டு குனிந்து கும்பிட்டான்  வெள்ளிங்கிரி.

"என்னலே?"-எகத்தாளமாக பார்த்தார் இன்ஸ்.

"குத்தத்தை ஒத்துக்கறன்யா.!"

" நெசமாத்தான் சொல்றியா? கோர்ட்டுல போயி  அடிக்குப் பயந்து சொன்னதா  மாத்திடமாட்டியே? காசுக்காரப் பயடா நீ. எப்படி வேணும்னாலும் பல்டி  அடிப்பே! வெளியே போயிட்டா அப்பறம் நாங்கள்லடி  நாக்க தொங்க விட்டுக்கிட்டு உன் பின்னாடி திரியனும்.?"

"எங்காத்தா மேல சத்யம் ஐய்யா.!மாற மாட்டேன்.மாறுனா கொன்னே போட்டுருங்க.அந்த அன்னம் புள்ள மேல எனக்கு ஒரு நோக்கம் இருந்துச்சு . அதான் அது பின்னாலேயே திரிஞ்சேன். மடியிற மாதிரி தெரியல. கோயில்ல  வச்சு சத்யம் பண்ண வச்சிரலாம்னுதான் அப்படி நடந்துக்கிட்டேன். மத்தபடி  நான் அந்த புள்ளைய பத்தி சொன்னதெல்லாம் பொய்தான்.அந்த புள்ள என்ன  விரும்பலே."

"இத முதல்லையே சொல்லிருந்தா இவ்வளவு அடி தின்னுருக்க மாட்டேல்ல.!" என்ற ராசதுரை ரைட்டரை கூப்பிட்டு அவன் சொன்னதை அப்படியே  வாக்குமூலமாக எழுதிக்கொள்ள சொன்னார். அவரும் எழுதி முடித்தார்.

"ஜாமீனுக்கு ஆள் இருக்கா?"

"போன் பண்ணினா வந்திருவாங்க.!"

"சரி..எட்டய்யாகிட்ட சொல்லு. அவர் பேசுவாரு!"

அடிபட்ட வன்மம் நெஞ்சுக்குள் நெருப்புத் துண்டுகளாக கிடக்க வெள்ளிங்கிரி  வெளியேறுகிறான்.

"இனிமே உங்க கையில நான் மாட்டமாட்டேண்டா!"


Saturday, 1 July 2017

காதல்...காமம்.( 40.) சமஞ்ச புள்ளய எத்தன நாள் சொமக்க முடியும்?

உடம்பெல்லாம் வலி. போலீஸ் அடி . வீக்கம் தெரியாமல் அடிக்கிற வித்தைய
எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ!இருந்தாலும் அங்கங்கு தோல் கிழிந்து   ரத்தம்  உறைந்து  இருந்தது.வெள்ளிங்கிரி முதன் முதலாக பயப்படுகிறான். இனி என்னென்ன  செய்வார்களோ...! அன்னம் மீது வைத்த ஆசை இந்த அளவுக்கு நம்மை  கேவலப் படுத்தி விட்டது.. ஊரில் ஒருத்தனும் மதிக்கப் போவதில்லை. பேசாமல் காலில் விழுந்து விடவேண்டியதுதான் பகையாளியை  உறவாடிக்  கெடுன்னு  மூதாதையர்கள் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்.?

" அன்னத்துக்கு  அடுத்த ஜென்மத்திலும் என் ஞாபகம் இருக்கணும்.அதுக்கு என்ன செய்யணுமோ அத நான் செஞ்சாகனும்.அதுக்காக குத்தத்தை ஒத்துக்கிட்டு பணிஞ்சு போவோம்.அதனால நம்ம கிரீடம் இறங்கிடாது .காரியம்தான் பெரிசு.வீரியம் வேணாம்.முதலில் வெளியில் போகவேண்டும்.இந்த கேசிலிருந்து விடுபட வேண்டும்."

வெள்ளிங்கிரியின் மனதில் பயங்கரமான திட்டம் உருவாகியது.
*************************************************

ராசாங்கம்தலையை துவட்டியபடியே குளியல் அறையை  விட்டு வெளியில் வந்தார்.

'செவனு.?" மனைவியை அழைத்தார். வெட்கத்துடன் வந்து நின்றாள். வயதுக்கு வந்த மகள் இருந்தாலும் கணவன் மீது கொண்ட காமம்  குறைவதில்லை.அத்தனை நாள் கழித்து வந்திருக்கிற புருசனுக்கு  எவ்வளவு  ஆசை இருந்திருக்கும்.? கூப்பிட்டால் இணங்காமல் இருக்க முடியுமா? அன்றைய இரவு ராசாங்கத்துக்கும் அவளுக்கும் முதல் இரவு மாதிரிதான்  இருந்தது.

"சொல்லுங்க?'

முகம் பார்க்க வெட்கம் !

"வாய்க்கு ருசியா சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. வெரா,இல்லேன்னா கெளுத்தி கிடைச்சா வாங்கிட்டு வந்து கொழம்பு வையேன்! வெரா கிடைச்சா  கொழம்புக்கும்  ஆச்சு.கொஞ்சம் வறுத்து வை.தின்னுட்டு வடிவேலு வீட்டுப் பக்கமா போயி  பேசிட்டு வாரேன். உறவு முறை இருக்கு.அந்த வீட்டு சம்பந்தம்  கிடைச்சா  அன்னம் கொடுத்து வச்சதுதான்.பார்ப்பம்.அந்த மீனாச்சி நல்ல வழி காட்டமாட்டாளா?"

"சரிங்க.!நான் வெள்ளனவே எந்திரிச்சு பாய் கடைக்குப் போயி குடலு வாங்கிட்டு வந்து கொழம்பு வச்சிட்டேன்."

"இட்லிக்கு நல்லா இருக்கும்! நானே எடுத்து வச்சு  சாப்பிட்டுக்குறேன். நீ போயி  மீனு வாங்கிட்டு வந்திரு. காலாகாலத்துல போகலேன்னா வித்துரும்."என்று செவனம்மாவை கடைக்கு அனுப்பி வைத்தார்.

அவளும் கொண்டையில் சுற்றி இருந்த ஈரத்துண்டை கழற்றிவிட்டு பையை  எடுத்துக் கொண்டாள்.

அம்மா அங்கிட்டு கிளம்பியதும் அன்னமயிலு  அறையிலிருந்து  வெளியில்  வந்தாள்.

"அய்யா...நீங்க ஊஞ்சல்ல உக்காருங்க.நான் எடுத்துட்டு வாரேன்." என்று  அடுப்படிக்கு போனாள்.பெரிய தட்டில் ஆறு இட்லி .கூடவே குடல் . பெரிய அகப்பையில் எடுத்து வைத்தாள்.அய்யன் மாமிச பிரியர் என்பது அவளுக்கு  நல்லாவே தெரியும். "உழைக்கிறது எதுக்கு நல்லா சாப்பிடுறதுக்குத்தான்" என்று அவர் அடிக்கடி சொல்வார்.

இட்லியில் குழம்பை ஊற்றி நன்றாக பிசைந்துஅதனுடன்குடலையும் கலந்து வாய்க்குள் வைத்ததும் அவருக்கு எல்லாமே மறந்து விடும் .ரசித்து மென்று  சாப்பிடுவார்.அப்படி ஒரு பழக்கம்.

"ஏத்தா...நீ சாப்பிடல.?"

"அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்யா!" என்று சொன்னவள் மெதுவாக தனது  விருப்பத்தையும் சொன்னாள்.."எத்தனை நாளுதான் இங்கனயே இருக்க முடியும்? கோவில் குளம்னு போனா நாலு இளவட்ட பயலுக பார்க்கத்தான்  செய்வாய்ங்க.அவிய்ங்களை மிரட்டிக்கிட்டே இருக்க முடியுமா...?ஒரு எடுபட்டபய வம்படியா போலீஸ்ல மாட்டிக்கிட்டான்.கச்சேரிக்கும் கோர்ட்டுக்கும் நாம  அலைய முடியுமா. நாம பொழப்பு தளப்ப பார்க்க வேணாமா...? சொல்லுங்க"

"புரியிது தாயி. சமஞ்ச புள்ளைய நாங்களும் எத்தனை நாளுதான் சொமக்க முடியும்.? கடைக்கு போயிருக்கிற ஆத்தா வந்திரட்டும்.மத்தத நான் பாத்துக்கிறேன். இன்னும் நாலு இட்லி வைம்மா.!"

வயிறுக்கு வஞ்சகம் செய்யாமல் சாப்பிட்டு முடித்தார்.

Friday, 23 June 2017

காதல்...காமம்.( 39.) எல்லா ஆம்பளையும் ஒரே மாதிரிதானே...

மறுநாள் அன்னத்தின் வீடு..அவளின் அய்யா ராசாங்கம் ஊரில் இருந்து  திரும்பி இருந்தார்.மகளும் பொண்டாட்டியும் நடந்தவைகளை அப்படியே சொன்னார்கள்.

"அந்தப் பய உள்ளூர்தானா?"

' ஆமாம்' என்று  தலை ஆட்டினாள். "எம்பிட்டோ சொல்லியும் கேக்கல .வஞ்சும் பாத்திட்டேன்.செருப்ப எடுத்துக் காட்டியும் எம்பின்னாடியே சுத்தி  வந்தான்." என்றாள் சன்னக்குரலில்!

 சுயநிலை விளக்கம் சுருக்கமாக இருந்தது. அவளுக்கு அய்யனிடம் பயம்.கோபம் வந்தால் இடுப்பு வார் கைக்கு போய்விடுமே!

"பின்னாடி சுத்துன பயபிள்ளைய பத்தி உன் ஆத்தாக்கிட்ட சொன்னியா?"

".............!"

"ஏன்லா சொல்லல.?பயந்திட்டியா...இல்ல அவன் மேல நோக்கமா?"

"அப்பிடியெல்லாம் இல்ல.ஆத்தா ஊர கூட்டி ஒப்பாரி வச்சா எம்மானம்தானே  போகும்னு  பயந்துகிட்டு சொல்லல!"

"இப்ப கச்சேரி( போலீஸ்.) வரை போயிருக்கே!  நீயே டாம்டாம் அடிச்சுட்டியே! கோயில்ல வச்சு மானத்த வாங்கிருக்கான்.இனி கேசு விசாரணை கோர்ட்டுன்னு போகணும். சொந்தக்காரன் பூரா ராசாங்கம் பொட்டப்புள்ளைய  வளர்த்த லட்சண மொகரைய பாருன்னு காரி துப்புவாய்ங்களே! நம்ம  பண்ணக்காரய்ங்க கூட மதிக்கமாட்டாய்ங்க. கம்புக்கூட்டுக்குள்ள கிடக்கிற துண்டை எடுத்து உருமா கட்டிக்கிட்டு எதுக்க வந்து நிப்பாய்ங்க.காரை வீட்டுக்குன்னு இருந்த மானம் மருவாதை எல்லாம் போச்சு. எவன் வாசலேறி  வந்து பொண்ணு கேப்பான்?"

''நடந்தது நடந்து போச்சு. எந்த தப்பைய வச்சு கட்டுனாலும் நேரா நிக்கப்போகுதா என்ன..எதுக்கு வெசனப்பட்டுக்கிட்டு ...எந்திரிங்க.வந்ததும்  வராததுமா நோகனுமா? குளிச்சிட்டு வாங்க. யோசிப்போம்." என்று புருசனை  கிளப்பினாள் செவனம்மா.

அன்னத்துக்கு சற்று ஆறுதல். 'இவ்வளவு ஆனபிறகு எதுக்கு பயப்படனும்? ஆம்பள பயலுக்கு அம்புட்டு திமிர் இருந்தா ஆம்பளையின் திமிர தாங்குற பொம்பளைக்கு எம்பிட்டு சக்தி இருக்கணும்.அவன் அருவா எடுத்தா பொம்பளை அருவாமனைய எடுக்க வேண்டியதுதானே?பார்த்திருவோம். அவனா நானாங்கிறத?" மனசுக்குள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள் அன்னம்.

ராசாங்கம் குளிக்கப் போனார். செவனம்மா அடுப்பங்கரைக்கு சென்றாள். அன்னம் அவளது அறைக்கு போனாள்.

இந்த சிக்கலில் இருந்து வெளியேற அவளுக்கு ஒரே வழிதான் தெரிந்தது. சீக்கிரத்தில் கல்யாணம் .!

 'அப்பன் ஆத்தா பார்த்து வைக்கிற கல்யாணத்தில் பிள்ளை பிறக்காதா என்ன?  ஆம்பளையா ,பார்க்கிறதுக்கு லட்சணமா ,படிச்சவனா இருந்தால் போதும். காதல்  வெங்காயம் என்பதெல்லாம்  நாம்ப  சொல்லிக்கிற பேருதானே? ராத்திரி ஆனா எல்லா ஆம்பளையப் போலத்தானே புருசனா வர்றவனும் கட்டி  புடிக்கப்போறான் ?எல்லா எழவும் அந்த  ராத்திரி நேரத்துக்குத்தானே ஏங்குது? ஊருக்குப் போயி திரும்பி இருக்கிற நம்ப அய்யனுக்கு பொண்ணை பத்துன கவலை இருந்தாலும் பக்கத்தில ஆத்தா கிடகும்போது  பாயாம விட்ருவாரா? அய்யன் குளிச்சிட்டு வரட்டும் .கல்யாணத்தை பண்ணி வை சாமின்னு சொல்லிருவோம்"

இப்படி மனமெல்லாம் கல்யாண நினைவில் இருக்கிறாள் அன்னம்.

உண்மை நிகழ்வை அடிப்படையாக  வைத்து  புனையப்படுகிற  தொடர்.

Saturday, 3 June 2017

காதல்...காமம்.( 38.) "மச்சம் சொன்னானா?"

அன்னமயிலுவின் வீடு.

"உன் பேரென்னம்மா?"----இன்ஸ்.ராம்குமார் கேட்கிறார்.

"அன்னமயிலு....!  அன்னம்னு கூப்புடுவாங்க,!"

"வெள்ளிங்கிரிக்கும் உனக்கும் எவ்வளவு நாளா பழக்கம்?"

"அப்படி யாரும் எனக்குப் பழக்கமில்ல.!"

"பழக்கமில்லாமயா கோயில்ல உன் பின்னால வந்தான்?"

"ரோட்டுல போறபோது நாலு நாயி  திரியிது சார் !"

"உன்ன பாத்துதான் வாலாட்டிருக்கு ஒரு நாயி! நீ பிஸ்கட் போட்டதாலதானே  வால ஆட்டிருக்கு?"

"எச்சக்கல நாயி எல்லார்கிட்டயும்தான் வால் ஆட்டும். அந்த நாயை புடிச்சு  முனிசிபாலிட்டில கொடுக்காம என்கிட்டே என்ன சார் விசாரண?"

"என்னம்மா சின்னப் பொண்ணா இருந்திகிட்டு இப்படி வெடுக் வெடுக்குன்னு  பேசுற?"

"எனக்கும் எவனோ ஒரு எடுபட்ட பயலுக்கும் சம்பந்தம் இருக்கிறதா நெனச்சு  கேள்வி கேட்டா என்னத்த சார் சொல்றது?.பொம்பளக பின்னால சுத்துற சண்டியர்கள்ல அந்த தட்டுகெட்ட பயலும் ஒருத்தனா இருக்கலாம்.அவனை அடிச்சு மிதிச்சு நாலு சாத்து சாத்தாம என்கிட்ட என்ன சார் விசாரண? நானென்ன கம்ப்ளெயின்ட் கொடுத்தேனா?"

"நல்லாத்தான்மா பேசுறே? அவன் உன்ன லவ் பண்றதா சொல்றானேம்மா...?"

"அவனைத்தான் கேக்கணும்.அந்தப் பொண்ணும் உன்ன விரும்புதான்னு ஸ்டேசன்லய  கேட்டிருந்தா இம்புட்டு தூரம் வந்திருக்க வேணாமே?"

"நீயும் விரும்புறியாம்! அவன் வேற சாதிங்கிறதால  பயப்படுறியாம்.எங்கள ஒண்ணு சேத்து வையுங்க சார்னு சொல்றான்.இதுக்கு என்னம்மா சொல்றே ?"

"எனக்கு அங்கங்க மச்சம் கெடக்குன்னு சொன்னா அதையும் நம்பி என்ன விசாரிப்பிங்களா? அவன் யாருங்கிறதே எனக்கு தெரியாதுன்னு சொல்றேன். கேள்வி மேல கேள்வியா கேக்கிறீங்களே? .நானும் நாலு எழுத்து படிச்சிருக்கேன். கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணுகிட்ட இம்புட்டு கேள்வி கேட்டு விசாரணை பண்றது எங்க சொந்த பந்தங்களுக்கு தெரிஞ்சா  அசிங்கமாகிப் போகாதா? என்ன பெத்தவங்க என்ன நெனப்பாங்க."

பட படவென அன்னம் பேசியதை கேட்ட இன்ஸ்.ராம்குமாருக்கு  அவள் உண்மையைத்தான் சொல்கிறாள் என்பது புரிகிறது. ஒரு பெண்ணின் எதிர்காலத்துக்கு வேட்டு வைப்பதாகிவிடும் என்பதை உணர்ந்தவராக  விசாரணையை அத்துடன் நிறுத்திக்கொண்டார்.

அன்னமயிலுவின் அம்மா செவனம்மாவை அழைத்து  ஆறுதலாக பேசினார்.

அதுவரை  அறைக்குள் அழுதுகொண்டு இருந்த செவனம்மாவின் கண்கள் ரத்த சிவப்பேறி இருந்தது.வசதியான பெரிய குடும்பம்.புருசன் வெளியூரில்! அவரின் காதுகளுக்குப் போனால் என்ன ஆகுமோ என்கிற பயம்.

கையெடுத்து கும்பிட்டு அதிகாரியை அனுப்பிவைத்தவள்  மகளை கட்டிப்பிடித்துக் கொண்டு   ஒப்பாரி வைத்தாள் .

உண்மை  நிகழ்வின் அடிப்படையில் புனையபடுகிற தொடர்.

Saturday, 20 May 2017

காதல்..காமம். ( 37.)"கருணாநிதி வசனத்த நெஜமாக்கிடாதே!"

"என்ன எதுக்கு சார் கூட்டிட்டு வந்திங்க.?"- இன்ஸ்பெக்டரை பார்த்துக் கேட்டான் தங்கராசு.

"பதறாதே.!சாமர்த்தியமா பண்ணிட்டதா நினச்சுட்டிங்கள்ல நீயும் உன் பிரண்டும்! அவன் போட்டுக்கொடுத்திட்டான். கொள்ளை அடிக்கிறது, பொம்பள கிட்ட போறது இதிலெல்லாம் கூட்டு சேரவே கூடாதுடா.! கூட்டாளி தப்பிச்சிடுவான் "

"சார்! வெளங்குறமாதிரி சொல்லுங்க! நான் என்ன தப்பு பண்ணினேன்?"

"உங்கப்பா வச்சிட்டிருந்தாரே செல்லத்தாயி. அவ மர்டர் கேஸ்ல அக்யூஸ்டு  அவ புருசன் அடைக்கன் !. அவன காப்பாத்தி ஆந்திராவுக்கு அனுப்பினது நீயும் உன் நண்பன் வெள்ளிங்கிரியும்!அத உன் நண்பன் நேத்தே ஒத்துக்கிட்டு  ரிட்டர்ன்ல எழுதிக் கொடுத்திட்டான்.நீ என்ன சொல்ற? எழுதிக் கொடுக்கிறியா இல்ல உள்ள போயி உக்கார்றியா?."

"............"

"என்னடா ..வாய்ல வரலியா? ஊமச்சாமியா? உனக்கு கல்யாணத்த பண்ணி  வைக்காம இன்னொருத்தன் பொண்டாட்டி மேல  உங்கப்பனுக்கு ஆசை!வப்பாட்டியா  வச்சிருந்தா தாலி கட்டுனவன் என்ன பூபோட்டு கதவ சாத்தி  வைப்பானா ? ரெண்டு பேரையும்  சேத்து காலி பண்ணிருக்கணும். பொண்டாட்டிய மட்டும் போட்டுத் தள்ளிட்டான்.அவனுக்கு கல்யாணத்த  பண்ணி வச்சு சேப்டியா ஆந்திராவுக்கு  அனுப்பி வச்சிட்டிங்களே...ஒரு வகையில உங்கள பாராட்டணும்டா! என்ன சொல்றே  ...எழுதுறியா ..பேப்பர் தரச்சொல்லவா?"

தங்கராசு தலையை ஆட்ட ரைட்டர் பேப்பர் கொடுத்தார்.

எழுதிக் கொடுத்து விட்டு வெளியில் செல்ல, அதே நேரத்தில்  கைகளை பின்பக்கமா ஒரு துண்டில் கட்டி வெள்ளிங்கிரியை உள்ளே கொண்டு வந்தார்கள். அதை பார்த்தும் பார்க்காததுமாதிரி தங்கராசுகடந்தான்.

லா அண்ட் ஆர்டர், கிரைம் இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கும் ஆச்சரியம்.

"என்னய்யா ..என்ன பண்ணினான்?" ---சட்டம் ஒழுங்கு காப்பாளர் ராம்குமார் நாற்காலியை விட்டு எழுந்து வந்தார். "கை கட்ட அவுத்து விடுய்யா"

"கோவில்ல  மேல ஆடி வீதியில ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்திருக்கான்யா! எல்லாரும் சேந்து அடிச்சிருக்காங்க. கோவில் அவுட் போஸ்ட்ல வச்சிருந்து  இங்க கொண்டு வந்திட்டோம்.நம்ம லிமிட்லதான் கோவில் இருக்கு"--ஏட்டய்யா சொல்லி முடிக்க,

"என்னடா இப்படி வந்து மாட்டுறே.கோவிலுக்கு சாமி கும்பிடத்தான் போவாய்ங்க. நீ டாவ் அடிக்கிறதுக்குன்னு போவியா? யார்ட்ட வம்பு பண்ணுனே?"

கன்னத்தில் விழுந்தது.... பளார் அறை!

"பராசக்தி படத்தில கருணாநிதி எழுதுன வசனத்த நெஜமாக்கிடுவாய்ங்க போலிருக்கே!அசந்தா கோவில்லேயே படுக்கைய போட்டு பர்ஸ்ட் நைட்  நடத்திருவிங்க .இல்லடா ?" --இன்னொரு அறை!

வெள்ளிங்கிரி வாயை திறக்கவில்லை. அடி வாங்கிக் கொண்டு  நிற்கிறான்.

"செனப்பன்னி மாதிரி இருக்கேல்ல..அதான் தெனவெடுத்து எவ சிக்குவான்னு  அலையிறே? அதான் உங்கள மாதிரி திமிர் பிடிச்சவய்ங்களுக்காக சில சிறுக்கிக திரியிறாளுகளே...அவள்கல்ல எவள்ட்டாயாவது   போயி திமிரை காட்டவேண்டியதுதானே? சீக்கு வந்திரும்னு பயம்!"

அவன் பதிலேதும் சொல்லாமல் அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டான்.

ராம்குமார் அடித்து துவைத்து விட்டார். வெள்ளிங்கிரியை இழுத்துக் கொண்டு போய் லாக் அப்பில்  தள்ளினார்கள்.அந்த அளவுக்கு போலீஸ் அடி!

 உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு புனையப்படும் கற்பனை தொடர்.

  


Friday, 12 May 2017

காதல்..காமம்.( 36,) "அக்கா தங்கச்சி மார புடிச்சு பாரேன்"

"அன்னம்..கொஞ்சம் நில்லேன். சாவி கொடுத்த பொம்மை மாதிரி விசுக்.. விசுக்னு போயிட்டியே இருக்கியே..?"

மேல ஆடி வீதி பிரகாரத்தில் போய்க்கொண்டிருந்தவளை  தடுத்து நிறுத்துகிறான் வெள்ளிங்கிரி. போலீஸ் ஸ்டேஷனுக்கு தங்கராசுவை  கூட்டிக்கொண்டு போன அடுத்த அரை மணி நேரத்தில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டான். அன்னமயிலு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்  கோவிலுக்கு வருவாள் என்பது அவனுக்கு தெரியும். அவளை அவன் விரும்புகிறான் .

" நீ என்ன பாலோ பண்ணிட்டு வர்றது எனக்கும் தெரியும்.நீ எந்த மாதிரி ஆளுங்கிறதும் தெரியும். என் பின்னாடி அலையிறத நிப்பாட்டிக்கோ. வீணா வெட்டி வெவகாரத்த இழுக்காத.! அதுக்கேத்த ஆளு நான் இல்ல."

"என்ன பத்தி என்ன தெரியும்?"

"பொம்பள பொறுக்கி!"

"பொறுக்கி எடுத்ததால்தான்டி  உன் பின்னாடி வரேன்!"

"கோயில் பிரகாரம். அதான் என் கால்ல செருப்பு இல்ல!மரியாதைய கெடுத்துக்காத.!"

"பிரகாரம்கிறதாலதான் உன்ன கட்டி பிடிச்சி முத்தம் கொடுக்கல!"

"பெரிய வீட்டுப்புள்ளன்றதால அசிங்கப் படுத்த விரும்பல. போயிரு!"

"போகலன்னே என்னடி பண்ணுவே!?"

"எச்சக்கல நாய கோவிலுக்குள்ள விட்டதே தப்புன்றத  இங்க இருக்கிறவங்க  எல்லோரும் தெரிஞ்சிக்குவாங்க.உங்கூட  இம்புட்டு நேரம் பேசுனதே தப்பு.டா ..தட்டுக்கெட்ட நாயே!" என்று சத்தம் போட்டு சொன்னதுடன் அவனின் சட்டையை  இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். "எடுபட்ட பயலே "என்றபடியே  பளார் பளார் என அறை விட்டாள். ஆடி வீதியில் காற்று வாங்கியபடி உட்கார்ந்திருந்தவர்களும் ,பிரகாரம் சுற்றி வந்தவர்களும் சேர்ந்து கொண்டு சாத்துபடி நடத்தினார்கள். யாரும் காரணம் கேட்கவில்லை.அவர்களாகவே  சொல்லிக்கொண்டார்கள்.

"இடிக்கிறதுக்குன்னே வந்திருப்பான். மார புடிச்சிருப்பான்.சேட்டை பண்ணிருப்பான்" இப்படி இன்னும் என்னன்னவோ!

"ஏண்டா ..காவாலிப்பயல. உன் அக்கா..தங்கச்சி மார பிடிச்சுப்பாரேன். எப்படி  இருக்குன்னு வீட்டுலேயே தெரிஞ்சிருக்கலாமேடா " என்று  ஒருத்தன் மூக்கில் குத்து விட்டான்.இவ்வளவு நடக்கிறது. அதை பார்க்க அங்கு  அன்னம் இல்லை. கூட்டம் சேர்ந்ததும் கிளம்பி போய் விட்டாள்.   . 

அடி.... அவமானம் ..! அப்படியே உட்கார்ந்து விட்டான் வெள்ளிங்கிரி. இப்படி  நடக்கும் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. பொம்பள பொறுக்கி என்று அன்னம் சொன்னதும் அவனுக்கு ஆத்திரம் வந்து விட்டது.அவனும் வார்த்தையை விட்டுவிட்டான்..

தலையை குனிந்தபடி உட்கார்ந்து விட்டவனை  அதுவரை மொத்தியவர்களும்   விட்டு விட்டார்கள்.ஆனால் ஆலயத்தில் இருக்கிற போலீஸ்காரர்கள் விட்டு  விடுவார்களா?

கூட்டிக்கொண்டுபோய் விட்டார்கள்.

உண்மை  நிகழ்வு. புனைய பட்ட கதை. தொடர்.  

Tuesday, 9 May 2017

காதல்...காமம்.( 35.) நண்பனா துரோகியா?

"ஏப்பா ராசு...இம்புட்டு நாளாகியும் குத்தவாளியை கண்டுபிடிக்க முடியலியா? நல்லா தூங்கியே மாசக் கணக்காச்சுப்பா.! செல்லத்தாயியை   வச்சுக்கிட்ட நாள்லயும் நிம்மதி இல்ல. செத்து தொலஞ்ச பெறகும் நிம்மதி இல்ல! உனக்காவது  நல்லது நடக்கட்டுமேன்னு நெனச்சா அந்த புள்ள  நாண்டு  கிட்டு செத்திருச்சி.என்ன பாவம் செஞ்சேனோ அது உன்னையும்  சேத்து அலக்கழிக்கிது!"

மகன் தங்கராசுவின் கைகளை பிடித்துக்கொண்டு கலங்குகிறார் வடிவேலு.

 தூணில் சாய்ந்திருந்தாள் மாயக்காள் .வெத்திலை போட்டு வாரக்கணக்காகி  இருக்கலாம்.உதடுகள் வரண்டு போயிருந்தன.வெடிப்புகள் தெரிந்தது.

மகனை அருகில் வருமாறு கையால் ஜாடை காட்டினாள்!

"அய்யா ராசு..போன புள்ளைய நெனச்சிக்கிட்டு மருகிட்டு நிக்கிறதில எந்த பிரயோசனமும் இல்ல.தாய பிரிஞ்ச கோழிக் குஞ்சுக மாதிரி தெருவில நாங்க  அலைஞ்சுகிட்டு இருக்கோம்.கள்ளப்பிராந்து மாதிரி எமன்  எப்ப தூக்கிட்டுப் போவானோ....  தெரியலய்யா. நாங்க  நல்லது கெட்டத பாத்தாச்சு. நீ வம்சத்து ஒத்த  வாரிசு.பல்கி பெருகனும்யா! அவ நெனப்பிலேயே கரிகிடாதே சாமி!"

"ஆத்தா ...என்னத்த பேசுறே? "

"அந்த பொன்னியையே நெனச்சிக்கிட்டு கிடக்காதே சாமின்னு சொல்றன்யா.! வாழ கொடுத்து  வைக்கல அவளுக்குன்னு தண்ணிய குடிச்சிட்டு தாகத்த தீர்த்துக்கய்யா.!"

"ராசு...ஆத்தா சொல்றதில என்னய்யா தப்பு? உனக்குன்னு எவளோ பொறந்து  காத்திருக்கா.அதனாலதான் பொன்னிக்கு வாழ கொடுத்து வைக்கலன்கிறேன் . பொன்னிய கட்டி வைக்கனும்கிறதுக்குத்தானே வீடு தேடி போய் பேசினோம். என்னாச்சு?லட்சுமி  வீடு மாறி போயிட்டா.இவ மேல போய் சேர்ந்துட்டா.வீடு  மாறிப்போன லட்சுமி உன்னைத்தேடி கட்டாயம்  வருவா."

மகனின் தலையை பாசமுடன் தடவிக் கொடுத்தாள்.

"அப்பா ..ஆத்தா நல்லாருக்கிங்களா " என்று கேட்டபடியே வந்தான் வெள்ளிங்கிரி.

இவனை பார்க்க விரும்பாத தங்கராசு அம்மாவின் கைகளிலிருந்து  விடுவித்துக்கொண்டு  வீட்டுக்குள் போய் விட்டான்.

தங்கராசுக்கும் வெள்ளிங்கிரிக்கும் பேச்சு வார்த்தை இல்லை என்பது அந்த  கிழ தம்பதிக்கு தெரியாது.

"நல்லாருக்கம்பா! உன் சிநேகிதனுக்கு நல்லதா நாலு வார்த்தை சொல்லி  மனச மாத்தப் பாருப்பா! பொன்னிய நினைச்சு மருகிட்டு திரியிறான். "

"விடுங்கப்பா..கஞ்சி போட்ட சட்டை எத்தனை நேரத்துக்கு வெறப்பா இருக்கமுடியும்? அவன நான் பார்த்துக்கிறேன். செத்துப்போன செல்லத்தாயின் புருசன் அடைக்கன் இன்னொரு கல்யாணம் கட்டிக்கிட்டு ஆந்திராவ்ல இருக்கானாம் .நம்ம ஊர் போலீஸ் போயிருக்கு. எப்படியும் பிடிச்சாந்திருவோம்னு  இன்ஸ்பெக்டர் உங்ககிட்ட சொல்லச்சொன்னாரு. அதான்  வந்தேன். பயப்படாம இருங்கப்பான்னு சொல்லலாம்னு!"

"நல்ல சேதி சொன்னப்பா கிரி!தலையில இருந்த பாறைய எறக்கி வச்ச மாதிரி இருக்கு!" என்ற வடிவேலு எழுந்து வந்து மாயக்காளின் பக்கமாக உட்கார்ந்தார்.

"ஏ புள்ள.! சந்தோஷமா இருக்குளா..! வண்டியூர் மாரியம்மன் கோவிலுக்கு  போய் சாமிய கும்பிட்டு வந்திரலாம். எந்திரிச்சி குளிச்சிட்டு வா.  ஒரு எட்டு  போயிட்டு வந்துருவோம்."என்று சொன்னதும் மாயக்காளுக்கு கண்ணீரை  அடக்க முடியவில்லை.

அவரும் அவளும் ஒன்றாக எழுந்தார்கள்.

அதே நேரம் இன்ஸ்பெக்டர் ராம்குமார், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜதுரை  இருவரும் ஒன்றாக உள்ளே நுழைந்தார்கள்.

இவர்கள் எதற்காக இப்போது இங்கு வரவேண்டும்?

கும்பிட்டபடி வரவேற்கிறார் வடிவேலு. மாயக்காளுக்கு நெஞ்சு படபடக்கிறது.

"என்னங்கய்யா ..புதுசா ஏதாவது சொல்ல வந்திருக்கிங்களா?" என்று கேட்டார்  வடிவேலு.

"தங்கராசு வீட்லதானே இருக்காரு? அவரை ஸ்டேஷன் வரை கூட்டிட்டு போகவேண்டியது இருக்கு? அவரை  கூப்பிடுறீங்களா?" என்று சொல்லி  முடிக்க  "நானே வரேன் சார்!" என்று அறைக்குள் இருந்து வந்தான் தங்கராசு.

எதையும் கண்டு கொள்ளாமல் நின்றிருந்தான் வெள்ளிங்கிரி.

ஆனால் இன்ஸ்பெக்டர் ராம்குமார்  அவனிடம் " தேங்க்ஸ்பா!" என்று சொன்னது தங்கராசுவின் காதில்  விழாமல் இல்லை.!

உண்மை  சம்பவத்தின்  அடிப்படையில்  புனையப்படுகிற  தொடர்.

 

Sunday, 23 April 2017

காதல்....காமம்.( 34.) நிரோத் பாக்கெட்!

ஸ்டேசனையே அதிர வைத்து விட்டான் தங்கராசு. அவனை அடித்துக் கொல்லப் பார்க்கிறார்கள் என்று நினைக்கும் அளவுக்கு கத்தல் இருந்தது. இன்ஸ்பெக்டர் அந்த நிமிடம் ஆடிப்போய்விட்டார் என்றே சொல்லலாம்.

"ஏ....ய்.! என்னப்பா நீ இந்த கத்து  கத்துறே! தெருவில போறவய்ங்க காதில கீதில விழுந்தா பொல்லாப்பு ஆயிடும்பா! ஸ்டேசன்ல யாரையோ அடிச்சு நொறுக்குராய்ங்கன்னு கட்சிக்காரப் பயலுக கொடிய தூக்கிட்டு வந்திருவாய்ங்க! இப்ப என்ன சொல்லிட்டேன்னு இந்த கத்து கத்துனே? அந்த புள்ள தற்கொலை பண்ணிக்கல.யாரோ கொன்னு தொங்க விட்டிருக்காய்ங்க. அது விசயமா கேட்கிறதுக்குத்தான் உன்னை கூட்டிட்டு வந்தேன். இப்ப சொல்லு ! உனக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?" இன்ஸ்பெக்டர் ராஜதுரை அவனை ஆசுவாசப்படித்தியபடி கேட்டார்.

குழம்பிய மன நிலையில் இருந்தான் ராஜதுரை. அவனுக்கு தெரிந்தவரை அவர்களுடைய காதலுக்கு யாருமே எதிரி இல்லை.பொன்னியின் அப்பாவுக்கு  பிடிக்கவில்லை.அதனால் மகளுடன் சண்டை போட்டார்.அருவாமனை வெட்டு விழுந்தது.ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு போய் விட்டார்கள். மகளை கொல்லுகிற அளவுக்கு மோசமானவர் இல்லை.பொன்னியை  யார்  கொலை செய்திருக்க முடியும்? சம்பவம் நடந்த போது அந்த இடத்தில்வேறு  யாருமே இல்லை என்பது அவனுக்கு தெரியும்.

இருட்டுக்குகையில் அவனை கட்டிப்போட்டது மாதிரி இருந்தது.

"எனக்கு எதுவும் புலப்படலையா! அப்படி யாராவது எதிரி இருந்திருந்தா பொன்னி கண்டிப்பா என்னிடம் சொல்லிருக்கும். அது எங்கிட்ட எதையுமே  மறைச்சதில்ல!"

"போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி அந்த புள்ளைய வாயைப் பொத்தி மூச்சு  திணற வச்சு கொன்னுருக்காய்ங்க. செத்த பிறகு தூக்கில தொங்க விட்டிருக்காய்ங்க.நிச்சயமா யாரோ ஒரு ஆம்பளைதான் செஞ்சிருக்க முடியும்.அந்த புள்ளையும் போராடி பார்த்திருக்கு.அந்த ரூம் கிடந்த நிலையை பார்த்தபோதே எனக்கு சந்தேகம்தான்! பீரோ வேற நகர்ந்து கெடந்துச்சு.யாரோ  ஒளிஞ்சிருந்து இந்த காரியத்தை பண்ணிருக்கான். பொன்னிய கொல்றதுதான் அவனது நோக்கமா இருந்திருக்கும்!"

"அய்யா ...நீங்க சொல்றத பார்த்தா ரொம்ப நாளா யாரோ ஒருத்தன் எங்களை நோட்டம் பார்த்திருக்கான்னு தெரியிது."

"உங்களுக்கு தெரிஞ்ச பயலுகள்ல யாரோ ஒருத்தன்தான் இத செஞ்சிருப்பான். யார் மேலயாவது உனக்கு சந்தேகம் இருக்கா? இப்ப யோசிச்சு பாரு?"

யார் மீதும் தங்கராசுக்கு சந்தேகம் வரவில்லை.யாரை சொல்வது, யாரை  நோவது?பொன்னியும் அவனிடம் எதுவும் சொன்னதில்லை.

"எனக்கு தெரியலய்யா!பொன்னியின்அய்யாஅம்மாகிட்டகேட்டுப் பாருங்க ..அவங்க சைடுல யாராவது பொண்ணு கேட்டு வந்து பிரச்னை எதுவும் நடந்ததான்னு தெரியல.!"

"இந்த எழவத்தாண்டா இன்னமும் கட்டிக்கிட்டு திரியிறிங்க. பொண்ணு கொடுக்கலேன்னா பொத்திக்கிட்டு போறதில்ல.அவளத்தான் கட்டுவேன்.  இல்லேன்னா கொல்வேன்னு அலையிறிங்க. அவ கிட்ட இருக்கிறதுதானே  மத்தவ கிட்டேயும் இருக்கு.அங்கென்ன தங்கத்திலையா கிடக்கு?"

தங்கராசுக்கு அவர் பேசியது பிடிக்கவில்லை. அவனால் அதை எதிர்த்துப் பேசவும் முடியாது.அவருக்கு எதுவும் துப்பு கிடைக்கவில்லை என்கிற  கடுப்பில் பேசுகிறார்.தலை குனிந்தபடி கேட்டுக்கொண்டான்.

"யோவ்.! அவ அப்பன் ஆத்தாவாவது உண்மைய சொல்லுவாங்களா...போன புள்ள திரும்பி உசிரோடு வரவா போகுதுன்னு குத்தவாளிய மறச்சிருவாய்ங்களா...ஆம்பள பொம்பளன்னு பார்க்க மாட்டேன்.லத்திக்கம்ப  எடுத்தேன்னா ஒன்னு எலும்பு முறியும்.இல்லீன்னா கம்பு உடையும்.போய்யா... சொல்லி வை அந்தாளுகிட்ட!"

எரிச்சலுடன் தங்கராசுவை அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர் ராஜதுரை.


ங்கராசு கிளம்பி சென்றபிறகு ஃபாரன்சிக் அதிகாரி வந்தார். "முக்கியமான  எவிடென்ஸ் ஒன்னு பொன்னியின் ரூமை செர்ச் பண்ணினபோது கிடைச்சது  மிஸ்டர் ராஜதுரை" என்று சொன்னவர் ஒரு பொட்டலத்தை கொடுத்தார்.

பிரித்துப் பார்த்தார் ராஜதுரை.முகம் அதிர்ச்சியை காட்டியது.

"என்ன சார் இது? அந்த பொன்னி ரொம்பவும் நல்ல பொண்ணுன்னுதான்  எல்லா பயலும் சொல்றாய்ங்க.இது எப்படி அந்த பொண்ணு ரூம்ல ?"

"கொலை பண்ண வந்த பய வச்சிருந்திருக்கலாம்ல?"

அந்த பொட்டலத்தில் அப்படி என்னதான் இருந்தது.நிரோத் பாக்கெட் !

உண்மை  நிகழ்வை  அடிப்படையாக  வைத்து  புனையப்படுகிற  தொடர்.

Thursday, 13 April 2017

காதல்...காமம்.( 33.) 'பொன்னி தற்கொலை பண்ணிக்கல"

மதுரை பெரிய ஆஸ்பத்திரியை அந்த காலத்தில் .எர்ஸ்கின் ஆஸ்பத்திரி என்று சொல்வார்கள்.தற்போது அது ராஜாஜி மருத்துவமனை.ஆனாலும் ஜனங்களுக்கு இன்றும் பெரிய ஆஸ்பத்திரிதான்!

.சிவனாண்டியின் கையில் எட்டு தையல் .வெட்டு ஆழமாக இருந்ததால் புண் இன்னும் ஆறவில்லை.

"ஒத்தப்புள்ளன்னு ஊட்டி ஊட்டி வளத்தில்ல. அதாண்டி! என்னயும் வெட்டிட்டு  நாண்டுக்கிட்டு செத்துருக்கா !.இந்நேரம் பொணத்த அறுத்து கூறு போட்டு பாத்திருப்பாய்ங்கள்ல!புருசன் பாக்க வேண்டிய ஒடம்புடி ! கண்ட பயலும் பாத்திருப்பாய்ங்க !நெனச்சு பாக்கிறதுக்கே கூசுதுடி! தாலி கட்டுனவனையே முழுசா பாக்க விடமாட்டாளுங்க. நான் பெத்த மவளை டாக்டரு பயலுக எங்கங்க தொட்டாய்ங்களோ!என்னன்ன நெனச்சாய்ங்களோ!"

சிவனாண்டி குமுறி குமுறி அழுகிறார். படுக்கையின் ஓரமாக உட்கார்ந்திருந்த  ராசம்மாவுக்கு தாங்க முடியவில்லை.

"சும்மா இருக்கமாட்டிங்களா?  நானே நொம்பலப்பட்டு கெடக்கிறேன்..நம்ம புள்ளைய பத்தி நாமே அசிங்கமா பேசலாமா? நாய் திங்க போவுதோ..நரி தின்னப் போவுதோ!மண்ணு தின்னப்போற ஒடம்புதானே.! அத விடுங்க! புள்ளைய பறி கொடுத்துட்டு நாம்ப நாதியத்து கெடக்கிறோம். சொந்தம்னு  சொல்லிட்டு கறிச்சோறுக்கு வந்து நிக்கப்போறாய்ங்க.ஒத்த பொம்பள  நான் என்ன பண்ணப்போறோம்னு புரியல சாமி!"

"என்ன சொல்ல வரேன்னு புரியிது ராசு. பொண்ண நாம்ப  வாழத்தான் விடல. செத்தவ காரியத்த அவ வாழ ஆசைப்பட்ட தங்கராசுவே செய்யட்டும்.! பொட்டச்சிக நம்ம சாதியில சுடுகாட்டுக்கு போறதில்ல.நீ போகவேணாம். ரெண்டாம் நாள் சாத்திரத்தை நம்ம வீட்ல பண்ணிட்டு. கருமாதின்னு நாளை  இழுத்திக்கிட்டு போகவேணாம்.மூணாம் நாளே மொத்த சோலியையும் செஞ்சிரு!"

சொல்லி முடிப்பதற்கும் வார்டு பாய் வந்ததற்கும் சரியாக இருந்தது.

"ஆத்தா! போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சிருச்சி.பாடியை எடுத்திட்டு போகச்சொல்லிட்டாய்ங்க. கை நாட்டு வச்சிட்டு எடுத்திட்டு பொணத்த கொண்டு போயிடலாம். ஏத்தா..வீட்டுக்கா..இல்ல தத்தநேரிக்கா?"

"அந்த தம்பி அங்க இருக்காப்பூ?"

"எந்த தம்பி ஆத்தா?"

பொண்ணு கேட்டு வந்த அந்த வீட்டுத் தம்பியத்தான் சொல்றனப்பூ!"

"அங்க இல்லாத்தா.! டேசன்ல இருக்காராம். அந்த வடிவேலு அய்யாதான் பொணம் அறுக்குற எடத்தில இருந்தாரு,.அவருதான் காசெல்லாம் கொடுத்து சரி கட்டுனாரு.தாராள மனசு தாயி! நம்ம பொண்ணுக்குத்தான் வாழக் கொடுத்து வைக்கல!"

"வெட்டியா இங்க என்னடி பேச்சு. அவனோடு போயி கை நாட்ட வச்சிட்டு பொன்னிய கொண்டு போற வேலைய பாரு!"---சத்தம் போட்டார் சிவனாண்டி. கடைசியாக கூட மகளின் முகத்தை பார்க்க முடியலியே என்கிற வேசாடு!

"சூதானமா இருந்துக்குங்க! அவசரத்துக்கு  பக்கத்தில இருக்கிறவங்களை  கூப்புட்டுக்குங்க." ---வார்டு பையனை கூட்டிக்கொண்டு கிளம்பினாள் பொன்னியின் அம்மா ராசம்மா!
--------------------------
ஸ்டேசனில்..

தங்கராசுவை விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர் ராஜதுரை. வெளிப்படையான கேள்வியாக இல்லை.அவனும் அதை புரியாமல்தான் பதில் சொல்கிறான்.

"எத்தன வருசமா பொன்னியோட பழக்கம்.?"

"காலேஜில் இருந்துதான் சார் !"

"உன்னை முழுசா நம்புச்சா?"

"எதுக்கு  இப்படி கேக்கிறிங்கன்னு புரியல சார்!"

"தனியா எங்கெல்லாம் போவிங்க,...... லாட்ஜ்?"

"கோவிலுக்குப் போவோம்.சிலைமான் ஆத்துக்குப் போவோம்.மத்தபடி வேறெங்கும் போறதில்ல.எதுக்கு சார் இப்படியெல்லாம் கேக்கிறீங்க?'

"இப்படியெல்லாம் கேப்பம்பா! உனக்கும் அந்த புள்ளைக்கும் சண்டை சச்சரவுன்னு வந்துருக்கா?"

"இல்ல.!"

"ம்ம்ம்! பொன்னி தற்கொலை பண்ணிக்கல!" என்று இன்ஸ்பெக்டர் சொல்ல  "என்ன சார் சொல்றீங்க.?"என்று அந்த அறையே எதிரொலிக்கிறது!

இது  உண்மை நிகழ்வு .புனை கதையாக தொடர்கிறது..


Saturday, 8 April 2017

காதல்..காமம்..(32.)

ராஜதுரை. கிருதா மீசை.தடித்த குரல்.பாடியான ஆள்.தல்லாகுளம் குற்றப்பிரிவு  இன்ஸ்பெக்டர்.

பொன்னி தூக்கில் தொங்கிய அறையை நோட்டமிட்டார். சுவரை ஒட்டி
கிடந்தது கட்டில்.  ஜன்னல்கள்  மூடப்பட்டிருந்தன.அந்த அறையை விட்டு வெளியேறுவதற்கு இன்னொரு கதவும் இருந்தது.அது திறந்துதான் கிடந்தது, அதன் வழியாக காற்று சிலு சிலுவென பாய்கிறது. பின்னம் பக்கம் பூத்தொட்டிகள்.எல்லாவற்றிலும் ரோஜாதான்! சிவப்பு ,மஞ்சள் என மலர்ந்திருந்தன.வாசலை தவிர்த்து அறைக்குள் வருவதற்கு ஏதுவாக சின்ன சந்து. துப்புரவு தொழிலாளர்கள் வந்து போவதற்காக!

அறையில்  பிளாஸ்டிக் சேர் சாய்ந்தே கிடந்தது. அதில் ஏறி நின்றுதான் பொன்னி தூக்குப்போட்டு கொண்டிருக்கவேண்டும்.தடயவியல் அதிகாரி  ரேகை எதுவும் கிடைக்கிறதா என்று வெள்ளைப்பவுடரை தெளித்து பிரஷினால்  நோகாமல் தடவி பூதக்கண்ணாடியால் தேடிக்கொண்டிருந்தார்.அறையில் இருந்த மர அலமாரி சற்று இடம் பெயர்ந்த மாதிரி இருந்தது. சேலைகள் தரையில் அலங்கோலமாக கிடந்தன. 

"என்னங்கிறேன்...உன் ஆளு தூக்குப்போட்டு தொங்குற அளவுக்கு தைரியசாலியா?" அறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்த தங்கராசுவை பார்த்து கேட்டார் ராஜதுரை.

"இல்லிங்க சார்!"

கூடவே ராசம்மாவும் "பச்ச புள்ள சாமி!ஆசப்பட்டவனோடு  வாழணும்னு ரொம்பவும் ஆசைப்பட்டுச்சு"

"அப்புறம் எதுக்கு நாண்டுக்கிட்டு சாகணும்?"

"ஆத்திரத்தில புத்தி கெட்டுப்போயி தொங்கிட்டா!"

"ஆத்திரத்தில அப்பனை வெட்டுனவளுக்கு சாகுறதுக்கு எப்படிம்மா மனசு  வந்திருக்கும்?  யோசிச்சு பாரு!"

"ஆசைப்பட்டவன் கெடைக்கலேன்கிற வருத்தம் இருக்கும்ல சாமி!"

"ஒத்தப் பொம்பள புள்ளைய வச்சிருக்கிற உங்களுக்கு மக ஆசைப்பட்டவனை  கட்டி வைக்கிறதில அப்படி என்ன சங்கடம்? இந்தாளு உங்க சாதிதானே?" அருகில் நிற்கிற தங்கராசுவை  காட்டி கேட்டார்.

"நான் சாதி கீதி பார்க்கலிங்க. என் ஊட்டுக்காரருக்கு இந்த சம்பந்தம் புடிக்கல.!"

''பையன் கள்ளு சாராயம் குடிக்கிறவனா...இல்ல கூத்தியா  வச்சிருக்கிறவனா. பயலுக்கு தப்பான பழக்கம் இருக்கிறதா எவனாவது வந்து சொல்லி இருப்பாய்ங்களா?"

"எதையும் என் ஊட்டுக்காரர் என்கிட்டே மறச்சதில்லிங்க.  வாக்கப்பட்டு முப்பது வருசம் ஆச்சு.என்னை கேட்காம எதையும் செஞ்சதில்லை. மக கல்யாண விசயத்திலே மட்டும் அந்த மனுசன் ஏன் பிடிவாதமா இருந்தார்ங்கிறது இன்னிக்கி வரை,இந்த பொழுது வரை புடிபடல சாமி!" ராசம்மா கண்ணீர் விட்டபடி புலம்புகிற அந்த சமயத்தில் தடயவியல் அதிகாரி இன்ஸ்பெக்டர் அருகில் வந்தார்.

காதுக்குள் ஏதோ சொல்ல  ராஜதுரையும் " எனக்கும் அந்த டவுட் இருக்கு மிஸ்டர் ஜேம்ஸ்! கண்டினியூ பண்ணுங்க." என்று அவரை  அனுப்பி வைத்தார்.

அங்கிருந்தவர்களுக்கு எதுவும் புரியவில்லை.

கான்ஸ்டபிளை கூப்பிட்டு அந்த அறைக்கு சீல் வைக்க சொன்னார். கொல்லைப்புற வழியையும் சீல் வைத்து விட்டனர்.

"இப்ப உன் புருசனுக்கு எப்படி இருக்கு...மக செத்தது அந்தாளுக்கு தெரியும்ல.?" என்று ராசம்மாவிடம் கேட்டவர் அதற்கான பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை."யாரும் எங்க அனுமதி இல்லாம அந்த அறைக்கோ கொல்லைப்புறம் பக்கமாகவோ போகக்கூடாது" என்று அவளிடம் எச்சரித்து விட்டு புறப்பட்டார்.

"தங்கராசு ! நீ மட்டும் என் கூட வாய்யா !"

அவனுடன் ஜீப் கிளம்பிச்சென்றது.

{ உண்மை நிகழ்வு. புனையப்பட்ட தொடர்,)


Saturday, 1 April 2017

காதல்....காமம்.(31.)

எல்லாம் சொடக்குப் போடும் நேரத்தில்....!

பொன்னிக்கு   பளார்  என அறை விழுகிறது ! தங்கராசு இப்படி அடிப்பான் என்று    அவள்   எதிர்பார்க்கவில்லை !  பொறி கலங்கிவிட்டது. அறைந்த வேகத்தில் கையில்  இருந்த அருவாமனை  சுவரில் மோதி விழுகிறது. பொன்னியை அணைத்தவன் வேகமுடன்  அவளை அறைக்குள் தள்ளினான்.  கதவை சாத்தி வெளியில் தாழ் போட்டான் .

"சார்.! பொன்னிய ஸ்டேசனுக்கு கூட்டிட்டு வர்றது என் பொறுப்பு. என்னை நம்பி நீங்க போகலாம்.!" என்று கெஞ்சினான் !   தங்கராசுவை ஏளனமாக
பார்த்தார்   எஸ்.ஐ.!

" ஏப்பு! எங்களை பார்த்தா அள்ளி முடிஞ்சு கோடாங்கி அடிக்கிறவன் மாதிரி தெரியிதா? எங்களை அனுப்பிட்டு அவள நீ அள்ளிட்டு எங்கேயாவது போயி  குடும்பம் நடத்தலாம்னு திட்டமா? அவளோடு இப்ப நீயும் என்னோடு ஸ்டேஷனுக்கு வர்றே! உன்ன மாதிரி எத்தன பயலுகள பார்த்திருப்பேன்." என்ற எஸ்.ஐ. வாசலில் இருந்த கான்ஸ்டபிளை பார்த்து  "எயிட் நாட் த்ரி....இந்த சாரை ஜீப்பில் ஏத்துய்யா."என்று தங்கராசுவை தள்ளி விட்டார்.

என்னதான் கத்தி கதறினாலும் அவனை போலீஸ் விடுவதாக இல்லை.

தாழை நீக்கிவிட்டு  கதவை ஓங்கி மிதித்தார் எஸ்.ஐ.!.

நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே!

மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்ட பொன்னி ஆவி அடங்கி  பிணமாக  தொங்குகிறாள்.! இதை அவர் எதிர்பார்க்கவில்லை .அப்படியே நாற்காலியில் சாய்ந்தவர்  முகத்தை துடைத்துக் கொண்டார் "இன்னிக்கி முழிச்ச முகத்துலதான்யா  தேடித்தேடி முழிக்கணும்."

"ஐயோ..ஐயோ ! என் ராசாத்தி!" என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு  ராசம்மா.தரையில் விழுந்து புரள்கிறாள்.

ஜீப்பிலிருந்த தங்கராசு கதறியபடி   வீட்டுக்குள் பாய்ந்தான். நிமிட நேரத்தில் எல்லாமே தலை கீழாக மாறி விட்டது.காவல் துறைக்கு இப்போது இரட்டை தலைவலி.!

"விசாரிக்கிறேன்னு வந்து என் பொண்ணு உசிரை வாங்கிட்டேயடா பாவி! ஒனக்கெல்லாம் கஞ்சி போட்ட உடுப்பு ஒரு கேடாடா ..நாசமாப் போறவனே! எம்பொண்ணு உசிர திருப்பி தருவியாடா...பூவும் பொட்டும் மஞ்சளும் குங்குமத்தோடு தாலி கட்டி அனுப்பவேண்டிய பொன் அரசிய இப்ப பச்ச தென்ன ஓலையில பாடை கட்டி அனுப்ப வச்சிட்டியேடா..ஒங்குடும்பம் வெளங்குமா?"

இப்படி துக்கமும் துயரும் கொப்பளிக்க ராசம்மா  ஒப்பாரி வைக்க ,அறைக்குள்  சென்ற தங்கராசு கதறி அழுகிறான். "பாவி! இப்படி சாவுறதுக்கா மாஞ்சு மாஞ்சு  காதலிச்சே!.காலரா..காச்சல்ல போயிருந்தாலும் மனச ஆத்திக்கலாம். இத சாகுற வரை எப்படிடி மறக்கிறது."இப்படியே பழைய நினைவுகளை எல்லாம்  நினைத்துக் கொண்டு  குமுறுகிறான் .

முன்னை விடமொத்த  தெருவும் அந்த வீட்டுக்கு முன்பாக கூடி விட்டது.

உண்மை நிகழ்வை  அடிப்படையாக கொண்டு புனையப்படும் தொடர், படம் .இணையத்தில் சுட்டது.

.

Thursday, 30 March 2017

என் மனைவி எடம் காலி...!

"என்னடா  தலைவர்  வீட்டுக்கு முன்னாடி வரிசை கட்டி நிக்கிறானுங்க?"

"அதை ஏன்டா  கேக்கிற ? நேத்து மப்புல பொதுகூட்டத்தில  பேசுற போது  என் மனை எடம் காலியா இருக்கு. கூட்டம் போடுறதுக்கு வசதியா இருக்கும் .அப்ளை பண்ணுங்கன்னு   பேசுறதுக்கு பதிலா மனைவி எடம் காலியா இருக்குன்னு அப்ளை பண்ணலாம்னு  பேசிட்டாரு.அதான் அவனவன் ஜாதகத்தை தூக்கிட்டு வந்து வரிசைல நிக்கிறானுக! "

"அய்யயோ...அப்ப வீட்டம்மா சும்மாவா இருக்காங்க ?"

"வரி வரியா தலைவர்  முதுகுல அம்மா கோடு போட்டாச்சு!" 

**************************************************

"உங்க பையன் பரீட்சையில எப்படி எழுதி இருக்கான்?"

"பார்த்துதான் எழுதிருக்கேன்.சென்டம் ஷ்யூர்னு சொல்றான்!"

"எனக்கு பொறந்த பயபுள்ள படிச்சுட்டுதான் எழுதிருக்கேன்.ஸ்டேட் பர்ஸ்ட் வரும்கிறான்.யாரை நம்புறது?"

************************************************************

"பெண்டாட்டிய விட பேயே பெட்டர்னு சொல்றியே ஏன்டா"?

"பேய்க்கு  சமைக்க தெரியாது.லேட்டா போனாலும் அடிக்காது."

**************************************************

" சம்மருக்கு எங்க போகப்போறே?"

"மச்சினன் குடும்பத்தோடு வர்றதா லெட்டர் போட்ருக்கான். அதான் நான் வேலூருக்கு போறதா பதில் எழுதிருக்கேன்."

"அது வெயில் நகரமாச்சே!"

"அப்பத்தானே  ப்ரோகிராமை கான்சல் பண்ணிட்டு ஊரோடு கெடப்பான்.!" 

***************************************************

"என்னடா மந்திரி செம காண்டுல இருக்காரு?"

"அஞ்சா சிங்கமே வருகன்னு எழுதுறதுக்கு பதிலா கஞ்சா சிங்கமே வருகன்னு பிளக்ஸ் வச்சிட்டாய்ங்கலாம்! வாட்டி வதக்கி எடுக்கிறார்.!"

********************************************






 

Wednesday, 29 March 2017

பிரியமுள்ள குரங்கு சுவர்ச்சலாவுக்கு...!

ப்ரிய சகி சுவர்ச்சுக்கு,
                              லெட்டர் எழுதி ரொம்ப நாளாச்சுடி கண்ணே. என்ன திடீர்னு  பாசம் பொங்கறதுன்னு  கேக்கிறியா? சுசி லீக்ஸ் டுவிட்டர்ல பார்த்தேன். அப்புறம் ஹைதராபாத் சினிமா விழாவுக்கு வந்த நடிகைகளை பார்த்தேன். எல்லாமே  அரைகுறைதான்! எதை மறைக்கனுமோ அதெல்லாம் மொசக்குட்டி மாதிரி தலையை நீட்டுது. அப்படி வந்தாதான் நாகரீகமாம். எழவெடுத்தவன் எவன் சொன்னான்னு தெரியல,இப்படி வந்தா எவனுக்குடி   ஆசை வராது?தாவி வருவானா  மாட்டானா?
         
                            சினிமா நடிகை டாப்சி டில்லியில இருந்தபோது பஸ்லதான்  போகுமாம். கூட்ட நெரிசல யூஸ் பண்ணி அங்கெல்லாம் உரசுவாங்குவாய்ங்கலாம். என்ன பண்றதுன்னு தெரியாம வீட்டுக்கும் சொல்லாம ஒரு மாதிரியா  கதையை ஓட்டியிருக்கு! எவனோ ஒரு கேடிப்பய பின்பக்கமா தடவி கொடுத்திருக்கான். எத்தனை நாளைக்கிடா  இம்சைய கூட்டுவிங்க  இன்னிக்கி சிக்குனான்டா அடிமைன்னு அவனோட ரெண்டு விரலையும் திருகி கிள்ளி வைக்க பய ரன்னிங்கிலேயே எறங்கி ஓடிருக்கான்.

                     கிஸ் அடிக்கிற படத்துக்கு இப்பல்லாம் தடை இல்ல.அதல்லாம் பார்க்கிற போது ஆம்பள பயலுகளுக்கு உதடெல்லாம் நமச்சல்.ஒரு தல காதல்னு ஆளை தேடுறான்.போடா பொறுக்கின்னு செருப்பை காட்டுனாலும்  உன்னோட சேவடி பட்டதாச்சே..போடு வாங்கிக்கிறேன்னு குனியிறான். இந்த குனியிர பழக்கத்தை கொண்டு வந்ததே ஜெயலலிதாதான்! கூனல் விழுந்த பயலுக மாதிரி அந்தம்மா காருக்கே கும்பிடு போட்டு வழி காட்டிட்டு பழக்கத்தை மாத்த முடியாம இப்ப எந்தெந்த ஜீவராசிகளுக்கோ குனியிரானு ங்க. தப்பித்தவறி கோவிலு காளைகள் கண்ணுல மாட்டிரக் கூடாதுன்னு பகவா னை  வேண்டிட்டிருக்கேன்.

                    இதெல்லாம் பார்க்கிறவனுக்கு பொண்டாட்டி மேல ஆசை வரத்தான் செய்யும்.வேலை விட்டு வீட்டுக்கு போனவனுக்கு நோக்கமெல்லாம் அதாத்தான் இருக்கும். போறபோதே ரெண்டு மொளம் மல்லிப்பூ வாங்கிட்டு போவான்.அவ தலையில ஆசையா வச்சு விட்டு காதோரமா முகத்தை கொண்டு போனா ஏழேழு ஜென்மம் புண்ணியம்டி!

                   அதான் சுவர்ச்சலா ...உனக்கு லெட்டர் எழுதினேன்.
                                                                                இப்படிக்கு உன்னுடைய கணவன்,
                                                                                          குரங்கார்.

Saturday, 25 March 2017

ஞாயித்துக் கெழமையாச்சும் வீட்டோடு கெட!

"விடிஞ்சி போனா அடைஞ்சுதான் வீட்டுக்கு வர்ற. இன்னிக்கி ஞாயித்துக் கிழமைதானே..... வீட்டோடு கெடக்க வேண்டியதுதானே..வாய்க்கு ருசியா  கெளுத்தி மீனு கொளம்பு.தின்னுட்டு கெடக்கவேண்டியதுதானே. .சினிமாவுக்கு கூட்டிட்டு போக முடியல.டிவி.ல வர்ற படத்தையாவது சேந்து பார்ப்பமே"

அவ ஆசையை தப்புன்னு சொல்ல முடியாது.என் வேல அப்பிடி.காலம்பர 8 மணிக்கி இருக்கலேன்னா ஆப்சென்ட் தான் .சம்பளத்தில் பாதிய பிடிச்சிருவான் .ராத்திரி எத்தன மணிக்கு காண்ட்ராக்ட்காரன் விடுவான்கிறது  தெரியாது.பெரும்பாலும் பத்து மணிக்கு வீட்டுக்கு போயி நாலு வாய் தின்னிட்டு  அலுப்பில கண்ண அசந்திருவேன். எத்தன நாளு அவ ஆசையா  பூ  வாங்கி அந்த சின்ன கொண்டைக்குள்ள சொருகி இருப்பா.அந்த சந்தோசத்துக்கு ஆச பட்டது தப்புன்னு சொல்ல முடியுமா? ஆனா  அவளுக்கு கொடுக்க முடியல.வேல பாத்து களச்சிப்போன ஒடம்பு  படுடான்னு எனக்கு வசப்படுறது இல்ல. அதான் இன்னிக்காவது  வீட்டோடு கெடன்னு சொல்றா!

ஆனா ஆர்.கே. நகர் தேர்தலுக்கு தொப்பி வச்சிட்டு தெரு தெருவா கத்திட்டு போனா பிரியாணி,குவாட்டரு ,கையில ஆயிரம்னு தருவாங்கன்னு  சொல்றாங்க. இது எக்ஸ்ட்ரா வருமானம்தானே.குடும்ப செலவுக்கு  ஒதவுமே!
நாம்ம அதிகமா கத்துன்னா கூலி கூட கொடுப்பாங்களாம்.இத விட மனசு இல்ல..

ஆனாலும் அவளின் ஆசைய நிறைவேத்தலேன்னா  நான் நல்ல புருசனா  இருக்க முடியுமா? யாருக்கோ கொடி பிடிச்சி தொப்பி வச்சிக்கிட்டு சுத்துறதினால காசுதான் கிடைக்கும்.நான் அந்த கட்சியும் இல்ல.என் பொண்டாட்டி சொன்னத கேட்டு வீட்டோடு கெடக்கலேனா  நான் என்ன மனுசன்?

"கொஞ்சம் பொறு புள்ள ! தெரு முக்கு வரை போயிட்டு வந்திறேன் " என்று அவளின் கன்னத்தில செல்லமா தட்டிட்டு புறப்பட்டுப் போனேன்.

வீடு திரும்பிய போது கை நெறைய மல்லிப்பூ.!

இன்னிக்கி எங்க வீட்ல மாட்னி ஷோ!

சொர்க்கம் என்பது என் வீட்டில்,,,!

நண்பன்.; " என் சம்சாரம் மாதிரி உலகத்தில யாருமே இருக்கமாட்டாங்க!"

மற்றவன்.; " எதை வச்சு இப்படி சொல்றே? அப்படி என்ன அதிசயம்?"

நண்பன்.: " பிரியாணியும் குவார்ட்டரும் வாங்கி கொடுத்திட்டு  வலி  தெரியாம                      அடிப்பா.! வென்னீர்ல ஒத்தடம் கொடுப்பா!
----------------------------------------------------------------

தொண்டன்.: " பொதுக்குழுவை அவசரமாக தலைவர் கூட்டிருக்காரே .புதுசா ,                        போராட்ட அறிவிப்பு எதுவும் வரப் போகுதா?

மற்றவன்.: "ஒரு நாள் போராட்டம்னுதானே அறிவிச்சோம்.அதுக்கு  எதுக்கு
                         பதினஞ்சு நாள் காவலில் போட்டிங்கன்னு கவர்னர்கிட்ட  மனு                         கொடுக்கப்போறாராம்.அதுக்காக கூட்டிருக்காரு!
--------------------------------------------------------------------

ஆசிரியர்.: " சொர்க்கம் என்பது என்னவென்று தெரியுமா?"

மாணவன்.: "அது எங்கள் வீட்டில் இருக்கு சார்!"

ஆசிரியர்.: "என்னடா சொல்றே?"

மாணவன்.: "சொர்க்கத்துக்கு போறதா சொல்லி எங்கப்பாவும் அம்மாவும் 
                       அடிக்கடி ரூம பூட்டிக்கிராங்க சார்!

ஆசிரியர்.: ??????????????
--------------------------------------------------------------------------------

மனைவி.: " எதுக்கு இந்த மிதி மிதிக்கிறிங்க. பெட்ரோல்  இருக்கோ  ,
                      இல்லியோ?"

கணவன்.: "அது எல்லாம் இருக்கு. பைக் செல்ப் எடுக்க மாட்டேங்கிதுடி!"

மனைவி.: "நம்ம புள்ள நல்லா செல்பி எடுப்பானாம்.அவன கூப்புடுங்க!"

கணவன்." ??????????????????
----------------------------------------------------------------------
              

Friday, 24 March 2017

காதல்...காமம். (30.)

"ஏய்! நீ  இன்னமும் அருவாமனையை கீழே போடலியா?"--சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் எஸ்.ஐ..

கூடவே இரண்டு போலீஸ்காரர்கள்.! ஆத்தாக்காரி ராசம்மா மட்டும் வந்திருக்கிறாள். அருவாமனை வெட்டு ஆழம் என்பதால் டாக்டர்கள் போலீசில் சொல்ல கேஸ் ஆகி விட்டது. சிவனாண்டி தற்போது  பெரிய ஆஸ்பத்திரியில்  உள் நோயாளி!.புருசன் ,பொண்டாட்டி இருவரும் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தும் போலீஸ் விடவில்லை.குற்றவாளியை கைது செய்தே தீருவோம் என்று சொல்லி வீடு வரை வந்து விட்டது.

"ஊர் சிரிக்க வச்சிட்டியேடி! வயசு புள்ள.போலீஸ் டேசனுக்கு போவலாமா?அப்படி என்னடி அந்த மனுசன் ஒன்ன சொல்லிப்புட்டாரு? மவளுக்கு அப்பன் புத்தி சொல்றது குத்தமாடி கூறு கெட்ட குந்தாணி முண்ட!"

பொன்னி எதுவும் பேசுவதாக இல்லை போலும். கையில் பிடித்த அருவாமனையை மேலும் இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.

தெளிவாக பேசுகிறாள் எஸ்.ஐ.யிடம்!

"அப்பன் மவள் சண்டை போட்டுக்கிட்டோம். ஆத்திரத்தில் வெட்டினேன். குத்தம்தான்..இல்லேங்கலே.!விசாரணையை வீட்டோடு வச்சுக்குங்க. படி தாண்டி ஸ்டேசனுக்கல்லாம் வர மாட்டேன்.!என்ன கேவலப்படுத்தாம விசாரணை  பண்ணுங்க,கேளுங்க."

"வெறி பிடிச்சு வெட்டிப்பிட்டு வியாக்கியானமா பேசுற? படிச்ச பொண்ணு! மொரண்டு பிடிக்காம வந்திட்டா மரியாதை.இல்லேன்னா பொம்பள புள்ளன்னு  கூட பாக்க மாட்டேன்.செவுலை திருப்பிடுவேன்."-என்றபடியே  எஸ்.ஐ. நெருங்கினார்.

"அப்படியே நிக்கணும்! அதுக்கும் மேல ஒரு அடி எடுத்து வச்சா நடக்கிற கதையே வேற.!கழுத்த அறுத்துக்கிட்டு செத்திருவேன்." என்று மிரட்டவே   எஸ்.ஐ.யின் காலில் விழுந்து விட்டாள்  ராசம்மா.

"ஐயா எசமான்.ரத்தம் சிந்துன வீட்டுல எழவு வேற  விழுகனுமா? கிறுக்கு புடிச்ச முண்ட! சொன்னபடி செஞ்சாலும்  செஞ்சிருவா!. ஒத்தப்புள்ளைய காவு கொடுத்துட்டு  நாங்க நாதியத்து கெடக்கனுமா? விட்ருங்க ஐயா!"

"பொட்டப்புள்ள மெரட்டுராங்கிறதுக்காக  விட்டுட்டு போறதுக்கா கவர்மெண்டுல எங்களுக்கு சம்பளம் கொடுக்கிறாங்க.? கையில இருக்கிற அருவாமனையை புடுங்குறதுக்கு எவ்வளவு நேரமாகப்போகுது? எந்திரிம்மா! ஒன் மகள் கையில இருக்கிறத நீயே வாங்கு.! மத்ததை நாங்க பாத்துக்கிறோம்!"

சப் இன்ஸ்பெக்டர் உறுதியாக  இருந்தார்.

எப்படியோ தகவல் கிடைத்து மகன் தங்கராசுவுடன் வீட்டுக்குக்குள்  நுழைகிறார்  வடிவேலு.!

"என்ன காரியத்த பண்ணிருக்கே தாயி! பெத்த அப்பனையா வெட்டுறது." என்று வடிவேலு பதறினார்.

"இந்த காரியத்த பண்றதுக்கு பதிலா நீ என் வீட்டுக்கு வந்துருக்கலாமே பொன்னி!"என்றபடியே அவளிடம் நெருங்கப் பார்த்தான். வேறு ஏதாவது தப்பு  நடந்து விடக்கூடாதே என்கிற பயத்தில்!.

"அந்த கெழவன் என்ன பேசுனாங்கிறது ஒனக்கு தெரியுமா ராசு? ஒன்னை வெட்டி கொன்னுடுவானாம்.கன்னத்தில ஓங்கி அறைஞ்சா எனக்கு ஆத்திரம்  வருமா வராதா?அதான் வெட்டுனேன். அப்பன் ஆத்தா தயவுல நான் வாழணும்கிறது அவசியம் இல்ல! அப்பன வெட்டுன பழியோடு ஒன் கூட வாழவும்  போறதில்ல."

"தப்பா பேசாத பொன்னி.! நீ ஜெயிலுக்கு போனாலும் நீதான் என் பொண்டாட்டி. நீ என் கூட வா. ஸ்டேசனுக்கு போகலாம் ."

"நீ என்னதான் சொன்னாலும் நான் ஸ்டேசனுக்கு வர மாட்டேன் ராசு!."

"துப்புக்கெட்டவளே...ஒன்ன அந்த தம்பிக்கே கட்டி கொடுக்குறோம்டி. பிடிவாதத்தை விட்டு அந்த தம்பியோடு போ! உங்கப்பன் உசிருக்கு ஒன்னும்  ஆயிடாதுன்னு பெரிய டாக்டர் சொல்லிட்டாரு.என் புருசனை நான் பாத்துக்கிறேன். வாழப்போற பொண்ணு.!.சொல்றத கேட்டு நடடி!"  ராசம்மா  கை எடுத்து மகளை கும்பிடுகிறாள்.

சப்-இன்ஸ்பெக்டருக்கு கடுப்பாகி விட்டது.கத்துகிறார்.

"என்னய்யா ..என்னை  என்ன சும்பன்னு நெனச்சிட்டு டிராமா போடுறீங்களா?  அத்தன பேரையும் அள்ளிப்போட்டுட்டு போயி நாலு சாத்து சாத்த தெரியாதுன்னு நெனச்சிட்டிங்களா? அவ என்னடான்னா அருவாமனையை வச்சுக்கிட்டு பூச்சாண்டி காட்டிட்டு இருக்கா.. நீங்க என்னடான்னா சினிமா டயலாக் பேசுறீங்க..வெலகி நில்லுங்கடா  வெண்ணைகளா?" என்று நெருங்கி செல்ல , இரண்டு போலீஸ்காரர்களும் வடிவேலு, தங்கராசுவை சுவர் ஓரமாக  தள்ளி விட்டனர். 

ஆனால் தங்கராசு அப்படி ஒரு முடிவை எடுப்பான் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது.

பொன்னியே நினைத்தும் பார்த்திருக்க மாட்டாள்.

அப்படி என்ன தான் நடந்தது?

உண்மை  நிகழ்வை  அடிப்படையாக வைத்து புனையப்படுகிற தொடர் இது.

இங்கு பிரசுரிக்கப்பட்ட படத்துக்கும் புனைவுக்கும் தொடர்பு இல்லை.

Saturday, 18 March 2017

காதல்...காமம்.( 29.)

"நாசமத்து போவாளே ! என் தாலிய  அக்கவா பொறந்தே!வெட்டிப்பிட்டியேடி என்  ராசாவ! வெளங்காம போவடி...!"

பெருங்குரலெடுத்து ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள்.ராசம்மா.

சிவனாண்டி துடிக்கிறார். இடது முழங்கையில் சற்று  கீழாக அருவாமனை வெட்டு.! ஆழமாகத்தான் விழுந்திருக்கும் போல.! ரத்தம் ஒழுகுகிறது. வலி  தாங்காமல் கத்த ஆரம்பித்து விட்டார்.

"ஆம்பள சுகத்துக்கு ஆசப்பட்ட அந்த பொட்ட சிறுக்கிய   வீட்ட விட்டு வெரட்டுடி  ! " வலி, ஆத்திரம், பெத்த மகளே எவனுக்காகவோ சொந்த அப்பனை வெட்டவும்  துணிந்திருக்கிறாள் என்றால் யாரும் நிதானம் இழக்கவே செய்வார்கள் என்கிறபோது சிவனாண்டிக்கு அது பொருந்தாதா என்ன?

அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார். ராசம்மா கையில் கிடைத்த  துணியை வைத்துக் கட்டுப் போடுகிறாள். "யாரு மோகத்தில முழிச்சேனோ  என்  வீட்டுலேயே ரத்தக்காவு! வாங்க .பெரிய ஆசுபத்திரிக்கு போவோம்.வாய்யா என் கொலசாமி! வழியிலேயே சட்கா வண்டிய புடிச்சுக்குவோம்."

புருசனின் கவட்டுக்குள் கையை கொடுத்து தாங்கிப்பிடித்து  தூக்குகிறாள். சட்டை வேட்டி எல்லாம் ரத்தம்அவளுக்கும் ரவுக்கை,சேலை எல்லாம் ரத்தம்.
இவ்வளவும் நடக்கிறது. அப்பன் துடிக்கிறான். வாயில் வரக்கூடாத வார்த்தைகளால் அம்மா  வைகிறாள்.

ஆனால் அருவாமனையை கீழே போடவில்லை. வெறித்தபடியே அவர்களை பார்க்கிறாள்  பொன்னி.! ஆவேசம் தணியாத சாமியாடி மாதிரி  மூசு மூசு என்று மூச்சு விடுகிறாள் .. நடந்து விட்ட  விபரீதம் பற்றி  அவள் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை.

அதற்குள் ஊரே கூடி விட்டது. குதிரை வண்டியில் ஏற்றி விட்டு அவர்களுடன் சிலர் சைக்கிளில் பின் தொடர்ந்தார்கள்.

இந்த மாதிரி சம்பவங்களில் பேசுவதற்கென சில ஜன்மங்கள் இருக்குமே... ! வீட்டுக்குள் நுழைந்து அருவாமனையை வாங்கி அங்கிருந்த மேஜையில் வைத்தாள்  ஒருத்தி " ஏன்டி துப்புக்கெட்ட ஈன சிறுக்கி. பெத்த அப்பனையா கொல செய்ய பார்த்தே..அந்த மனுசன் ஒன்ன  கண்ணுக்குள்ளேயே வச்சு வளர்த்தாரடி! "என்று பொன்னியின்  குமட்டில் இடிக்கிறாள்.! பொன்னி எதுவும் பேச வில்லை. அவிழ்ந்து கிடந்த கூந்தலை கோடாலிக் கொண்டையாக போட்டுக் கொண்டாள்.பிரமை பிடித்த மாதிரியே அவர்களை பார்க்கிறாள்.

ஒருத்தி உரிமை எடுத்துக்கொண்டு வாளியில் தண்ணீர் எடுத்து வந்தாள். தரையில் இருந்த ரத்தக்கறை எல்லாம் கழுவுகிறாள்.போலீஸ்காரன் வந்து விசாரிப்பானே என்பதெல்லாம் அங்கிருந்தவர்களுக்கு தெரியவில்லை. பொன்னியை காய்ச்சி எடுக்க அவர்களுக்கு அதுதான் நல்ல சமயம். விட்டால் வேறு வாய்ப்பு வராது.

"வெளங்காத சிறுக்கி. வெட்டிப்புட்டா. எவன் கூட  ஓடி போக நெனச்சாளோ! வெவரம் தெரிஞ்ச மனுசன் கண்டிச்சிருக்காரு. அரிப்பெடுத்த நாய்க்கு  ஆத்திரம்! .போட்டுத் தள்ளிருக்கு. கழுத்துக்கு வச்ச குறி எந்த சாமி புண்ணியமோ  தப்பி கைக்கு எறங்கி இருக்கு!"---அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு வீட்டை கூட்டுகிறாள் ஒருத்தி. கிட்டத்தட்ட ஏழெட்டு பேர்.  அவர்களது கற்பனை வளம் வார்த்தைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

பொன்னிக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய முன் கோபத்தின் விளைவு  இப்பத்தான் புரிய ஆரம்பிக்கிறது.

அழ ஆரம்பிக்கிறாள்.விபரீதம் புரிகிறது. விம்மியவள் 'ஓ" வென குரல் எடுத்ததும் அங்கிருந்த பெண்டுகளுக்கு ஆச்சரியம்.சிலருக்கு பயம், 'கிறுக்குப்  பிடிச்சிருச்சோ?'

மேஜையில் வைக்கப்பட்ட அருவாமனையை ஓடி சென்று எடுத்ததும் மற்றவர்களுக்கு பயம் வந்து விட்டது. கண்டபடி வைததால் நம்மையும் பதம் பார்த்து விடுவாளோ என்கிற பயம்.

"எதுக்குடி அருவாமனைய தூக்குனே...ஒன் நன்மைக்குத்தானேத்தா சொன்னோம். பெத்த அப்பனையே வெட்டிப்புட்டியே நாளைக்கு தாலி கட்டி  போற வீட்டுல ஒனக்கு மருவாதி இருக்குமா?  பொண்ணு கேட்டு எவனாவது வருவானா..?இதுக்காகத்தானத்தா இம்புட்டு பேச்சு பேசுனோம்."

 பொன்னியின் கோபத்துக்கு ஆளாகி விடக்கூடாது என்கிற பயத்தில் அவர்கள்  ஆளாளுக்கு எதையோ சொல்லிக்கொண்டிருக்க  வாசலில் வந்து நிற்கிறது போலீஸ் ஜீப்!

யாருமே எதிர்பார்க்கவில்லை! அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்பதை.!

உண்மை  நிகழ்வை  அடிப்படையாக  வைத்து  புனையப்படுகிற  தொடர்  இது. அடுத்து  என்ன  நடந்தது என்பதை  பிறகு பார்க்கலாம்.


Saturday, 11 March 2017

காதல்..காமம். ( 28.)

'நா என்னத்த சொல்ல கெடக்கு? வீட்டுக்குப் பெரியவக  ஒங்க சொல்லுக்கு மறு  சொல்லு நா என்னிக்கி சொல்லிருக்கேன். எங்கண்ணனுக்கு என்ன சொல்றதங்கிரத நா பாத்துக்கிறேன். ஒங்க முடிவ நீங்க சொல்லிருங்க?' என்று  நைசாக நழுவிக் கொண்டாள் ராசம்மா.

இதைத்தான் பொன்னியும் எதிர்பார்த்திருந்தாள். பெத்தவ பெருமை மகளுக்கு  தெரியாதா என்ன? அப்பனை இப்படி எத்தனை நெருக்கடிகளில் மாட்டி  விட்டிருக்கிறாள்.?

எதுவும் தெரியாதவளைப்போல அங்கு வந்தாள் !


" இல்லாத சாமானை இருட்டில ரெண்டு பேரும் தேடிக்கிட்டிருக்கிங்க.அப்படி என்னத்த தேடுறிங்க" என்று அப்பனையும் ஆத்தாளையும் மறைமுகமாக நக்கல் விட்டவள் வடிவேலுவை பார்த்து    "என்ன மாமா இன்னும் இங்கனயே  இருக்கிங்க. மத்தியான விருந்துன்னு எங்க அய்யா சொன்னாரா?" என்று சின்னதாக ஒரு சேட்டை.

"அப்படியெல்லாம் இல்லத்தா!"என்ற வடிவேலு " போயிட்டு வாறேங்க..நல்ல  முடிவா சொல்லி விடுங்க"என்று சிவனாண்டிக்கும் ராசம்மாவுக்கும் ஒரு  கும்பிட்டை போட்டு வெளியேற  அவரை வாசல் வரை சென்று வழி  அனுப்பி வைத்தாள் பொன்னி.!

இனிதான் ஆரம்பமாகிறது  பொன்னியின் அதகளம்.

"என்ன பெத்தவளே! எனக்கு ஒரு மொறைமாமன் இருக்காங்கிறத இத்தனை  காலமும் எதுக்கு மறச்ச? அவன் எங்கிட்டு இருக்கான் என்னத்த பண்றாங்கிறத  சொல்லுத்தா! அய்யா சொல்லித்தான் எல்லா சங்கதியும் தெரியிது? இன்னும் என்னத்தயல்லாம் மறச்சிருக்கிங்க?"

சட்டமாக நாற்காலியை சரட்டுன்னு இழுத்துப்போட்டு உட்கார்ந்தாள்.மகா ராங்கி!

"இப்படியெல்லாம் ரெண்டு பேரும் கூத்துக்கட்டி எவன் தலயிலாவது கட்டி விடலாம்னு பார்த்திங்கன்னா மூட்டப்பூச்சி மருந்த ஊத்தி உங்க ரெண்டு பேரையும் கொன்னு போட்டுட்டு நான் சந்தோசமா தங்கராசோட வாழப் போயிருவேன்.மத்த பொண்ணுங்க மாதிரி இருப்பேன்னு மட்டும் நெனச்சிருதேங்கப்பு! நான் பத்ரகாளி!"

விரலை ஆட்டி ஆட்டி பேசுகிறாள். சிவனாண்டி ,ராசம்மா இருவருக்கும்  ஆச்சரியம். "நாம்ம பெத்த பொண்ணுதான் இப்படி பேசுறாளா?"

"அவன் உசிரோடு இல்லேன்னா எவன கட்டிப்பே? "

தோளில் கிடந்த துண்டை எடுத்து தலப்பாவாக கட்டிக் கொண்டு கேட்கிறார்  சிவனாண்டி.!அவரும் விடுவதாக இல்லை.

அப்பனுக்கும் மகளுக்கும் பெரிய சண்டை நடக்கப்போகுது என்பதுதெரிந்து விட்டது ராசம்மாவுக்கு!

"அந்த சின்ன சிறுக்கிதான் கொழுப்பெடுத்து அப்படி பேசுறான்னா நீங்களும்  சரிக்கு சரியா மல்லுக்கு நிப்பீங்களா? அவ மூட்டப்பூச்சி மருந்துங்கிறதும்  நீங்க ஊரான் வீட்டுப்பிள்ளையை கொன்னுருவேன்னு சொல்றதும் ....யார் காதுலயாவது விழுந்துச்சுன்னா நம்மள காரி துப்பிருவாய்ங்க!"

"நான் ஓடிப்போயிட்டேன்னா மட்டும் உங்கள மணத்துக்குவாய்ங்களாக்கும்?" பொன்னியும் விடுவதாக இல்லை.இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்பதில்  உறுதியாக இருக்கிறாள்.சிவனாண்டிக்கு ஆத்திரம் உச்சி மண்டையில்!

"பாத்தியாடி.பயபிள்ள என்னமாதிரி வாயடிக்கிதுன்னு?பொட்ட பிள்ளைய அடுப்பங்கரையில உக்காரவைக்காதது எந்தப்புதான்! ஓடி போயிடுவாளாம்ல?
கால வெட்டி நொண்டிக்கிட்டு கெடன்னு விட்டா என்ன பண்ணுவா?" என்று சத்தம் போட்டபடியே ஓடி வந்து ஓங்கி ஒரு அறை விட்டார்.

நாற்காலியில் உட்கார்ந்திருந்த பொன்னி மடாரென தரையில் விழ இதையெல்லாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத ராசம்மா  பதறிப்போனாள், வாயிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு கத்துகிறாள்."என்ன பெரிய மனுசன்யா! ..பொட்டப்புள்ள மேலயா கைய நீட்றது? என்ன பாவம் செஞ்சேன்னு  தெரியலிய. அப்பனும் மவளும் இப்படி மல்லுக்கட்டிக்கிட்டு இருந்தா பய மக்க சிரிச்சுப்புடமாட்டாகளா.? நாறிப்போகும் நாறி!  "என்று  புருசனை மடக்கி நிறுத்தி தள்ளி  விட்டு அப்படியேதரையில் கிடந்த  மகளையும்விட்டாள் ஒரு  எத்து!

பொன்னி எதிர்பார்க்கவில்லை.

ஆவேசமாக எழுந்தவள் அடுப்படிக்கு சென்று அருவாமனையை எடுத்துக் கொண்டு வருகிறாள்.தலை விரிந்து கிடக்கிறது.கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது.என்ன பேசுகிறோம் எதை செய்கிறோம் என்பது பொன்னிக்கு தெரியவில்லை.பாம்பாக சீறுகிறாள்,

"புருசனும் பொண்டாட்டியுமா சேர்ந்து என்ன கொல்ல பாக்கிறிங்களா..
.அந்தாளு அடிக்கிறான்.கெழட்டு சிறுக்கி நீ மிதிக்கிறே....ஒங்களை இன்னிக்கு வெட்டாம விடமாட்டேன். செயிலுக்கு போனாலும் கவலையில்ல.ரெண்டுல ஒன்னு பாத்திட வேண்டியதுதான்!" என்றபடியே அருவாமனையை ஓங்கினாள்.

சிவனாண்டியின் கையில் விழுந்தது வெட்டு!

உண்மை நிகழ்வின் அடிப்படையில்  புனையப்படும் தொடர் 


  

Monday, 6 March 2017

கேண சிறுக்கி கோணலா போட்ட கோலம்!

"சக்கர பொங்கல் வைக்கிறேன்னு புளியோதரை கிண்டுனவதானே நீ! எட்டுப் புள்ளில கோலம் போடுறேன்னு வாச முழுக்க கிறுக்கி வச்சிருக்கியே ..என்னடி  விசேசம்?"

"நான் குளியாம இருக்கேன் அத்தே! தீட்டு நின்னு அஞ்சு நாளாச்சு! "

"கேணச்சிறுக்கி! ஒவ்வொரு மாசமும் இதயே சொல்லிட்டிருக்கே..வயறுதான் உப்ப மாட்டேங்கிது! ஏண்டி..வெளங்காத சிறுக்கி. ஒம் புருசன்தான் சிங்கப்பூரில் கெடக்கிறானே.அப்பறம் எப்படிடி மாசமா இருப்பே?"-- அத்தைக்காரிக்கு செம கோபம்.புருசன் வெளிநாட்டில் இருக்கிறபோது இவ ஒவ்வொரு  மாசமும் இப்படி சொல்லிட்டு திரியிறாளே!வயத்தில கோளாற வச்சிக்கிட்டு இந்த சிறுக்கி மருத்துவச்சியையும் பார்க்காமல்... ச்சே  என்ன பொண்ணு இவ? அப்பிராணியா ,பாம்புராணியா?

"  ஏண்டி மானங்கெட்ட மல்லாரி. புருசன் கூட சேர்ந்து படுத்தாதான் புள்ள பெறக்கும்கிறது தெரியாதா?"

"அதெல்லாம் தெரியும்.எத்தனை வாட்டி படுத்திருக்கோம். ஆனா கண்ண தெறந்து பாக்கிறப்ப ஆளு காணாம போயிடுவாரு! மக்காய்  நாளு ராத்திரியில நடந்தத பத்தி கேப்பாரு. அப்பத்தான் புள்ள பெறக்கப்போகுதுன்னு சொல்வாரு! "

"சரி இன்னிக்கி ராத்திரி வந்தா என்னய வந்து எழுப்பிவிடு"!

அப்போது வார்டன் கம்பை தரையில் தட்டியபடியே வந்தாள்.

"கூறு கெட்ட குந்தாணிகளா? என்னடி பஞ்சாயத்து ?"என்றவாறே ஆளுக்கு இரண்டு சாத்து சாத்தினாள்,கிருக்காஸ்பத்திரி வார்டன்.

Saturday, 4 March 2017

காதல்...காமம். ( 27.)

ஜட்காவில் இருந்து இறங்கியவர் தங்கராசுவின் அய்யா வடிவேலு.

"படியில கால வச்சு மெதுவா எறங்கு, மறக்காம மல்லிப்பூவை எடுத்துக்க!" மாயக்காளின் கையை பிடித்து இறக்கிவிட்டார்.

 பின்கொசுவம் வைத்து கட்டிய  பட்டுப்புடவை ,கழுத்தில் பதக்கம், இரட்டைவட சங்கிலி,கையில் தங்க வளையல்கள் ,நெற்றியில் துண்ணூறு கீற்று, மேலாக பெரிய அளவில் குங்குமம் என மகாலட்சுமியாக இறங்கினாள்.

வாசலுக்கு வந்துவிட்டவர்களை வரவேற்காமல் இருக்க முடியுமா?

பொன்னியின் அப்பா சிவனாண்டி"வாங்க..வாங்க" என்று வாய் நிறைய வீட்டுக்குள் அழைத்துச்சென்றவர் மனைவியை கூப்பிட்டார்.

"ராசு...இங்க வாத்தா..காரை வீட்டுக்காரக வந்திருக்காக" !

அப்பனின் அழைப்பு மகள் பொன்னியின் காதிலும் விழுந்தது. அதுவரை இருந்த  மன அழுத்தம் இப்போது இல்லை.கதவை முழுவதும் சாத்தாமல் இடைவெளி விட்டு அதன் வழியே என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆசை.... ஆர்வம்,!

"வாங்க..வாங்க..நல்லாருக்கிகளா?" அடுப்படியில் இருந்து வந்த ராசம்மாவுக்கு  இப்போது புரிகிறது..சம்பந்தம் பேச வந்திருக்காக!

சமுக்காளம் எடுத்து விரிக்கிறாள். வடிவேலுவும் மாயக்காளும் உட்கார்ந்தனர்.

"பொண்ணு வீட்லதானே இருக்கு? இந்த பூவ வச்சு விடுங்களேன்?" மாயக்காள் சொன்னது பொன்னிக்கு கேட்கிறது. தனக்குள் பெருகிய மகிழ்ச்சியை முகம் முழுக்க மலர விட்டுக்கொண்டாள்.

சற்று முன் மகளை காய்ச்சி எடுத்திருந்த ராசம்மாளின் குரலில் இப்போது கருப்பட்டி பாகு!

"பொன்னி...இங்க வா. பெரியவக வீடு தேடி வந்திருக்காக, வந்து கும்பிட்டுக்க!"

கதவு திறந்து வந்த பொன்னி "வாங்க மாமா..வாங்க அத்த" என்று முறை வைத்து சொல்வாள் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.  மாயக்காள் பக்கமாகவே   உட்கார்ந்து விட்டாள்.   சிவனாண்டிக்கு   சற்று கோபம்!ஆனால்  . காட்டிக் கொள்வதற்கு அது நேரமில்லையே..  "சரி... ஒரு முடிவோடுதான் காரை வீடு வந்திருக்கு!"

"என் செல்லம். பூ வச்சுக்கத்தா " என்று மாயக்காள்   நீட்ட " நீங்களே வச்சு விடுங்கத்தே!" என்று வாகாக உட்கார்ந்து கொள்கிறாள் பொன்னி !. "அந்த மீனாச்சியை பார்த்த மாதிரி இருக்கு!"

பொன்னியின் கன்னம் தடவி திருஷ்டி கழித்ததும் பொண்ணுக்கு  பூரிப்பு பொங்குகிறது..

"நல்லது தாயி! நீ ஒன் ரூமுக்கு போ! நாங்க பெரியவக பேசிக்கிறோம்."என்று பொன்னியை அனுப்பிவிட்டு ராசம்மாவை பார்த்தாள்.

"அத்தாச்சி! இன்னிக்கி நல்ல நாளு!முன்னாடியே ஏதும் சொல்லிக்காம திடுதிப்புன்னு வந்து நிக்கிறாகலேன்னு வருத்தம் கிருத்தம் பட வேணாம்,எங்களுக்கு ஒரே புள்ளதான்.பெரிய படிப்பு படிச்சிருக்கான்.ஒங்க மவளைத்தான் கட்டிக்குவேன்னு சொல்லிட்டான். எங்களுக்கு வயலு வாய்க்காலுக்கு குறைவில்ல.பாட்டன் சொத்து அப்பன் சொத்துன்னு ஆளப்போறவன் அவன்தான்! அவனுக்குத்தான் உங்க மவளை கேட்டு வந்திருக்கோம். அண்ணனை கேட்டு நல்ல முடிவா சொல்லுங்க.!"

திடீர் என்று வந்தவர்கள் இப்படி நேரடியாகவே கேட்பார்கள் என்பது சிவனாண்டி,ராசம்மா வகையறாவுக்கு தெரிந்திருக்கவில்லை . ஒரு வேளை பொன்னி சொல்லித்தான்   வந்திருப்பார்களோ என்கிற சந்தேகமும் இருந்தது. புருசனிடம் தள்ளிவிடவேண்டியதுதான் பொறுப்பை!

"என்னங்க பொன்னியய்யா! அத்தாச்சி சொல்றதை கேட்டிகள்ல?! பொண்ணு கேக்கிறாக!"

"அது சரி! பொண்ணுன்னு இருந்தா நாலு பேரு கேட்டு வரத்தான் செய்வாக! ஆனா .மச்சு வீட்டுக்காரங்கன்னு தள்ளி விட்ற முடியாதுள்ள.! "

அப்பன் சொல்வதை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறாள் பொன்னி. முடிவாக  என்ன சொல்வார் என்பதை  தெரிந்து கொண்டு  பிறகு தைரியமாக தனது முடிவை சொல்லிவிட வேண்டியதுதான்!

"உங்கண்ணன் மவனுக்கு கட்டி வைக்கனும்னு சொன்னியே..? இப்ப இந்த சம்பந்தம் வந்திருக்கு. உன் முடிவ சொல்லு?" என்று சிவனாண்டி ஒரு வெடி குண்டை வீசுவார்  என்பதை அவரது குடும்பமே எதிர்பார்க்க வில்லை! இல்லாத முறைப்பையனை  அய்யன் இறக்குவதால் அவரின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது  பொன்னிக்கு!

"ஆத்தாளின் அண்ணனுக்கு பொம்பள புள்ளதானே இருக்கா? பச்ச பொய்யை அய்யன் சொல்றதை பார்த்தா இந்த சம்பந்தம் பிடிக்கலேன்னுதானே அர்த்தம்.நாடகம் ஆடுறார் சிவனாண்டி.இதுக்கு ஆத்தா என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்.அப்புறம் ஏறக்குவோம் அருவாளை ! "மனசுக்குள் பொன்னி சொல்லிக்கொண்டாள்.

ராசம்மாவுக்குத்தான் இப்ப சிக்கல்! என்னத்த சொல்றது?

உண்மை  நிகழ்வை  அடிப்படையாக  வைத்துப்  புனையப்படுகிற  தொடர்  இது. ராசம்மா என்ன சொல்லப்போகிறாள்  என்பதை  அடுத்துப்  பார்க்கலாம், 



  

Monday, 27 February 2017

காதல்..காமம். ( 26.)

"... ஏட்டி  ராசு...?" மனைவி ராசம்மாவை இப்படித்தான்  சிவனாண்டி கூப்பிடுவார். பொன்னியின் அப்பா அம்மாதான் இவர்கள்.

"கூப்பிட்டிங்களா" என்றவாறே  அடுப்பங்கரையில் இருந்து வந்தாள் ராசம்மா.
"மொச்சக்கொட்டையும்  நெய்மீன்கருவாடும் போட்டு கொழம்பு வச்சு ரொம்ப நாளேச்சின்னு  பிச்ச ராவுத்தர் கடைக்குப் போயி கருவாடு வாங்கியாந்தேன்.எதுக்கு கூப்பிட்டிங்க?" என்ற படியே முந்தானையில் கையை துடைத்துக் கொண்டாள்.

புருசனின் பக்கத்தில் நிற்கிறாள்  மகள் பொன்னி. அப்பனுக்கும் மகளுக்கும் என்ன பஞ்சாயத்தோ? அவர்கள் இருவரும் முறைத்துக்கொண்டிருக்கிற  போதுதான் சம்சாரத்தை சிவனாண்டி கூப்பிடுவார்.

'என்னங்க?எதுக்கு கூப்பிட்டிங்க ?அடுப்படியில வேல கெடக்கு!"

"உம் மவ  பொன்னி என்ன சொல்லுதுன்னு கேளு. உனக்கு  புரியிதின்னான்னு பாரு?".

அம்மாவுக்கு பேச இடம் கொடுக்கவில்லை மகள்.!

"எனக்கு சுத்தி வளச்சு பேசத் தெரியாது ! ஆத்தா! தெளிவா சொல்லிடுறேன். எனக்கு வயசாயிடிச்சின்னு படிப்பு  முடிஞ்சதும் மாப்ளய தேடுவீங்கள்ல.. அந்த  கவலை வேணாம்னு அய்யாகிட்ட சொன்னேன்.அது அவருக்கு புடிபடலயாம் , உன்னய  கூப்பிட்டு அருத்தம்  கேக்கிறாரு,நான் என்ன சொன்னேன்னு உனக்காச்சும் வெளங்குனா சரி!?"

அதுவரை தன்னுடைய மகள் அப்படி பேசி  ராசம்மா கேட்டதில்லை.

"என்னலா...என்னத்த சொல்ற? புருசன இப்பவே தேடிக்கிட்டேன்னு சொல்ல வர்றியா...துளுத்துப் போச்சா?என்னடி கருமாயம் இது? எவன்டி சொக்குப்பொடி  போட்டான்?"

"அய்யாவுக்கு நீ போட்ட சொக்குப்பொடியிலதான்  இப்படி  ஆடுறாரா?அப்படி ஒரு பொடிய நான் இதுவரை பாத்ததில்ல ஆத்தா? நீயே செஞ்சுக்குவியா? அப்படி என்னென்ன சரக்கு சேர்த்துக்கனும் ..சொல்லு! நானும் கத்துக்கிறேன்" என்றவள்  ராசம்மாவை நெருங்கினாள். " பெத்த மகள் கிட்ட இப்படி கேக்கிறியே..நாக்கு கூசல.? என்னை பெத்தியா..இல்ல தவுட்டுக்கு வாங்கினியா ...வெத்தல பாக்கு பொகையில போட்டு போட்டு நாக்கு தடிச்சிப் போச்சு?"என்று  அம்மாவின் தண்டட்டியை ஆட்டிவிட்டபடியே பேச ஆரம்பிக்கிறாள்.

ராசம்மாவும்,சிவனாண்டியும் என்ன பேசுவது என்பது புரியாமல் திகைத்து மகளையே பார்க்கிறார்கள்.

"புருசன தேடிக்கிட்டியான்னு கேட்டில்ல. ..ஆமா ..தேடிக்கிட்டேன். அதுல என்ன தப்பு? மனசுக்கு புடிச்சவனோடு  குடும்பம் நடத்துறது தப்புன்னு நீங்க  ரெண்டு பேரும் சொல்றீங்களா? நீங்க எவனையாவது கட்டி வைப்பீங்க. அவன் சண்டியர்த்தனம் பண்ணுவான்.குடிச்சிட்டு வந்து  குடும்பம் நடத்த கூப்பிடுவான் .நான் அடங்கி  கிடக்கணும்  வெள்ளென எந்திரிச்சி அவன் காலை தொட்டுக் கும்பிட்டு தாலி பாக்கியம் நெலைக்கனும்னு கண்ல தாலிய ஒத்திக்கணும்! உன் தம்பிக்கி வாக்கப்பட்டு வந்தாளே ஒரு மகராசி   ரெண்டாவது மாசமே அத்துக்கிட்டு ஓடல?...திரும்பி வந்தாளா? வாழாவெட்டியா இருந்தாலும் இருப்பேன்னு உன்னோட  குடும்பம் நடத்த முடியாதுன்னு  தாலிய கழத்தி கலனிப்பானையில போட்டுட்டு போனத மறந்திட்டியா?".

ராசம்மா  தலையை விரித்துப்போட்டுக்கொண்டு ஆங்காரமுடன் பேசுகிறாள்..
கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது.

"நாக்கால கெட்ட சிறுக்கி! பெத்தவக கிட்ட பேசுற மாதிரியா பேசுற? வாப்பட்டி நாயே! நீ எக்கேடு கெட்டா எனக்கென்னன்னு விட்ற முடியாதுடி. என் புருசன் குடும்பத்துக்குன்னு ஒரு பேரு இருக்கு. மச்சு வீட்டு மவராசன்டி ! தெருவில இன்னிக்கும் நடந்து போனா வாசல்ல உக்காந்திருக்கிறவளுக எந்திரிச்சி நிப்பாளுகடி.ஆம்பளைக தோள்ல கெடக்கிற துண்டு கக்கத்துக்கு போயிரும்டி .இப்பேர்ப்பட்ட குடும்பத்தில   பொறந்திட்டு இப்படி ஒரு கேடு கெட்ட காரியத்தை பண்ணுவேன்னு சொன்னா ஒன்ன உசிரோடு விட்டு வப்போம்னு நினைக்கிறியா ? உத்திரத்தில தொங்க விட்ருவோம்."

சிவனாண்டியின் கச்சேரி ஆரம்பமாகிறது.

"ஏட்டி  சீவனை விடுறே! நாலெழுத்து படிக்கவச்சது நம்ம தப்பு.! கொட்டத்தில மாட்ட குளிப்பாட்டி சாணிய அள்ள விடாதது நம்ம தப்பு? கெண்டைக்கால்  நரம்ப அறுத்து விட்டு வீட்டோடு கெட நாயேன்னு செஞ்சிருக்கணும்.எப்படி  நெஞ்சழுத்தமுடன் பேசுது கழுத! "

"இப்படியெல்லாம் பேசுனா பயந்து போயிருவேன்னு நெனைக்கிறிங்களா? உங்களுக்கு மாப்ள பாக்கிற கஷ்டம் வேணாம்னு மட்டும் சொன்னதுக்கே  ரெண்டு பேரும் இப்படி ஆடுறீங்களே! நான் யார கட்டிக்கப்  போறேனுன்னு சொன்னா என்னா ஆட்டம் ஆடுவிங்க? அவரும் மச்சு வீடு காரை வீடுன்னு  பண்ணை வச்சு வாழுற குடும்பம்தான்."

"அப்ப ஓடிபோவேன்னு சொல்றியாடி?"

"நான் ஏன் ஓடிப் போவனும்? நீங்க ரெண்டு பேர் தாங்கித்தான்  சாமி தெருவில  ஊர்கோலம் போவுதா? நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குதுன்னு சொல்வாங்க. உங்க ரெண்டு பேர பாத்துதான் சூரியன் மொளைச்சி வருதாக்கும்?"

வாசலில் ஜட்கா வண்டி வந்து நிற்கிற சத்தம் கேட்டு மூன்று பேரும் சண்டையை நிறுத்திவிட்டு  அவரவர் இடத்துக்கு சென்றார்கள். ராசம்மா  அடுப்படிக்கு போனாள். பொன்னி அவளுடைய அறைக்கு சென்று விட்டாள். சிவனாண்டி மட்டும் வாசலுக்கு போகிறார்.

இது  உண்மைச்சம்பவத்தின்  புனைவு, இன்னும்  தொடரும்.